June 10, 2017

மயக்கும் குரல்

இது ஒரு பழைய ரேடியோ அறிவிப்பாளரைப் பற்றிய துணுக்குக் கட்டுரை. பழைய என்றால் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முந்தையது. ஒரு பிரெஞ்சு ரேடியோ அறிவிப்பாளரின் அனுபவம்.
          மார்செல் லபோர்ட் என்ற பிரெஞ்சு அறிவிப்பாளர், 1925இல் நேயர்களிடமிருந்து தனக்கு வந்த சில கடிதங்களைப் பிரசுரித்தார். அவருடைய குரலுக்கு தனி ஈர்ப்பு சக்தி  இருந்திருக்க வேண்டும். அவர், "மான்ஸியர் ரேடியோலா' என்ற பெயரில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
SUZY என்ற பெண்மணி ரேடியோலாவிற்கு எழுதிய கடிதத்தை முதலில் பார்க்கலாம்.
"...சற்று வெட்க ஊணர்வுடன்தான் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். நான் தினமும் நீங்கள் ரேடியோவில் பேசுவதைக் கேட்கிறேன். உங்கள் குரலின் ஏற்ற இறக்கமும் குழைவும், என் உணர்வுகளுக்கு ஆழ்ந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அதன் காரணமாக உங்களிடம் காந்தம் போல நான் இழுத்துச் செல்லப்படுகின்றேன். 

உங்கள் குரலைக் கேட்கும்போதெல்லாம் நான் சில எண்ணங்களில் மூழ்கி விடுகிறேன்... ஆனால், கனவுகள் எல்லாம் முட்டாள்தனமானவை...!
சார்... உங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள்  இளைஞரா, அழகானவரா, கருப்பா, சிவப்பா? உங்களை மறைத்திருக்கும் போர்வையை யாராலாவது கிழித்தெறிய  இயலுமா..? உங்களைச் சந்திக்க முடிந்தால் எனக்கு மிக மிக மகிழ்ச்சி  ஏற்படும். அப்படி பொது இடத்தில் சந்திக்கும்போது நீங்கள் எவ்வித உணர்ச்சியையும் வெளியிடாத வறட்டுக் குரலில் நாம் பேச வேண்டியிருக்கும். ஜூன் மாதம் .... தேதியன்று, நீங்கள் மாலை நேர  இசை நிகழ்ச்சியை அறிவிப்பு செய்வீர்கள். அறிவிப்பு முடிந்ததும், நீங்கள் வழக்கமாகச் சொல்லும், "நாம் இப்போது அடுத்த பாடலுக்குப் போவோம்' என்பீர்கள். அப்படிச் சொல்லிவிட்டு, எனக்காகச் சில வார்த்தைகளைச் (Give me a declaration)
 சேர்த்துச் சொல்லுங்கள். அப்படிச் சொன்னால், என்னுடன் கொஞ்சம் நேரம் செலவழிக்க உங்களுக்குச் சம்மதம் என்பதை அறிந்து கொள்வேன். அதன் பிறகு, நாமிருவரும் என்று, எங்கு, எப்போது சந்திக்கலாம் என்ற விவரங்களுடன் கடிதம் எழுதுகிறேன்.''
ஜூன் மாதம் நமழவ குறிப்பிட்ட தேதியன்று, அறிவிப்புகளைச் செய்த "ரேடியோலாஅவள் கேட்டுக் கொண்டபடி கூடுதல் வார்த்தைகள் எதையும் சொல்லவில்லை. 

SUZY யிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது.
"சார், நான் உருக்குலைந்து போனேன். ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி பிடித்து விட்டது. சோகமான நினைவுகளுடன் நான் காலம் தள்ள வேண்டும் என்னும் என் விதியை நொந்து கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஆறுதலாக இருக்கப் போவது, என் வீட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்து ரேடியோ மூலம் வரும் உங்கள் குரல்தான். உங்கள் புகைப்படம் பத்திரிகைகளில் வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் படத்தை என் வீட்டு ரேடியோ மீது வைக்கப் போகிறேன்... உங்களுக்கு நிச்சயமாக ஒரு காதலி இருப்பாள். அல்லது அவள் திருமணமானவளாகக்கூட இருக்கக்கூடும். அவளிடம் ரகசியமாக பாடல்களை மயக்கும் குரலில் கூறுவீர்கள். நம்மைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்து விட்டது. உங்களுக்கு இனிமேல் கடிதம் எழுத மாட்டேன்... Bye... Bye...  என் மீது இரக்கப்படுங்கள்!''
                
           பைத்தியங்கள் பலவிதம். அதில் ஒரு விதம் SUZY! இதேவித மற்றொரு   பைத்தியத்தைப் பார்க்கலாம்.
"மிஸ்டர் ரேடியோலா' தனது புத்தகத்தில், (கேப்ரிஸ் என்ற புனைப்பெயரில் எழுதிய)  இன்னொரு பெண் எழுதிய கடிதத்தையும் போட்டிருக்கிறார்.
"ஐயா, இந்த வார்த்தைகள் அவசரத்தில், அதிகம் யோசிக்காமால் எழுதப்பட்டவை. அதிகம் யோசித்திருந்தால், நான் கடிதமே எழுதி இருக்க மாட்டேன். உங்கள் ஸ்டூடியோ நேயர்கள் முன்னிலையில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இடம் பதிவு செய்துள்ளேன். உங்களை நேரடியாகப் பார்க்கும் மகிழ்ச்சி பெறுவதற்காக. உங்கள் புகைப்படத்தைத்தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. ரேடியோவில் உங்கள் அறிவிப்புகளைக் கேட்டு அறிந்திருக்கிறேன். அவை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தன. இருந்தும் உங்களைச் சந்திக்க (சற்று நெருக்கமான சூழ்நிலையில்)  விரும்புகிறேன். ஆகவே  இசை நிகழ்ச்சி முடிந்ததும், எனக்காகச் சில கணங்களை ஒதுக்க விரும்பினால், அரங்கின் வெளியே பேஷன் ஷாப்பிற்கு நேர் எதிரே உள்ள ஸ்டூடியோ வாசலில் நில்லுங்கள். உங்கள் கையில் ஏதாவது செய்தித்தாளை மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். நான் என் காரில், அந்தப் பக்கமாக வந்து, உங்களை என் காரில் ஏற்றிக் கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன், இல்லையா?''
ரேடியோலா, இந்த வாய்ப்பையும்  நிராகரித்தார்!
 (ஆதாரம்:  CANNED LAUGHTER -Peter Hay.)

6 comments:

  1. இன்டெரெஸ்டிங். மார்சல், ப்ரொஃபஷனையும் பெர்சனலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளவில்லை. 'நீங்க எழுதுவது பெரும்பாலும் இதுவரை தெரியாத விஷயங்களாகவே இருக்கிறது. அதனைத் தொடர்பு படுத்தி ரசிக்க முடிகிறது.

    நாமும் (தமிழர்கள்) இலங்கை வானொலியில் பலரின் குரலுக்கு அடிமையாகியிருப்போம் (ரொம்ப கவர்ந்த குரல்). மயில்வாகனம், அப்துல் ஹமீது, கே.எஸ்.ராஜா போன்றோர்) அதேபோல், 'ஆகாசவாணி.. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' என்ற குரலும் வெகு வசீகரமானது. அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, எத்தனையோ முகம் தெரியா தமிழர்கள் அவர்களின் குரலுக்கும் திறமைக்கும் வெகு ரசிகர்களாக இருந்தது.

    ReplyDelete
  2. நீங்கள் எழுதியிருப்பது சரி. சரியான உச்சரிப்பு இல்லைனா, ரொம்ப நிரடும். அதில்தான் ப்ரொஃபஷனல்ஸ் வேறுபடுகிறார்கள் (தனித்துத் தெரிகிறார்கள்) பல மொழிபெயர்ப்பு நூல்களிலும் இந்தக் குறையைக் கண்டிருக்கிறேன். சமீபத்தில் உங்கள் இடுகையில் - நண்பர் தட்ட்ச்சு செய்தது. அந்தத் தவறாக இருக்கலாம் - காலிஃபோர்னியா என்று வந்திருந்தது கொஞ்சம் நிரடியது - தவறான உதாரணமாக இருந்தால் வெளியிட வேண்டாம்.

    ReplyDelete
  3. ஆங்கில செய்தி வாசிப்பாளர் மெல்வில் டி மெல்லோவ்ற்கு ஈடு யாரும் வரவில்லை. ( அவரைப் பேட்டி கண்டு
    குமுதத்தில் எழுதி இருக்கிறேன். ‘அண்ணாதுரை” எனபதை எப்படி உச்சரிப்பது என்று என்னிட்ம கேட்டு 10,15 உச்சரித்துக் காட்டி ‘ஓ. கே’ வாங்கினார்.

    ReplyDelete
  4. அருமையான தெரியாத செய்திகள். தமிழ்ச் செய்தி வாசிப்பவர்களில் என்னைக் கவர்ந்தவர் முதலில் விஜயம் அவர்களே! அதன் பின்னர் சரோஜ் நாராயண்ஸ்வாமி. மெல்வில் டிமெல்லோவின் ஆங்கிலச் செய்தியைக் கேட்டுக் கேட்டுச் சுருக்கெழுத்துப் பழகி இருக்கேன். தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர்களில் ஆங்கிலத்தில் சுகன்யா பாலகிருஷ்ணனும், தமிழில் ஷோபனா ரவியும் தான் முன்னணி!

    ReplyDelete
  5. விஜயம் மற்றும் சரோஜ் நாராயண்ஸ்வாமி
    இருவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். பின்னால் தமிழ் செய்தி வாசிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் நான் நியமிக்கப்பட்டேன்

    ReplyDelete
  6. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!