July 05, 2017

பரிவு மாமி- 2

வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு நாட்டுப்பெண் வர வேண்டும்” என்று நம் குடும்பங்களில் கூறப்படுவது உண்டு.
 மாமி புகுந்த வீட்டில் விளக்கேற்ற வேண்டிய அவசியமில்லை. வீட்டில் ஒரு அகல் விளக்காகவே அவர் விளங்கினார். நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. 
    அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் துளிக்கூடப் பாசாங்கு இல்லாத, இயல்பான அம்சமாகும். வேறு எந்த மாதிரியும் அவரால் இருக்க முடியாது. தான் தனிப்பிறவி என்றோ, மாதர்குல மாணிக்கம் என்றோ கருதிக் கொள்ள அவருக்குத் தெரியாது. இயல்பான எளிமைதான், அவருடைய Fair and Lovely க்ரீம்.
  மாமா ஒரு பள்ளி ஆசிரியர். சமூக சேவகர். மாமியிடம் முழுப் பொறுப்பையும் கொடுத்து விட்டு எளிமையாக, அலட்டல் இல்லாமல் “எல்லாம் அவள் பார்த்துப்பாள்” என்று இருப்பார். ஒதுங்கி இருக்க மாட்டார். பக்கபலமாக இருப்பார். அரவணைப்பாக இருப்பார்.
  குடும்பம் என்றால் நூறு பிரச்சனைகள் இருக்கும். ஒன்று போனால் ஒன்று வரும். கடல் அலை போல். அதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை மனத் தெளிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்க்கை நெறிமுறை. மாமி என்ற தீபத்திற்கு அவர் எண்ணெய்.
ஆகா, ஒரு தம்பதி என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் என்று என்னை வியக்கச்  செய்தவர். அதனால் அவர்களை என் ஆதர்ச தம்பதியாகக் கருதத் தொடங்கினேன். பின்னால் எனக்குத் திருமணம் ஆனதும் அவர்களை எங்களது ‘ரோல் மாடல்’ என்று வைத்துக் கொண்டோம். அது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் பல்வேறு முடிவுகளை, சிலசமயம் கடினமானவைகளையும் சில சமயம் எளிமையானவைகளையும் எப்படிக் கையாள்வது என்று புரியாமல்  குழம்பி நிற்கும் கணங்களில் இதை ‘மாமி’ எப்படிக் கையாண்டிருப்பார் என்று நாங்களே சிந்தித்து, நாங்களே அவர்கள் சார்பாக ஒரு ஆலோசனையை எங்களுக்குச் சொல்லிக் கொள்வோம். 
அதைப் பின்பற்றுவோம். அவை நல்ல பலனை எங்களுக்கு அளித்துள்ளன. இவை யாவும் தற்செயல் நிகழ்வுகள் என்று நீங்கள் கருதக் கூடும். இருக்கலாம். இப்படி நடைபெற்ற தற்செயல் நிகழ்வுகளை எங்களுக்கு நடத்திக் கொடுத்து வருபவர்கள், ஆண்டவன் தொடங்கி பலர் உள்ளனர். அந்தப் பலரில் மாமியும் ஒருவர் என்று கருதுகிறேன். ஆண்டவன் மாமி மூலமாக, அதாவது மாமியின் நினைவுகள் என்ற மின்கம்பி மூலமாக எங்களுக்கு எளிமை, துணிவு, பரிவு, கடமை, பொறுமை என்று தேவைக்கு ஏற்ப மின்சக்தியைப் பாய்ச்சி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வதில் தவறில்லை.
  மாமாவிற்கு உடல்நலம் சரியாக இல்லை என்று தகவல் வந்தது. போய்ப் பார்த்தோம் மாமி இடிந்து போய் இருப்பாரே, எந்த மாதிரி ஆறுதல் கூறுவது என்று மனதிற்குள் குழம்பிக் கொண்டே போனோம்.
வீட்டிற்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினேன்.  வீட்டுக் கூடத்தில் மணி அடித்து, ஒலியை எதிரொலித்தது. அந்த வீட்டின் சுவர்களின் மீது பட்டு, வாயிற்புறம் வந்த அந்த மணியின் நாதத்திலேயே ஒரு குழைவு இருந்தது. ‘வருக’ என்று கனிவுடன் கூறுவது போல் இருந்தது. இது ஒரு பிரமையாக இருக்கலாம். பிரமைக்கு எதுவோ அல்லது யாரோ காரணமாக இருக்க வேண்டுமல்லவா? அவர் யார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
 மாமிதான் வந்து கதவைத் திறக்கிறார். மாமி, முகம் வாடி, சோகமாக அலுப்பாக, கவலையாக வந்து கதவைத் திறப்பார் என்று நான் எண்ணியிருந்தேன். உம், “மாமியைப் பற்றி நீ அறிந்தது அவ்வளவுதான்” என்று யாரோ அசரீரி மாதிரி கூறியது போல் இருந்தது. “வாடா... வாடிம்மா... வாங்கோ..” என்று கண்கள் மலர அழைத்தாள். மாமிக்கு முன் நாங்கள் குழந்தைகளாகி விட்டோம்
தனக்குக் குழந்தை இல்லை என்பதால் அவருக்கு எல்லாரும் குழந்தைகள்தான் - கலியாணமான தம்பதிகள் உட்பட.
“மாமா, எப்படி இருக்கிறார் மாமி?” என்று  கேட்டதும், “மாமா உடம்பு சரியில்லைதான் ஆனாலும் தெம்பாகத்தான் இருக்கிறார். பெருமாள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டதால் சாதாரணமாகத் தான் இருக்கிறார். டாக்டர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் மாமாவிற்குக் கவலை இல்லை.  மாமாவிற்கு முன்னே நான் கவலைப்படுவதில்லை. வாயேன், வந்து பாரேன்” என்று சொல்லி, மாடிக்கு அழைத்துச் சென்றார்.
மாடிக்குச் சென்று மாமாவைப் பார்த்தேன். மாமா, தன் நோயை மறந்து கலகலவென்று பேசினார். மாமாவின் நோயைப் பற்றி   மாமி சொன்னது குறைவு. எங்கள் நலனையும் வாழ்க்கையைப் பற்றியும் கேட்டது அதிகம். “ஆமாம், உனக்குச் சேப்பங்கிழங்குக் கறி ரொம்பப் பிடிக்குமே. ஏம்மா, அவனுக்குப் பண்ணிப் போடறியா?” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டாள்.
 ஆமாம்.. சொல்ல மறந்து விட்டேன்.
       மாமியின் சேப்பங்கிழங்கு கறிக்கு ஈடு எதுவுமே இல்லை. வாணலியில், கிழங்கு குறைந்த தீயில் நிதானமாக குழைந்து தூக்கியடிக்கும் மணத்தடன், புளிக் கரைசலில் கொதித்துக் (குதித்து?) கொண்டு வெந்து  கொண்டிருக்கும். மாமி எதிரே உட்கார்ந்து அதை அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டிருப்பார். அடுப்பும் சுற்றியுள்ள இடமும் கடப்பைக் கல் தரையும் பளிச்சென்று இருக்கும். அப்படியே அந்தக் காட்சி என் மனதில் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுள்ளது. கை மணம் என்று சொல்லுங்கள், மாமியின் கை மணத்திற்கு ஈடு எதுவுமில்லை என்பேன். 
  *      *     *
மாமா காலமாகிவிட்டார். மாமா விட்டுபோனது பெரிய இரன்டு கட்டு வீடு. உயில் எதுவும் அவர் எழுதவில்லை. தேவையில்லை என்பதாலும் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை.
ஆறு மாதம் ஆகி இருக்கும். மாமிக்கு  சுகவீனம் ஏற்பட்டது. அவர் மேல் பாச   முள்ள எல்லாரும் “ மாமி. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  நீங்கள் ஒரு உயில் எழுதி வைத்து விடுங்கள்” என்று சொன்னதற்கு, மாமி டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னது: “என்னுடைய எல்லா குழந்தைகளும்  எடுத்துக் கொள்ளட்டும்” என்றாள்.  
 நாலைந்து மாதம் ஆகியிருக்கும். மாமிக்கு சுகவீனம் ஏற்பட்டது.
மருத்துவ மனையில்   அட்மிட் பண்ண வேண்டி இருந்தது. கிளம்பும்போது, ” மாமா கூப்பிடறார்..  நீங்கள் எல்லாரும் சமர்த்தா இருங்க” என்று சொன்னார்.
மாமி மருத்துவ மனையில் சில நாட்களுக்குப் பிறகு காலமாகி விட்டார்.
அவரது 17 ‘குழந்தைகளும்’  அவரது சொத்தைப் பவியத்துடன் பிரித்துக் கொண்டார்கள்.
நெஞ்சில் நிறைந்த மாமி; நெஞ்சில் உறைந்த மாமி!

7 comments:

  1. அபூர்வப் பிறவி(கள்). அவர்களுக்கு ஏற்றமாதிரி அமைந்த உறவினர்கள்.

    நான் முதலில் கதையோ என்று நினைத்தேன். உண்மை நிகழ்ச்சி என்று அறிந்தவுடன் கூடவே பிரமை. நாம பொதுவா பார்க்கிறது, சொல்றது எல்லாமே கெடுதல்களை, கெட்டவங்களை, கெட்ட சம்பவங்களை. இவங்களைப்போல மனிதர்களும் நம்மிடையே நிறைய இருக்கக்கூடும். அவர்களைப் பற்றிப் பேசும்போது, நம்மை அறியாமலேயே பிறர்க்கு இன்ஸ்பிரேஷனாக அமையும், உங்களுக்கு அமைந்ததுபோல்.

    இப்போது நிச்சயமாகத் தோன்றியது. கோபுலுவின் ('சார்'லாம் ஃபார்மாலிட்டி. கடுகு, கோபுலு, சாவி, சுஜாதா, எஸ்.ஏ.பி, அரசு, ராகிர, ஜெ போன்ற (பலரும்) இவங்கள்லாம் எங்கள் வாழ்க்கைப் பாதையில் கூடவே வந்தவர்கள்) இரண்டு படங்கள் அனுபவத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டுசென்றிருக்கும்.

    ReplyDelete
  2. வந்ததே தெரியலை! அபூர்வமான மாமி! இவங்களைத் தான் ஸ்திதப் பிரக்ஞர்கள் என்று சொல்லலாமோ! மாமியின் குணம் கோடியில் ஒருத்தருக்குத் தான் இருக்கும்.

    ReplyDelete
  3. பத்மினியின் படம் பெரிதாகவே இல்லையே! தனியாக ஓர் இடத்திலும் திறந்து முயற்சி செய்து பார்த்தேன். :(

    ReplyDelete
  4. இன்னொரு பின்னூட்டம் கொடுத்திருந்தேனே! பத்மினியோட படத்தைப் பெரிசாக்க முடியலைனு! :) அது காக்கா ஊஷ்?

    ReplyDelete
  5. You can press Control key and scroll the mouse.
    The whole page will be magnified in stages. You can view the magnified picture.

    ReplyDelete
  6. மாமி வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறார்! பாசிட்டிவ் பெண்மணி! பாசிட்டிவ் எனர்ஜி நம்மைச் சுற்றி இருந்தாலே நல்லது என்பதுதானே! இப்படியான மனிதர்கள் நமக்கு ரோல்மாடலாக இருந்தாலே நமக்கு எல்லா சக்தியும் கிடைத்தது போலத்தான். அபூர்வமான மாமி!!! துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க என்று சொன்ன வள்ளுவரும் நினைவுக்கு வருகிறார்.

    கீதா: கமலா தொச்சு வாசித்திருக்கிறேன். நெட்டில் தேடிய போது உங்கள் தளத்திலேயே கமலா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பார்த்தேன்..வாசிக்கிறேன்...

    ReplyDelete
  7. கருத்தில் சொல்ல விட்டுப் போனது...பரிவு மாமியின் முதல் பாகத்தையும் வாசித்துவிட்டுத்தான் இங்குக் கருத்திட்டோம்..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!