March 12, 2016

கடவுள் கை கொடுத்த கணங்கள்!-2

சாந்தினி சௌக்கில் ஒரு அற்புதம்.... 
 இது நடந்த வருஷம் தோராயமாக நினைவிருக்கிறது. ஆனால் மாதம், தேதி மறந்து விட்டது. மறக்காதது அந்த அரிய சம்பவம் நிகழ்ந்த கணம். மூன்று குடும்பங்களை அப்படியே மாற்றி எங்கேயோ  எடுத்துக்கொண்டு போனதைக் கூறுகிறேன்.

70’களில் நடந்தது. 
ஒரு ஞாயிற்றுக்கிழமை என் மனைவியும் நானும் தில்லி சாந்தினி சௌக்கின் 'சண்டே மார்க்கெட்'டுக்கு போனோம், ஞாயிற்றுக்கிழமைகளில் சாந்தினி சௌக்கில் வீதியில் பாதிக்கு மேல் நடைபாதைக் கடைகள் வந்து விடும். நடைபாதையிலும் பல நல்ல பொருள்கள் மலிவாகக் கிடைக்கும். சரியான அடாஸ்  பொருள்களும் இருக்கும்.

அந்தக் காலத்தில் சற்று பிரபலமாக இருந்தது ஃபோம் சில்க்  என்ற ஜப்பான் துணி. உண்மையிலேயே மிருதுவாகவும் நல்ல டிஸைன்களிலும் கிடைக்கும். என் பெண்ணுக்கு ஒரு frock தைக்கலாம் என்று துணி வாங்கப் போனோம். வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடம் சென்றோம். எங்களுக்குப் பிடித்த துணிக்கு வழக்கத்தை விட அதிக விலை சொன்னார். எட்டணா விலை வித்தியாசத்தால் விலை படியவில்லை. வேண்டாம் என்று சொல்லித் திரும்பி விட்டோம். பாதி தூரம் வந்திருப்போம்  எட்டணாவிற்காக நல்ல டிசைனை விட்டு விடுவதா என்று வழக்கம்போல்  பின்புத்தியில் தோன்றவே, மறுபடியும் அந்த கடைக்குச் சென்று துணியை வாங்கி வரலாம் என்று தீர்மானித்தோம். 
ஞாயிறுகளில் சாந்தினி சௌக் ஒரு வழிப்பாதைதான். வாகனங்களுக்குத் தடை. ஸ்கூட்டரில் மட்டும் போகலாம். அதுவும் ஒரு வழிப்பாதைதான். ஸ்கூட்டரில் போனால் திரும்ப வண்டியைத் தள்ளிக்கொண்டுதான் வர வேண்டும்.  நெருக்கும் கூட்டத்தில் அது மிகவும் பிரயாசையான காரியம். ஆகவே என் மனைவியிடம் ”ஸ்கூட்டரை இங்கு ஓரமாக நிறுத்திவிடுகிறேன். நீ இங்கேயே ஸ்கூட்டரைப் பார்த்துக்கொண்டு நில். நான் ஒரே ஓட்டமாகப் போய் துணியை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லி,  அப்படியே நிறுத்திவிட்டு அந்த கடைக்காரைத் தேடிப் போனேன். 
அவரிடம் அவர் சொன்ன விலையைக் கொடுத்து துணியை வாங்கிகொண்டு திரும்பினேன். கூட்டத்தில் வேகமாக வர முடியவில்லை. எதிரே வருபவர்களை இலேசாக தள்ளி, விலக்கி வர வேண்டியிருந்தது.
               *                         *                                 *

சிறிது தூரம் வந்திருப்பேன். திடீரென்று எங்கிருந்தோ ஒரு குரல் ‘மாமா’ என்று கேட்டது. தமிழ்க்குரல். யாரோ, யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று எண்ணினாலும் கூப்பிட்டது யார் என்று கண்டுபிடிக்க கண்களை நாலுபுறமும் மேய விட்டேன்.

”இதோ, இதோ இருக்கிறேன். அங்கேயே இருங்கள். வந்து விடுகிறேன்” என்று கையை ஆட்டியபடி ஒருத்தர்  கூப்பிட்டதை வைத்து யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சில வினாடிகள் போகவும் என்னைக் கூப்பிட்டவர் திடீரென்று என் கண் முன் வந்தார்.
”மாமா மாமா! உங்களைத்தான் கூப்பிட்டேன். நம்ப மாட்டீர்கள். காலையிலிருந்து உங்கள் விலாசத்தைக் கண்டுபிடிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்து நம்பிக்கை இழந்து விட்டேன் “ என்றார்.
“ஆ, ராமு நீயா? நீ எங்கேடா டில்லிக்கு வந்தே? ஜப்பான் போய்விட்டதாக யாரோ சொன்னார்களே?” என்று கேட்டேன்.

என்னைக் கூப்பிட்ட ராமு என்  ஊர்ப் பையன்.   அவனுடன் தொடர்பு விட்டுப் போய் பல வருடங்கள் ஆகி விட்டன. 
கடைசியாக அவனைப் பற்றிய தகவல்: கம்பெனி வேலையாக ஜப்பானில் இருக்கிறான் என்பதே. அதுவும் ஐந்து, ஆறு  வருஷத்துக்கு முந்திய தகவல். ஆகவே அவனைப் பார்த்ததும் எனக்கு ஷாக். அவனுக்கு என்னை விட ஷாக். என்னைப் பார்த்ததும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.
“ஏண்டா ராமு, நீ எதுக்கு இங்கே வந்தே? ஜப்பானுக்குப் போய் விட்டதாகச் சொன்னார்களே... டில்லியில் வேலையா? எங்கே இருக்கிறே? வா...என்னுடன்.  வீட்டுக்குப் போகலாம்” என்றேன்.

“மாமா...மாமி எங்கே? உங்களோட வரலியா?” என்று கேட்டான்.
“அதோ, ஸ்கூட்டர் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறாள்.” ராமுவை பார்த்ததும்  என் மனைவிக்கும் மகிழ்ச்சி கரமான அதிர்ச்சி.
“ஏண்டா ராமு,  ராமுவா? பார்த்து எத்தனை யுகமாச்சு? எப்படி இருக்கிறே? எங்கே இருக்கிறே? ஒரு லெட்டர் கூடப் போடலை. நீ எங்கே இருக்கிறேன்னும் தெரியலை. ஜப்பானுக்கு போயிட்டதால நாங்கள் எல்லாம் தூசு ஆயிட்டோமா...”
“ ...அப்படி சொல்லாதீங்க., மாமி..என் முழு கதையை அப்புறம் சொல்கிறேன். முதலில் நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன்.”
“சொல்லு”
“ஜப்பானிலிருந்து இன்றைக்கு காலையில்தான் வந்திறங்கினேன். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. என் டில்லி ஆபீஸில் யாரையும் சந்திக்க முடியலை. நாளைக்குச் சிலரைப் பார்த்துவிட்டு பெங்களுருக்கு போக டிக்கெட் வாங்கி இருக்கிறேன். காலையில் வந்ததும் எப்படியாவது நீங்கள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்து, உங்களைப் பார்க்கணும்னு தீர்மானிச்சேன். இந்தப் பரந்த டில்லியில் யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. டெலிபோன் டைரக்டரியில் தேடினேன். உங்கள் பெயர் இல்லை. டில்லித் தமிழ்ச் சங்கத்திற்குப் போய் விசாரித்தேன். அங்கு ஒரு சௌக்கிதார் மட்டும் இருந்தார். அவரும் எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார். ஒரு நாள் முழுவதும் உங்களுடன் கழிக்கணும் என்று நினைத்தேன். கரோல்பாக் பக்கம் போய் யாரையாவது கேட்கலாம் என்று நினைத்தேன். 
சாந்தினி சௌக்கை ஒரு சுற்று சுற்றிவிட்டு அஜ்மல்கான் ரோடு போய் விசாரிக்கலாம் என்று பிளானை மாற்றி விட்டு இங்கு  வந்தேன்.  இந்தக் கூட்டத்தில் இன்று நீங்கள் வந்ததும் என் கண்ணுக்குத் தென்பட்டதும் கடவுளின் கருணை, மாமா” என்று நாத்தழுக்க சொல்லியபடி கண்ணீர் விட்டான்.
“இதுக்கு எதுக்குடா அழறே? என்ன ராமு, சொல்லு  என்ன சமாச்சாரம்” என்று கேட்டேன்.
”மாமா ...பெரிய கதை...எங்க குடும்பத்திலே பிரச்னை மேல் பிரச்னை. அதுவும் எல்லாம் என்னைச் சுற்றிய பிரச்னை. பல பேர் பல மூலையிலிருந்து இழுத்து என் வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பத்தையும் முடிச்சுகளையும் போட்டு விட்டார்கள். அவிழ்க்க முடியாத கல் முடிச்சுகள்” என்றான். ”அதையெல்லாம் உங்களிடம் சொல்லி ஆறுதல் பெறவே உங்களைத் தேடி அலைந்தேன். உங்களை  எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை...இதோ கடவுள் காட்டி விட்டார்.  சாந்தினி சௌக் ஜனத்திரளில் எப்படி என் கண் முன்னே கடவுள் உங்களைக் கொண்டு வந்தார்,!அது எனக்கும் என் பிரச்னைகளுக்கும் விடிவுகாலம் வந்து விட்டது என்பதற்கு இது அறிகுறி” என்றான்.

” அப்படியே ஆகட்டும்.?   துணி வாங்க வந்தோம். பேரம் படியாததால் வீட்டுக்குக் கிளம்பி விட்டோம்.   துணி வாங்காமல் போவதற்கு மனசு கேட்கவில்லை. போய் வாங்கி கொண்டு வந்தேன். அதனால் என்னை உன்னால் பார்க்க முடிந்தது. இதை ஏற்பாடு செய்தவர் கடவுள் தான். உன் பிரச்னையைச் சொல்” என்றேன்.  
“உங்களோடு வீட்டுக்கு வந்து சொல்கிறேன்” என்று சொன்னான். 
முகவரியைக் கொடுத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.
’மாமா.. நான் ஆட்டோ பிடித்து வந்து விடுகிறேன்:” என்றான்  
  
எங்கள் வீட்டுக்கு வந்து, அவனது பிரச்னைகளை விவரமாகச் சொன்னான்.
” ராமு.. கவலைப்படாதே.  நானும் மாமியும் முழுமூச்சுடன் இறங்கி பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்கிறோம்” என்றேன்.

அதன் பிறகு நடந்தவை ஒரு தனி அத்தியாயம். அற்புதமாக, யாரும் எதிர்பாராவிதத்தில் சூரியனைக் கண்ட பனி போல் அவனது பல பிரச்னைகள், முட்டுக்கட்டைகள், எதிர்மறைக் கருத்துகள், தப்பு அபிப்பிராயங்கள் எல்லாம் மறைந்து போயின. அவன் குடும்பத்தில் மகிழ்ச்சி பூத்தது. அவன் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறந்தது. 
    
இதன் பின்னணியில் எங்கள் பங்களிப்பும் சிறிது இருந்தது என்பதைக் கூற வேண்டும். என்னையும் ஒரு கருவியாக்கி, ஒரு குடும்பத்தில் ஏகப்பட்ட நல்ல  மாற்றங்களை ஏற்படுத்தியது இறைவன் செயல் என்றாலும் அது துவங்கிய கணம் சாந்தினி சௌக் மார்க்கெட்டில்தான்.   மறக்கமுடியாத கணம்!  
    
(இந்த சந்திப்பிற்குப் பிறகு அவனது குடும்பத்தில் நடந்த பல சம்பவங்கள், மாற்றங்கள், புது மலர்ச்சிகள், புது மகிழ்ச்சிகள் ஆகியவை தனிக்கதை. அது அவனது தனிப்பட்ட வாழ்க்கை. அதை விவரிப்பது சரியல்ல என்பதால் எழுதாமல் விடுகிறேன்.
ஒரு குடும்பத்தின் மீது சாபம் போல்  படர்ந்திருந்த இரும்புப் போர்வையை விலக்க, , வேறு சிலருடன் கை கோர்த்து செயல் புரியும் கருவியாக  என் மனைவியையும்  என்னையும் கடவுள் தேர்ந்தெடுத்தது, எங்களுக்குக் கடவுள் தந்த மிகப் பெரிய 
பரிசு!) 

முக்கிய குறிப்பு:இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

7 comments:

  1. நடப்பவை யாவும் நன்மைக்கே என்பது நான் அடிக்கடி நினைக்கும் விஷயம். உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. தொடருங்கள்.

    ReplyDelete
  2. Nice Ramu.You can continue your journey with us.
    Regards,
    K.Ragavan
    Bengaluru

    ReplyDelete
  3. Mr. Ramu found you in such a vast city without even address and then in the extremely congested Sunday market is nothing but a miracle and that too because of your second thoughts of buying a cloth piece. He was destined to get help to solve his problems through you. It IS God's kindness to his prayers.

    ReplyDelete
  4. ராமுவின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்! - கடுகு
    இந்தியாவில இருக்கும் சகோதரி ஷோபனா கை கொடுத்ததால் (கை விரலால் தட்டச்சு செய்து கொடுத்ததால்) பதிவு போட முடிகிறது. -கடுகு

    ReplyDelete
  5. R. Jagannathan அவர்களுக்கு, நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி - கடுகு

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இடையில் சில வாரங்கள் வந்து பார்க்கவில்லை. இப்போது உங்கள் பதிவுகளைப் பார்த்ததும், மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    தட்டச்சு செய்து கொடுத்திருக்கும் சகோதரி ஷோபனா அவர்களுக்கும் எங்களது நன்ரி.

    அன்புடன்

    திருமதி சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!