December 29, 2014

கமலா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்


ஒரு கணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா, நிஜமா என்று புரியவில்லை. நிதர்சனமா, பிரமையா என்று தெரியவில்லை!

தொச்சு.. என் அருமை கமலாவின் அருமைத் தம்பி தொச்சு என் முன்னே கட்டுக்கட்டாய் ரூபாய் கட்டுகளை வைக்கிறான். "அத்திம்பேரே, இந்தாங்க பணம் என்கிறான்.

என்ன அதிசயம்? தொச்சு கை நீட்டி கொடுத்ததாக வரலாறே கிடையாது. வாங்கி வாங்கி சிவந்த கை அவனுடையது. அப்படிப்பட்டக் கறவை திலகம் எனக்கு - ஏமாந்த சோணகிரி சங்கத்தின் தலைவரான எனக்கு - பணத்தைக் கொடுக்கிறான்!

கமலா, பற்களுக்கு இடையில் முகமாகத் திகழ்கிறாள். கதவை ஒட்டி நின்று கொண்டிருந்த என் மாமியார்,  ஒலிம்பிக்கில்   தானே மெடல் வாங்கி வந்ததைப்போல் முகம் மலர்கிறார்!

`என்னப்பா இது' எங்கேயாவது லாட்டரி அடிச்சியா?'' என்று கேட்டேன்.

`காலத்துக்கும் தொச்சு உங்க கிட்டேயிருந்து பணம் வாங்கிக் கொண்டெ இருப்பான்னு நெனைச்சிங்களா!'' என்றான் உற்சாகமாக!

`அதில்லைடா... கொள்ளை அடிச்சுண்டு வந்தேயா, பிக்பாக்கெட் பண்ணிண்டு வந்தேயான்னு கேட்க மறந்துட்டார்.  ஒரு தத்துப் பித்து கதை எழுதி ரூபாய் சம்பாதிச்சா அது பெரிசு! மத்தவங்க நாயா அலைஞ்சு பேயா திரிஞ்சு சம்பாதிச்சா, அது கள்ள நோட்டு, பிக்பாக்கெட் பணம்!'' தொச்சுவின் உடன் பிறந்த சகோதரியின் பாகற்காய் + எட்டிக்காய் ஜூஸ்  வார்த்தைகள்!

"கமலா, நான் தொச்சுவைக் கேட்கறேன்; அவன் சொல்றான். நீ என்ன, நடுவில்?'' என்றேன்.

`பழங்காநத்தத்திலே நாம மனை வாங்கினோமே, ஞாபகமிருக்கா? அது பழங்காநத்தம் இல்லை. குப்பையெல்லாம் கொட்டிய பழங்கா நாத்தம்னு கூட நீங்களே சொல்வீங்களே!''

"அதுக்கு என்ன வந்தது?அதுல போட்ட பணத்திற்கு எப்போதோ எள்ளு போட்டாச்சே!''

"நீங்க போடுவீங்க,...ஆனால் அவனுக்கு மனசே சரியில்லை. நம்மால அத்திம்பேருக்கு நஷ்டமாயிடுத்தேன்னு வருத்தம்... வருத்தம்''.

"கமலா...சட்டுனு விஷயத்துக்கு வா. அந்த பிளாட்டை யார் தலையிலேயாவது கட்டிட்டானா?'' 

"கட்டறதா... பக்கத்திலே ஒரு இண்டஸ்ட்ரி வர்றது. அவங்களுக்குப் போகறதுக்கு வழி நம்ப பிளாட்தான். நல்ல விலை கொடுத்தான். நாம எப்பவோ பாதி பாதி பணத்தைப் போட்டு பத்தாயிரத்துக்கு வாங்கினோம். இப்போ எண்பதாயிரத்திற்குப் போயிருக்கு... உங்க பங்கு நாற்பதுதான் இது'' என்றான் தொச்சு.

"பரவாயில்லைப்பா...பிளாட் வாங்கி வித்தால் நல்ல லாபம் வரும்போல இருக்கே! ஆமாம்,.பாதி பாதி பணம் போட்டோம்னு சொன்னியே. உன் பங்கு 5000 ரூபாயை என் கிட்ட கடனாக வாங்கிண்டே இல்லயா? இதுவரை அந்த பணத்தைத் தரலையே?''

"அத்திம்பேரே... அவசரப்பட்டுட்டிங்களே, எண்ணிப் பாருங்கோ...அந்த அஞ்சாயிரத்தையும் போட்டுத்தான் கொடுத்திருக்கேன்.''

"அவனுக்கு எதுக்கு ஒருத்தர் பணம்? அவனாயிருக்கவே அந்த உதவாக்கரை பிளாட்டை இந்த விலைக்கு வித்துக் கொடுத்திருக்கான். உங்க அக்காவோட சேர்ந்து வாங்கினீங்களே புலிப்பாக்கத்திலே, என்ன ஆச்சு.?  உழைச்சுட்டு, ஊருக்கெல்லாம் நல்லது செஞ்சிட்டு இப்படிப் பேச்சு வாங்கிக் கட்டிக்கறது உன் தலையெழுத்துடா தொச்சு.''- என் மனைவி!

"ஏண்டி அவர் மேல பாயறே...? தொச்சுவுக்கு எவ்வளவு குட்டுபட்டாலும் புத்தி வராது.  அவர் மேலே அவனுக்கு என்னவோ அவ்வளவு மதிப்பு!''... இது என் மாமியார்! `நிஷ்டூரமாகப் பேசுவது எப்படி' என்று ஒரு பயிற்சி நிலையமே நடத்தக்கூடிய திறமைசாலி என் மாமியார். 

“போகட்டும்.. தொச்சு, இந்தப் பணம் லாட்டிரி பிரைஸ் மாதிரி. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இந்தப் பணத்தை அப்படியே போட்டு ஒரு பிளாட்டை வாங்கு. நல்ல விலைக்கு வரும்போது தள்ளி விடு.''

"அத்திம்பேரே! பிளாட்டா விற்கிறதை விட அபார்ட்மென்ட் கட்டி விற்றால் நல்ல மார்ஜின் இருக்கு.''

"என்ன ஜின்னோ, விஸ்கியோ,...எது ஆதாயமானதோ அதில் இறங்குப்பா. வராத பணம்னு நினைச்சது, வந்தது. அதனால தைரியமா, ரிஸ்க் எடுத்துக்கலாம்.'' என்றேன்.

"கமலா, மணி மூணாச்சு. அவருக்கு காபி கொடுக்கலையா'?' என்று கேட்டார் என் மாமியார். மாப்பிள்ளை மீது திடீர் கரிசனம் வந்துவிட்டது!

"அத்திம்பேர், கமலா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' என்று பேர் வெச்சுடலாம்'' என்றான் தொச்சு, அருமை அக்கா கொடுத்த அடையை ருசித்தபடியே.

"இதோ பார் தொச்சு. ஏதோ ஒரு பிளாட்டை வாங்கிப்போடு. கொஞ்சம் லாபம் வந்தால் விற்றுவிடு. ஃபிளாட் கட்டி விக்கறதெல்லாம் தொல்லை பிடிச்ச வேலை., அப்புறம் ஃபிளாட்டை விக்கணும். இரண்டாம் மாடி, மூணாம் மாடி விக்கறதுக்குத் திணறும். எல்லாத்தையும் விட முக்கியமானது. ஃபைனான்ஸ். பத்து, இருபது லட்சம் புரட்டணும்.... வேண்டாம்பா.''.

"அத்திம்பேர்...அந்தக் கவலையெல்லாம் என்கிட்ட விட்டுடுங்கோ. இந்தக் காலத்திலே கடகால் வெட்டும்போதே எல்லாம் வித்துப் போயிடறது. மூணு மாசமா நான் என் பிஸினஸை விட்டுவிட்டு இந்தத் தொழில்ல இருக்கிற நெளிவு சுளிவுகளை கவனிச்சு தெரிஞ்சிண்டிருக்கேன். மேஸ்திரி முருகேசன்னு ஒரு அசகாய சூரன். அவனை வளைச்சுப் போட்டிருக்கேன். பேர் வாங்கின கட்டடங்களைக் கட்டிய கில்லாடி!''

"உதாரணமாக, பைசா கோபுரம்!''

"ஐய்யய்யோ...ஐய்யயோ. அத்திம்பேருக்கு எப்படித்தான் பளிச் பளிச்னு ஜோக் தோணுதோ'' என்று ஐஸ் வைத்தான். அதே மூச்சில், "அத்திம்பேர், நம்ப பில்டிங் கம்பனிக்கு அக்கா பேரை வெச்சு ஆரம்பிச்சுடலாம். ஆகி வந்த பேர்!'' என்றான்.

"அக்கா பேரோ, சொக்கா பேரோ,உன் இஷ்டம். உங்க அக்கா இஷ்டம். பணம் கொடுத்தாச்சு. .அத்தோட முடிஞ்சது என் பங்கு'' என்றேன்.

"உங்களைத் தானே.. இந்த மாதிரி சின்ன விஷயம் எல்லாத்தையும் அத்திம்பேர்கிட்ட சொல்லி தொந்தரவு பண்ணாதீங்க. அவர் கதை எழுதறவர். சதாசர்வகாலமும் யோசனை பண்ணி, மூளையைக் கசக்கி கதை எழுதற வேலை... நீங்க வேற, கரடி மாதிரி...''

யார்... யார் எனக்காகப் பரிந்து பேசறது? அங்கச்சிதான்! தொச்சுவின் சகதர்மிணி. கீச்சுக்குரல் கோகிலவாணி! போச்சுடா! ஆமையும் அமீனாவும் வரவேண்டியதுதான் பாக்கி!

"அத்திம்பேரை யாருடி தொந்தரவு பண்ணா? உபதேசம் பண்ண வந்துட்டியே...''

"தொச்சு..அங்கச்சியைத் திட்டாதே... எங்கே மனை பார்த்திருக்கே..'' என்றேன்.

”அது சொல்ல வர்றதுக்குள்ளதான் முந்தரிக்கொட்டை மாதிரி இவ வந்துட்டாளே! பாருங்கோ, அத்திம்பேர், மனை ரெடி. கான்ட்ராக்டர் ரெடி. மனையை வாங்கி ரிஜிஸ்டர் பண்ணிட்டா, உடனே ஃபிளாட்கள் வித்துடலாம். ஆறே மாசத்திலே கட்டி முடிச்சுடலாம்.  வர்ற லாபத்திலே  அப்படியே அக்காவிற்கு வைர அட்டிகை வாங்கிப் போட்டுடலாம்'' என்று சொன்னான் தொச்சு.

"சரி, கமலா..உன் கழுத்து அளவு கொடு! இப்பவே ஆர்டர் கொடுத்துடறேன்'' என்று சற்று கேலியுடன் நான் சொன்னேன்.

"ஏண்டா தொச்சு! உன் வாயை வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டே? பணம் கொடுக்கறதுக்கு அவருக்கு என்னவோ மனுஷாளே இல்லாத மாதிரி சொல்றே! இங்க பணம் வந்தா. அங்க அவ அம்மாவுக்கு வாசனை வந்துடும். பிள்ளை பாசம் பொங்க லெட்டர் எழுதிடுவாள். இவரும்....''

"கமலா, இதோ பாரு... இது மாதிரி குத்திக் காட்டறதுக்கு உனக்கே போரடிக்கலையா? சரி., சரி, தொச்சு... ஜமாய்ப்பா.''

"அத்திம்பேர், நம்ப கையில இருக்கற பணம் போறாது. கொஞ்சம்கூட போட்டால்தான் மனையை வாங்க முடியும். லட்ச ரூபாய் ஆகிறது. நீங்க ஒரு இருபத்தைஞ்சு கொடுங்கோ. மீதியை நான் பாத்துக்கறேன்'' என்றான், ஏதோ ஒரு சிட்டிகைப் பொடி கேட்பது போல்!

"தொச்சு... இருக்கிற பணத்தை வெச்சு ஏதாவது செய். மேற்கொண்டு பணம் கிணம் கேட்காதே. ஒரு பைசா கிடையாது'' என்றபோது கமலாவின் லேசர் பார்வைத் தாக்கியது. விழியால் மொழி மட்டுமல்ல, ஒரு தொடர் கதையையே பேசக்கூடியவள் கமலா! அந்தப் பார்வையின் பதவுரை, பொழிப்புரை மற்றும் உள்ளர்த்தம்: ”போன வாரம்தான் பாராஞ்சியில் இருந்த பாறை நிலத்தை நல்ல விலைக்கு விற்று முப்பதாயிரம் ரூபாய் பணம் வந்ததே, அதைக் கொடுத்தால் குடிமுழுகியாப் போயிடும்?”

"ஒரு மூணு மாசம் டயத்திலே உங்களுக்கு இரண்டு மடங்காகக் கொடுத்துடறேன். அப்புறம் பாருங்களேன். கதை, கிதை எழுதறதெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு இந்த பிஸினஸில் முழுமூச்சா இறங்கிடுவீங்க...''

"சரிப்பா.. எப்படியாவது புரட்டித் தர்றேன்!'' என்றேன்.

அந்த சமயம் அங்கச்சி ஒரு தட்டில் ஏதோ ஸ்வீட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். "புதுசா கம்பெனி ஆரம்பிக்கறீங்கன்னு பெருமாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் பண்ணேன். குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் பண்ணினேன்...

`அங்கச்சி! என்ன இது ஜெயில் களி மாதிரி இருக்குதே... குருவாயூரப்பன் ஜெயிலில் பிறந்தவன் என்கிறதால் இப்படிப்பட்ட நைவேத்யமா?'' என்று நான் கேட்டதும் -

கேட்காத ஜோக்கைக் கேட்டவர்கள்போல், டெலிபோன் மணி போல் சிரித்தார்கள். டெலிபோன் மணி என்பதைவிட ரிசர்வ் பாங்க் ’மணி' (இருபத்தைந்தாயிரம் போல்!) என்பது பொருத்தமாக இருக்கும்!

தொச்சு, ஒரு வெள்ளைத்தாளை எடுத்து., "அத்திம்பேரே, இந்தாங்க உங்க கையால ஒரு பிள்ளையார் சுழி போட்டு `கமலா கன்ஸ்ட்ரக் ஷன்' என்று எழுதுங்கோ, இன்னிக்கு நாள் நன்றாக இருக்கிறது'' என்றான்.

அவன் சொன்னபடி நான் பிள்ளையார் சுழி போட்டேன். எதற்குப் பிள்ளையார் சுழி என்று அப்போது தெரிந்திருந்தால் போட்டிருக்கவே மாட்டேன். விதி யாரை விட்டது!

   *                        *                          *


சென்னைக்கு அருகில் பத்து நிமிடத்தில் (ஹெலிகாப்டரில்!) போகக்கூடிய தூரத்தில், சந்தன வீரப்பனே செல்ல அஞ்சும் பிரதேசத்தில் தொச்சு ஒரு மனையை வாங்கிப் போட்டதுமில்லாமல் அங்கே `கமளா' கன்ஸ்ட்ரக் ஷ்ன்ஸ்' என்று எழுதிய போர்டையும் நட்டு வைத்து, அதன் மேல் பூமாலையும் மாட்டி வைத்திருந்தான்!

பூமி பூஜையாம்! கமலாவும் என் அருமை மாமியாரும் அங்கச்சியும் தொச்சுவின் பிரஜைகளில் சிலரும் காரில் தொத்திக் கொள்ள நாங்கள் வந்து சேர்ந்தபோது எங்களுக்குப் பெரிய வரவேற்புக் குழுவே காத்திருந்தது. சுமார் பத்தாயிரம் கொசுக்கள்!

"என்னப்பா தொச்சு? இவ்வளவு தூரத்தில் பிளாட்டை வாங்கியிருக்கிறாய்?''

"இல்லை அத்திம்பேர் குறுக்கு வழியா வந்தால் சிட்டிக்கு ரொம்ப கிட்டேதான்.''

"எந்த சிட்டிக்கு?''

"இப்படி சேட்லபாக்கம், பள்ளத்தூர், காளைப்பட்டி வழியாக வந்தால் ரொம்ப தூரமில்லை,'' என்று ஒரு புதுக்குரல் கேட்டது.

"அத்திம்பேர், இவர்தான் கான்டிராக்டர், மிஸ்டர் தர்மராஜன்.''

"தர்மராஜன்! தண்ணி எப்படி?'' 
ஏதோ கேட்க வேண்டுமே!  கேட்டேன்.

"கல்கண்டு கெட்டுது.''

"அப்ப டயபடீஸ்காரங்க நம்ம ஃபிளாட்டை வாங்க மாட்டாங்கன்னு சொல்லுங்க''

"ஐயா.... நல்ல தமாஷா பேசறீங்க! ராகுகாலம் வரப்போறது. அதுக்கு முன்னே இந்த போர்டுக்கு சூடம் கொளுத்திட்டு கடகால் தோண்ட ஆரம்பிச்சுடலாம், ஒரு சாஸ்திரத்திற்கு.''

உலகில் உள்ள அத்தனை முள்செடிகளும் அந்த மனையில் இருந்தன. புதர்களைச் சிறிது வெட்டிவிட்டு, போர்டைச் சுற்றி நின்று பூஜை செய்தோம். திடீரென்று அங்கச்சி `எந்தரோ மகானுபாவுலு, என்று பாட ஆரம்பித்தாள். `பாட' என்ற வார்த்தை சரியில்லைதான். அது பாட்டா, வசனமா, பேட்டை ராப்பா, கஜலா, தெம்மாங்கா, கானாவா என்பது யாராலும் நிச்சயமாகக் கூற முடியாது என்றாலும் ஒன்று மட்டும் சொல்ல முடியும். இந்தப் பாட்டை திருவையாறில் மட்டும் அவள் பாடியிருந்தால், தியாகராஜர் சமாதியை விட்டு எழுந்து போயிருப்பார்!

பூஜை முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை கமலா விநியோகம் செய்தபோது தொச்சுவின் பிரஜைகள் அந்தப் பிரதேசத்தைக் ’காகங்கள் மகாநாடா’க மாற்றி. சர்க்கரைப் பொங்கலுக்குப் பறந்து கத்தியதையும். தொச்சு சிலர் முதுகில்  சாத்தியதையும் இன்னும் பல குழப்பங்களையும் விவரிக்க ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூடமுடியாது என்றால் என் சாதாரண பே`நா'வால் எப்படி விவரிக்க இயலும்?

"அத்திம்பேர்....இந்தாங்க கடப்பாரை சாஸ்திரத்திற்கு உங்க கையால் கொஞ்சம் தோண்டிவிடுங்க. என்ன தர்மராஜன்... வேலையை மளமளவென்று ஆரம்பிச்சுடணும். நாலாவது மாசத்தில் ஃபிளாட்கள் ரெடியாகிடணும்'' என்றான் தொச்சு

சொன்னபடி செய்தேன். ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு பழம், வைத்து ரூபாயையும் வைத்து கான்டிராக்டரிடம் தொச்சு கொடுத்தான். அவர் ரூபாய் நோட்டுகளை மட்டும் எண்ணவில்லை, எத்தனை வெற்றிலை, எத்தனை பாக்கு என்றுகூட எண்ணிப் பார்த்தார்!

"ஆமாம் அத்திம்பேர், லாரியில் செங்கல் வந்து இறங்கினால், அதைக்கூட ஒண்ணுவிடாம எண்ணிப்பார்த்து வாங்குவார் நம்ப கான்டிராக்டர்! பணம் கொடுத்து வாங்கறோமே, குறைஞ்சா நமக்குத்தானே நஷ்டம்?'' என்றான் தொச்சு.

"அது வரைக்கும் மணலையும் எண்ணி வாங்காம இருக்கிறாரே'' என்று நான் சொன்னதைக் கேட்டு கான்டிராக்டர் கலகலவென்று சிரித்தார்.

"அத்திம்பேர்... இரண்டு ஃபிளாட்டுக்கு இப்பவே அட்வான்ஸ் தர்றேன்னு வந்துட்டாங்க. கான்ட்ராக்டர் சொல்றார்,  கடனோ உடனோ வாங்கி  இப்பவே ஆறு ஃபிளாட்டா கட்டினால் இன்னும் ஆதாயம்னு. நாலு கட்டினால் ஒரு ரூபாய் நிக்கலாம். ஆறாகக் கட்டினால் ஒண்ணரை ரூபாய் நிக்கும் இதுக்காக எக்ஸ்ட்ரா இன்வெஸ்ட்மென்ட் அதிகம் இல்லை....என்ன சொல்றீங்க?'' என்று தொச்சு கேட்டான்.

"பணம் என்கிட்ட கிடையாது எதுவும் இனிமேல் '' என்றேன் டி.வி. தமிழாக்கத் தொடர் வசன பாணியில்! எதையாவது சொல்லி, பணத்தைப் பிடுங்கி விடப்போகிறேனே என்ற பயத்தில் ஏற்பட்ட குழப்பம்.! 



"காட்டாங்குளத்தூர் சாஸ்வத நிதியில் நமக்குத் தெரிஞ்ச ஆள் இருக்கிறார். அவர் மூலமா கொஞ்சம் லோன்  வாங்கிக்கலாம். ஃபிளாட் அட்வான்ஸ் கிடைச்சதும் திருப்பிக் கொடுத்துடலாம்.''

"சாஸ்வத நிதியில் கடன் வாங்கினால் சாஸ்வதைக் கடனாகத்தான் ஆயிடும். வட்டிவேற ஜாஸ்தியாக இருக்கும்.''

"வட்டி 28 பர்ஸன்ட்.''

"என்னது...என்னது...பர்ஸன்ட் என்பதைப் ‘பிரஸன்ட்’ மாதிரி சொல்றே?''

`அத்திம்பேர், நீங்க பெரிய எழுத்தாளர். கற்பனை உலகத்திலேயே இருக்கீங்க. சௌகார்பேட்டையில் போய்க் கடன் வாங்கிப் பாருங்க. முப்பத்தாறுக்குக் குறையாது''

"அங்கே போய் ஏன் வாங்கணும்?''

"பின்ன பணம் எங்கே இருக்கு?''

"சரி...சரி...எதையாவது செய். என்னை எதுவும் கேட்காதே.. பூமி பூஜை பண்ணி ஒரு வாரம் ஆச்சு இன்னும் வேலை ஆரம்பிச்சதா தெரியலை.''

"யார் சொன்னது? ஒரு ஷெட் போடறதுக்கு செங்கல், ஜிங்க் ஷீட்டிற்கு ஆர்டர் கொடுத்தாச்சு. தண்ணிக்கு ஆறு பெரிய ஸின்டெக்ஸ் டாங்க் நாளைக்கு வந்து இறங்கிடும்.''

"என்னப்பா சொல்றே? அஸ்திவாரமே தோண்ட ஆரம்பிக்கவில்லை. ஓவர்ஹெட் டாங்க் வாங்கிட்டியா?''

`அத்திம்பேர்...உங்களுக்குத் தெரியாது. வேலை ஆரம்பிச்சுட்டா, கட்டடம் மளமளவென்று வளர்ந்துடும். அப்போ போய் வாட்டர் டாங்கிற்கு அலைய முடியாது கான்ட்ராக்டர், வேறு கட்டடத்திற்கு வாங்கியது மிஞ்சிப்போய் விட்டதாம். தள்ளுபடி விலையில் கொடுக்கிறார். இன்னிக்கு இல்லாவிட்டால் நாளைக்கு வாங்க வேண்டியதுதானே?''

"சரி.. இப்ப நான் என்ன செய்யணும்?''

"லோன் அப்ளிகேஷன்ல ஒரு ஜாயிண்ட் கையெழுத்துப் போடணும்.''

"வெறுமனே போடணுமா? பிள்ளையார் சுழி போட்டுப் போடணுமா?'' என்று கேட்டேன்.

"சுழியும் வேண்டாம், பழியும் வேண்டாம். உங்க ஜோக்கெல்லாம் கதையில் வெச்சுக்குங்க. இந்தாடா தொச்சு, டிபன்.''என்று சொல்லிக்கொண்டே வந்தாள் கமலா.

கடன் மனுவில் கையெழுத்துப் போட்டேன். அந்த சமயம் எனது இடது கண், கை கால் மட்டுமல்ல இடது பக்கம் இருந்த மேஜை, நாற்காலி யாவும் துடித்தன!

இரண்டு நாள் கழித்து தொச்சு தன் சைக்கிளில் இரண்டு மூன்று கடப்பாரைகளைக் கட்டிக்கொண்டு வந்தான்.

"அத்திம்பேர்..இன்னியிலிருந்து நான்-ஸ்டாப் வேலை ஆரம்பிச்சுடறார். ஃப்ரீயாக இருந்தால் வாங்களேன். கடப்பாரை வாங்கிட்டேன். உபயோகமாக இருக்கும்னு.''

"நீ போப்பா, நான் என்ன செய்யப்போறேன்.''

"இத்தனை கனத்தை லொங்கு   லொங்குனு சைக்கிளில் அவன் எடுத்துண்டு போகணுமா? உங்க பஞ்ச கல்யாணியிலே எடுத்துக்கொண்டு போகக் கூடாதா?'' என்று கமலா கேட்டாள். அது கேள்வி அல்ல, உத்தரவு! கீழ்ப்படிந்தேன்.

மனையில் நாலைந்து பேர் இருந்தனர். கான்டிராக்டரைக் காணோம். தொச்சு அவர்களிடம் ”இந்தா.. கடப்பாரை இல்லைன்னு சொன்னீங்களே. வேலை ஆரம்பிச்சுடுங்க,'' என்றான்.

அவர்களும் வேலையைத் துவக்கினார்கள்.

"தொச்சு, நான் போகட்டுமா? நீயும் வர்றயா? கடகால் தோண்டுவதற்கு மேற்பார்வை வேண்டுமா என்ன?'' என்று கேட்டேன்.

"இல்லை, அத்திம்பேர், கான்டிராக்டர் பிளானை எடுத்துண்டு வர்றேன்னு சொல்லி இருக்கிறார். மனையில் வெச்சு அதைப் பார்த்தால் நமக்கும் ஒரு ஐடியா கெடைக்கும் அப்புறம் ஃபிளாட் வாங்க பார்ட்டி வந்தாலும் வருவாங்க. நீங்க இருந்தால் பேசறதுக்கு சரியா இருக்கும்,'' என்றான்.

"சரி...காரில் இருக்கிறேன், யாராவது வந்தால் கூப்பிடு,'' என்று சொல்லிவிட்டு காரில் வந்து  உட்கார்ந்தேன். லேசாகத் தூக்கம் வரவே, கண்ணயர்ந்தேன்.



"அத்திம்பேர்.. அத்திம்பேர்.. வாங்க...''

தொச்சுதான் அலறிப் புடைத்துக்கொண்டு வந்து எழுப்பினான்.

"என்னப்பா என்ன? பாம்பு, தேள் ஏதாவதா? என்ன ஆச்சு என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.

"பயப்படும்படியா ஒண்ணுமில்லே...தோண்டிக் கொண் டிருக்கும்போது பெரிய பாறையோ எதுவோ கடப்பாரையில் தட்டுப்பட்டது. அதனால் அந்தப்பக்கம், இந்தப்பக்கம்னு கடப்பாரையைக் குத்தி மண்ணை எடுத்தாங்க...பாறாங்கல் இல்லை. அத்திம்பேர் ஒரு அம்மன் சிலை மாதிரி இருக்கு.. வந்து பாருங்க''

போய்ப் பார்த்தேன், அம்மன் சிலை மாதிரி இருந்தது சற்று சிதிலமடைந்து இருந்தது.

"சரிப்பா..ஏதாவது சிலை பண்ணி இருப்பாங்க உளி தப்பாப் பட்டு, ஏதாவது மூளியாய்ப் போயிருக்கும். தூக்கிப் போட்டுருப்பாங்க. விடுங்கப்பா. வேலை நடக்கட்டும்.'' என்றேன்.

இந்த சமயம் கான்டிராக்டர் தர்மராஜன் ஒரு சைக்கிளில் வந்து இறங்கினார். (அந்த சைக்கிள் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா அல்லது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்!)

"என்னப்பா வேலை எவ்வளவு ஆச்சு'' என்று கேட்டவர், `என்ன தொச்சு ஸார், என்ன பாத்துக்கிட்டிருக்கிங்க?... செங்கலுக்குச் சொல்லிவிட்டு வந்தேன்.. அடடே.. நம்ப பெரிய ஐயா கூட வந்திருக்கிறாரா?'' என்றார்.

"இல்லைங்க, தோண்டறப்போ யாரோ தூக்கிப் போட்டுவிட்ட சிலை மாதிரி ஒண்ணு கெடைச்சுது...'' என்றேன்.

"சிலைங்களா? அட இதுதானா? செண்பகாதேவி சிலை மாதிரி இருக்குதே!''

"அட, சிலையெல்லாம் பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கிங்களே.. போகட்டும். பிளான் ரெடியா?''

"ப்ளானை விடுங்க..எனக்கு இப்போ பிரச்சனை...இந்த சிலை ஏதாவது புராதன காலத்துச் சிலையா இருந்தால் என்ன செய்யறது?  முதலில் தாசில்தாருக்குச் சொல்லணும் இல்லாட்டி சிலை கடத்திட்டோம்னு கேஸ் போடுவாங்க,'' என்றார் கான்டிராக்டர்.

அந்த சமயம் ஒரு கூலியாள் "என்னங்க திரும்பவும் ஏதோ கடப்பாரையில் தட்டுப்படுது'' என்று குரல் கொடுக்க, கான்டிராக்டர், "இத பாரு மன்னாரு.. தோண்டறதை நிறுத்திடு. முதலில் சைக்கிள்ல போய் தாசில்தார் ஆபிஸ்ல சொல்லிட்டுவா,'' என்றார்.

மன்னாரு போனதும் "சார்! தாசில்தார் ஒரு வார்த்தை சொல்லிட்டா, மேலே தோண்டலாம். இதாங்க பிளான்,'' என்று காகிதத்தைப் பிரித்தார்.

"தொச்சு..பிளானைப் பின்னால் பார்க்கலாம் கிணறு வெட்ட ஏதோ புறப்பட்ட கதையாக இருக்கிறதே.. தொல்லையடா சாமி,'' என்று அலுத்துக் கொண்டேன்.

"அத்திம்பேர்.. கவலைப்படாதீங்க. பிளானைப் பார்க்கலாம்,'' என்றான் தொச்சு.

அரை மணி நேரம் கழிந்தது. மன்னாரும் தாசில்தாரும் வந்து சேர்ந்தனர்.

"எங்கேப்பா சிலை?'' என்று கேட்டார். கான்டிராக்டர் காட்டினார். தாசில்தார் அதைக் கூர்ந்து கவனித்தார். அப்படியும் இப்படியும் புரட்டினார்.

"என்னப்பா தர்மா.. இது ரொம்ப பழைய கால சிலை மாதிரி இருக்குது. ஆறாம் நூற்றாண்டு மாதிரி தெரியுது. ராஜராஜ பல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும். இல்லாவிட்டால் நரசிம்ம சோழன் காலமாக இருக்கும். எதுக்கும் டில்லி ஆர்க்கியலாஜிகல் சர்வே ஆபீசுக்கு தகவல் அனுப்பிடணும். .யார் இவர்? நீங்கள்தான் பிளாட் ஓனரா?''

"ஆமாம்..இப்ப நாங்க என்ன செய்யணும்'' என்று அவரைக் கேட்டேன்.

"ஒண்ணும் செய்ய வேண்டாம். இனிமேல் தோண்டாதீங்க, நாங்க கிளியரன்ஸ் கொடுக்கறவரைக்கும்...இந்தச் சிலையை பத்திரமா நம்ப ஆபீசுக்கு கொண்டு வாங்க'' என்று சொன்னார்.

நான் தலையில் கை வைத்துக்கொண்டேன்.



இந்திய அரசாங்கத்தின் மூன்று சிங்க முத்திரைக் கடிதத்தை ஏழாவது தடவையாகப் படித்தேன். தொச்சுவும் கமலாவும் என் அருமை மாமியாரும் வாய்மூடிக் கொண்டிருந்தார்கள்.

"அத்திம்பேரே.. இப்போ என்ன செய்யறது?'' என்று தொச்சு கேட்டான்.

"அந்த கேள்வியை நான் தானே கேட்கணும் தொச்சு? லெட்டரைப் படிச்சியா இல்லையா? முதலில் போய் `கமலா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' போர்டை காயலான் கடையில் போட்டு, அவன் கொடுக்கற அஞ்சு ரூபாய்க்கு ஒரு சின்ன டவலை வாங்கிக்கொண்டு வா. வருகிற வழியில் குழாயில் அதை நனைத்துக்கொண்டு வந்து, அந்த ஈரத்துணியை என் தலையில் போடு. கொஞ்சம் எள்ளும் வாங்கிண்டு வந்தால், இந்த பிளாட்டிற்குப் போட்ட பணத்திற்கு எள்ளும் தண்ணியும் விட்டுடலாம். நீ வாங்கின பிளாட்டில் அகப்பட்ட சிலை ரொம்ப புராதன சிலையாம்! அப்புறம் தோண்டினதில் ஏதோ மண்டபம் மாதிரி இருக்கிறதாம். அதனால், கவர்மென்ட் நம்ப பிளாட்டை `அக்வையர்', அதாவது வாங்கிக்கறதாம். அதற்கு நஷ்ட ஈடாக மூவாயிரத்து இருநூறு ரூபாய் சுளையாக காம்பன்சேஷன் கிடைக்கும்'' என்று எரிந்து விழுந்தேன்!

என் மாமியார், கமலா, தொச்சு மூவரும் சிலையாக நின்றார்கள் ஏமாந்த சோணகிரியின் காலத்துச் (அதாவது அடியேன் காலத்து!)  சிலையாக!

7 comments:

  1. ஹாஹாஹா! அருமையான நகைச்சுவை கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரூபன் அவர்களுக்கு,
    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.. உங்களுக்கும் என் வலைப்பதிவிற்கு விஜயம் செய்யும் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.
    -கடுகு

    ReplyDelete
  4. இந்த ராஜராஜ சோழனும் நரசிம்ம பல்லவனும் வேறு தொச்சுவுடன் சேர்ந்து கொண்டார்களே ஹும்

    ReplyDelete
  5. உங்களுக்கு அந்த தாசில்தாரைத்தான் தமிழ் வரலாறு ஆசிரியராகப் போடவேண்டும் . ராஜராஜ பல்லவன், நரசிம்ம சோழன் என்பதைத் தப்பாக எழுதி இருக்கிறீர்களே! ;)

    ReplyDelete
  6. சங்கரநாராயணன்January 2, 2015 at 4:42 PM

    சிரித்து மாளவில்லை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.
    இடுக்கண் வருங்கால் நகுக, என்பதைப் பலர் ’பிறர்க்கு இடுக்கண் வருங்கால் நகுக’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள் என்று என் குறும்புக்கார நண்பர் சொல்வார்!!!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!