June 10, 2013

தப்பு பண்ணிட்டேன்


1954 டிசம்பர்   நாலாம் தேதி சனிக்கிழமையன்று நான் ஒரு  தப்பு பண்ணிவிட்டேன். 50 வருஷம் ஆகியும் அந்தத் தப்பு என்னை வருத்தப்படச் செய்து கொண்டிருக்கிறது! இதோ விவரமாகச் சொல்கிறேன்.
சென்னை ஜி.பி.ஓவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அதுவும் ஜி.பி.ஓ. ரிக்ரியேஷன் கிளப்பின் கமிட்டி உறுப்பினர்,  கலைவிழா அமைப்பாளர் என்று சில பதவிகளை என்னுடன் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த காலம்.
4-ம் தேதி ஜி.பி.ஓ விளையாட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  மாநிலக் கல்லூரி மைதானத்தில் பந்தயங்கள் முதலியன பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்து இருந்தார்கள். பகல் இரண்டு மணிக்கே விளயாட்டு விழாவிற்குப் போகலாம் என்றும்  ஆபீஸில் அறிவித்து விட்டார்கள்.
எனக்கு ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு கிடையாது என்பதால் மைதானத்திற்குப் போக ஆர்வமில்லை. ஆனால் மைதானத்திற்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாறு காந்திநகர் போகத் திட்டமிட்டேன்.
கல்கி அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்ற தகவல் வந்ததால்,  அவரைப்  பார்க்க  அடையாறு  போகலாம் என்று எண்ணி கிளம்பினேன். அந்த சமயம் பார்த்து, கிளப் காரியதரிசி. “எங்கேப்பா கிளம்பிட்டே... இரு, ஒண்ணா போகலாம்: என்றார்.
” இல்லைப்பா.. அடையாறு போய் கல்கி அவர்களைப் பார்த்துவிட்டு நேரே மைதானத்திற்கு வந்து விடுகிறேன்; என்றேன்.
“அடையாறு போய்விட்டு வருவதற்குள் போட்டிகள் எல்லாம் முடிந்துவிடும்.  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. லீவுதான். அதனால் நாளைக்குப் போய் பார்த்துக் கொள்...” என்றார்
போதாதற்கு “ நீ  வந்து உற்சாக மூட்டினால்தான் களை கட்டும்” என்று நண்பர்கள் ‘பூ’ சுற்றிவிட்டார்கள். நானும் என் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ‘சரி’ என்று அவர்களுடன் மைதானத்திற்குச் சென்றேன்.

மறுநாள் காலை ஏழு மணி ரேடியோ தமிழ்ச்  செய்தியில்  ‘ கல்கி அவர்கள் காலமாகி விட்டார்’ என்ற செய்தி வந்தது.  எனக்கு அளவில்லாத   துயரம்.  முன் தினம் அவர் வீட்டுக்குப் போக இருந்த திட்டத்தைக் கைவிட்ட முட்டாள்தனம்  அதை மேலும் அதிகமாக்கியது.

பின்னால் ஒரு தகவல் தெரிந்தது. கல்கி அவர்கள் காலமாவதற்கு முன் தினம் “ எனக்கு செங்கல்பட்டு பாலாறு தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருக்கிறது” என்று சொன்னராம், உடனே திரு சதாசிவம் அவர்கள், ஒரு திருகு மூடி போட்ட குடத்தை வாங்கி வரச் சொன்னாராம்.  மறு நாள் காலை ( 5ம் தேதி)  திரு வரதப்பனை ( திருமதி சரோஜினி வரதப்பனின் கணவர்) செங்கற்பட்டிற்கு அனுப்பினார்.  துரதிர்ஷ்டம், திரு வரதப்பன் தண்ணீருடன் வருவதற்குள் கல்கி அவர்கள் காலமாகி விட்டார். எங்கள் ஊர் தண்ணீரும் என்னைப் போல்  கொடுத்து வைக்கவில்லை.

முன் தினம் அவரைப் பார்க்கப் போகாத என் தப்பு இன்னும் என்னை வருத்தப்படச்செய்து கொண்டிருக்கிறது. 

9 comments:


  1. இப்படி சில செயல்கள் நம்மை காலம் பூராவும் வருத்தப்பட வைக்கின்றன

    ReplyDelete
  2. என்ன செய்வது? விதி!

    ReplyDelete
  3. வேண்டப்பட்டவர்களை அவர்களின் கடைசி காலத்தில் கஷ்டப்படும்போது கையாலாகாமல் பார்ப்பதும் கஷ்டம். அவர்களை நல்ல நிலையில் இருக்கும்போது பார்த்த பிம்பம் மனதில் இருப்பது நல்லது. இப்படி நினைத்து தேற்றிக்கொள்ளுங்கள்.

    காசி தீர்த்தத்தை விட செங்கல்பட்டு பாலாறு கல்கிக்கு அவ்வளவு உசத்தியா! - ஜெ.

    ReplyDelete
  4. மனதை நெகிழ வைத்தது இந்தப் பகிர்வு! எனக்கும் இதுபோல வாய்ப்பைத் தவறவிட்டு விட்ட ஒரு உறுத்தல் ஊவாமுள்ளாய் உள்ளே குத்திக் கொண்டேதான் இருக்கிறது.

    ReplyDelete

  5. ஐயா வணக்கம். மூத்த பதிவர்கள் என்று எழுதி இருக்கிறேன். எழுபது வயதுக்கு மேற்பட்ட எனக்குத் தெரிந்த தமிழ் வலைப் பதிவர்கள் குறித்து எழுதி இருக்கிறேன். அதற்கு வந்த பின்னூட்டடதில் டாக்டர் கந்தசாமி உங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மின் அஞ்சல் முகவரி கிடைக்காததால் இதில் எழுதுகிறேன். விகடன் கல்கி பத்திரிக்கைகளில் உங்களைப் படித்த நினைவு. நேரம் கிடைத்தால் என் பதிவு பக்கம் வாருங்கள். பல தலைப்புகளில் இரண்டாண்டுக்கும் மேலாக எழுதி வருகிறேன்.நன்றி.

    ReplyDelete
  6. ஈடு செய்யமுடியாத வருத்தம்

    ReplyDelete
  7. அடாடா....

    சில சமயங்களில் இப்படித் தான் இழந்து விடுகிறோம்....

    ReplyDelete
  8. நான் எழுதுவதை எப்போதும் ஊக்குவிக்கும் என் சின்னம்மா அவர்கள் என் வலைப்பூவையும் வாசிக்க விரும்பினார் ..அவர்கள் வீட்டிற்கு சென்று கணினியில் BOOKmark செய்துக் கொடுக்க எண்ணி இருந்தேன் ,திடீரென்று அவர்கள் காலமானார்கள் ,உங்களைப் போன்றே நானும் வருத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறேன் !

    ReplyDelete
  9. G.M Balasubramaniam அவர்களுக்கு,

    நானும் ஒரு மூத்த பதிவன்தான்!
    -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!