May 05, 2013

புஷ்பா தங்கதுரையும் நானும்

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீவேணுகோபாலனை (அல்லது ஸ்ரீவேணுகோபாலன் என்னும் புஷ்பா தங்கதுரையை நான் சென்னை ஜி.பி..-வில் 50-களில் வேலைக்குச் சேர்ந்த பிறகு சந்தித்தேன். அதே அலுவலகத்தில் இருந்த அவரை சந்தித்தபோது  ஓரளவு பிரபலமான எழுத்தாளராகவே இருந்தார்,

அமுதசுரபியில் கனமான கதைகள் எழுதிவந்தார். ஒரு ரயில் எஞ்சின் டிரைவரைப் பற்றி அவர் எழுதிய கதையைப் படித்து அசந்து விட்டேன். அந்த கால கட்டத்தில் நான் ஒரு எழுத்து ரசிகன். எழுத்தாளன் ஆகும் ஆர்வமும் இருந்தது என்று சொல்லலாம். அதைவிட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் அவர்களுடைய அறிமுகம் பெறவும் அதிக ஆர்வம் இருந்தது. ஸ்ரீவேணுகோபாலன் துவக்க காலங்களில் எழுதிய கதைகளின்  நடையும் அழுத்தமும் வெகுவாகக் கவர்ந்து விட்டன. இப்படியெல்லாம் கோர்வையாக,, அழகானப் பதப்பிரயோகங்களுடன் நமக்கு எழுத வருமா என்ற அச்சம்தான் ஏற்படும். போதாதற்கு அவர் அழகான பாடல்களும் ’பூங்குயில்’ என்ற பெயரில் எழுதுவார். 

பத்திரிகைகளில் நான் எழுதவில்லையே தவிர ஜி,பி, ஓ, வில் நாடகங்கள் எழுதிப் போட்டிருக்கிறேன், ஒரு நாடகத்திற்கு பாட்டு எழுதித் தரும்படி கேட்டேன், (அவருடன் தொடர்பு வைத்திருக்க!) 
பிறகு வேறொரு நாடகத்திற்கு டான்ஸ் டைரக்டராக, அவரும், நானும்(!) சேர்ந்து பணியாற்றினோம்!
இந்த கால கட்டத்தில் சென்னையிலிருந்து டில்லிக்கு மாற்றலாகிச் சென்று விட்டேன். இருந்தாலும் கடிதத்தொடர்பு வைத்திருந்தேன். 


குமுதத்தில் 1963 எழுதத்தொடங்கி திடீர் நட்சத்திரம் ஆகிவிட்டேன்.
1967 வாக்கில் ’சாவி’ தினமணி கதிரின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார், கதிரின் உதவி ஆசிரியர்: வை. சுப்பிரமணியன். அவர் மேற்கு மாம்பலவாசி:  ஸ்ரீவேணுகோபாலனும் மேற்கு மாம்பலவாசி. ஏற்கனவே நண்பர்கள். ஆகவே கதிரில் ஸ்ரீவேணுகோபாலன் எழுத ஆரம்பித்தார். அவர் பேச்சுவாக்கில் குமுதத்தில் எழுதும் என்னைப் பற்றிச் சாவியிடம் சொல்லி இருக்கிறார். உடனே சாவி கடிதம் எழுதியதைப் பற்றி ஏற்கனவே ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் சென்னை வரும்போதெல்லாம் ஆசிரியர் 
சாவி, வை.சு, சி.ஆர்.கண்ணன், ஸ்ரீவே,   இப்படி யார்  வீட்டிலாவது இரவு சாப்பாடு இருக்கும்: என் வீட்டிலும் இருக்கும். இல்லாவிட்டால் மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால்  மணற்பரப்பில் உட்கார்ந்து வெகுநேரம் பேசுவோம். எல்லாம் கதிரைப் பற்றித்தான்!.

சில மாதங்கள் கழித்து திடிரென்று பெயரே கேள்விப்படாத எழுத்தாளரின் ஒரு ‘துணிச்சலான’ கதை கதிரில் வெளியாயிற்று. யாராக  இருக்கும் என்று யூகிக்ககூட முடியவில்லை. சென்னைக்குக் கடிதம் எழுதிக் கேட்டேன். பதில் வருவதற்குள் அடுத்த வார இதழ் வந்து விட்டது . அதிலும் அதே எழுத்தாளர் மற்றொரு கிளு கிளு கதை எழுதி இருந்தார். 
அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீவே கடிதம் வந்திருந்தது.  தான் புது அவதாரம் எடுத்திருப்பதை (ரகசியத்தகவலாக) அவர் எனக்கு எழுதி இருந்தார்! எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.
ஸ்ரீவே நீண்ட இடவெளி விட்டுத்தான் கதைகள் எழுதுவார். வாராவார என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத விஷயம்.இப்படி வாரம் வாரம் கதை எழுதமுடியும் என்பது அவருக்கே தெரியாத ரகசியம்,

புஷ்பா தங்கதுரையின் கதைகளும் அவருடைய பெயரும் மிகப் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தி விட்டன!
சில மாதங்கள் கழித்து நான் சென்னைக்கு வந்தேன். அப்போது  சாவி ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்தார் (வருடம் 1972)  ”நாலைந்து இதழ்கள் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து பார்த்துக் கொள்ளவேண்டும்” என்றார். நான் தயங்கினேன் 
“ இதற்கு ஒத்துக் கொண்டால் உங்கள் நாவலைப் புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்வேன். வெளியீட்டு விழாவும் நடத்துவேன்.” என்றார்.
அதன்படி என் நாவல் ‘சொல்லடி சிவசக்தி’ வெளியீட்டு விழாவை கீதா கார்டன் ஹோட்டலில்  நடத்த ஏற்பாடு செய்தார். ”புத்தகத்தின் முதல் பிரதியை புஷ்பாதங்கதுரைப் பெற்றுக் கொள்வார்” என்று விளம்பரப்படுத்தி விட்டார்.


புஷ்பா தங்கதுரை என்ற எழுத்தாளர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக, விழாவிற்கு நிறைய பேர் வந்தார்கள்.
என் துரதிர்ஷ்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் புஷ்பா தங்கதுரையால் வரமுடியவில்லை.

பின்னால்  வெகு நாட்களுக்குப் பிறகுதான் ஸ்ரீவே தான்
புஷ்பா தங்கதுரை என்ற உண்மை வெளியாயிற்று.
  புஷ்பா தங்கதுரையின் கதைகளைப் படித்துவிட்டு அவரிடம் நான்  “ஏன் சார், இவ்வளவுஅழகான நடையையும் வார்த்தை அழகையும் உத்திகளையும் இம்மாதிரி பொழுதுபோக்குக் கதைகளில் விரயம் பண்ணி விடுகிறீர்களே?” என்று கேட்டேன்.
“எழுதும்போது எந்த பதம் அல்லது வர்ணனை மனதில் தோன்றுகிறதோ அதை எழுதி விடுகிறேன். பின்னால் இதை உபயோகித்து கொள்ளலாம் என்று எடுத்துப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள முடியாது. அவசியமுமில்லை” என்றார். 
அவர் சென்னை ஜி,பி.ஓவில் ஃபாரின் போஸ்ட்  செக் ஷனில் பணியாற்றி வந்தார், . இவரது பிராபல்யம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வரை சென்று விட்டது. இவர் ஒரு மினி வி,ஐ,பி. யாகி விட்டார்!   

ஒரு சமயம் காஷ்மீர் போனார். அப்போது டில்லியில் என் வீட்டிற்கு வந்தார். அதன் பின்னும் ஒன்றிரண்டு தடவை டில்லிக்கு வந்து என் வீட்டில் தங்கி இருக்கிறார்.


ஸ்ரீவேக்குத் தலையில் அடர்த்தியான முடி இருந்தது. தலைவாரிக் கொள்ளக் கிட்டத்தட்ட 10, 15 நிமிஷங்கள் எடுத்துக் கொள்வார்,

அவர் தலைவாரிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் கேட்டாள்: “ என்ன மாமா,  இப்படி  தலை விரித்தபடி இருப்பதற்கா அரைமணி நேரம்  எடுத்துக் கொண்டீர்கள்? வாரிக்கொண்டீர்களா அல்லது கலைத்துக்கொண்டீர்களா?”

ஸ்ரீவே பயங்கரப் புத்தகப் பிரியர். அவர் வீட்டில் எங்கு நோக்கினும் புத்தகங்கள்தான், ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, சம்ஸ்கிருதம், பிரன்சு புத்தகங்களும் இருக்கும்.வான சாஸ்திரத்திலும்  ஈடுபாடு உண்டு. ( வீட்டில் டெலிஸ்கோப் வைத்திருக்கிறார்!   ஆன்மீகப் புத்தகங்கள், பழைய கால GAZETTEER என அழைக்கப்படும் மாவட்டங்கள் பற்றிய தகவல் களஞ்சியங்கள் எல்லாம் இருக்கும். அவர் வீட்டில் உள்ள எல்லா புத்தகங்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்,

இரண்டு குதிரைகள் மேல் சவாரி செய்யும் திறமை படைத்தவர் ஸ்ரீவே!.
புஷ்பாதங்கதுரை கதைகளை எழுதிக் கொண்டே, திருவரங்கன் உலா
நாவலையும் எழுதினார். எல்லா வாசகர்களின் பாராட்டைப்  பெற்றதுடன், பல வைணவப் பெரியார்களையும் கவர்ந்து விட்டது. இதன் காரணமாக பல வைணவ ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்தது.

இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த நாவல்களில் ஒன்று: ”ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது” பின்னால் அது திரைப்படமாகவும் வந்தது.

மாத நாவல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கால கட்டத்தில் ”ஊதாப்பூ” என்ற மாத நாவல் பத்திரிகையை இவர் சொந்தமாக வெளியிடத் துவங்கினார். 50000 காபிகள் விற்பனை ஆயின,  நியூஸ் பிரிண்ட் பஞ்ச காலத்தில் வெளியிட்டதால் கட்டுப்படி ஆகவில்லை. பத்திரிகையை நிர்வகிக்க சரியான உதவியாளர் கிடைக்காததால் 10-15 மாதங்களில்  பத்திகையை நிறுத்தி விட்டார்.

டில்லியிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் அவர் வீட்டுக்குப் போவேன். சில சமயம் இரவு அவர் வீட்டிலேயே தங்கி விடுவேன்,

அவருக்குக் கணினியையும் எழுத்துருக்களையும் அறிமுகம் செய்து வைத்தேன். அதன் காரணமாக என்னைப் பற்றி பலரிடம்ஆஹா, ஓஹோ என்று அவர் கூறுவார்.

’ஸ்ரீவே’-யைவிட புஷ்பா தங்கதுரை பிரபலமாக இருந்தாலும். திருவரங்கன் உலா, மதுரா விஜயம், சத்ய சாய் ஆகியமூன்று  புத்தகங்களுக்கு முன் அவை ஒன்றுமில்லை. இந்த வரிசையில் மேலும் பல புத்தகங்களை ஸ்ரீவே-யிடம் எதிர்பார்க்கிறேன்.

8 comments:

  1. புஷ்பா தங்கதுரை கதை என்றால், பாத்திரங்கள் பேசிக்கொள்ளும் போது, 'within inverted commas' இருக்காது, ஒரு hyphen போட்டு எழுதுவார். எனக்கு அது படிக்க ரொம்ப தடையாக இருந்தது. மேலும் அவர் சுஜாதாவுடன் போட்டி போட முயன்று இந்தப் பெயரில், கிளுகிளுப்பை மட்டும் முக்கியமாக்கி எழுதினார் என்பது என் சந்தேகம். (அதில் வெற்றி பெறமுடியவில்லை என்பது என் அனுமானம்.) எனக்கும் அவரே ஸ்ரீவேணுகோபாலன் என்று தெரிந்ததும் மிக்க அதிர்ச்சியாக இருந்தது. கமெர்ஷியலாக வேண்டுமானால் பு. த. வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் ஸ்ரீவே தான் மரியாதைக்குரிய எழுத்தாளர்! - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பெயரில், கிளுகிளுப்பை மட்டும் முக்கியமாக்கி எழுதினார் என்பது என் சந்தேகம்.// யாருடைய தூண்டுதல் அதற்குக் காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்ரீவே அதற்கு இடம் கொடுக்காமல் அப்படியே நின்றிருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இன்னமும் பெருவாரியான வாசகர் மனதில் ஸ்ரீவே தான் சிம்மாசன்ம போட்டு அமர்ந்திருக்கிறார்.

      Delete
  2. திருவரங்கன் உலா காலத்திற்கும் நிற்கும் .

    ReplyDelete
  3. புஷ்பா தங்கதுரையின் கதைகளும் அவருடைய பெயரும் மிகப் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தி விட்டன!

    நாசூக்காக சொல்லி விட்டீர்களோ..

    ReplyDelete
  4. பொழுதுபோக்குக்காகப் படைக்கும் புஷ்பா தங்கதுரையை விட ஸ்ரீவேணுகோபாலின் படைப்புகள் எல்லாமே மனம் மயக்க வல்லவை. என் சாய்ஸ் ஸ்ரீவே.க்கு அப்புறம்தான் புஷ்பா! ஊதாப்பூ கொஞ்ச நாள் நன்றாக வந்து பின் ஏன் நின்றுவிட்டது என்று நானும் நினைத்ததுண்டு. இப்ப பதில் கிடைச்சுடுத்து. டாங்ஸு ஸாரே!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீவே- புஷ்பாதங்கதுரை இரண்டு அவதாரங்களுமே சிறப்பானவைதான்! புஷ்பாதங்கதுரை என்கிற பெயரில் அவர் எழுதிய சிங்-லிங் துப்பறியும் கதைகளில் அவர் கையாண்ட எழுத்து நடை மிகப் புதுமையானது! புஷ்பாதங்கதுரை என்கிற பெயரில் அவர் எழுதிய சிறைக்கதைகள் மற்றும் என் பெயர் கமலா ஆகியவை வாசகர்களிடத்தில் ஏற்படுத்திய பாதிப்பை மறக்கவே முடியாது!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!