May 12, 2013

ஆசிரியர் சாவி - காட்டூனிஸ்ட் நடனம்அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை 2013 ஆண்டுக்கான நகைச்சுவைப் பதக்கத்தை கார்ட்டூனிஸ்ட் நடனம் அவர்களுக்கு அளித்துக் கௌரவித்தது..
அத்துடன் சாவி இரண்டாம் நினைவு சொற்பொழிவையும் நடத்தியது. இந்த பதிவில் நடனம் அவர்களைப் பற்றியும் சாவி அவர்களைப் பற்றியும் சிறு குறிப்புகள்!

சாவி
ஆசிரியர் சாவி அழகான நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எப்போதும் எதையும் வித்தியாசமாகச் செய்ய ஆசைப்படும் அவர், தன் நாய்க்கு முனிர் என்று பெயர் வைத்திருந்தார், ( மரியாதைக்குரிய முனியசாமி??)
ஒரு சமயம் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்கு காலை வேளை போயிருந்தேன். அவருடைய அறையில், தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது பக்கத்து அறையிலிருந்த முனிர் வாலை ஆட்டிக் கொண்டு உள்ளே வந்தது, அதைச் செல்லமாகத் தடவியபடியே என்னிடம் சொன்னார்: பாருங்களேன்.. இப்ப உங்களுக்கு ஒரு வேடிக்கைக் காட்டப் போகிறேன். ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருங்கள்”: என்றார்.
தொடர்ந்து  அவர் தன் பிள்ளை பாச்சாவை உரத்த குரலில் கூப்பிட்டார்.
 
”இந்த பாச்சா, மறக்காம கெட்டிச் சட்னி
வாங்கிண்டு வரணுமே”


பாச்சா வந்ததும்  "பாச்சா, ஒரு காரியம் செய்யறயாநேரே மியுசிக் அகாடமி கான்டீனுக்குப் போய் நாலு இட்லி, நாலு வடை, பொங்கல் வாங்கிண்டு வா" என்றார்.  சரி” என்று சொல்லிவிட்டு, பாச்சா கிளம்பி போய்விட்டார்.

 ”வாங்க” என்று என்னிடம் கூறியபடியே அடுத்த அறைக்குப் போனார். நானும் போனேன். முனிரும் வந்தது. ஒரு ஐந்து நிமிஷம் கழித்து “ வாங்க, வாயிற்பக்கம் போகலாம் “ என்றார். நானும் போனேன். முனிரும் வந்தது 
”ஏய் முனிர்.. உள்ளே உன் ரூமுக்குப் போ” என்று லேசாக அதட்டினார். அது போகவில்லை.
“என்ன சார் புரியலையே” என்றேன்.
”பாச்சா கான்டீனிலிருந்து வருகிறவரை  முனிர் என்னை விட்டுப் போகவே போகாது.. அதற்கு எப்படியோ தெரிந்து விடுகிறது, இட்லி வடை என்ற நான் சொன்னதும் தனக்கு இட்லி வடை கிடைக்கும் என்று!  ஒரு இட்லி, ஒரு வடை சாப்பிட்டபிறகுதான் என் காலை விட்டு நகரும்” என்றார்.
பாச்சா இட்லியுடன் வந்தார். டைனிங் மேஜையில் வைத்தார். சாவியும் நானும் டைனிங் ஹாலுக்குப் போனோம். சாவி சொன்ன மாதிரியே ஒரே பாய்ச்சலாக முனிர் ஓடி வந்து விட்டது, இட்லி வடையை ஆர்வமாகச் சாப்பிட்டது, தாங்க்ஸ் கூட சொல்லாமல் தன் அறைக்குப் போய்விட்டது!
 -               -              -
கார்ட்டூனிஸ்ட்-மியூரல் கலைஞர் நடனம்
நகைச்சுவை பதக்கம் பெற்ற ஒவியர் நடனம் போடும் படங்களைப் பார்க்கும்போதே புன்னகையை வரவழைக்கும். அவர் படங்களைப் பார்த்து, ‘அட நாம் கூட சுலபமாக போட முடியமே’ என்று தோன்றும். (போட்டுப்பார்த்தால், படம்தான் நம்மைப் பார்த்து சிரிக்கும்!)

நடனம் முதன் முதலில் 1967-ல் தினமணி கதிரில் ஒரு கதைக்குப் படம் போட்டார். 
நான்  1967-ல்  தினமணி கதிரில் ’மிஸ்டர் பஞ்சு” என்று ஒரு கதை எழுதினேன். ( ஏன் அந்தத் தவறை செய்தாய்? என்று யாரும் கேட்காதீர்கள்!) அதுதான் என் முதல் கதை. அதற்குப் படம் போட்டவர்’-- யூ ஆர் ரைட் -- நடனம்தான்!
அதன் பிறகு அவர் ஒஹோ என்று வளர ஆரம்பித்து விட்டார், 
மியூரலில் பல உயரங்களைத் தொட்டுவிட்டார். (பல உயரமான கட்டடங்களில் அவர் மியூரல் செய்திருப்பதாலும் அதிக உயரம் போய்விட்டார்!) அமெரிக்காவிலும் அவர் கைவண்ணம் பல இடங்களை அலங்கரிக்கின்றன!
இவ்வளவு பிரபலம் ஆன பிறகும் அவர் பத்திரிகைகளுக்குப் படம் போட்டுத் தருகிறார். என் 'பேராசிரியர் பெரியசாமி' கதைகள் எல்லாவற்றிற்கும் படம் வரைந்தவர் இவர்தான்.  ஏன், இந்த  BLOG -ன் லோகோவும் அவர் வரைந்ததுதான். என் சதாபிஷேகத்திற்கு வந்து என்னைக் கௌரவப்படுத்தினார்

பாராட்டுகள், நடனம் சார்!
 

4 comments:

 1. நடனம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் படம் போட்ட கதை என்றால் நிச்சயம் கதை நன்றாக, நகைச்சுவையுடன் இருக்கும் என்று நம்பியே விடாமல் படிப்பேன், பெரும்பாலும் நான் ஏமாந்ததில்லை. - ஜெ.

  ReplyDelete
 2. அவர் படங்களைப் பார்த்து, ‘அட நாம் கூட சுலபமாக போட முடியமே’ என்று தோன்றும். (போட்டுப்பார்த்தால் படம்தான் நம்மைப் பார்த்து சிரிக்கும்!)

  பாராட்டுகள் நடனம் சார்!

  ReplyDelete
 3. சாவி சாரின் வளர்ப்பு நாய் பற்றிய உங்கள் பதிவு அருமை! எனக்கு இந்தத் தகவல் புதிது! நான் சாவி சாரிடம் சேர்ந்த பின்பு அவர் நாய் எதுவும் வளர்க்கவில்லை! (நானே நாயாய் உழைத்தேன் என்கிற அர்த்தம் இதில் தொனித்தாலும் பாதகமில்லை! :-))

  ReplyDelete
 4. சாவி ஸார் பற்றியது இதுவரை தெரியாத புதிய விஷயம்! நடனம் அவர்களின் ஓவியங்களை மிக ரசித்திருக்கிறேன் நான். பாராட்டுப் பெறும் அவருக்கு மகிழ்வுடன் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :