April 23, 2013

லால்குடி ஜெயராமன்

 திரு லால்குடி ஜெயராமன் காலமாகி விட்டார்.  அவர் என் நண்பர். அவருக்கு நான் நண்பன்.   அவர் சிறந்த  கலைஞர். நகைச்சுவையாளர். சிலேடை விரும்பி. சுமார் 35 வருஷத்திற்கு முன்பு அவர் என் வீட்டிற்கு வந்து என்னக்  கௌரவப்படுத்தி இருக்கிறார். ( ’கர்வப்படுத்தி இருக்கிறார்’  என்று  சொன்னாலும் தப்பு இல்லை!)    அவருக்கு என் அஞ்சலி.
-------------------------------------------------
’என் அன்புள்ள டில்லி’ தொடரில் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
                                                     
நான்தான் ’லால்'
டில்லியில் உள்ள சங்கீத சபாக்கள் வருஷத்தில் ஐந்தாறு நிகழ்ச்சிகளை நடத்தும். அதற்கு மேல் நடத்தக் கட்டுப்படி ஆகாது.
இந்த சபா நிகழ்ச்சிகளிலும், ஜுகல் பந்தி போன்ற நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்பவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். ஒரு சமயம் மாதம் இரண்டு தடவைகூட வந்திருக்கிறார். இதைக் குறிப்பிட்டு நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். "டில்லிக்கு லால் என்றால் ஒரு ஈடுபாடு உண்டு போலும். ஜவஹர்-லால், குல்ஜாரி-லால், லால்-பகதூர் ஆகியவர்கள் மாதிரி லால்-குடியும் டில்லியில் ஆட்சி புரிகிறார் இசை ரசிகர்களை'' என்று எழுதியிருந்தேன்.

சில நாள் கழித்து ஒரு காலை நேரத்தில் எனக்குப் போன் வந்தது. என் மனைவி கமலா போனை எடுத்தாள். மறுமுனையிலிருந்த குரல், "ஹலோ, நான் லால் பேசறேன்' என்று சொன்னது குரல்.கமலாவிற்குப் புரியவில்லை. "நீங்க யாரு? யார் வேண்டும்?'' என்று கேட்டாள்.
"நான் லால்குடி ஜெயராமன் பேசுகிறேன். அவருடன் பேச வேண்டும்'' என்றார்.
"ஓ... லால்குடி சாரா? நமஸ்காரம்.  நமஸ்காரம் அவர் பாத்ரூ... இல்லை... இல்லை இதோ கூப்பிடுகிறேன்'' என்றாள் கமலா.


லால்குடியுடன் நான் பேசினேன்.  அவர் ” சார், உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் விசிறி. உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.  உங்களுக்கு எப்போது   சௌகரியப்படும்?'' என்று கேட்டார்..

எனக்குத் தலைகால் புரியவில்லை. உலகமே என் எழுத்தைப் பாராட்டிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். அட, உண்மையாகவே என் எழுத்திற்கு ஒரு விசிறி கிடைத்து விட்டார்.!

 ”நீங்கள் என்னை சந்திக்க வருகிறேன் என்று சொன்னதே எனக்கு பெரிது விருது. நிச்சயம் என் வீட்டிற்கு நீங்கள் வரவேண்டும். அதற்கு முன் நான் உங்களைப் பார்ப்பதுதான் முறை. சார். நீங்கள் உலகப் பிரசித்தி பெற்ற வயலின் கலைஞர் நான் ஒரு.. ” என்று  சொல்லிகொண்டிருக்கும்போதே--

“ சார்.. என் விரலில் ஒரு வித்தை இருக்கிறது. அதே மாதிரி உங்கள் விரலிலும் வித்தை இருக்கிறது. என்னமாய்................. (மேலே அவர் சொன்னவைகளைத்  தவிர்க்கிறேன்).. ஆமாம், உங்களை ஒன்று கேட்கவேண்டும்.  நீங்களும் லால்குடியா?” என்று கேட்டார்.
“ இல்லை சார்... ஏன் கேட்கிறீர்கள்?”
“ இல்லை. இந்த வாரம் தினமணி கதிரில்” டாக்டர்.தர்மராஜன் ”  என்று ஒரு கேரக்டரை எழுதியிருக்கிறீர்கள். நூறு சத விகிதம், அவர் எங்க ஊர் டாக்டரேதான். அவரை மனதில் வைத்துக்கொண்டுதான், உங்கள் கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதனால் தான் ’ நீங்களும் லால்குடியா?’ என்று கேட்டேன்” என்று சொன்னார்.
”அப்படியா?. என் ஊர் செங்கல்பட்டு.  டாக்டர் தர்மராஜன் ஒரு கற்பனைதான்.” என்றேன்.
“ எங்க ஊர் டாக்டரைப் பார்த்து அப்படியே விவரித்து  இருக்கிறீர்கள்  என்றுதான்  நினைத்தேன்..பிரமாதம்.” என்று பாராட்டினார்.

ஒரு கற்பனை கேரக்டர் ஒரு நிஜ நட்பிற்கு வித்திட்டது.
அதன் பிறகு கரோல்பாக் சென்று அவரை நான் சந்தித்தேன். அவரும் என் வீட்டிற்கு வந்திருந்தார். உலகப் பிரபல கலைஞர் என்பதை விட என் விசிறி என்ற காரணத்தால், என் அருமை மனைவி கமலா தடபுடலாக விருந்து செய்தாள். அதன் பிறகு லால்குடி எப்போது டில்லி வந்தாலும் முதல் தீர்த்தம் மாதிரி முதல் போன் எனக்குத்தான்!

அவர் இசையில் மேதை; நான் இசையைப் பொறுத்தவரை பேதை (இது தவிர வேறு சில துறைகளிலும் அப்படித்தான் என்று இங்கு கமலா கமெண்ட் அடிப்பதைக் கண்டு கொள்ளாதீர்கள். இப்படி சமயா சந்தர்ப்பம் தெரியாமல் உண்மையைத் தொபுகடீரென்று போட்டு உடைப்பாள்!)  இருந்தும் அவர் மிகவும் எளிமையுடன் பழகினார்.  நிறையக் கடிதங்கள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
             ஒரு சமயம் பலமுரளி கிருஷ்ணாவும் வீணை பாலசந்தரும் , பாலமுரளி கண்டுபிடித்த ஒரு புதிய ராகத்தைப் பற்றி அறிக்கைப் போர் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் எந்த மாதிரியெல்லாம் அறிக்கைகள் வரும்  என்று ஒருகேலிக் கட்டுரையை எழுதி குங்குமத்திற்கு அனுப்பி இருந்தேன்.

ஒரு நாள் காலை லால்குடி போன் பண்ணினார். “இப்ப தான் வீணை பாலசந்தர்  போனில் சொன்னார்.  குங்மத்தில் வந்திருக்கும்  உங்கள் கட்டுரையை  ரொம்பவும் பாராட்டினார். வரிக்கு வரி விழுந்து விழுந்து சிரித்தாராம்... நான் இன்னும் பார்க்கவில்லை... ....”
 ( இந்த கட்டுரையைக் கண்டுபிடித்து வெளியிடப்பார்க்கிறேன்)

இசையைத் தவிர பல நூறு விஷயங்களை நாங்கள் பேசுவோம். நான் எழுதிய எல்லா  கட்டுரைகளையும் அவர் படித்திருக்கிறார்.  நகைச்சுவை (முக்கியமாக சிலேடை) விஷயங்களை வாரி விடுவார் லால்குடி!                                                                      +                              +                                              .
  
அவருக்கு என் உளமார்ந்த அஞ்சலி.

9 comments:

  1. நல்ல அஞ்சலிக் கட்டுரை. லால்குடி இசை நிறையக் கேட்டிருந்தாலும், அவர் வாசித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, திலங் ராக தில்லானா இரண்டும் மாஸ்டர் பீஸ்கள் என்பது என் அபிப்பிராயம். அவருக்கு என் உளமார்ந்த அஞ்சலி.

    ReplyDelete
  2. A great loss to the World of Classical Music.

    Nice to know you were friends with him.

    -R. J.

    ReplyDelete
  3. லால்குடி ஜெயராமன் சார் எங்கள் ஊர் காரராக்கும்..
    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக...
    அந்த தர்ம ராஜ் என்ற டாக்டரின் இனிஷியல்..எம். என். தர்மராஜன்..சமயத்தில் எமதர்மராஜன் என்று கூப்பிடுவார்களாம்..அப்பா சொல்லக் கேள்வி! உண்மையிலேயே கைராசிக் கார டாக்டர் அவர்!

    ReplyDelete
  4. ஒரு சிறப்பான வயலின் வித்வானுக்கு மிகச் சிறப்பான அஞ்சலி.....

    ReplyDelete
  5. உங்களது நட்பு வட்டம் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்பதற்கான உசாத்துனை இந்தப் பதிவு(ம்).

    இது மாதிரிப் பெரிய,புகழ்பெற்ற மேதைகளைப் பற்றிய சம்பவங்களை அவர்களின் நினைவூட்டும் பதிவுகளை எழுதும் போது மட்டுமே குறிப்பட வேண்டும் என்பது என்ன விதி(ரூல்)?

    அவ்வப்போது இது போன்ற சுவையான மனிதர்களூடான அனுபவங்களைப் பதிவுகளில் தரலாமே நீங்கள்?

    அப்புறம் அந்தக் கட்டுரையைத் தேடிப் போட்டு விடுங்கள் இங்கு..கட்டாயம்..நன்றி.

    ReplyDelete
  6. புகழ் பெற்ற கலைஞர் அவர்.
    அஞ்சலிகள்.

    பாண்டியன்
    புதுக்கோட்டை

    ReplyDelete
  7. நினைவில் என்றும் வாழும் வயலின் மாமேதை! அருமையான அஞ்சலிக் கட்டுரை ஐயா!

    ReplyDelete
  8. அனைவருக்கும் நன்றி.
    (கடந்த பல வாரங்களாக என் பதிவுகளில் என்னாலேயே பின்னூட்டம் போட முடியவில்லை.
    இப்போது தானாகவே சரியாகிவிடடது!)
    -கடுகு

    ReplyDelete
  9. For many, imitating Gandhi means dressing up their children to look like Gandhi with a socks to cover the head, wear a single cloth and give a stick in their hand - for the school fancy dress competition. Honestly, can Gandhi remain 'Gandhi' in these times? If he were not shot by Godse, some congress men would have done it after some time. Or, he would have been left to die after an indefinite fast. This is not the India he dreamed about. - R. J.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!