April 03, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

 இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

"ஹலோ... நமஸ்தே... ஐ மீன், குட்மார்னிங்... மிஸ்... சித்ரா'' என்றான் சிவா, லைப்ரரி "இஷ்யூ' டெஸ்க்கில் இருந்த சித்ராவைப் பார்த்து.
    ""உஷ்... உரக்கப் பேசக்கூடாது... இது லைப்ரரி... நமஸ்காரம். அன்றைக்குப் படம் முடிந்த பிறகு உங்களைப் பார்க்க முடியவில்லையே. உங்கள் போன் நம்பரைக் கேட்க வேண்டும் என்று அண்ணா சொன்னார்'' - கிசு கிசு குரலில் சித்ரா சொன்னாள்.
    ""மருந்து தானே? சொல்லியிருக்கிறேன். கிடைத்தவுடன் கொண்டு வந்து தருகிறேன்.''
    ""உஷ்... மறுபடியும் உரக்கப் பேசுகிறீர்கள்.''
    ""சாரி...  "சைலன்ட் மூவி"யில் பேசுகிற மாதிரி பேச வேண்டுமா?.. ஒன்றுமில்லை, அந்த லெட்டர்...''
    ""இதோ வைத்திருக்கிறேன்'' என்று சொல்லிச் சித்ரா டிராயரைத் திறந்து எடுத்துக் கொடுத்தாள்.
    "தாங்க்ஸ்...''
    அச்சமயம் வேறொரு பெண் அங்கு வந்து, ""சித்ரா நீ லஞ்சுக்குப் போ. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள்.
    கைப் பையை எடுத்துக் கொண்டு சித்ரா புறப்பட்டாள். சிவா தயங்கியபடியே லைப்ரரியை விட்டு வெளியே வந்தான். சித்ராவும் வெளியே வருவதைப் பார்த்த, சிவா, பைத்தியக்கார இளிப்பை இளித்து வைத்தான்.
    "ஒன்றுமில்லை. அம்மா எழுதியிருந்த கடிதத்தை நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பா வந்தது'' என்றான்.
    ""உம்.''
    ""நானும் லஞ்சுக்குத்தான் போகிறேன். "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கான்டீனுக்கு, இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்களும் வரலாம். கான்டீனில் போய் உட்கார்ந்து பேசலாம். ரொம்ப இன்டரஸ்டிங்காகப் பேசறீங்க...''


    அடுத்த அரைமணி நேரம். இருவரும் கான்டீனில் - இல்லை. அது ஒரு சின்ன சொர்க்க லோகம்! அவனைப் பொறுத்தவரை  -பல விஷயங்களைப் பேசினார்கள்.
    ""அம்மாவுக்கு ஊரைவிட்டு வருவதற்கு இஷ்டமில்லை. நான் இங்கே தனியாக ஓட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறேனாம்.''
    ”உம்''
    "இத்துடன் பத்து லெட்டர் போட்டு விட்டாள்.''
    ""கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லியா?''
    "ஆமாம்.''
    "செய்து கொள்வது தானே?''
    "நான் தயார். அவள்?''
    "அவள் யார்? உங்களுக்கென்ன குறை. மெடிகல் ரெப்ரசென்டேடிவ். சம்பளம், டி.ஏ., அது இது என்று வரும்... முக்கியமானது ஒண்ணு கேட்க மறந்துட்டேனே, வென்டாலினுக்காக எவ்வளவு பணம் தரணும்?''
    "இப்போது பணம் வேண்டாம். மருந்து கிடைச்சதும் கேட்டு வாங்கிக் கொள்கிறேன். உங்கள் மாமாவுடன்தான் இருக்கீங்களா?''
    "மாமா கிராமத்தில் இருக்கிறார். நானும் அண்ணாவும் தனியாகத்தான் இருக்கிறோம்.''
    "அப்படியா? காலையில் சமையல் வேலை. பகலில் லைப்ரரி ட்யூடி... மறுபடியும் ஈவினிங் சமையல், பாவம் ரொம்ப எக்ஸாஸ்டிங்!''
    "அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது ஒரு பெரிய பிராப்ளம் வந்திருக்கிறது''  சித்ராவின் முகத்தில் கவலையின் ரேகைகள் ஓடின.
    "என்ன விஷயம், சித்ரா?''
    "எங்க அண்ணாவுக்கு நேஃபாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது.''
    "உங்க அம்மா, அப்பா யாராவது இங்கு வரமாட்டார்களா?''
    ""இங்கு எப்படி வர முடியும்? இந்த உலகத்திலேயே அவங்க இல்லையே!'' þ சித்ராவின் கண்களில் இரண்டு முத்துக்கள்.
    "மை காட்... உங்க மனசை வருத்தப்படச் செய்துட்டேன்... உங்கள் பிரதர் நேஃபா போய்விட்டால்?''
    ""என்ன செய்வது என்று தெரியவில்லை.''
    "யார் வீட்டிலாவது பேயிங் கெஸ்ட்டாக இருக்கலாமே.''
    "நல்லவங்களாக இருக்கணும். நம்பிக்கையானவங்களாக இருக்கணும். எங்க அண்ணாவும் ஒரு சிலர் கிட்டே சொல்லியிருக்கிறார்.''
    ""நானும் யாராவது இருந்தால் சொல்கிறேன்.''

   

    அடுத்த பத்து தினங்கள் சிவா தனக்குத் தெரிந்த பலரைக் கேட்டான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொண்டிக் காரணத்தைச் சொல்லிப் பேயிங் கெஸ்ட்டாக வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். ஜப்பான் எம்பசியில் சிவாவின் நண்பர் பாலாஜி இருந்தார். நல்ல மனிதர். அவரிடம் போய்க் கேட்டார்.
    ""சார். உங்க டாட்டர் அனுஜா, வனஜா மாதிரி அந்தப் பெண்ணும் இருப்பாள். நல்ல பெண். அவள் ப்ரதருக்கு திடீர் என்று டிரான்ஸ்ஃபர் ஆகிவிட்டது.''
    "அது சரியப்பா... அவளுக்கு நீ ஏன் உருகறே... ஏதாவது இதுவா?''
    ""அப்படியொண்ணும் இல்லை என்று சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சம் பழக்கம். அவளுடைய அண்ணன் எனக்குப் ஃப்ரண்டு... "சிவா' நீ தான் என் சிஸ்டரைக் கவனிச்சுக்கணும்"னு சொன்னான்'' சிவா கூசாமல் கயிறு திரித்தான்.
    "அமெரிக்கன் லைப்ரரியில் இருக்கிறாள் என்று தானே சொன்னே. அவள் பிரதர் பேரு ராஜுதானே... செங்கல்பட்டுப் பையன்!... என்னையே அவனுக்குத் தெரியுமே'' என்றார் பாலாஜி.
    ""அப்படியானால் ராஜுவையே உங்களை வந்து பார்க்கச் சொல்கிறேன். நீங்கள் தான் இந்தச் சமயத்தில் ஹெல்ப் பண்ணணும்.''


    "அண்ணா உங்க கம்பெனிக்கு நிறைய தடவை போன் பண்ணினார். நீங்கள் இருந்தால்தானே?''
    ""எனக்கு அவுட்டோர் வேலையாச்சே, சித்ரா! பாலாஜி சார் சரி என்று சொல்லிவிட்டார். நீங்கள் சண்டே அன்றைக்குப் பெட்டி, படுக்கையுடன் வந்துவிடுங்கள். நானும் வருகிறேன். அண்ணா ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் கிளம்பறார் இல்லையா?''
    ""ஆமாம்... எனக்கு பாலாஜி சார் வீட்டில் இருக்கிறதுக்குக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.''
    ""தயக்கம் மயக்கம் எல்லாம் வேண்டாம். நான் இருக்கிறேன்.''
    பாலாஜி வீட்டிற்குச் சித்ரா சென்ற பிறகு அடிக்கடி சிவா அங்கு விஜயம் செய்தான். சில சமயம் அங்கேயே சாப்பிடுவான். பாலாஜி சற்று வயதானவராக இருந்தாலும் இந்தச் சிட்டுக்குருவிகளின் காதலுக்குக் குறுக்கே வரவில்லை. பார்க்கப் போனால், அவரே தூப தீபம் போட்டு வளர்த்தார்! சில சமயம் மறைமுகமாகவும் அவர்கள் திருமணத்தைப் பற்றிப் பேசுவார். ஒரு சமயம் ட்யூட்டியில் ராஜு டில்லி வந்திருந்த போது பாலாஜி ஜாடைமாடையாகச் சொன்னார்.
    "சார்... கல்யாணம் பண்ணுவதற்குப் பணம் இல்லையே என்னிடம்'' என்றான் ராஜு.”
    "பிசாத்துப் பணம். சிம்பிளாகக் கோவிலில் நடத்தி விடலாம். சிவா ஒன்றும் டிமாண்ட் பண்ண மாட்டான். உனக்கு இஷ்டமானதை நீ கொடு'' என்றார், சிவாவிடமும் பேசினார்.
    "மாமா, நீங்கள் சொன்னால் சரிதான் பணம் இன்னிக்கு வரும். நாளைக்குப் போகும். காசு முக்கியமில்லை. நீங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அப்படிச் செய்கிறேன்'' என்றான் சிவா.
    "அடாடா! என்ன தங்கமான பிள்ளை! நான் சொல்கிறபடி செய்வாராம்... உங்க கம்பெனியிலே காதல் பித்து தெளிய ஏதாவது மருந்து தயாரிக்கிறார்களா?''
    "போங்க சார்... அப்படி ஒரு மருந்து இருந்தாலும், நான் ஏன் சாப்பிடணும்?''
    பாலாஜி சித்ராவைத் தனியாகக் கூப்பிட்டு கேட்டார்.
    "பெரியவர்கள் நீங்களும், அண்ணாவும் எடுக்கிற முடிவு எதுவும் எனக்குச் சம்மதம்'' என்றாள் சித்ரா.
    "இல்லைடி குழந்தை. நீ ரகசியமாக எடுத்த முடிவிற்குத்தான் நாங்கள் "ததாஸ்து' என்கிறோம்.''
    சித்ரா லேசான நாணத்துடன் சிணுங்கினாள்.


    சித்ரா -சிவா, கல்யாணம் முருகன் கோவிலில் பத்து நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
    கரோல்பாக் "பர்ஸாத்தி' ஒன்றில் தனிக் குடித்தனம் வைத்தார்கள்.
    பாலாஜிக்கு பம்பாய்க்கு மாற்றல் உத்தரவு வரவே அவர் குடும்பத்துடன் கிளம்பிப் போய்விட்டார்.
    ""என்னங்க... இப்படியே இருந்தால் எப்படி?'' கட்டிலில் உட்கார்ந்திருந்த சிவாவை அணைத்தபடி சித்ரா கேட்டாள்.
    "நாலு நாளைக்கு ஒரு தரம் இப்படிக் கேட்டால் எப்படி?'' என்று சொல்லிச் சிரித்தான் சிவா.
    ""லைப்ரரியில் கேலி செய்கிறார்கள். சாலினி கூட லீவில் போகிறாள்... நாலு மாசம் ஆச்சுடி. யூஸ்லெஸ்டி என்று என்னைப் பார்த்து... சொல்கிறார்கள்.''
    "சித்ரா, உன் வேலையோ டெம்பரரி. நானும் இன்னும் கன்ஃபர்ம் ஆகவில்லை. கல்யாணத்திற்காகவும், ரிசப்ஷனுக்காகவும் குடித்தனம் வைப்பதற்காகவும்...''
    "போதும். எத்தனை தடவை சொல்வீர்கள்? இந்த ஏழாயிரம் ரூபாய் கடனைச் சீக்கிரம் அடைத்து விடலாம்... எல்லாரும் என்னைக் கேலி பண்ணுகிறார்கள்..''
    ""எல்லாருமா? கியூவில் வந்து நின்று கொண்டு, "சித்ரா, சித்ரா. என்ன இப்படி இருக்கிறாய்' என்றா கேட்கிறார்கள்? எண்ணி மூன்று பேர் கேட்டால், உலகமே திரண்டு வந்துவிட்டது மாதிரி சொல்கிறாய்?''
    "எப்பவும் விளையாட்டுத்தான்!''
    "ஆமாம்... கட்டிலில் இருக்கும் போது கூட விளையாடக் கூடாது... சித்ரா குட்டி... நாம் இரண்டு பேரும் இருப்பதற்கே இந்த "பர்ஸாத்தி"யில் இடம் போதவில்லை...''
    "தாராவுக்குப் போன மாதம் தான் கல்யாணம். இப்போது ஃபேமலி வேயில் இருக்கிறாள்.''
    "சமத்துக் குட்டி,.. நம்ம கடன் கரையட்டும். வேலை நிரந்தரமாகட்டும். குழந்தை என்றால் எவ்வளவு செலவு தெரியுமா? முதலில் இதைவிடப் பெரிய இடத்திற்குக் குடி போக வேண்டும். நம் கல்யாணம் ஆகி நாலு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்...''
    ""உங்களுடன் பேச எனக்குச் சாமர்த்தியமோ திறமையோ கிடையாது. என் ஆசையைப் பூர்த்தி செய்ய மாட்டேன் என்றால்?'' கண்களில் நீர் திரையிட்டது. ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்ற ஆதங்கம் அவளைப் பிடித்திருந்தது!
    ""சித்ரா கண்ணே... இப்படி என்னைப் பார். இந்தக் காலத்தில் பெண்கள் எல்லாரும் கணவனிடம் வேறு விதமான கண்டிஷனைப் போடுகிறார்கள்... நீயோ நேர் எதிராக இருக்கிறாய்... நாம் இரண்டு பேரும் டெம்பரரி வேலையில் இருக்கிறோம்... குழந்தை என்று வந்துவிட்டால் நீ வேலையை விட்டாக வேண்டும்...''
    ""உங்களை விடக் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் குழந்தை, குட்டிகளுடன் குடித்தனம் நடத்தவில்லையா?''
    ""அசடு... அசடு'' என்று சித்ராவை ஒரு கன்றுக் குட்டியை அணைத்துக் கொள்வது போல் இறுக்கிக் கட்டிக் கொண்டான். அவள் கழுத்தில் தன் மோவாயை அழுத்தி, ஒரு கையால் அவள் கன்னத்திலே வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு அவளது உதடுகளைச் செல்லமாக வருடினான்.

    மேலும் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. சித்ராவின் ஏக்கம் தீருகிற மாதிரியே இல்லை.
    ""எங்க லைப்ரரியில் மாத்யூ என்று ஒரு அம்மா இருக்காங்க. அவங்க ஒரு லேடி டாக்டரிடம் போகச் சொன்னாங்க... போகட்டுமா?'' என்று கேட்டாள் சித்ரா.
    "நானும் ஒரு டாக்டரிடம் போய்விட்டு வருகிறேன்.... சித்ராக் குட்டி... இதெல்லாம் நம் கையில் இல்லை.''
    "போறும். டாக்டரிடம் போக வேண்டாம் என்றால் நேராகச் சொல்லி விடுங்களேன்'' என்று சித்ரா சற்றுச் சிணுங்கலாகக் கூறினாள்.
    மெல்லிய பூவிதழ் போன்ற அவளது கன்னத்தை லேசாகத் தட்டிக் கொடுத்து விட்டு, சிவா சொன்னான். "நாளைக்குக் காலையில் போகிறோம், டாக்டரிடம்.''
   
    மறக்க முடியாத காலையாக அது அமைந்துவிட்டது.
    சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சிவாவைச் சித்ரா உலுக்கி எழுப்பினாள். அவன் மேல் விழுந்து கட்டி ஆசையுடன் முத்தமிட்டாள். "குட் நியூஸ்... குட் நியூஸ்'' என்றாள்.
    "என்னடி கண்ணு... மூச்சு திணறுகிறதே...''
    "பின் என்ன? என் குஷிக்குக் காரணம் என்ன தெரியுமா? காலையில் லேசாகக் குமட்டல், வாந்தி.''
    "ஹாஹ்ஹா... தி கிரேட்டஸ்ட் நியூஸ் ஆஃப் தி சென்ச்சுரி... ஏதாவது கூரைமேல் ஏறிக் கூவலாம் போல் இருக்கிறது...  ஹாய், சித்ரா... யூ ஆர் கோயிங் டு பி எ மதர்!''
    "ஷ்... ஷ்... ஏன் இப்படிச் கூச்சல் போடுகிறீர்கள்? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?''
    "வெட்கம் வந்து விட்டதோ, வெட்கம்!... உன் லைப்ரரி ஃப்ரண்ஸிடம் சொல்லும்போதும் உனக்கு வெட்கமாக இருக்குமா?''  சின்னக் குழந்தையைத் தூக்குவது மாதிரி அலக்காகத் தூக்கி நாலைந்து தடவை சுற்றி வந்து தொப்பென்று கட்டிலில் போட்டான்.
    ""ஆமாம், ஏன் சித்ரா கண்ணு... அப்படியானால் லாஸ்ட் மன்த்... அது ஃபால்ஸ் தானா?''
    "அது ஃபால்ஸாக இருக்கவேதான் இது ட்ரு'' என்று தன் வயிற்றைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்!
    "ப்ரெக்னன்ஸி கன்ஃபர்ம்டு'' என்று லேடி டாக்டர் கூறினார்.
    "நம் வேலையும் "கன்பர்ம்டு' ஆகிவிட்டால் கவலையில்லாமல் இருக்கலாம் சித்ரா.''
    "பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்?''
    "பாப்பா! நல்ல பெயர்தானே?''
    "எனக்கு என்னவோ நமக்குப் பையன்தான் பிறக்கும் என்று தோன்றுகிறது.''
    பையனோ, பெண்ணோ, ஒவ்வொரு பெயர் செலக்ட் பண்ணி வைக்கலாம்.''
    "இரட்டையாகிவிட்டால்?''
    "இரண்டு பேரையும் வெச்சுடலாம். இரண்டும் பெண் அல்லது இரண்டும் பிள்ளை என்று ஆகிவிட்டால்தான் வம்பு!''
    "சீ, பைத்தியம். ஒண்ணே ஒண்ணு போதும்.''
    "பெண் என்றால் பாரதி.''
    "பிள்ளை என்றால் ராஜா.''
    "ஊஹூøம். நீங்க ஒரு ராஜா எனக்கு இருக்கிற போது, இன்னொரு ராஜா கூடாது. துரை என்று வைக்கலாம்.''
    "ஓ.கே... ஓ.கே...''

                                                                                                         (தொடரும்}
   

4 comments:

  1. என்ன சார் இது, ஒரு த்ரில் இல்லாமல் கல்யாணம் முடிந்து குழந்தையும் ரெடி. ஒரு வேளை அடுத்த எபிசோடில் ஏதாவது பெரிசாக வரப்போகிறதா? பேதாஸ் வேண்டாம் - என் வேண்டுகோள்! - ஜெ .

    ReplyDelete
  2. சிட்டுக்குருவிகள் இன்னும் பறக்குமோ? ஆனாலும் சுவாரஸ்யம் குறையாமல்தான் பறக்கின்றன! தொடர்ந்து வருகிறேன்!

    ReplyDelete
  3. சிட்டுக் குருவிகள் தொடர்ந்து பறக்கட்டும். கதைக்களன் எங்கள் தில்லியின் கரோல் பாக்.... நடக்கட்டும்...

    ReplyDelete
  4. இப்படியே போய்க்கிட்டு இருந்தா, அடுத்தது ஷஷ்டி அப்த பூர்த்தி வந்துவிடும்


    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!