February 24, 2013

சாவி...


பிப்ரவரி மாதம் வந்தாலே ஆசிரியர்  சாவியின் நினைவு கூடுதலாகவே   வந்து மனதில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். அவரது 85 வது பிறந்த தின பாராட்டு விழாவில் மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே இறைவன் திருவடி அடைந்தார்.
நம்ப மாட்டீர்கள், பிறந்த தின விழா அழைப்பிதழை டில்லியில் இருந்த எனக்கு
அவர் கைப்பட முகவரி எழுதி எனக்கு அனுப்பி இருந்தார்! குறைந்தது 500-600 அழைப்பிதழ்களாவது அனுப்பபட்டிருக்கும். அதில் என் அழைப்பிதழில் அவரே எழுதியதை எண்ணி நான் ஜம்பம் அடித்துக் கொள்ள இதைக்குறிப்பிட வில்லை.  நட்பைப் போற்றும் அவரது  பண்பை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
விழா நடந்த அன்று நான் அமெரிக்காவிற்குப் புறப்பட்டேன். அருமை நண்பர் ராணி மைந்தன், தான் எழுதிய “ சாவி 85” புத்தகத்தை ( விழாவில் வெளியிடுவதற்கு முன்பே!) எனக்கு அனுப்பியிருந்தார்.   நான் புறப்படும் தினம் புத்தகம் எனக்கு வந்தது. விமானத்தில் படிக்க எடுத்துக் கொண்டேன். அப்படியே படித்துக் கொண்டு போனேன். ” எத்தனை பெரிய எழுத்தாளர்  சாவி. அவருடைய தொடர்பும் பாசமும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்ததை எண்ணி, கண்களில் நீர் மல்க மெய்மறந்தேன். அமெரிக்காவில் இறங்கியதும்  அவர் மயங்கி விழுந்த தகவல்  வந்தது.  அப்போது கண்ணீர் விட்டு அழுதேன்.

சாவியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம், அவ்வப்போது எழுதினால் தான் எனக்கு மன நிம்மதி ஏற்படும்,
=                           =
ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்: “  சார்..உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட   பல வேறு அனுபவங்களை என்னிடம்  பல சமயம் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சுய சரித்திரத்தை   நீங்கள் எழுதுங்களேன்”
அதற்கு அவர், “நான் என்ன சாதனை செய்திருக்கிறேன், சுய சரித்திரம் எழுதுவதற்கு?” என்று கேட்டார்.

”இல்லை செய்துதான் இருக்கிறீர்கள். சில சம்பவங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. சில, எங்கள் போன்றவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடியவை. தோல்விகளைக் கண்டு துவளாது, அவற்றிலிருந்து மீண்டு கம்பீரமாக நீங்கள் எழுந்து வந்திருப்பது பலருக்கு நம்பிக்கையைத் தரும்” என்றெல்லாம் சொன்னேன்.
”உங்கள் ஆசை எனக்குத் தெரிகிறது. சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் பிரமாதமாக எதையும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை என்றார். அத்துடன் நான் நிறுத்திக்கொண்டேன்.  

அவர் சொன்ன ஒரு குடும்ப நிகழ்ச்சியை அவர் எழுதுவது மாதிரி ஒரு கட்டுரையை சில நாட்கள் கழித்து எழுதினேன். அதில்  என் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை. தபாலில் அவருக்கு அனுப்பினேன்.  
அந்த சமயத்தில் தன் குடும்பத்தினருக்காக மட்டும் என்று, தன் குடும்ப விஷயங்களைப் போட்ட ஒரு குட்டிப் பத்திரிகையை (பத்து, இருபது காப்பி) அசல் பத்திரிகை மாதிரி அச்சடித்து வெளியிட்டுவரத் துவங்கி இருந்தார். அந்த பத்திரிகையின் பெயர்   FAMILY DUST (ஸ்டார் டஸ்ட்   மாதிரி!).
நான் எழுதிய கட்டுரையை அந்தப் பத்திரிகையில் அப்படியே பிரசுரித்துவிட்டார்’
    அதற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து அவரிடம்  "சார்,  உங்கள் சுய சரித்திரத்தை  எழுத வேண்டும். மாமூலாக எழுதுவது போல்,"நான் இங்கு பிறந்தேன்..." என்று ஆரம்பித்து எழுத வேண்டாம். உங்கள் வாழ்க்கை சம்பவங்களை, சாவி என்ற பெயர் சூட்டிக் கொண்ட பிறகு ஏற்பட்ட அனுவங்களைத் தனித்தனி குட்டிக் கட்டுரைகளாக எழுதுங்கள். ஃபேமிலி டஸ்டில் வந்த கட்டுரை மாதிரி இருக்கட்டும்” என்று எழுதினேன்
என்ன தோன்றியதோ  ”சரி ஆரம்பித்து விடுகிறேன். தலைப்பு என்ன வைப்பது என்றுதான் தெரியவில்லை” என்று எழுதினார்
தலைப்பைபழைய கணக்கு” என்று முடிவெடுத்து, சுமார் ஐம்பது கட்டுரைகள் எழுதினார் அவற்றைத் தொகுத்து 1984-ல் புத்தகமாகவும் போட்டார்.  இயக்குனர் பாலச்சந்தர் அதில் முகவுரை எழுதியிருந்தார்.
அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி இருந்தார். பிரித்துப் பார்த்தேன். ஆச்சரியம். முதல் பக்கத்தில் ”என் அன்பிற்குரிய....” என்று ஆரம்பித்து மெய்சிலிர்க்கவைக்கும் ஐந்தாறு வரிகளை எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். (அதை அப்படியே ஸ்கேன் செய்து பதிவில் போடலாம் என்று என் அல்ப மனது சொன்னது. ”கட்டுரை சாவியைப்பற்றி. அதில் உன் பெருமையை தடபுடலாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாதுஎன்று என் நல்ல மனது சொன்னது. ஆகவே போடவில்லை.).
’பழைய கணக்கு’ புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரையைப் போட்டு அவர் நினைவுக்கு அஞ்சலி செய்கிறேன்.

 


10 comments:

  1. பெரிய மனிதர்களைப் பற்றி படிக்கும் பொழுது, மனம் மிகவும் சந்தோஷப் படுகின்றது.

    ReplyDelete
  2. ”பெரிய மனிதர்களைப் பற்றி பெரிய மனிதர் எழுதியதைப் படிக்கும் பொழுது, மனம் மிகவும் சந்தோஷப் படுகின்றது” என்று பொய் கலந்து எழுதி
    இருந்தால் என் மனம் அதிக சந்தோஷப்பட்டிருக்கும்.. ஹூம்...

    ReplyDelete
    Replies
    1. அதான் கடுகு ஸார் டச் !

      Delete
  3. பெரிய மனிதர்களைப் பற்றி பெரிய மனிதர்கள் எழுதும்போது அதை பெரிய மனிதர்களே படிக்க நேர்ந்தால் மனம் எவ்வளவு சந்தோஷப் படும்..
    நான் பட்டேன்..
    நானும் ’படுகிறேன்’ என்று நீங்கள் எழுத மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில்..
    ஆரண்ய நிவாஸ்.ஆர்.ராமமூர்த்தி

    ReplyDelete
  4. திரு சாவி அவர்களுக்கு மிகச்சிறந்த முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்.

    சாவியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை.அவரைப்பற்றி படிப்பது அதுவும் அவரது மிக நெருங்கிய நண்பரான உங்கள் எழுத்துக்கள் மூலம் படிப்பது ஒரு நிறைவான அனுபவம்.

    ReplyDelete
  5. சாவியின் பால் உங்கள் அன்பும், மரியாதையும், நட்பும் நன்கு தெரிகிறது. அவர் கடைசி பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அவரே கைப்பட அழைப்பு அனுப்பியும் போக முடியாதது அவரின் மயக்கத்தையும் தொடர்ந்த மரணத்தையும் நீங்கக் நேரில் பார்த்து கலங்கக்கூடாது என்பதற்காகத்தான் என்று நினைக்கிறேன். In lighter vein - பாராட்டில் மயங்கக்கூடாது என்றும் தெரிந்துகொண்டேன்.

    நீங்கள் சாவியைப் பற்றி எழுதுவதும், அவர் ராஜாஜியைப் பற்றி எழுதுவதும் ஒரே மாதிரியான பிரேமையினால் தான் என்றும் நினைக்கிறேன்.

    சாவி - 85, பழைய கணக்கு - இவை இன்னும் பதிப்பில் இருக்கின்றனவா? எங்கு கிடைக்கும்?

    சாவியின் நினைவுக்கு அஞ்சலி.

    -ஜெ.

    ReplyDelete
  6. முன்பே படித்ததுதான்.. ஆனால் மீண்டும் வாசிக்க எத்தனை சுவாரசியம்.. உங்ககிட்ட முன்பு கடுகு கேள்வி பதில்ல கேட்டிருந்தேன்.. பொன்னியின் செல்வன் தில்லானா மோகனாம்பாள்லாம் எப்போ வாசிச்சாலும் புதுசா இருக்கே.. இப்ப வரது அப்படி இல்லியேன்னு.. அவை பொருள் விளங்கா உருண்டை போல எப்பவும் டேஸ்ட்டினு நீங்க சொன்ன பதில் .. உங்க எழுத்து எப்பவும் டேஸ்ட்டி..

    ReplyDelete
  7. ஆஹா... சரியான உதாரணம் சொல்லி அசத்திட்டீங்க ரிஷபன் ஸார்! நன்றி! சாவி ஸாரைப் பத்தி நீங்க இவ்வளவு எழுதியிருக்கறதுல எனக்கு வியப்பே இல்ல கடுகு ஸார்! இன்னும் நிறைய எழுதறதுக்கு உங்கள்ட்ட விஷயங்கள் இருக்கு. அந்த மாமனிதரைப் பத்தி தொடராகவே எழுதலாம் நீங்க.

    ReplyDelete
  8. இப்போது தான் படிக்கிறேன். பழைய கணக்கு புஸ்தகம் வாங்க வேண்டும்.

    ReplyDelete
  9. ராஜாஜியின் 'அறிவு'த் திருத்தம் வியக்க வைத்தது.

    கூர்ந்த வாசிப்பில் மட்டுமே இந்த வித பெயர்ச்சொல் வேறுபாடுகள் கண்ணுக்குப் படும்!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!