February 11, 2013

லைட்ஸ் ஆன்

 லைட்ஸ் ஆன்!
 இந்த இரண்டு சிறிய பதங்கள் ஒரு பெரிய எழுத்தாளரின் அடையாளமாகப் போய்விட்டது என்றால் அது அந்தப் பதங்களின் சிறப்பு அல்ல. அவரால் அந்த பதங்கள் பெற்ற கௌரவம்.

 ரா, கி, ரங்கராஜன் கலைமாமணிக்கோ பத்மஸ்ரீக்கோ ஆசைப்படவில்லை. இதற்கெல்லாம் எழுதும் திறமை மட்டும் இருந்தால் போதாது என்று அவருக்குத் தெரியும். பார்க்கப் போனால், இந்தத் திறமை இல்லாவிட்டாலும் பரவாயில்லை,வேறு சில ‘திறமைகள்’ இருக்கவேண்டும்.
ஆகவே அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. 

ஆனால் தனது  லைட்ஸ் ஆன்! கட்டுரைகள் புத்தகமாக வரவேண்டும் என்று விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக எந்த பதிப்பகமும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் எழுத்தாளர்கள் ‘சுபா’ வின் தங்கத்தாமரைப் பதிப்பகம் அதை வெளியிட்டது. . (அவர் அதைப் பார்க்காமல் காலமாகி விட்டார் என்பது சோகம்!)

புத்தகத்திலிருந்து  இரண்டு மூன்று பத்திகளை இங்கு தருகிறேன்.  புத்தகத்தை வாங்கி முழுமையாகப் படியுங்கள். சுவையோ சுவை!
தொடர்பு கொள்க: தங்கத் தாமரைப் பதிப்பகம், 37 கால்வாய்க் கரை சாலை,கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020  போன்:24414441. பக்கம்: 160 விலை:ரூ 70.
******                                                                       
* சூப்பர் ஸ்டார்களின் லட்சணம் யாது? அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது. ரஜினிக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா. கமலுக்கு முதலில் சுருதி ஹாசன். இப்போதும் பெண் (என்ன ஹாசன் என்பது இன்னும் தெரியவில்லை). கமல்தான் ஹாசனை விடமாட்டேன் என்கிறாரே தவிர, ஹாசன்களுக்குக் கமலிடம் இன்னும் பாசம் ஏற்படக் காணோம். சாருஹாசன் குடும்பத்திலிருந்து யாரும் கமலின் லஸ் சர்ச் வீட்டுக்கு வந்து புதிய வாரிசைப் பார்க்கவில்லை. -Still maintaining a stiff upper lip!

* Oh, by the way, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒரு பயிற்சி முகாமில் பங்கு கொள்வதற்காகப் புறப்பட்ட பாரதிராஜா சோழா ஓட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தார். (அது ஒரு ஆச்சரியமான விஷயம். பாரதிராஜா இதுவரை Press meet வைத்ததாக சரித்திரம் கிடையாது.)
 

"26 படங்கள் தயாரித்தேன். அதில் எட்டுப் படம் சில்வர் ஜூபிளி, ஆறு படம் நூறு நாள்" என்ற புள்ளி விவரங்களை வழங்கினார். அவர் அறிமுகம் செய்த ஹீரோ, ஹீரோயின்கள் முப்பது பேராம். அவர் கீழே உதவி டைரக்டர்களாக இருந்து டைரக்டர்களாகியிருப்பவர்கள் எட்டுப் பேராம்.
"இந்த அமெரிக்க அழைப்பு அவார்டு கிடைப்பதை விடப் பெரிசு" என்று பாரதிராஜா சொன்னார். மனிதர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? Amusing!
*ரஜினி கெட்டிக்காரர். எந்தச் சமயத்தில் எதிலிருந்து கழட்டிக் கொள்ள 
வேண்டுமென்ற தெரிந்து வைத்திருப்பவர்.
திருநாவுக்கரசுவின் மருதுபாண்டி நூறாவது நாள் விழாவுக்கு அவர் வருகை தர ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அழைப்பிதழில் ரஜினிகாந்த் என்று தமது பெயரைப் பாட அனுமதிக்கவில்லை. சூப்பர் ஸ்டர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். (Ôசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால்...Õ) பேசும்போது கூட தானும் திருநாவுக்கரசும் நெருங்கிய நண்பர்கள் என்பதால்தான் இந்த விழாவுக்கு வந்ததாக அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டார். Unenviable position தான் பாவம்.



*எம்.எஸ்.விசுவநாதனிடம் ஒரு Sense of Humour உண்டு என்று அன்று தெரிந்து கொண்டேன். மரியாதையுடன் ஒரு அன்பர் அவர் காலைத் தொட்டு வணங்கினார். அவரை யாரோ ஒரு இசை டைரக்டர் போலிருக்கிறது என்று எண்ணிய எம்.எஸ்.வி. "நல்லா மியூசிக் செய்யுங்க" என்று ஆசீர்வாதம் பண்ணினார். "ஐயோ, எனக்கு மியூசிக் வராதுங்க" என்றார் அந்த அன்பர். எம்.எஸ்.வி. சளைக்கவில்லை
"அட, அப்படியானால் நீதான் இன்று தமிழ்நாட்டிலேயே பெஸ்ட் மியூசிக் டைரக்டர்!" என்றார்.


6 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    அந்த நாள் ஞாபகம் வந்து விட்டது இதைப் படித்ததும்.

    தங்க வளையல் என்று எழுதுவதற்கு பதிலாக, ”பவுன் வளையல் அணிந்திருந்தார்” என்று எழுதுவார். சின்ன சின்ன வார்த்தைப் பிரயோகங்களில் வித்தியாசமும், முத்தாய்ப்பாக ஒரு ஆங்கில PHRASE எழுதி முடிப்பதும், மிகவும் ரசனையாக இருக்கும்.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. A doubt! If I am right, RKR didn't interview the film people / attend the functions; and he compiled the inputs from his staff and wrote them interestingly! Am I right? - R. J.

    ReplyDelete
  3. A horse that can count ten is a remarkable horse indeed !

    ReplyDelete
  4. ரா.கி.ர. ஸார் இந்த லைட்ஸ் ஆனை அச்சில் பார்க்க மிகமிக ஆசைப்பட்டார். அவர் மறைவுக்கு முன் பு்த்தகம் வெளிக்கொண்டுவர முடியாமல் போனது மிகப் பெரிய சோகம். மனதில் தீராத வருத்தம்தான். புத்தகத்தின் சுவாரஸ்யத்துக்கு கேட்பானேன்? அந்த மேதை எழுதிய எதுதான் சோடை போயிருக்கிறது? (ஜெ... நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். லைட்ஸ் ஆனை ரா.கி.ர.அவர்கள் இதை எழுதிய விதத்தை ஜ.ரா.சு அவர்கள். தன் மதிப்புரையில் விரிவாக எழுதியிருக்கிறார். புத்தகத்தில் படித்து ரசியுங்கள்)

    ReplyDelete
  5. சார்,
    கடுகு பதில்கள் எழுதியவர் நீங்கள்தானா?
    ஆம் எனில் மிக்க மகிழ்ச்சி.(இல்லையென்றாலும் மகிழ்ச்சிதான்! :) )
    வலை பதிவுகள் எழுத்தாளர்களை ஈர்ப்பதும் தவிர்க்க இயலாத மாற்று ஊடகமாக ஒருநாள் வரும் என்று நாங்கள் நினைத்தது நடந்ததில் மகிழ்ச்சி. இதனால் வாரப் பத்திரிகைகளில் மட்டும் காணக் கிடைக்கும் எழுத்து எப்போது வேண்டுமானாலும் படிக்கத் தக்க சுக சௌகரியத்தில் மக்களுக்குக் கிடைப்பது கூடுதல் பயன்தானே..

    ராகிர'வும் அமரர் சுஜாதாவும் ஒருவரையொருவர் எழுத்து ராட்சசன் என்று கூறிக் கொள்வார்கள்..தவிர்க்க இயலாத,மறக்க இயலாத எழுத்தாளர் !

    நன்றி உங்களுக்கு பகிர்வுக்காக.

    ReplyDelete
  6. //(இல்லையென்றாலும் மகிழ்ச்சிதான்! :) )// என்னது, இல்லை என்றால் மகிழ்ச்சியா! ஐயா பார்த்து எழுதுங்க! - ஜெ .

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!