February 17, 2013

ஜம்பம் ஒரு கலை

ஒரு சில கார்ட்டூனிஸ்டுகள் போடும் படங்களைப் பார்க்கும்போது, "நாமும் இப்படிச் சுலபமாகப் படம் போடலாம்' என்று தோன்றும்.  அந்தப் படங்களைப் பார்த்து ஓரளவு போடக் கூட முடியும். ஆனால் நாமே சொந்தமாக ஒரு படம் போட ஆரம்பித்தால்தான் அது எத்தனை கஷ்டமான காரியம் என்பது தெரியும்.


இந்த மாதிரி பார்க்க, அல்லது கேட்க எளிதாக இருப்பது ஜம்பம்.  ஆனால் நாமே ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமானால் அதுவும் நாசுக்குடன், ஒரு சாமர்த்தியத்துடன், ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமென்றால், அது ஒரு கலை என்பதை உணர்வோம்.
    சிறந்த முறையில் ஜம்பம் அடித்துக்கொள்வது என்பதன் இலக்கணம் என்ன?
    சொல்ல வேண்டியவைகளை, சொந்தப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஜம்பமாகச் சொல்கிறான் என்பதைப் பிறர் உணராதபடி ஜம்பமாகச் சொல்ல வேண்டும்!
    மாதிரிக்குச் சில ஜம்ப உரைகளை இங்கு தருகிறேன்:
*                                   *

    ""சார். . . என்னைக் கேட்டால் பசங்களை என்ஜினீர், டாக்டர் என்று படிக்க வைக்கிறதை விட ஒரு டைப்பிஸ்டாக ஆக்குவதே மேல் என்பேன்.  பாருங்களேன், இவன் இருக்கிறானே ராஜு, எம்.பி.பி.எஸ் பாஸ் பண்ணினானே, அப்போ கிடைச்ச கோல்டு மெடலோடு திருப்தி அடைய வேண்டியதுதான்.  இப்போ அமெரிக்கா போகணும்னு துடிக்கிறான்.   ராமு இருக்கிறானே, அவன் பி.ஈ. படிச்சு ஐம்பதாயிரம்யிரம் சம்பாதிக்கிறது போறாதாம். சொந்தமாக இண்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போகிறானாம். பேசாமல் நானும் என் ஒய்ஃபும் என் பெண் கிட்டே பாரீஸுக்கே போய்விடலாமா என்று தோன்றுகிறது!''

    ""எங்க ஜலஜா இருக்கிறாளே படிப்பு பூஜ்யம்.  "என்னடி, இப்படி மார்க் வாங்கினால் எப்படி உருப்படுவே' என்று கேட்டால் என்ன சொல்லுகிறாள் தெரியுமா?  "இதோடு மேடைப் பேச்சிலே பதினேழு கப் வாங்கி இருக்கிறேன். டேபிள் டென்னிஸ் சாம்பியன் என்று காலேஜில் பேர் வாங்கி இருக்கிறேன்.  போம்மா, நான் அரசியல்வாதியாகவோ, இல்லை புகழ் பெற்ற விளையாட்டுக் காரியாகவோ ஆகிறேன்' என்கிறாள்...  ஹூம் அவள் தலையிலே என்ன எழுதியிருக்கிறதோ!''

    ""மணி பத்தடிக்கப் போகிறது இன்னும் என் வீட்டுக்காரர் வரவில்லை மாமி... அவரவர்கள் ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கு  வரவில்லையோ? இவருக்கு சதா நாடகம்தான். இதோடு இரண்டாயிரம் தரம் மேடை ஏறியாச்சு, என்ன லாபம்? என் கழுத்திலே குந்து மணி பொன் ஏறித்தா? இந்த அழகிலே இவருக்குக் "கலைமாமணி' பட்டம் கொடுக்கப் போறாங்களாம்.  மலேசியாவில் நாடகம் போடக் கூப்பிடறாங்களாம். என்ன  ட்ராமா வேண்டியிருக்கு, வெங்கட்ராமா! நான் பண்ணின புண்ணியம் அவ்வளவுதான்!''

    ""அதை ஏன் கேக்கறே, மருக்கொழுந்து. என் மச்சான் இருக்குதே அல்லா போலீஸ்காரனுக்கும் டாவு காட்டிட்டு தனக்கும் இருபது படி அரிசி நெல்லூர்லேருந்து கொண்டாந்துடுது!  இதைப் பார்த்து என் கொளுந்தியாளுக்கு வயித்தெரிச்சல்.  வவுறு எரியறேய நீ போவச் சொல்லேன் உன் புருஷனையும்!  அவன் அகப்பட்டுக்கிட்டு முழிப்பான்.  அவனுக்கு இன்னா தெரியும்?  ஆபீஸ் வாட்ச்மேன் வேலை பாத்து 50000 ரூபா சம்பாதிக்கத் தெரியும்!  அது என்ன பெரிய பீதாம்பரய்யர் வித்தையா?''

    ""ஏண்டா டயர் ஏஜென்ஸி எடுத்தோம் என்று இருக்கிறது.  நாலைந்து மாசமா ஓடவே இல்லை, ஏழு குமாஸ்தா, இரண்டு பியூன் இவர்களுக்குச் சம்பளமே நாற்பதாயிரம் ரூபா ஆகிறது.  இப்படிப் போனால் எத்தனை நாளைக்குத் தாக்குப் படிக்க முடியும்?  ஒரு வருஷம் இரண்டு வருஷங்கள் முடியலாம்.  இதை மூட்டைகட்டிவிட்டுப் பழையபடி வைர வியாபாரத்துக்கே போய்விடப் போகிறேன்.''

    சிலருக்குத்தான் இயற்கையாக, அதே சமயம். ஜம்பம்  தெரியாதபடி, ஜம்பம்  அடித்துக் கொள்ள தெரியும்.  பலருக்குத் தெரியாது.
=====
 ஒரு பின்னூட்டம்:
ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
"பெரிய பொண்ணு மேல படிக்க அமெரிக்கா போறேன்னா..சரின்னேன்..இப்ப சின்னவளும் மேல படிக்க அமெரிக்கா போணும்ங்கிறா..’வேண்டாம்மா..இங்கேயே க்ரூப் ஒன் எழுதிட்டு ஒரு ஐ.ஏ.எஸ்..ஒரு ஐ.ஆர்.எஸ் ஆகே’ன்னு சொல்லிப் பார்த்தேன்...கேட்கவே மாட்டேங்கிறா ...என்ன பண்றது...அவளையும் அமெரிக்கா அனுப்பினேன். சும்மா அனுப்பலை..”இதோ பாரும்மா..கடல் கடந்து அவ்வளவு தூரம் போறேள்..என்னால ஒண்ணும் முடியாது.. இனிமேல் ஒபாமா தான் ஒனக்கும், ஒங்க அக்காவுக்கும் அப்பா..அம்மா..ஒரு ஹெட் ஃபோன்லேர்ந்து ஹெலி காப்டர் வரை எது வாங்கணும்னாலும், அவரை கேட்டு வாங்கிக்கோன்னு’ சொல்லித் தான் அனுப்பி வைச்சேனாக்கும்!

9 comments:

  1. "பெரிய பொண்ணு மேல படிக்க அமெரிக்கா போறேன்னா..சரின்னேன்..இப்ப சின்னவளும் மேல படிக்க அமெரிக்கா போணும்ங்கிறா..’வேண்டாம்மா..இங்கேயே க்ரூப் ஒன் எழுதிட்டு ஒரு ஐ.ஏ.எஸ்..ஒரு ஐ.ஆர்.எஸ் ஆகே’ன்னு சொல்லிப் பார்த்தேன்...கேட்கவே மாட்டேங்கிறா ...என்ன பண்றது...அவளையும் அமெரிக்கா அனுப்பினேன்..சும்மா அனுப்பலை..”இதோ பாரும்மா..கடல் கடந்து அவ்வளவு தூரம் போறேள்..என்னால ஒண்ணும் முடியாது.. இனிமேல் ஒபாமா தான் ஒனக்கும், ஒங்க அக்காக்கும் அப்பா..அம்மா..ஒரு ஹெட் ஃபோன்லேர்ந்து ஹெலி காப்டர் வரை எது வாங்கணும்னாலும், அவரை கேட்டு வாங்கிக்கோன்னு’ சொல்லித் தான் அனுப்பி வைச்சேனாக்கும்!

    ReplyDelete
  2. சபாஷ்,,,ஜம்பத்திலகம் பட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கிறீர்கள்!

    -கடுகு

    ReplyDelete
  3. //சிலருக்குத்தான் இயற்கையாக, அதே சமயம். ஜம்பம் தெரியாதபடி, ஜம்பம் அடித்துக் கொள்ள தெரியும். பலருக்குத் தெரியாது. //

    பின்னிட்டீங்க.. சைக்கிள் கேப்பில் ஏரோப்ளேன் ஒட்டுறீங்க..

    ReplyDelete
  4. <<>

    இத்தாலி ஹெலிகாப்டர்னு சொல்லுங்கோ!

    ReplyDelete
  5. ரசிக்க வைத்தன.....மிகவும் அருமை

    ReplyDelete
  6. கடைசி ஜம்பம் பிரமாதம்.

    ReplyDelete
  7. எது? நான் எழுதினதா?

    ஜம்பத்துடன்,

    “ஜம்பத் திலகம்”

    ReplyDelete
  8. //சிலருக்குத்தான் இயற்கையாக, அதே சமயம். ஜம்பம் தெரியாதபடி, ஜம்பம் அடித்துக் கொள்ள தெரியும். பலருக்குத் தெரியாது.//

    ஜம்பம் பற்றி ஜம்பமிலாமல் எழுதிய நீங்கள் ஒரு ஜம்பவான் !
    மன்னிக்கவும் ஜாம்பவான்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!