October 10, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-3

சூட் அளவுகள் சரியாக இருக்கின்றனவா என்று செக் பண்ணப் போட்டுப் பார்த்தேன். என்னுடைய  நான்கு சூட்கள், இரண்டு ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டுகள். மூன்று ஜோடி ஸ்லாக்குகள் எல்லாவற்றையும் மறு நாள் காலை வந்து வாங்கிகொள்ளச் சொன்னார்கள். ( அதற்கு அடுத்த  நாள் நான் ஹாங்காங்கை விட்டுக் கிளம்பவேண்டும்.)

மறு நாள் காலை குறித்த நேரத்திற்கு நான் ஹோ சாங் கடைக்குப் போனேன்.
” உங்கள் கோட், சூட் எல்லம் ரெட”: என்றான் ஹென்றி. ( ‘சார்’ என்பதைச் சொல்லவில்லை. எப்போது செக் கொடுத்தேனோ அப்போதே “சார்’ போய்விட்டது!)
“ஒரு சூட்டை போட்டுப் பார்த்து விடுகிறேன்... எல்லாம் சரியாக இருக்கும். இருந்தாலும் நிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.” என்றேன்.
“ அதெல்லாம் தேவையே இல்லை”
“ ஹென்றியின் குரலில் குழைவு இல்லை. லேசான கண்டிப்பு இருந்தது!
“தேவை  இல்லை என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் தொந்தரவு படுத்துவதற்கு வருத்தம். ”அமெரிக்கா போனபிறகு ஏதாவது சரியாக இல்லாமல் இருந்தால்  என்ற கவலையுடன் நான் போகக்கூடாது” என்று சமாதான குரலில் சொன்னேன்.

 “ கட்டாயம்  போட்டு பார்க்க வேண்டும் என்றால்  செய்யுங்கள். ஒரு சூட்டைப் போட்டுப் பாருங்கள்” - கடிகாரத்தைப் பார்த்தபடி பேசினான்.  ஹென்றிக்கு வேறு ஒருவருடன் - செயின்ட் லூயிஸ் பணக்காரன்?-  அப்பாயிண்ட்மென்ட் இருக்கிறதோ என்னவோ?
 பழைய கோட்டைக் கழட்டி என் புது கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன். உள் பக்க பக்கெட்டில் : ஹோ சாங் டெய்லரிங் கம்பெனி’ என்றும், அதன் கீழ் என் பெயரும் சரிகை நூலில் பளபளப்பாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது!  இந்த சூட்களைத் தைக்க நான் எதிர்பார்த்ததை விட அதிக செலவாகி இருந்தது. ஆனால் பிரமாதமாகத் தைத்திருந்தார்கள்.
 ‘சூட்எப்படி இருக்கிறது?’ என்று பார்க்க, மூன்று பக்கம் கண்ணாடி பொருத்தப்பட்ட அறைக்குள் போனேன். அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தேன்.
ஷாக் அடித்தது! “அச்சச்சோ” என்று லேசாக அலறினேன்!

“ என்ன ஆச்சு?” என்று ஹென்றி கேட்டான். அவன் குரலில் கவலை எதுவும் இல்லை.
“என்ன ஆச்சா? இந்த தோள்பட்டையை பார். ஒரு பக்கம் இரண்டு அங்குல உயரமாக இருக்கிறது.”
“இல்லயே.. எனக்கு என்னவோ சரியாகத்தான் இருக்கிறமாதிரி படுகிறது.. எல்லாம் உங்கள் வீண் கற்பனை” என்றான்.
"கற்பனையும் இல்லை... விற்பனையும் இல்லை. உங்க டெய்லர் பண்ண வேலைதான். வலது தோளை உயர்த்தி வைக்கச் சொல்லியிருந்தேன். அந்தப் பக்கம்தான் என் தோள் சற்று தாழ்ந்து இருக்கிறது.   அந்த டெய்லர் என்ன செய்து விட்டான் தெரியுமா? வலது பக்கத்திற்குப் பதிலாக இடது பக்கம் உயர்த்திவிட்டான்.  இப்போது வலது பக்கம் மேலும் அதல பாதாளத்திற்குப் போய் விட்டது!  சரியான கோமாளி மாதிரி ஆகிவிட்டேன்” என்றேன்.
ஹென்றி ஒன்றும் பேசவில்லை நான் கோமாளி என்று சொன்னதை மௌனமாக ஆமோதித்தான் என்று நினைக்கிறேன்!
 "உங்க டெய்லரைக் கூப்பிடுங்கள்” லேசான அதிகாரம் கலந்த குரலில் சொன்னேன்.
 “என் விமானம் நாளை பகல்ஒன்றரை மணிக்கு டோக்கியோவிலிருந்து கிளம்புகிறது. மத்தியானம் 12 மணிக்கு ஓட்டலைவிட்டுப் புறப்பட்டு விடுவேன்.. அதற்குள்ள இதைச் சரி செய்து வைக்கவேண்டும்.. அப்புறம் மற்ற கோட்களில் எல்லாம்  இதே தப்புதான் நடந்திருக்கும்.”
“தப்பு நடந்திருக்கும் என்று நான் ஒப்புக்கொள்ளவில்லயே, சார்” என்றான் ஹென்றி.  காணாமல் போயிருந்த ‘சார்’ இப்போது திரும்ப வந்து விட்டது! நாலைந்து செகண்டு கழிந்தது.
“எனக்கு என்னவோ சரியாக இருக்கிற மாதிரிதான் தெரிகிறது. அந்தத் தோள்பக்கம் இறக்கணும்னு நீங்க சொன்னால் இறக்கிடறோம். சரி பண்ணி நாளைக் காலையிலே ரெடி பண்ணிடறோம்... இது உங்க சூட்.. போட்டுக்கப் போறவர் நீங்க” என்றான்.
ஹென்றி சொன்னதைகக் கேட்டதும்,அவன் சொல்கிறதுதான் சரியோ, நாம் தான் தவறாகச் சொல்கிறோமோ என்று சந்தேகம் வந்தது. கண்ணாடி முன் சற்று கோணலாக நின்று விட்டோனோ அல்லது கண்ணாடியில் அந்தப் பகுதியில் ஏதாவது கோளாறு இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதனால் கோட்டைக் கழட்டி ஹென்றியிடம் கொடுக்குமுன்னே மறுபடியும் கவனமாகப் பார்த்தேன். என் பார்வையில் ஏதாவது  குறைவு இருந்தால் ஒழிய இந்த மாதிரி ஏற்ற இறக்கமாகத் தெரியாது. அந்த டெய்லர் இடது தோளுக்குக் கனமான துணி ‘பேட்’ வைத்து  விட்டான் என்பதில் சந்தேகமில்லை. இடது பக்கம் அசிங்கமாகத் தூக்கி கொண்டிருந்தது.
“இத பாருப்பா.. நாளைக் காலைலே கண்டிப்பா ரெடியாக இருக்கணும்,, சரியாகப் பத்து மணிக்கு வருவேன். மத்தியானம் ஏர் போர்ட்டுக்குப் போகணும்” என்று கண்டிப்பான குரலில் சொன்னேன்..
மறு நாள்   காலை  சரியாகப் பத்து மணிக்குப் ஹோ-சாங் கடைக்கு சென்றேன்.
அங்கு  அதிர்ச்சி காத்திருந்தது!
*                                                        *
“எல்லாம் சரி பண்ணிவிட்டேன். பேக் பண்ணி ரெடியா இருக்கிறது” என்றான் ஹென்றி.
“ அப்படியா? உனக்குக் கஷ்டம் இல்லை என்றல், ஒரு சூட்டை வெளியே எடுத்துக் கொடு. போட்டுப் பார்த்து விடுகிறேன்.”என்றேன். நன்றாகப் பேக் செய்யப்பட்ட அந்த பார்சலைத் திறந்து எடுத்துத் தரச்சொல்ல தயக்கமாகத்தான் இருந்த்தது. இருந்தாலும் தோள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்.
ஹென்றி ஏதோ சைனீஸில் சொன்னான். சொன்னது எனக்குப் புரியவில்லை என்றாலும் அவன் குரலில் கசப்பு இருந்ததை  உணர்ந்தேன்.
அவன் பெரிய கத்திரியை எடுத்தான்.சடாரென்று என் வயிற்றில் அதைக் குத்தி விடுவானோ என்று லேசான அச்சம் எற்பட்டது. ஆனால் அவன் காட்டுமிராண்டித்தனமாக சூட் பார்சலின் மேலிருந்த உறையை ஒரு ஆவேசத்துடன் கத்திரியால் கிழித்தான். கையைத் துழாவி ஒரு சூட்டை உருவி வெளியே எடுத்தான்.
“ இந்தாங்க உங்க சூட்” என்று சற்று முறைப்பாகச் சொல்லியபடியே என் பக்கம் வீசினான்.
உடனே கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன்.
பயங்கரம்!
எதற்குக் கோட்டை போட்டுக் கொண்டேன் என்பது ஒரு  கணம் மறந்து போய்விட்டது. தோள்கள் முன்னைவிட மேலும் கீழுமாக இருப்பது  நன்கு தெரிந்தது. அப்புறம்தான் எல்லாம் நினைவுக்கு வந்தது.
“ஹென்றி....மறுபடியும் தப்பு செய்து விட்டான் உன் ஆள்..” என்று பாதி கோபத்துடனும் பாது வெறுப்புடனும்  கத்தினேன். அந்த டெய்லர் ஒரு குழப்ப திலகம். இப்போது இடது பாகம் மேலும் இரண்டு அங்குலம் உயர்த்திவிட்டான். படு பாவி!- இடது பக்க தோள், காதைத் தொட்டது, வலதுபக்கம் அதல பாதாளத்திற்குப் போய்விட்டது.
இப்போது ஹென்றிக்கு நான் அதிகம் விளக்கவேண்டி இருக்கவில்லை. சின்னத் தவறு நடந்துவிட்டது என்று அவனே ஒத்துக்கொண்டான். தவறுக்கு  எப்படியாவது  என் மேல் பழியைப்போட கடைசி முயற்சியாக ஒரு சந்தேகத்தைச் சொன்னான். “காண்ணாடியில் பார்த்து தோள் பட்டை சரியில்லை என்று சொன்னபோது தவறான தோளைத் தொட்டுக் காட்டிவிட்டீர்களா?” என்று கேட்டான்.
கண்ணாடியில் இடது- வலது மாறி வரும் என்பதால் அப்படி கேட்பதாகச் சொன்னான்!
(தொடரும்)

4 comments:

  1. திடீரென டோக்கியோ எங்கிருந்து?

    ReplyDelete
  2. சூட் சூட் ஆகுமா இல்லையோ ஒரே சஸ்பென்ஸாக இருக்கு. அடுத்த பதிவு விரைவில் போடுங்க ஸார்!

    ReplyDelete
  3. கொத்தனாருக்கு, நல்லகேள்வி. 50 வருஷத்திற்கு முன்னே ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்குப் போக டோக்கியோவில்தான் விமானத்தைப் பிடிக்கவேண்டும். -கடுகு

    ReplyDelete
  4. அட இப்படிப் படுத்தி விட்டாரே..... ம்ம்ம்..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!