August 26, 2012

கேலிக் கவிதை!


கேலியும் நையாண்டியும் கலந்த   கவிதைகள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருக்கின்றன.

தமிழில் இத்தகைய கவிதைகள் அதிகம் வரவில்லை. ஔவையார் சில எழுதியுள்ளார். காளமேகப் புலவர் நிறைய சிலேடைகளுடன் எழுதித் தள்ளி இருக்கிறார். இவையெல்லாம் அந்தக் காலத்தோடு நின்று விட்டது. இன்று கேலிப் பாடலோ, கார்ட்டூனோ, கட்டுரையோ எழுதினால் பாராட்டு கிடைகிறதோ இல்லையோ அர்ச்சனைகள் கிடைக்கும் அரச்சனை செய்ய நேராகவே வந்து விடுவார்கள்.
’கல்லைத்தான், மண்ணைத்தான்’ என்று இராமச்சந்திரக் கவிராயரர் இன்று பாடினால் ரேஷன் அமைச்சருக்குக் கோபம் வந்து விடும். அவர் மம்தாவாக ஆகி, நடவடிக்கை எடுக்கக்கூடும்
ஆங்கிலத்தில்  இத்தகைய லிமெரிக்ஸ், க்ளாரிஹ்யூஸ், லைட் வெர்செஸ், என்ற வகைகளில் கவிதைகள் ஏராளமாக உள்ளன.

இந்தப் பதிவில் ஐந்து கவிதைகளைத் தருகிறேன். ஆஸ்திரேலியா, லண்டன், டில்லி , பாஸ்டன், சென்னை, டில்லி ஆகிய ஐந்து இடங்களிலிருந்து வருகின்றன அவை.

ஆஸ்திரேலியா

பீட்டர் போர்ட்டர் (1929-2010) என்ற ஆஸ்திரேலியக் கவிஞர் ஒருகவிதை எழுதினார்.

In Australia
Interalia
Mediocrities
Think they are Socrates!

August 20, 2012

ஒரு பவுண்டு சம்பளம்!


 ஒரு பவுண்டு சம்பளம்!
John Lennon Closing Ceremony Imagine  ஜான்  -                                   பால்

சில நாட்களுக்குமுன்பு ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பிரபல பீட்டில்ஸ் பாடகரான
காலம் செந்ற  ஜான் லென்னன் பாடிய பாடலை ஒலிம்பிக் அரங்கில் ஒளிபரப்பியதைப் பார்த்தேன்.

துவக்க  நாள் விழாவில் மற்றொரு பீட்டில் பாட்கர் பால் மெக்கார்ட்னி  அரங்கத்திற்கு வந்து பாடினார்.
பீட்டில்ஸ்களைப் பற்றி பல  செய்திகளை பல வருஷங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அந்த காலத்தில் படித்திருக்கிறேன். முக்கியமாக அவர்களுடைய மானேஜர் ப்ரையன் எப்ஸ்டீனைப் (BRIAN EPSTEIN) பற்றியும்  அவருடை சுய சரித்திரத்தையும் படித்திருக்கிறேன்.
பீட்டில்ஸ் இவ்வளவு பிரபலமானதற்குக் காரணம்  அவர்தான் என்று கூறுவார்கள்.

( அந்த கால கட்டத்தில் STEIN-களைப் பற்றி  ஒரு நையாண்டி பாடலும் பிரபலமாக இருந்தது. அதை  இங்கு தருகிறேன்:

There’s a wonderful family named Stein.
There’s Gert and there’s Epp and there’s Ein;

Gert’s poems are bunk,
Epp’s statues are junk,
And no one can understand Ein.

---------------------------
Gert  -Gertrude-Stein- Writer
Epp --Sir Jacob Ep-stein - Sculptor
Ein - Albert  Ein- stein - Scientist)
--------------------
 இனி இரண்டு குட்டித்தகவல்கள்:

1. பீட்டில்ஸுக்கு 1965-ம் ஆண்டு  பிரிட்டிஷ் அரசு மிகப் பெரிய விருதுகளில் ஒன்றான    M.B.E ( Most Excellent Order of the British Empire ) விருதை அளித்தது.
ப்போது  பீட்டில்ஸ்  கூறியது:
M.B.E என்பது   
M-மிஸ்டர் 
B-ப்ரையன்
E-எப்ஸ்டீ ன்தான்!
என்ன எளிமை!
2. ஒரு நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில்  சம்பளம் வாங்கும் பால் மெக்கார்ட்னிக்கு , ஒலிம்பிக்கில் பாடுவதற்குத் தரப்பட்டத் தொகை ஒரே ஒரு பவுண்டு. கிட்டதட்ட 100 ரூபாய்தான்!

அவருக்கு மட்டுமல்ல கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற எல்லா பிரபலங்களுக்கும் ஒரு பவுண்டுதான்!

August 16, 2012

நர்மதாவின் பூனை -கடுகு



``கேட்டிங்களா சேதியை? உங்களைத்தான். எங்கு இருக்கிறீர்கள்? பொழுது விடிய வேண்டியதுதான். வாசல் வராந்தாவில் சுவாமி எழுந்தருளி விடுவார். சமையற்கட்டிலிருந்து கழுதை மாதிரி நான்  கத்தினாலும் காதில் விழாது'' என்று பொரிந்து கொண்டே திருமதி பஞ்சு வந்தாள். குறுக்கெழுத்துப் போட்டிக் கூப்பன் ஒன்றைப் பூர்த்தி செய்யும் மும்முரத்தில் மிஸ்டர் பஞ்சு இருந்தார்.``விடிந்தும் விடியாததுமாய் ஏன் இடி இடிக்கிறாய்? நான் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். என்ன சேதி?''
``இந்தப் பாழாய்ப் போன போட்டிக்கு மாசாமாசம் அழுத தண்டத்தை உண்டியில் போட்டிருந்தால் இத்தனை வருஷத்துக்கு நாமும் கிருஷ்ணா, ராமா என்று வட இந்திய யாத்திரை போக முடிந்திருக்கும்.''
``பஞ்சு மாமி, நீ `நாமும்' என்று அழுத்திச் சொல்வதிலிருந்து வேறு யாரோ போகிறார்கள் என்பதும், அதனால்தான் மாமி, சாமி வந்தது மாதிரி பேசுகிறாள் என்பதும்...''
``போதும் எத்தனை `தும்' போடப் போகிறீர்கள் இன்னும்?''
``போடவில்லை. தும் க்யா சமாசார் சொல்ல வந்தாய் தாயே?'' என்றார் பஞ்சு.
``பக்கத்து வீட்டிலே இருக்கிறாரே காயாம்பூ, அந்த ஆளுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்குது.''
``அவனை யாராவது அடிச்சால் சரி, எனக்குத் திருப்திதான்.''
``போறுமே, இந்த மாதிரி ஜோக்கெல்லாம். அந்த அழகு ராணி பிரியம்வதாவிடம் சொல்லுங்கள். அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். கேளுங்களேன்... அந்த ரோடு கான்டிராக்டர் ஆசாமிக்கு `லக்'கடிச்சிருக்குது.''
``கடிச்சிருக்குதா? காயாம்பூவை எது கடிச்சாலும் சந்தோஷம்தான். அடியே.... அடியே ...கோபித்துக் கொள்ளாதே! விஷயத்தைச் சொல்லு'' என்று பஞ்சு சரணாகதிப் பல்லவி பாடினார்.
``ஏதோ டூரிஸ்ட் பஸ் கம்பெனிக்காரர்கள் பாத்திரச் சீட்டு மாதிரி சுற்றுலாச் சீட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் காயாம்பூ ஒரு சீட்டு எடுத்தாராம். முதல் மாசமே இவருக்குச் சீட்டு விழுந்திடுத்து. அதனால் இவரை வட இந்தியா போகிற டூரிஸ்ட் பஸ்ஸில் இலவசமாக அனுப்புகிறார்கள்.''-- பஞ்சு மாமியின் குரலில் லேசான எரிச்சல் இருந்தது.
``அதுக்கு என்னை என்ன செய்யணும் என்று சொல்றே? நானும் ஒரு சீட்டுக் கட்டறேன். சரிதானே! குறுக்கெழுத்துப் போட்டியில் பிரைஸ் விழுந்தால் நாமே ஜம்முனு  ஜம்மு வரைக்கும் போய் வரலாம்.''
``என் தலையெழுத்து இந்த வீட்டுச் சமையலறை வாசற்படியைத் தாண்டக் கூடாது என்றிருக்கும் போது...'' பஞ்சு மாமி சட்டென்று நிறுத்திக் கொண்டதற்குக் காரணம், அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டதுதான். பஞ்சுவும் மாமியும் திரும்பிப் பார்த்தார்கள்.

August 10, 2012

பாடல்களும் நையாண்டிகளும்...

பாடல்களும் நையாண்டிகளும்...
பாடல்கள்எழுதுவது எவ்வளவு  கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் அந்த பாடலுக்கு ஒரு நையாண்டி  அவதாரம் தருவது.
என் ஓலைச்சுவடிகளிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்
பாட்டு-1:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறி விட்டான்
மதத்தில் ஏறி விட்டான்  (வந்த நாள் முதல்...)
 ==================

நையாண்டி-1
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
ஓட்டல் மாறவில்லை
இட்லியும் வடையும் சட்னியும் சாம்பாரும்
 பொங்கலும் 
தோசையும் மாறவில்லை
PRICE- ஏற்றி விட்டான்
SIZE -ஐக் குறைத்து விட்டான்  (வந்த நாள் முதல்...)
( மற்ற வார்த்தைகள்   நினவில் இல்லை. தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது!)
=====================
பாட்டு 2:
சௌண்ட ஆஃப்  மியூசிக் திரைப் படத்தில் வந்த இந்த பாடல் மிகவும் பிரசித்தமானது,
Raindrops on roses and whiskers on kittens
Bright copper kettles and warm woolen mittens
Brown paper packages tied up with strings
These are a few of my favorite things
Cream colored ponies and crisp apple streudels
Doorbells and sleigh bells and schnitzel with noodles
Wild geese that fly with the moon on their wings
These are a few of my favorite things

Girls in white dresses with blue satin sashes
Snowflakes that stay on my nose and eyelashes
Silver white winters that melt into springs
These are a few of my favorite things
When the dog bites
When the bee stings
When I'm feeling sad
I simply remember my favorite things
And then I don't feel so bad

August 04, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, -5


”தொலைந்து போன ரிஜிஸ்டர் தபால் கிடைத்த மாதிரி, மாயமாய் மறைந்து போன பர்ஸ் கிடைக்க வேண்டுமே என்று செங்கற்பட்டு திம்மராஜா குளக்கரையில்  இருந்த சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டேன்.

சஞ்சீவி மலையைத்  தூக்கிக் கொண்டு வந்த அவருக்கு  ஒரு பர்ஸை எடுத்து வருவது பெரிய காரியமா?
என்ன, நீ என்ன ராமனா?   என்று நீங்கள் கேட்கலாம்... நானும் ஒரு ராமன் தான். என் அம்மா  என்னை “ஏண்டா தடி ராமா என்று கூப்பிடுவது உண்டு! 

’பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி’ என்பது போல் ரயிலில் வழக்கமாக ஓசியில் படிக்கும் தினத்தந்தியும் பிடிக்கவில்லை, ’ஒரு கை குறைகிறதே’ என்று கூப்பிட்ட  ரம்மி நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளவும் மனம் வரவில்லை. 
ரயில் வழக்கத்திற்கு மாறாக காட்டுப்பாக்கத்தில் நின்றபோது .திரைப்படங்களில் வருவது போல் திடீரென்று டி. டி.  ஆர் . பெட்டியில் நுழைந்தார். பர்ஸோடு சீஸன் டிக்கட் போய்விட்டதால், நான் அகப்பட்டுக்கொள்ளப்போகிறேன் என்று உதறல் எடுத்தது. இத்தனைக்கும் டிக்கட் வாங்கிக்கொண்டு தான் ரயிலேறியிருந்தேன். பயம், திகில், . குழப்பம் . கவலை எல்லாம் சேர்ந்து இருந்ததால் டிக்கட் வாங்கியிருந்ததும் மறந்து விட்டது,
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையாகுட்டி, டி.. டி. ஆரைப் பார்த்து ”ஹலோ கண்ணன் சார்! குட்மார்னிங் ”என்று சொன்னார் . பையாகுட்டிக்கு எல்லா டி. டி. ஆர். களும் கார்டுகளும் நண்பர்கள்தான் ஏன், என்ஜின் டிரைவர்களும் கூட

கண்ணன் வந்தார் அவரிடம் பையாகுட்டி” என்ன கண்ணன் சார்  பொண்ணுக்கு ஏதாவது அமைந்ததா” என்று கேட்டார். 
உடனே கண்ணனின் பெண் எப்படி இருப்பாள் என்று ஒரு மாதிரியாக அதாவது எனக்குப் பிடித்த மாதிரியாக கற்பனைப் பண்ணி்ப் பார்த்தேன்.