March 28, 2012

நகைச்சுவை நேரம்


 
நகைச்சுவை  எழுத்தாளர் ஜே, எஸ். ராகவன், அண்ணா நகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் போன்ற வார வெளீயீடுகளில் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்,
500 வாரங்கள் தொடர்ந்து - அதாவது பத்து வருஷங்கள்-  எழுதி வருகிறார். இது ஒரு சாதனைதான், இந்த கட்டுரைகளுக்கு ஓவியர் நடனம் ஒவ்வொரு வாரமும் படம் போட்டு வருகிறார்! 

நகைச்சுவை   நேரம்
ஜே.எஸ். ராகவன்

நகைச்சுவையாக எழுதுவது என்பது சற்று சீரியஸான விஷயம். நகைச்சுவையாகப் பேசுவது என்பது பலருக்கும் கைவந்த கலை. ஒருவருடைய நாக்கு தன் இச்சையாகச் செயல்படுவது போல் அவருடைய பேனா செயல்படுவதில்¨ல் என்பது என் கருத்து. அமரர் கல்கியின் வார்த்தைகளைக் கடன் வாங்கிக் கொண்டு சொல்ல வேண்டும் என்றால் நகைச்சுவையாக எழுதுவது 'கொட்டைப்பாக்கை பிழிந்து பாதாம் கீர் பண்ணுவதை விடக் கடினம்' என்று சொல்லலாம்.

பைனான்ஸ் கம்பெனி நடத்திப் பலரை ஏமாற்றுவதில் 'அனுபவம்' நிறைந்த ஒரு பெரிய மனிதர், அக்கெளண்டண்ட் போஸ்டிற்கு இன்டர்வியூ செய்து கொண்டிருந்தார்.

முதலில் வந்தவனிடம் ''இரண்டும் இரண்டும் எவ்வளவு?'' என்று கேட்டார். ''நாலு'' என்று சொல்லிவிட்டு 'இதுகூடவா தெரியாது' என்று பார்வையிலேயே கேட்டான். அவனை அனுப்பிவிட்டு இரண்டாவது Candidate இடம் அதே கேள்வியைக் கேட்டார். அவனும் நாலு என்று சொன்னான். அவனையும் அனுப்பிவிட்டு மூன்றாவது Candidtate இடம் ''இரண்டும் இரண்டும் எவ்வளவுய்யா?'' என்று கேட்டார். அதற்கு அந்த புத்திசாலி, ''சார் நீங்க எவ்வளவு வரணும்னு கணக்கிலே எழுதச் சொல்றீங்களோ, அதான்'' என்றான். அவனுக்கு வேலை கிடைத்தது என்றும் வேலை கிடைத்த நாளிலிருந்து தினம் ஓட்டப்பயிற்சி செய்யத் தொடங்கினான் என்றும் நான் சொல்லத் தேவையில்லை!

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்-ஆங்கிலத்தில் நகைச்சுவைக் கட்டுரைகள் நான் எழுத ஆரம்பிக்குமுன் Humour என்றால் என்ன? என்று அறிந்துகொள்ளப் புத்தகங்களைப் புரட்டிய போது திடுக்கிட்டேன். Middle ages மற்றும் renaissance periodகளில் humours என்ற பன்மை வார்த்தைக்கு  மனித உடலில் உள்ள நான்கு திரவப் பொருள்களாகிய - ரத்தம், கபம், மஞ்சள் பித்த நீர் மற்றும் கறுப்பு பித்த நீர் - அதாவது Blood, Phlegm, Yellow Bile, Black Bile என்று பொருள் என்று அறிந்தேன். மனித உடலில் காணப்படும் உபாதைகளும், இருதயம் - மூளை சம்பந்தப்பட்ட imbalanceகளும் இந்த நான்கு திரவங்களின் கூட்டணி தங்களுக்குள் கொண்டுள்ள உறவு முறையைப் பொறுத்து இருக்கிறது என்று கருதினர்.
16ஆம் நூற்றாண்டில் humour is a disorder of the blood என்று கருதினார்கள். அந்தக் காலக் கட்டத்தில் நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு பேட்டி எதுவும் வைக்காமல் blood test செய்து பரிசு கொடுத்தார்களோ என்னமோ தெரியவில்லை. இந்த நூற்றாண்டிலும் நகைச்சுவையாக எழுதுபவர்களை அறிவி ஜீவிகள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. நகைச்சுவை எழுத்துக்களை இலக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் சர்க்கஸில் உள்ள ஒரு ப·பூனின் சாகசங்களாகக் கருதுகிறார்கள். சர்க்கஸ் ப·பூனிற்கு அநேகமாக எல்லா வித்தைகளும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்.
ஒரு இலக்கியச் சிந்தனைக் கூட்டம் முடிந்தது. வெளியே பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு இலக்கியவாதி என்னைப் பற்றிக் கேட்டார். நான் அவ்வப்போது நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவேன் என்று கொஞ்சம் பெருமையாகச் சொல்லிக் கொண்டேன். அதற்கு அவர் ஒன்றும் பதில் பேசாமல் கொஞ்சம் மெளனமாக இருந்துவிட்டு, வெள்ளைக் கோட்டு போட்ட தமிழ் சினிமா டாக்டரைப் போல், தன் மூக்குக் கண்ணாடியைக் கழட்டி, தலையை இரண்டு முறை கிழக்கு - மேற்காக ஆட்டிவிட்டுத் தன் ஆழ்ந்த அனுதாபங்களை சிம்பாலிக்காகத் தெரிவித்துவிட்டு என்னிடமிருந்து எவ்வளவு தள்ளி நிற்க முடியுமோ அவ்வளவு தள்ளி நின்று கொண்டார்!
சிரிக்க வைக்க முயல்பவர்களின் நிலை இப்படிச் சிரிப்பாகச் சிரிக்க வேண்டுமா? ஆனானப்பட்ட ஆங்கில நகைச்சுவைச் சக்கரவர்த்தி P.G. Wodehouse அவர்களே, ''humourists are gloomy men who are the eczema on the body politic'' என்று தமாஷாகச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
'நகைச்சுவை எழுத்து என்றால் என்ன?' என்ற கேள்விக்கு அந்தக் காலத்து ஒரு மேதை அளித்த definition புரிகிறதா பாருங்கள் :
* Laughter is a defence against a defence. Both manoeuvres are instituted by the subconscious ego. The cruelty of the super-ego is couteracted by changing punishment into inner pleasure. The super ego reproaches the ego for the inner pleasure, and the ego then institutes two new defences, the triad of the mechanism of orality and laughter.`

இதைவிட எளிமையாக, புரியும்படி நகைச்சுவையைப் பற்றி யாராலும் கூறமுடியுமா என்று Wodehouse கிண்டலடித்துவிட்டு ''நகைச்சுவை எழுத்து என்பது, ஆல்கஹால் செலவில்லாமல் மக்களுக்கு 'கிக்' கொடுக்கும் ஒரு அரிய மருந்து'' என்று சொல்லியிருக்கிறார்.
அரசியல் கட்டுரைகளை நகைச்சுவை மிளிரும்படி அமைப்பதில் ஆங்கிலேயர்கள் வல்லவர்கள். மார்கரெட் தாட்சரை ஒரு எழுத்தாளர் இவ்வாறு கிண்டலடிக்கிறார் :
மார்கரெட் தாட்சர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது, அவரது வீட்டின் வெளியே இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் தெருவைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அடித்த காற்றில் ஒரு சாக்லேட் பேப்பர் பறந்து, திறந்த ஜன்னல் வழியாக தாட்சர் ரூமிற்குள் புகுந்துவிட்டது.
 பதறி உள்ளே போன தொழிலாளர், தொங்கிய முகத்துடன் திரும்பி வந்து தன் சகாவிடம் சொன்னார் :''நான் என்ன செய்ய? கொஞ்சம் லேட்டாயிடுத்து.  மேடம் அந்த சாக்லேட் பேப்பரிலும் வேகமாக கையெழுத்து போட்டு Top Secret பெட்டியில் செக்ரட்டரிக்கு அனுப்பிட்டாங்க!''
பிரிட்டிஷ் மந்திரி ஒருவர் தன் காரியதரிசியுடன் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது கேட்கிறார், ''ஏம்ப்பா, எதிர் கட்சி ஆளுங்க எனக்கு 'சட்னு' எதிலேயும் முடிவு எடுக்கத் தெரியாதுன்னு குற்றம் சாட்டி இருக்காங்களே - அதை ஒத்துக்கலாமா, மறுக்கலாமா, இல்லாட்டி கண்டுக்காம இருந்துடலாமா? கன்ப்யூஷனா இருக்கு. என்ன சொல்றே நீ...'' இது நம் ஊர் பல மந்திரிகளுக்கும் பொருந்தும்.
மார்கரெட் தாட்சரைப் பற்றி எதிர்க்கட்சி M.P. சொன்னது : If Margaret Thatcher dies, all others will rest in peace!
இதற்கு ஜோடியாக ஒரு கல்கி இதழின் தராசு கேள்வி-பதிலில் திரு லால்குடி ஜெயராமன் கேட்டதாக எழுதப்பட்ட ஒரு ஜோக் அல்லது புதிர் :

கேள்வி: ஒரு கப்பலில் லல்லுபிரசாத் யாதவ், தேவகெளடா, சுப்ரமணயசுவாமி, ஜெயலலிதா முதலிய தலைவர்கள் பயணம் செய்து கொண்டு இருக்கும்போது, கப்பல் மூழ்கிவிட்டால் யார் பிழைப்பார்கள்?
பதில்: இந்தியா பிழைக்கும்!   (கல்கி 18.11.98)

நகைச்சுவையாக எழுத விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய மூன்று ஆசிரியர்கள் P.G. Wodehouse, கல்கி மற்றும் தேவன் என்பது என்னுடைய கருத்து.
ஆங்கிலத்தில் டாக்டர்களை வைத்து எழுதிய Richard Gordon, வழக்கறிஞர்களை வைத்து எழுதிய  Henry Cecil மற்றும் Satire King, Richard Armour போன்ற மேதைகளின் புத்தகங்கள் எந்தக் காரணத்தினாலோ அச்சில் இல்லை. குப்பைகள் அதிகமாக வரும்போது மாணிக்கங்கள் மறைந்து விடுகின்றன.

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!