June 20, 2011

எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு

 முன்குறிப்பு:
சில வருஷங்களுக்கு முன்பு  கல்கியிலிருந்து ஒரு கதை வேண்டுமென்று   ஒரு கடிதம் வந்தது. அத்துடன் தலைப்பு: எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற தலைப்பிற்கு ஏற்ற கதை வேண்டும் என்றும் எழுதி இருந்தார்கள். ஆப்போது எழுதி அனுப்பிய கதையை இங்கு தருகிறேன்.
--------------------------------------
"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்."
இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார்  ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகை கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.
அவருக்கு முன்பு பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
நூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, "அவ்வளவுதான்! இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்" என்றார்.
ஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது - ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி? அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது!
திடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல்  வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி! விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா? சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா? -புரியவில்லை.
வீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது! ஆகா! எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ!

 வீட்டுக்குள் நுழைந்ததும் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினார். அப்போது அவரது ஜேபியிலிருந்து ஒரு லாட்டரிச் சீட்டு விழுந்தது. "ஹூம், நாமும் லாட்டரி டிக்கட் வாங்கிட்டுதான் இருக்கோம். ஒரு தபா கூட பரிசு விழுறதில்லை' என்று தமக்குள் சொல்லிக் கொண்டே சீட்டை எடுத்துப் பார்த்தார். `99999' என்ற எண் சீட்டு அது. ஒன்பது என்றால் அதிர்ஷ்டம் என்று ரேஸ் பிரியர்கள், சீட்டுப் பிரியர்கள் போன்ற பல `சூது விற்பன்னர்கள்' சொல்லி இருந்ததால் இந்த சீட்டை வாங்கியிருந்தார். அஷ்டபுஜம் என்ற தமது பெயரைக் கூட நவமணி, நவரத்தினசாமி என்று மாற்றிக் கொள்ளலாமா என்று சில சமயம் யோசித்தும் இருக்கிறார்!
"என்னங்க... எந்திரிங்க.. தந்திகாரு வந்திருக்காரு இன்னமோ தந்தியாம்" என்று சொல்லிக் கொண்டே அஷ்டபுஜத்தின் மனைவி அவரை எழுப்பினாள்.
"தந்தியா.. இன்னாட இது?" என்று கேட்டபடியே தமது வயதான உறவுக்காரர்கள் எல்லாரையும் மனசில் வீடியோ போட்டு பார்த்தார்.
தந்தியை வாங்கிப் பிரித்தார். அடுத்த செகண்ட் தமது ஐம்பத்தெட்டு இன்ச் தொப்பையைத் துக்கிக் கொண்டு `ஹையா' என்று குரல் கொடுத்தபடியே குதித்தார் -இருந்த இடத்திலேயே.
"என்னங்க.. இன்னா ஆச்சு உங்களுக்கு.. அடி மாரிய்யாத்தா.. உனக்கு கூழு வாக்கறேன்... இவருக்கு என்னவோ கிலி புடிச்சிக்கிச்சே" என்று அம்புஜம் அலறினாள்.
"அடியே ஒப்பாரி வெக்காதே. அய்யா இனிமே பாரி. வாரி வாரி வழங்கப் போற பாரி.. தந்தி இன்னாத் தெரியுமா? உல்டா பிரதேஷ் லாட்டரியிலே எனக்கு -மனசை தெகிரியமா வெச்சுக்கோ- எனக்கு ஐம்பது லச்சம் வுயுந்திருக்குது..... ஐம்பது லட்சம் அம்புஜம்...
"என்னது அம்பது லட்சமா?... சரியாப் பாருங்க அம்பது ஒம்பதா? அவசரத்திலே 41 லச்சம் போயிடப் போவுது யார் வீட்டு பிள்ளை இல்லாத சொத்து?"
மறுநாள் தமிழ் தினசரிகள் எட்டு காலம் தலைப்பில் "ஏழை போலீஸ்காரருக்கு ஐம்பது லட்சம் பரிசு" என்று பல ஆச்சரியக்குறிகள் பின்தொடரச் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பிறகுதான் அஷ்டபுஜத்திற்குத் தனக்கு அடித்த அபார அதிர்ஷ்டம் உறுதியாயிற்று. அந்த `யோகம்' அடிச்ச பிறகு பேரையும் நவரத்தினசாமின்னு மாற்ற முடிவு செய்தார் அஷ்டபுஜம்.
செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்து நவரத்னசாமி ஆனார்- முன்னாள் போலீஸ்காரரும் இன்னாள் லட்சாதிபதியுமான முன்னாள் அஷ்டபுஜம்!
பெயரை மாற்றிக் கொண்ட வேளை அதிர்ஷ்ட தினமாக அமைந்தது.
அவர் இருந்த வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய பாக்டரியை ஏற்படுத்தப் போவதாக அரசாங்க அறிவிப்பு வந்ததால், மனைகள் விலை சடசடவென்று ஏறத் தொடங்கின. பம்பாயிலிருந்து வந்த ஒரு சேட், நவரத்னசாமியுடன் பார்ட்னராகச் சேர்ந்து அவர் வீட்டு மனையில் ஒரு நட்சத்திர ஓட்டலைக் கட்ட முன் வந்தார்.
"இந்த மனை சின்னதாச்சே எப்படிங்க சேட் ஓட்டல் கட்ட முடியும்" என்று ந.சாமி கேட்டார்.
"ஒசரமாக் கட்டிப்பிட்டாப்  போச்சு. மேலே ஒரு ரிவால்விங் ரெஸ்ட்ராண்ட் சும்மா ஏழெட்டு மாடி கட்டிப்பிடலாம். நல்லா பிசினஸ் ஆவும். மெயின் ரோடுல உங்க வீடு இருக்கிறதும் அதிர்ஷ்டம்" -- சேட் போட்ட சோப்பில் நவரத்தினசாமி கரைந்து போனார்.
லாட்டரிப் பணம் செங்கல்லாகவும் சிமெண்ட்டாகவும் இரும்பாகவும் மாறி அவரது வீடு இருந்த இடத்தில் கட்டடம் எழும்ப ஆரம்பித்தது.
"சேட்.. இன்ஜினியரு சொல்றாரு எட்டு மாடி கட்டறதாக.. எனக்கு யட்டு ஆவுறதில்ை` ஒன்பதாகக் கட்டிப்பிடலாம்.
கடைசி மாடியின் ரூஃபிங் போட ஜல்லியும் சிமெண்ட்டும் டன் டன்னாக மேலே ஏறிக் கொண்டிருந்தன.
திடீரென்று ஸெண்டரிங் பலகைகள் சரிய, ரூஃப் டாப்பில் இருந்த கலவைகள் மளமளவென்று விழ அந்த அதிர்ச்சி வேகம் தாளாமல் கட்டடமே ஒரு கண் இமைக்கும் நேரத்தில் ஏகப்பட்ட சடபுட சப்தத்துடன் கன்னா பின்னாவென்று குப்பலாக இடிந்து விழுந்தது!
இன்ஜினீயர் கட்டடம் `நிக்குமா' என்று பார்க்காமல் நமக்கு எவ்வளவு `நிக்கும்' என்று மட்டும் கணக்குப் பார்த்ததில் வந்த வினை.
ஒன்பதாவது மாடியே கட்டடத்திற்கு வினையாக வந்தது. நவரத்னசாமியின் லாட்டரிப் பரிசுப் பணம் நிமிஷத்தில் தவிடு பொடியாகியது!
ஈரத் துணியைத் தலையில் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த நவரத்னசாமியின் காதில் அசரீரிக் குரல் கேட்டது. "எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்."
அடாடா! மன்னாரு எவ்வளவு பெரிய ஜோசியர். எட்டாவது மாடிக்கு மேல் கட்டாதே என்று அவர் சூசகமாகச் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் போனோமே என்று நவரத்னசாமி எட்டுக் கட்டைக் குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்ததார்!

6 comments:

  1. :) :), good on Sir. Thanks for the post - SP

    ReplyDelete
  2. Great Sir.... So nice... Regards Ranga

    ReplyDelete
  3. one line is missing or happened it is all in dream. Day dreaming and consulting with the astrologers and seeing the bulletin of தினபலன் in tamil channel lead to read the story with the humour and laugh.

    r.suresh

    ReplyDelete
  4. nice story...I loved it

    ReplyDelete
  5. நல்ல கதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. ஒரு புஜத்தில் லஞ்சம் வாங்கினாலே ஒலகம் தாங்காது..அஷ்ட புஜத்தில வாங்கினா, அடுக்குமா?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!