April 05, 2011

ஐயோடா, வக்கீல்கள் -கடுகு


வக்கீல்களிடம் எனக்கு அவ்வளவு மோகம் கிடையாது. எந்தத் தொழிலையும் கண்ணை மூடிக் கொண்டு இகழக் கூடாது தான். ஆனால் இந்தச் சட்ட நிபுணர்களால் எனக்கு ஏற்பட்ட  தொல்லைகள் சற்று மனக்கசப்பை வளர்த்து விட்டன.

      வாழ்க்கை மிகவும் சிக்கல் மிகுந்ததாக ஆகிவிட்டது. பக்கத்தில் வக்கீல் இல்லாத போது தும்மக் கூடக்கூடாது. எவையெல்லாம் சட்ட விரோதமான காரியங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள மற்றொரு ஜன்மம் எடுத்தால் தான் முடியும். அப்பாடி, வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் சட்ட திட்டங்கள்!

      வக்கீல்கள், டாக்டர்களைப் போல் ஆகிவிட்டார்கள். அவர்களிடமும் ஸ்பெஷலிஸ்ட் என்ற ஜாதி தோன்றிவிட்டது. இவர்களுக்குத் தெரியாத சட்டமே கிடையாது. அப்படி ஏதாவது சட்டச் சிக்கல் ஏற்பட்டால், லத்தீன் பிரெஞ்சு மொழிகளில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் பேசுவது நமக்குப் புரியாதது மட்டுமல்ல அவர்களுக்கும் புரியாது!

      இன்று நமக்குத் தேவையான வக்கீலைத் தேர்ந்தெடுக்கலாம். இன்கம்டாக்ஸ், சொத்து விவகாரம், அரசியல் போராட்டம், உயில், மான நஷ்டம், விவாகரத்து, இன்சால்வன்சி, விற்பனை வரி, மதுவிலக்கு, மனைவி கொலை போன்ற ஒவ்வொரு விவகாரத்திற்கும் ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பதால், சட்டத்தைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. வக்கீலைக் கண்டுதான் பயப்பட வேண்டும்!

      இவர்கள் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு நம்மைப் பயமுறுத்துவார்கள். இப்படி பயமுறுத்துவதற்கு நம்மிடம் பணமும் வசூல் செய்து விடுவார்கள்!

      முன் காலத்தில் யாரும் உயில் எழுதவில்லை. இருந்தாலும் சொத்துக்கள் பற்றித் தகராறுகள் எழவில்லை.

உயில்களை எழுதாவிட்டால் ஆபத்து, வழக்கு விவகாரம் ஏற்படும் என்றெல்லாம் இப்போது சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். என்னைக் கேட்டால் உயில்கள் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தேதான் வம்புகள் ஆரம்பிக்கின்றன. இறந்தவரின் பெண், பிள்ளைகளிடம் கசமுச தோன்றும். ஏன், மனைவியே கூடப் பொருமக் கூடும்.

      முன்பெல்லாம் லட்சக்கணக்கான ரூபாய் வியாபாரம் கூட வாயாலேயே செட்டில் ஆகிவிடும். இப்போது கான்ட்ராக்ட், அக்ரிமென்ட் என்று இல்லாமல் சுண்டைக்காய் வியாபாரம் கூடச் செய்ய முடியாது.

      வக்கீல் வருகிறார். பத்திரங்கள் வருகின்றன. ரிஜிஸ்டிரேஷன், கோர்ட் எல்லாம் உருவாகின்றன. எல்லாருக்கும் நாம்தான் தீனி போட வேண்டும்.

      இன்று உலகம் முன்னேறிக் கொண்டே போகிறது. விஞ்ஞானிகள் வானவெளியைத் துருவி ஆராய்கிறார்கள். டாக்டர்கள் மனித உடலை அலசி ஆராய்கிறார்கள். ஆனால் வக்கீல்கள் எப்படி?

      ஒரு வக்கீலின் அறைக்குப் போய்ப் பாருங்கள். ஏகப்பட்ட ஷெல்ஃப்களில் தடிமனான புத்தகங்கள், கேஸ் கட்டுக்ள, தும்பு, தூசு ஆகியவை இருப்பதைப் பார்க்கலாம்.

      தும்பு! இது தான் வக்கீலுக்கு முக்கியமானது. மனித இனத்தைப் போன்று சட்டம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதை நமக்கு எடுத்துக் காட்ட தும்பு அவசியம். எவ்வளவு தும்பு, தூசு படிந்திருக்கிறதோ, அவ்வளவு பெரிய வக்கீல் அவர்!

     
அது மட்டுமா? வக்கீலின் அறையில் மேஜை, நாற்காலிகள் எல்லாம் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும். கடைசல் கால்கள், உயரமான முதுகு, ஏகப்பட்ட வளைவுகள் கொண்ட மேஜை, அழுக்குத் துணி, டேபிள் கிளாத், வார்னிஷ் பார்க்காத நாற்காலி, பத்து பேர் உட்காரக் கூடிய நீள பெஞ்சு ஒரு கால் சரியாக இல்லாததால் உயரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் லா-ஜர்னல், மைக்கூடு, பேனாக்கட்டை, ஸ்டாண்டில் வெளுத்துப் போயிருக்கும் கறுப்பு கவுன், கறுத்துக் கொண்டிருக்கும் வெளுப்பு தலைப்பாகை, சுவாமி படங்கள், வாசனை வராத ஊதுவத்திப் புகை -இது தான் வக்கீலின் அறை.

      எந்தக் கேஸைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலும் வக்கீல் சொல்வார் : ""இந்தக் கேஸை நான் பார்த்துக் கொள்கிறேன். தொள்ளாயிரத்துப் பதினேழில் காட்டாங்குளத்தூர் சமஸ்தானத்திற்கும் சிங்கப்பெருமாள் கோயில் மன்னருக்கும் நடந்த கேஸில்...'' என்று ஆரம்பிப்பார்கள்.

      "நாம் ஜெயிப்பது உறுதி என்றாலும் செக்க்ஷன் -----ன் படி ஒருக்கால் நீங்கள் தோற்றுப்போகலாம்...'' என்பார். ஜெயிப்பது பற்றி பேசும் போது "நாம்' என்பவர், தோல்வி என்னும் போது "நீங்கள்' என்பார்!


      குடிப்பழக்கம் மாதிரி "கேஸ் பழக்கம்' ஏற்பட்டால் ஆபத்து. கோர்ட்டே வாழ்க்கை, வக்கீலுக்கு ஃபீஸ் கொடுப்பதே ஜீவன் என்றாகிவிடும்.

      "மேலே போய் கடைசி வரைக்கும் பார்த்து விடலாம்'' என்பது தான்

ஒவ்வொரு வக்கீலின் தாரக மந்திரம். கடைசி என்பது உங்கள் சொத்தின் கடைசி பைசா வரை என்று பொருள!.

      முன்பெல்லாம் உழைத்து, இரவு பகல் என்று பாராமல் பாடுபட்டுத் தொழிலோ வியாபாரமோ செய்பவர்கள்தான் செல்வந்தர்கள் ஆவார்கள். இப்போது வேறு ஒரு வழி இருக்கிறது. இப்படிப் பணக்காரர் ஆனவர் மீது ஏதாவது காரணத்திற்கு மானநஷ்ட வழக்குப் போட்டு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ நஷ்ட ஈடு கோருவதுதான் அந்த வழி. எவ்வளவு நஷ்டஈடு கேட்கிறீர்களோ அந்தத் தொகை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் வக்கீலுக்கு அதில் பாதியாவது கொடுத்தாக வேண்டும்!

ஒரு நாள் பஸ்ஸில் என் நண்பரைப் பார்த்தேன். "குழந்தை குட்டிகள் எல்லாம் நலமா?'' என்று கேட்டேன்

.அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ""என்னய்யா குட்டி கிட்டி என்கிறாய். நான் என்ன, யானையா பூனையா கழுதையா, குட்டி போட? நாலு பேர் எதிரில் இப்படி அவமானம் செய்ததற்கு தாவா தொடுக்கப் போகிறேன். இதோ நேரே என் வக்கீல் வீட்டுக்குப் போகிறேன்'' என்று அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டார்! காலம் இப்படி ஆகிவிட்டது. பள்ளிக்கூடம் போனதில்லை. கோவிலுக்குச் சென்றதில்லை. சினிமா பார்த்ததில்லை என்றெல்லாம் சொல்ல யாரும் தயங்க மாட்டார்கள். கோர்ட்டுக்குப் போனதில்லை என்று சொல்வதை அவமானமாகக் கருதுகிறார்கள் பெரும்பாலோர் !

என் மைத்துனர் இன்ஷø ரன்ஸ் ஏஜென்ட். "உங்கள் காரினால் ஏதாவது வம்பு தும்பு வந்தால் எங்கள் கம்பெனி நஷ்ட ஈடு தரும்'' என்று கூறி இன்ஷ்யூர் செய்தார். ஆனால் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைச் சாப்பிட்டு ஏப்பம் விடக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று அப்போது தெரியாது. ஒரு நாள் கடைத்தெருவில் என் காரைப் பார்க் செய்த போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மேல் லேசாக உரசிவிட்டது. கீறல் விழுந்தது என் காரின் மேல்தான்.

      இருந்தாலும் தூரத்தில் கருவேப்பிலைக்காரியிடம் கொசுறு கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்த ஒரு ஆசாமி ஓடிவந்து, ""ஐயோ, கார் மேல் இடித்து விட்டாயா படுபாவி! என் தலை சுற்றுகிறது. இதனால் என் பேத்திக்குப் புத்தி பேதலித்து விடும். என் வீட்டு எருமை மாட்டுக்குக் குறைப் பிரசவம் நேர்ந்துவிடும். இதற்கு நஷ்ட ஈடு கொடுத்து ஆக வேண்டும்.'' என்று கத்தினார்.

      மறுநாள் ஒரு வக்கீல் என் வீட்டிற்கு வந்தார். கையில் எக்ஸ்ரே படம் இருந்தது. "நீங்கள் செய்த கார் விபத்து என் கட்சிக்காரரைப் பெரிதும் பாதித்துவிட்டது. கவலையினால் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது. சிறு குடலில் "அல்சர்' வந்து விட்டது. இதோ பாருங்கள் எக்ஸ்-ரே'' என்றார்.

      வக்கீலை ஒரு மாதிரி "சரி' செய்து அனுப்பினேன். பிறகு தான் தெரிந்தது. இந்த வக்கீலிடம் சட்ட புத்தகங்களை விடப் பழைய எக்ஸ்-ரே படங்கள் அதிகம் இருந்தன என்று!


 ஒரு சமயம் நான் ஒரு ஓட்டல் படியில் இறங்கிக் கொண்டிருந்தபோது தடுக்கி விழுந்து விட்டேன். படிக்கட்டில் இருந்த கம்பளத்தில் இருந்த துளையில் என் கால் அகப்பட்டுக் கொண்டதே காரணம்.

      விழுந்த வேகத்தில் முட்டியில் லேசாக அடிபட்டு விட்டது.

லேசாக விந்திக் கொண்டே வீட்டுக்குப் போன போது வழியில் என் மைத்துனன் என்னைப் பார்த்தான். ""என்ன, காலில் அடிபட்டு விட்டதா?'' என்று கேட்டான்.

      நடந்த விஷயத்தைச் சொன்னேன். என் மைத்துனன் ஒரு வக்கீலுக்குக் கேஸ் பிடித்துத் தரும் ஏஜண்டு கூட. "வாருங்கள், நம் வக்கீலிடம் போகலாம். அந்த ஓட்டலை சும்மா விடக் கூடாது'' என்றான்.

      அத்தோடு விட்டானா? "அத்திம்பேர்... சில சமயம் முழங்காலில் ரத்தம் உறைந்து விட்டால் மூளையில் அதிர்ச்சி ஏற்படும். சிலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூட "செமி-கிராக்"காக இருக்கும்'' என்றான்.

      "உங்க அப்பாவிற்குக் கூட முழங்காலில் அடிபட்டதா?'' என்று கேட்டிருப்பேன். நல்ல காலம், கேட்கவில்லை!

      வக்கீலிடம் அழைத்துப் போனான். அவர் மேஜையின் மேலிருந்த சிறிது தும்பை என் முகத்தில் ஊதிவிட்டு, பெரிய சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, "கேஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது. குறைந்தது 20,000 ரூபாயாவது நஷ்ட ஈடு கக்க வைக்கிறேன்'' என்றார்.

      நான் 500 ரூபாய் "கக்கி' விட்டு வந்தேன். கேஸ் ஏதோ நடந்தது. நான் வர வேண்டிய அவசியமில்லை என்றதால் போகவில்லை.

      ஒரு நாள் மைத்துனன் ஓடி வந்தான். "நான் சொல்லவில்லையா? வக்கீல் யமகாதகன். நம் கேஸை ஜெயித்து விட்டார்'' என்றான்.

      நஷ்ட் ஈடு  தொகை பத்தாயிரம் ரூபாயில் மாடியில் ஒரு அறையைப் போடலாமா, அல்லது பெண் கலியாணத்திற்கு நகை வாங்கலாமா என்று மனதில் யோசித்தபடியே வாயெல்லாம் பல்லாக, "அப்படியா?'' என்று கேட்டேன்.

      "என்னது! பொய்யா சொல்கிறேன்?''

      "நீ பலே ஆள்! உன் வக்கீல் கில்லாடி என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு "ஹியரிங்' கூட ஆகவில்லையே.?''

      ""அங்கே தானே இருக்கிறது சூட்சுமம். வக்கீல் நோட்டீஸைக் கண்டு ஓட்டல்காரன், கதி கலங்கி விட்டான். கோர்ட்டுக்கு வெளியே ’செட்டில்' செய்யலாம் என்றான். சரி, வீணாக இழுத்துக் கொண்டு போனால் நமக்குத்தானே தொந்தரவு என்று ஒத்துக் கொண்டோம்.

      ""வெரிகுட்... செக் எங்கே?''

      "செக் எதற்கு? "காஷ்' கொடுத்து விட்டான். இந்தாருங்கள், நூற்றி எழுபத்திரண்டு ரூபாய்!''

      "என்னது! நூற்றி எழுபத்திரண்டு ரூபாயா?''

      "பின்னே என்ன? இது ஒன்றும் குறைவான தொகை இல்லயே?''

      "அப்படியா? முழங்கால் காயத்தில் ரத்தம் உறைதல், மூளையில் அதிர்ச்சி ஏற்படுதல், பைத்தியம் பிடித்தல், "செமி-கிராக்' குழந்தைகள் பிறப்பது - இதெற்கெல்லாம் நஷ்ட ஈடு இதுதானா?''

      "ஸ்ஸ்ஸ்... காலில் அரை சென்டிமீட்டர் அளவு சிராய்ப்புக்கு இவ்வளவா அலட்டிக் கொள்வது?'' என்றான் வக்கீல் ஏஜண்ட்!

      ஆண்டவா! என்னை வக்கீல்களிடமிருந்தும், வக்கீல் ஏஜண்டுகளிடமிருந்தும் காப்பாற்று!

     பின் குறிப்பு: சுமார் 40  வருஷங்ளுக்கு முன்பு "ஆலன் கிங்' எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதியது.. இவர் அமெரிக்க வக்கீலகளைப் பற்றி எழுதியுள்ளார்!.

2 comments:

  1. முந்தின ஜெனரேஷனில் நிறைய மிராசுதார்கள் / ஜமீந்தார்கள் வக்கீல்களிடம் தம் சொத்தை விட்டது பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். நான் பார்த்த வரையில், நல்ல அதாவது நன்கு தர்க்க / குதர்க்க வாதம் செய்யத்தெரிந்த வக்கில்கள் குற்றவாளிகளுக்கு மட்டுமே ஆஜராவார்கள். காசு ஒன்றே குறி. நியாயம் தேவையில்லை.
    இவ்வளவு சீரியசான விஷயத்தை ஜோவியலாக எழுதியிருப்பதும் ஆச்சரியம் தான். // ""உங்க அப்பாவிற்குக் கூட முழங்காலில் அடிபட்டதா?'' என்று கேட்டிருப்பேன். // சிரித்துக் கொண்டிருக்கிறேன்! அத்திம்பேரிடமே லவட்டிய மைத்துனன் பலே பேர்வழி தான்!
    - ஜெ.

    ReplyDelete
  2. ""உங்க அப்பாவிற்குக் கூட முழங்காலில் அடிபட்டதா?'' என்று கேட்டிருப்பேன். //

    SUPER.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!