September 28, 2010

 வரதராஜுலு - கேரக்டர்

குறிப்பு:  சாவி அவர்கள் தன் அலுவலக மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது எப்போதோ கோபுலு வரைந்த ஒரு ஓவியம்  அவர் கையில்  அகப்பட்டது. கோபுலு வரைந்திருந்த இந்த ஓவியத்தை திரு. சாவி எனக்கு அனுப்பி, அதற்கேற்ற மாதிரி ஒரு கேரக்டர் எழுதச் சொன்னார்.
         பிளாஸ்டிக் ஹாண்ட்பாக், வலைப்பையில் டிபன் பாக்ஸ், உயிரை எந்த நிமிடத்திலும் விடத் தயராக இருக்கும் ஆயிரம் ஒட்டுக்குடை, பட்டை பெல்ட், உயரம் குறைவான, "பிடிக்கும் பாண்ட்'  -- இவைதான் திருவாளர் வரதராஜுலுவின் ஸ்டாண்டர்ட் அலங்காரங்கள். பாலைவனத்தின் நடுவே ஓடும் சிற்றாறு போல், பரந்த வழுக்கைத் தலையின் நடுவில் நெளிந்து பறக்கும் மூன்று தலைமுடிகளும், புருவங்களுக்கிடையே உள்ள இரண்டு சுருக்கங்களும் அவரைக் கோபக்காரராகக் காட்டுவதைக் கவனிக்காமல், அவரிடம் பேச்சுக் கொடுத்தால், வந்தது வம்பு.
வரதராஜுலுவுக்கு பல விஷயங்களின் மேல் சதா கோபம். அவர் கைப்பையிலி ருக்கும் கடிதங்களின் பிரதிகளைப்
பார்த்தால் தெரியும், அவர் கோபத்திற்குக் காரணங்கள். காரசாரமான கடிதங்கள் எழுதுவதுதான் வரதராஜுலுவின் ஒரே வேலை.
ஜெயில் வார்டராக இருந்து ரிடையரான இவருடைய கண்களுக்குப் பலர் குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். பதவி இல்லாததால் அவர்களைச் சிறைக்குள் அடைக்க முடியவில்லை. ஆகவே தன்னுடைய கோபத்தைக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் எழுதுவார். ஐ.நா. காரியதரிசி முதல் காட்டாங்குளத்தூர் கர்ணம் வரை எல்லாருக்கும் எழுதுவார்.
காலை ஒன்பதரைக்குச் சாப்பிட்டுவிட்டு, டிபனைக் கட்டிக் கொண்டு - வெறும் மோர் சாதம் தான் -  கிளம்பினார் என்றால் நேரே லைப்ரரிக்குத்தான் போவார்.

September 24, 2010

என் கண்களில் நீர் தளும்பியது.



கேப் கேனவரெல். அமெரிக்க விண்வெளி  மையம் உள்ள இடம். ஃப்பளாரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்ட்டர்.
அடுத்த வாரம் விண்ணில் விடப்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில் இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருக்கிறது.


மனிதனின் அபார சாதனைகளின் ஒரு உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில். உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும் வசதிகளுக்கும் வழி வகுத்தது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும் கூட!

அங்கு விண்வெளி பயண முயற்சிகளின் போது உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த பிரமாண்டமான கான்கிரீட் பலகை. (42 அடிக்கு 50 அடி அளவு )கறுப்பு கிரானைட் பதிக்கப்பட்டு. உயிரிழந்த வீரர்களின் பெயர்களை முழுவதுமாக கல்லில் துளையிட்டு எடுத்து, பலகையின் பின்னாலிலிருந்து இயற்கையான வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள். பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில் மின்னுகின்றன. எப்போதும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, சூரியனை நோக்கி மெள்ளத் திரும்பும் வகையில் மோட்டாரும் பொருத்தி இருக்கிறார்கள்.
 
இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை கிரானைட்டில் பொறித்திருக்கிறார்கள்.

""புதிய எல்லைகளை வெற்றி கொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம், அம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு. விண்வெளியை வெற்றி கொள்வதற்கு உயிருக்கு ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை நெஞ்சார நம்பி, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்நினைவுச் சின்னம் மே 9, 1991 அன்று அர்ப்பணிக்கப்படுகிறது''

இந்த வாசகத்தைப் படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய இன்டர்நெட், சாட்டிலைட், டி.வி. நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் வைத்த மரக்கன்று நமக்குப் பழம் தருகிறது.

அவர்கள் செய்த உயிர்த் தியாகத்தை என்றும் நன்றியுடன் நினைவில் போற்றுவோம்!

The Memorial
"Whenever mankind has sought to conquer new frontiers, there have been those who have given their lives for the cause. This astronauts memorial, dedicated May 9, 1991, is a tribute to American men and women who have made the ultimate sacrifice believing the conquest of space is worth the risk of life."
( என்  மொழிபெயர்ப்பை யாராவது மேம்படுத்தினால் நல்லது!)


இதோ மற்றொரு மொழிபெயர்ப்பு:
""புதிய எல்லைகளை வெற்றி கொள்ள,  மனித சமுதாயம் விழையும் போதெல்லாம், அம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு. மே 9, 1991 அன்று  அர்ப்பணிக்கப்படும் இந்த விண்வெளி வீரர்கள் நினைவுச் சின்னம், விண்வெளியை வெற்றி கொள்வதற்கு உயிருக்கு ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை நெஞ்சார நம்பி, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அளிக்கப்படும் புகழ் அஞ்சலி.

கம்பன் வைத்த ஐஸ்!

கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய அழகானப் பாடலை
இங்கு தருகிறேன்.

கம்பனின் எழுத்தாணியின் கூர் மழுங்கி விட்டது.
மாவண்டூரில் உள்ள சிங்கன் என்பவரின் இரும்புப் பட்டறைக்குச் செல்கிறார். அவரிடம் தனக்கு ஒரு எழுத்தாணி செய்து தருமாறு கேட்கிறார். சிங்கன் விரைவாகச் செய்து தருகிறார்,. கம்பரும் மனம் மகிழ்ந்து சிங்கன் மீது ஒரு பாடல் இயற்றிக் கொடுக்கிறார். (இது ஒரு ஊகம்தான்!)
இதோ அந்தப்  பாடல்!

ஆழியான் ஆழி; அரன் மழுத்தான் என்பான்;
ஊழியான் அங்கை எழுத்தாணி அருள் என்பான்;
கோழியான் குன்றெரிய வேல் என்பான்;
மாவண்டூர் சிங்கன் உலைக்களத்திற் சென்று!

September 19, 2010

இரண்டு மணிப்பயல்கள்!-- கடுகு

சென்னை ஜி.பி.ஓ-வில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பார்சல் செக் ஷனில் மணி என்ற பியூன் இருந்தான். (தபால் துறையில்  இவர்களைப் பேக்கர்  என்பார்கள்.)  அவன் இளைஞன். துடிப்பானவன்.  முகம் சுளிக்காமல் வேலை செய்வான். அவ்வப்போது என்னிடம் வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பான்.
அந்த  சமயத்தில் நான் ஒரு தையல் மெஷின் வாங்கி இருந்தேன். தையல் வேலயை தீவிரமாகக் கற்க ஆரம்பித்தேன். என் மனைவி, 'உஷா தையல்  வகுப்பி'ல் சேர்ந்து கற்க ஆரம்பித்தாள். அவள் எனக்குச் சொல்லிக் கொடுப்பாள்.  ஆபீசில் ஒரு நாள் ‘தையற்கலை’ என்ற  புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். மணி அப்போது வந்தான். “ என்னா சார், நாவலா” என்றான்.
“ இல்லை மணி. நான் டெய்லரிங்  கற்றுக் கொள்கிறேன். இது தையற்கலைப் புத்தகம்.” என்றேன்.
“ அப்படியா சார்... இந்த  புத்தகத்தை எல்லாம் தூக்கி த்தூர வையுங்கள். நான் சொல்லி கொடுக்கிறேன்.” என்றான்.

September 14, 2010

மூன்று கடிதங்கள் - கடுகு

இது என் பெண்ணின் தொடர்பான பதிவு என்றாலும் அவளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளும் பதிவு இல்லை..(அப்படிப்பட்ட பதிவு ஒன்றைப் பின்னால் போட்டாலும் போடுவேன்.)
1. இந்திரா காந்தி.
என் பெண்ணிற்கு எட்டு வயது சமயத்தில் இந்திரா காந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்ப விரும்பினாள். ஒரு வாழ்த்து அட்டையைத் தயார் செய்தாள். அதை நேரிலே சென்று கொடுக்க ஆசைப்பட்டாள். அந்த காலத்தில் பிரதமர் தினந்தோறும் காலை சுமார் 10,15 நிமிஷம் பொதுமக்களை அவரது இல்லத்தில் சந்திப்பார். காலையில் எட்டு மணிவாக்கில் பிரதமர் இல்லத்திற்குப் போனால் பெயர் விலாசம் எழுதி கொண்டு உள்ளே விடுவார்கள். உள்ளே புல் தரையில் எல்லாரையும் உட்காரச் சொல்வார்கள். என் பெண்ணை  அழைத்துக் கொண்டு போனேன்.. நிறைய குழந்தைகள் வந்திருந்தார்கள்.அனைவரும் உள்ளே போனோம்.. ககுழந்தைகளை உட்காரச் சொன்னார்கள். பெரியவர்கள் பின்னால் நின்று கொண்டு இருந்தோம். இந்திரா காந்தி. வந்தார். குழந்தைகள் நமஸ்தே சொல்ல அவரும் பதிலுக்குச் சொன்னார். அவர்கள் கொடுத்த வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.
சுமார் பத்து நாள் கழித்து பிரதமர் அலுவலம் என்ற முத்திரையிட்ட கவர் என் பெண்ணிற்கு வந்தது.