March 31, 2010

எஸ்.ஏ.பி. அவர்களும் ஷவர் குளியலும்

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் தன் பிளாக்குகளில் பல நல்ல விஷயங்களைப் போடுகிறார்.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.  எனும் உன்னத மனிதரைப் பற்றிய ஒரு தகவல். அதன் லிங்க்:
http://vikatandiary.blogspot.com/

 எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சொன்னது.
     அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் எனப் பலரும் குடியிருந்தார்கள்.
         வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.
       வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும்கூடக் கலந்து கொள்வார் - ஃப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!

        ஒருநாள், அவர் யதேச்சையாக, “ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?” என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.

“குளியலா..? அப்படின்னா..?” என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.   
       எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?” என்று கேட்டார்.
  “இல்லே... குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.
      அமைதியில்  ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி.

March 28, 2010

கமலாவும் கின்னஸ் புத்தகமும்

கின்னஸ் புத்தகம் எத்தனையோ வருடங்களாகப் பல உலக சாதனைகளைப் போட்டு வந்தாலும், சமீப காலமாகத் தான் தமிழ் நாட்டில் கின்னஸ் வெறி பிடித்திருக்கிறது. அதில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டுமென்று யார் யாரோ என்னவென்னமோ செய்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இப்படி ஒரு குறிப்பு வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர்களில் அதிகம் பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஒரு புதிய சாதனையும் அதில் இடம் பெறக் கூடும்!
போகட்டும். ஆனால் அதில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒரு முக்கிய பெயர் இருக்காது. அது என் அருமை மனைவி கமலாவின் பெயர்தான்.
கமலா எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கிறாள் புரிந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கிருக்கும் திறமையில், பிற்காலத்திலும் புரிவாள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. "ஆமாம் நிறையச்
சாதனைகளைச் செய்திருக்கிறார் என்கிறீர்களே ஏன் இதுவரை கமலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில், இடம் பெறவில்லை' என்று தானே கேட்கிறீர்கள்.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று: கமலாவின் தன்னடக்கம், இரண்டு: எனக்கு என் மானத்தைக் கப்பலேற்ற விருப்பமில்லை.
இருந்தாலும் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கும் கமலாவைப் பற்றியும் அவளது சாதனைகளைப் பற்றியும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்து வைப்பது அவளுக்கு நான் இழைக்கும் கொடுமை, அநீதி, என்ற காரணத்தால் இப்போது தெரிவிக்க முன் வந்துள்ளேன்.

"உங்களைப் போல அசமஞ்சம் கிடையாது. எத்தனை தடவை படிச்சுச் சொன்னாலும் உங்களுக்குத் தெரியாது. எவ்வளவுதான் நான் கழுதையாகக் கத்தினாலும் உங்கள் மண்டையில் ஏறாது. என் தலையெழுத்து அனுபவிக்கிறேன். உங்களைச் சொல்லிக் குத்தமில்லை, உங்களை என் தலையிலே கட்டினாளே உங்கம்மா, அவளைத்தான் சொல்லணும். ஹும்' என்று இதுவரை ஒரு லட்சம் தடவை கமலா சொல்லியிருக்கிறாள். (இதை நீங்கள் அச்சில் படிப்பதற்குள் இன்னும் நூறு ஏறிவிடும்!)

டி சில்வா - கடுகு

மீட் மிஸ்டர் டி சில்வா, பளிச்சென்று வெள்ளைச் சட்டை, வெள்ளை பாண்ட், பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட பூட்ஸ், பாந்தமான பெல்ட், கச்சிதமான டை, தீர்க்கமான மூக்கு, சுத்தமாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, வ்கிடில்லாத்  கிராப். ஐம்பதைத் தொட்டுக் கொண்டிட்ருந்தாலும் முறுக்கான தோற்றம். டி சில்வா! பம்பாய் மின்சார ரயில் ட்ரைவர். தமிழ்நாட்டிலிருந்து பம்பாய்க்குச் சென்ற ஆங்கிலோ இந்தியர். தமிழ், இந்தி, மராட்டி, இங்கிலீஷ் எல்லாவற்றையும் ஒரே பாணியில் கிட்டத்தட்ட அதே அளவு கொச்சையில் பேசுவார்! ரயிலில் ட்யூட்டியில் செல்லும் போது தன்னந்தனியே செல்ல வேண்டியிருப்பதால், ஓய்வுகிடைத்தால் ஓயாமல் பேசுவார். ஜாலியான ஆசாமி. தன்னுடைய சொந்த கஷ்டங்களைப் பற்றிப் பேசும்போது கூட தமாஷாகத்தான் பேசுவார். டி. சில்வா இல்லாமல் பம்பாயில் பல ஆங்கிலோ இந்திய நிகழ்ச்சிகள் நடக்காது. பியானோ வாசிப்பார். பக்தி கீதங்கள் பாடுவார். சர்ச் நிதிக்காக சிறுவர் நடன நிகழ்ச்சிகள் தயாரிப்பார். டான்ஸ் கொஞ்சம் வரும்.

March 26, 2010

அன்புள்ள டில்லி- 16

ஆவி உலகத் தொடர்பு பற்றிய விஷயங்களில் எனக்குப் பல
வருஷங்களாக ஆர்வம் உண்டு. பல புத்தகங்களைப் படித்தவுடன் சில பரிசோதனைகளையும் செய்துள்ளேன்.  (”ஆவிகளும் நானும்” கட்டுரை பின்னால் எழுதுகிறேன்.)டில்லிக்குச் சென்ற பிறகு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை. அங்கு வேறு பல விஷயங்களில் என் கவனம் சென்றது.
இந்தச் சமயத்தில் டில்லிப் பெண்மணி (தமிழர்தான்) ஒருவர் இந்த  ஈ.எஸ்.பி (EXTRA SENSORY PERCEPTION). சக்தி வாய்ந்தவராக இருப்பது தெரிந்தது     இதற்கிடையே பீட்டர் ஹர்க்கஸ் என்பவரது வாழ்க்கை வரலாற்றை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. இவர் அபார ஈ.எஸ்.பி. சக்தி கொண்டவர். இந்த புத்தகத்தின் சுருக்கத்தை தினமணி கதிரில் எழுதினேன். அதனால் பழைய ஆர்வம் மறுபடியும் தொத்திக் கொண்டது.
 டில்லிப் பெண்மணி உண்மையிலேயே தாம் ஒரு அசாதாரண சக்தி கொண்டவர் என்பதைப் புலப்படுத்தினார்.இவருடைய ஈ.எஸ்.பி. சக்தி மூலமாகப் பலரது பிரச்னைகளுக்குப் பதில் கிடைத்தது. பரிகாரங்கள் சொல்லப்பட்டன. பலர் பலன் கண்டனர், பத்திரிகை வாசகர்களுக்கு ஏன் உதவி செய்யக் கூடாது என்ற எண்ணத்தில், தினமணி கதிரில் "மீடியம் பதில்கள்' என்ற பகுதியை எழுத ஆரம்பித்தேன். வாசகர்களின் பிரச்னைகளுக்கு மீடியத்திடமிருந்து பதில் பெற்றுப் பிரசுரிக்கப்பட்டது

March 24, 2010

எல்லாம் அவன் அருள்!

ராம நவமி அன்று நடந்த ஒரு சிறிய அற்புதத்தை சூட்டோடு சூடாக எழுதாவிட்டால் அதைவிட பெரிய அபசாரம் எதுவும் இருக்காது.
      
  ராம நவமி அன்று காலை, செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள யோக ராமர் கோவிலுக்குப் போகலாம் என்று என்னை என் சகோதரன் கூப்பிட்டார். பெரிய கார் வைத்திருக்கிறார். ஒரகடம் என்ற கிராமத்தில் அந்த கோவில் இருக்கிறது என்பதும் செங்கற்பட்டுக்கருகில் 15 கி.மீ. துரத்தில் ஒரகடம் இருக்கிறது என்பதுதான் தெரியும். விசாரித்துகொண்டு போகலாம் என்று கிளம்பி விட்டோம்.
          சிங்கபெருமாள் கோவில் போனதும் ஒரு கடைக்காரரிடம் ’ஒரகடம் எங்கிருக்கிறது?’ என்று கேட்டோம். அவர் ஸ்ரீபெரும்புதூர் போகும் பாதையில் சுமார் பத்து கி.மீ.போகச் சொன்னார். அதன்படியே போனோம். ஒரகடம் வந்தது. கோவில் எதுவும் கண்ணில் படவில்லை. அங்கு  ஒரு கடைக்காரரைக் கேட்டோம். “கோவில் எதுவும் இங்கு கிடையாது. இது இண்டஸ்ட்ரியல் ஏரியா” என்றார். நல்ல காலம். அங்கு போலீஸ் ஸ்டேஷன் இருந்தது