அந்தப் பெண் எம்.பி. எங்களைக் காலி செய்யச் சொன்னது ஏன் என்பதைச் சொல்வதற்கு முன் வேறு ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அந்தப் பெண் எம்.பி.யின் வீட்டுக்கு வந்த பல பிரமுகர்களில் ஒருவர், ஒரு மகாராஷ்டிர மாநில எம்.பி. தன்னுடைய தமிழ் மாஸ்டர்ஜி என்று என்னை செல்வி அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவருடன் நான் ஆங்கிலத்தில் உரையாடுவது உண்டு.. என்னுடைய ஆங்கிலப் புலமை அவரைக் கவர்ந்து விட்டது. ஆகவே ஒரு நாள், "எனக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர முடியுமா?'' என்று கேட்டார்.

அவர் மகாராஷ்டிராவில் ஒரு மிகப் பெரிய பிரமுகர். எதிர்க் கட்சியின் தலைவராக இருந்தவர், அசெம்பிளியில் பின்னால் காங்கிரஸிற்கு வந்தார். இவரது மாப்பிள்ளை சில வருடங்கள் கழித்து பம்பாய் முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர ஒத்துக் கொண்டேன். தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாடல், டிக்டேஷன் போன்று பாடங்கள். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் நிறையத் தவறுகள் ஏற்பட்டு விடும். அவருடைய வீக் பாயிண்டுகளைக் கண்டுபிடித்து அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தேன். என் மேல் அபார மதிப்பும் பிடிப்பும் எற்பட்டு விட்டது.
டெய்லி ரேட்
சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். "கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது'' என்றேன்.
"அடேடே, உங்களுக்கு பீஸ் கொடுக்கவே மறந்து விட்டேனே... முன்னேயே ஏன் கேட்கக் கூடாது?'' என்று சொல்லிக் கொண்டே தன் ப்ரீஃப் கேஸைத் திறந்தார். அதிலிருந்து ஒரு டைரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தார். சுமார் ஐந்து நிமிஷம் என் பொறுமையைச் சோதித்து விட்டுச் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ஷாக் அடித்தது!