June 05, 2020

Last Post

Dear Readers,
It is with great grief that I wish to inform you all of the demise of Kadugu Sir.  He was unwell for 2 months, but seemed to be getting better.  In the last 2-3 weeks, he suffered pain and lack of appetite that debilitated him rapidly and considerably.  He left us on the night of June 2, 2020.  The end was serene and peaceful - just like his personality.  Although filled with grief, we are grateful beyond measure for having had the honor and privilege to share our lives with such a wonderful human.  He has attained the lotus feet of his beloved Lord Anjaneya at the age of 88. 
This blog will remain open for you all to write comments but will not have new material for Kadugu Thalippu.
In prayer,
Anandhi (daughter)

April 03, 2020

என் அருமை நேயர்களுக்கு,

என் அருமை நேயர்களுக்கு,
வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். 

நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே பிஸியொ தெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப் பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்.
-- கடுகு

March 01, 2020

ரஸ்ஸல் என்பவரின் வரலாறு


யார் இந்த  ரஸ்ஸல்?  கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய  வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். 
சாதனை படைத்தவர்கள், நெகிழ்ச்சியூட்டும்  வரலாற்று நாயகர்கள், அசகாய சூரர்கள், ஏன் அட்டகாசமான தில்லுமுல்லு செய்தவர்களைப் பற்றிய விவரங்கள் போன்ற பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ரஸ்ஸலின் வரலாற்றை இங்கு தருகிறேன்.
ரஸ்ஸல் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று ஒரு வரி அறிமுகத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  ஹாலிவுட் வார்த்தைக்கு ஒரு காந்த சக்தி இருப்பதும் காரணம்.
ரஸ்ஸல் ஒரு ராணுவ வீரன். கனடா நாட்டில் 1914-ல் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த ராணுவ முகாமில் பாரசூட் வீரர்களுக்குப் பயிற்சி   கொடுத்துக் கொண்டிருந்தான்.
 அவன்   டி. என். டி.  எனும் பயங்கர குண்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு டி.என். டி. குண்டு என்ன காரணத்தினாலோ  தானாக வெடித்துவிட்டது.  
 ஏதோ சின்ன தவறு நிகழ்ந்துவிட்டது   டி. என். டி. ஒரு பயங்கர குண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.   அடுத்த செகண்ட் நினைவிழந்தான்.  நினைவு திரும்பியபோது மருத்துவ மனையில் இருந்தான்.  மெதுவாக  சுதாரித்து சுற்றுமுற்றும் பார்த்தான். கைகள் இரண்டிலும் கட்டு போடப்பட்டிருந்தது.    இரண்டு கைகளிலும் மணிக்கட்டும் ஐந்து விரல்களும் போய் விட்டதை உணர்ந்தான். டி.என்.டி அவற்றை பலி வாங்கி இருந்தது.  
  முப்பதாவது வயதில் கைகளை இழந்த அவன், தன்னுடைய வாழ்க்கையே அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது போல் உணர்ந்தான்.   வாழ்க்கையே இருண்டுவிட்டது. வருத்தப்பட கூட அவனுக்குத்  திராணியில்லை. இனி உயிருடன் இருப்பதைவிட   செத்துப் போவதே மேல்  என்று எண்ணினான் ரஸ்ஸல்.

February 05, 2020

நீச்சலும் கூச்சலும்

 ஞாயிற்றுக்கிழமை. சிறிது சாவகாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து, பேப்பரில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் இறங்கினேன்.  என் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.

வாயில் மணி அடித்தது. கதறியது என்று கூட சொல்லலாம். மனுநீதி சோழனின் மணியை, கன்றை இழந்த பசு அடித்தது போன்று இருந்தது. நான் சோழனும் இல்லை; எங்கள் பேட்டையில் மாடோ, கன்றோ எதுவும்  கிடையாது. என்னிடம் தேர் எதுவும் கிடையாது. இருந்தும் இந்த மணி ஓசை  ஒரு பழமொழியைத் தான்  லேசாக மாற்றி, நினைவுபடுத்தியது. 'யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே!’ என்பதை லேசாக மாற்றி, 'மணி ஓசை வரும் முன்னே; தொல்லை வரும் பின்னே’ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது
மணியோசை கேட்டு சமையலறையிலிருந்து எதிரொலி மாதிரி என் அருமை மனைவி கமலா   ”காது கேட்கலயா? உங்களுக்கு இடி இடிச்சாக் கூட  காது கேட்காது. உங்களுக்கு இருக்கிறது காது இல்லை;   ‘கேட்-காது’ தான் இருக்கு” என்று சொல்லி, தன்னுடைய சொல் நயத்தைத் தானே ரசித்தபடி, தன் முதுகில் தானே ஒரு ஷொட்டு கொடுத்தபடியே வந்து  வாயிற் கதவைத் திறந்தாள் கமலா.

“வாடா.. .. வாம்மா.. வாடா குழந்தை”  என்று  அன்பு, கரிசனம், பாசம், பரிவு, வாத்ஸல்யம், கனிவு... இன்னும் எனக்குத் தெரியாத பல பாவங்களுடன் கமலாவரவேற்றாள். பூர்ண கும்பம், வாழை மரம், நாதஸ்வர இசை, வேத கோஷம் தான் இல்லை! ஆமாம், திடீரென்று தொச்சுவும் அவனுடைய  அருமை மனைவி அங்கச்சியும்,  அவர்களுடைடைய நண்டு ஒன்றுடன் வருவார்கள் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.
 “ சும்மா  காலார நடந்து வந்தோம்..அத்திம்பேரைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று வந்தோம்”  என்று தொச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கச்சி  குறுக்கிட்டு,  “அது மட்டும் இல்லை, அக்கா. எங்க  அபார்ட்மென்ட்   காலனியில் நீச்சல் குளம் கட்டி இருக்காங்க. சூப்பரா இருக்கு. பசங்க அதகளம் பண்ணறங்க. காலனியில் இருக்கிற நண்டும் சுண்டும்…..”  என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, நான் இடைமறித்து  “அப்படியா? நம்ப நண்டுதான் லீடரா?” என்று கேட்டேன் 
 “பிரச்சினையே அதுதான், அத்திம்பேர். எதுக்கு இந்தப் பொடியன் வந்திருக்கான் தெரியுமா? அவனுக்கு நீச்சல் தெரியாது. தொளைச்சு எடுக்கிறான், 'நீச்சல் கத்து கொடு' என்று. அவனை  ‘நண்டு’ என்று நீங்க சொன்ன வேளை, அவனை நிஜமாகவே நண்டாக நீங்க ஆக்கி வைக்கணும்” என்றாள் அங்கச்சி.
   “அங்கச்சி..   ‘கெக்கே பிக்கே’ என்று ஏதாவது சொல்லிண்டே இருக்காதே. நான் விளக்கமா சொல்றேன், அத்திம்பேர்” என்றான்  தொச்சு.
ஏதோ நாடக வசனத்தை எழுதி, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல தொச்சு, அங்கச்சி வசனங்கள் இருந்தன.

“உள்ளே வாடா, தொச்சு...வந்தவனை “வா” என்று சொல்லாமல், ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிற வழக்கத்தை எப்பதான் விடுவீங்களோ!” என்றாள் கமலா. 
  “கமலா, முதலில் காபி கொண்டு வந்து கொடு” என்றேன். 
பொங்குகிற பாலில் சிறிது தண்ணீர் தெளித்தது போல்,  கமலாவின் கடுகடுப்பு ‘புஸ்’ என்று அடங்கிப்போயிற்று.  அது மட்டுமல்ல, உற்சாகம் ஊற்றாகப்  பெருக்கெடுத்தது.
 நான் சொல்லி முடிப்பதற்குள், எள் என்பதற்குள் எண்ணெயாக இருக்கும் என் மாமியார்  காப்பியுடன் வந்து விட்டாள்- வழக்கத்தை விட 50% அதிக பாசத்துடன்! 
 “தொச்சு! வாடா, அங்கச்சி வாம்மா. பப்ளி வாடா” என்று சொல்லியபடியே, மேஜையில் காப்பியை வைத்தாள்.
(பப்ளி? தொச்சுவின் பையனின் உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். சில சமயம்  அது திட்டு மாதிரி கூட இருக்கும்;  உதாரணமாக, புளிமூட்டை, ரோடு ரோலர், பீம சேனா, ஃபுட்பால் தடியா, கரடிக் குட்டி, வெல்லக்கட்டி, பலூன் கண்ணா என்று பல பலப் பெயர்கள்.)
“தொச்சு.. நீ குழந்தையை ‘ பப்ளி’ன்னு கூப்பிடறயே, அது என்ன பப்ளி?” என்று கேட்டால், இந்த பெயர்களுக்கெல்லாம்  அர்த்தம், விளக்கம் எதுவும் கிடையாது. அத்திம்பேர்! என் பெயரை  ‘தொச்சு’ என்று வைச்ச மாதிரி, இதுவும் ஒரு பேர்... இந்த பப்ளி என்ற பெயர்  ‘பப்ளிமாஸ்’ என்ற பெயரின் சுருக்கம். அவ்வளவுதான்” என்பான்!)
காப்பியை நோக்கி பொடிநடையாக சென்றபடி “அத்திம்பேர்..  நாங்க இன்னிக்கு வந்ததே இந்த பப்ளிக்காகத்தான்…. எங்க காலனியிலே இப்போ சூப்பரா நீச்சல்குளம் கட்டி இருக்காங்க; போன வாரம் திறந்து வெச்சாட்டங்க. பசங்க பாடு கும்மாளம் தான். பாவம், பப்ளி  வெறுமனே வேடிக்கை பார்த்துண்டு  இருக்கான்” என்று தொச்சு சொன்னான்.
  அங்கச்சி,  “அவன்   நீச்சல் கற்றுக் கொள்ளத் துடியா துடிக்கிறான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் “தொச்சு,   நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே? என்று கேட் டேன்,

January 20, 2020

கைதியின் கடைசிக் கடிதம்

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.


 

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.

என் அன்புள்ள.....‘என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளைஅப்படியே இக்கடிதத்தில் எழுதுகிறேன். என் கைகளில் விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் என் கையில் இல்லாமல் என் எண்ணங்களுக்கு போடப்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
எங்களைப் போன்றவர்களுக்கு உலகில் இரண்டே இரண்டு `சாய்ஸ்'தான் உள்ளன. மேலும் மேலும் மேன்மை பெறுவது; அல்லது பின்தங்கிப் போவது. இதற்கு இடைப்பட்ட நிலை கிடையாது. கடவுளை நெருங்குவதற்காக கடினமான பணிகளைச் செய்தவர்களுக்கும் இதுதான் நிலைமை. இடையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி ஒரு ராணுவம் வெற்றிப் பாதையில் செல்லும் போது பல தோல்விகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறதோ அது போல்தான்! ஆகவே நம்பிக்கை இழந்து விட்டு, எடுத்த பணியை கைவிடக் கூடாது. மாறாக மேலும் நெஞ்சுரத்துடன் செயல்பட்டு நம் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நீ கடவுளை நேசி. உன் அண்டையில் உள்ளவர்களை நேசி. இந்த இரண்டு விதிகளில் எல்லாமே அடங்கியுள்ளன.
 நாட்டில் அநீதி தலை விரித்து ஆடினால்    நாமும்  அப்படியே அநீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாகி விடும். ஆகவேதான் நான் உண்மையை அப்படியே கூற வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். இதன் விளைவாக என் உயிரையே இழக்க வேண்டியிருந்தாலும் கவலையில்லை. ஆட்சியாளர்கள், நிர்ப்பந்தப்படுத்தும் சத்தியப் பிரமாணத்தை நான் எடுத்துக் கொண்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க என்னால் இயலாது.
அன்புள்ள மனைவியே, உன் துயரத்திற்கும் எரிச்சலுக்கும் காரணமான காரியங்களை நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னிக்கவும். நம் ஊரில் உள்ள எவரையாவது புண்படுத்தியிருந்தாலோ எரிச்சலடையச் செய்திருந்தாலோ என்னை மன்னிக்கும்படி அவர்களிடம் சொல்லவும். என்னைப் பொறுத்த வரை நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்...''
*                          *                                *
இதுசிறையிலிருந்து , உயர்ந்த  கொள்கை பிடிப்புள்ள கைதி தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம். .

1943’ம் ஆண்டு பெர்லின் சிறையிலிருந்து ஆஸ்திரியாவைச் சேர்ந்த சிறிய விவசாயி. ப்ரான்ஸ் ஜகர்ஸ்டேட்டர் தன் மனைவிக்கு, தான் இறப்பதற்கு சில மணி நேரம் இருந்த போது எழுதியது.  ஆம், அடுத்த சில மணியில் அவரது தலை துண்டிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஜகர்ஸ்டேட்டர் அதிகம் படிக்காத எளிய மனிதன். மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். கிராமத்து மாதாகோவிலின் கேர்-டேக்கர். இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம், ஹிட்லரின் ராணுவத்திற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். இவரையும் ராணுவத்தில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது.  பலர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லைஹிட்லரின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார். ”இந்தப் போர் நியாயமற்றது; கொடூரமானது” என்று உறுதியாக நம்பினார். `ராணுவ உத்தரவுகளை கீழ்ப்படிவேன்' என்ற சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள அவரது மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே `ராணுவத்தில் சேர முடியாது' என்பதை, விளைவுகளுக்கு அஞ்சாமல் அவர் நெஞ்சுரத்துடன் கூறிவிட்டார்.
இப்படி அவர் மறுத்ததற்கு மரண தண்டனைதான் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும்.  எதிபார்த்தபடி அவர் சிறைப்படுத்தப் பட்டார். பல மாதம் சிறையில் இருந்தார். 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி அவர் பெர்லின் சிறையின் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இந்தக் கடிதம் 8-ம் தேதி இரவு அவர் எழுதியது,
     இரண்டாவது உலகப் போரில் அழிந்து போனவைகளுக்கு கணக்கே இல்லை.   இருந்தும் வியப்புக்குரிய விஷயம் ஜகர்ஸ்டேட்டரின் கடைசிக் கடிதம் இவைகளில் எதிலும் சிக்காமல் பத்திரமாக அவருடைய மனைவியை அடைந்ததுதான்.
     உயிரைத் திரணமாக மதித்து, தான் நம்பியதை உறுதியாகக் கடைப்பிடித்து, நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன் ராணுவ அதிகாரிகளிடம், ``முடியாது!'' என்று கூறிய அவர் ஒரு அசாதாரண மனிதர்.

செயின்ட் ரீடிட்கண்ட் என்ற சிறிய கிராமத்தின் சர்ச்சின் இடுகாட்டில் அவரது சமாதி உள்ளது.

போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில், போரில் இறந்தவர்களின் பெயருடன் ஜகர்ஸ்டேட்டரின் பெயரையும், மாதாகோவிலின் பாதிரியார் அதில் சேர்த்துப் பொறிக்கச் செய்தார்.


       அன்றாடம் நம் வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத பல `சத்தியப் பிரமாணங்கள்' எடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலாவது நாம் ஜகர்ஸ்டேட்டராக துணிவுடன் இருப்போமே!
(Franz Jägerstätter பற்றிய விவரங்கள் விக்கி பீடியாவில் வந்துள்ளது.)

இது ஒரு மீள் பதிவு. புதிதாக வந்திருக்கும் நேயர்களுக்காக!