August 25, 2019

படமும் ( கோர்ட்) நோட்டீஸும்!

அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன்சங்க நிகழ்ச்சிகளை   நிறைய நடத்தி வந்தோம் 
அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களை காலைக் காட்சிகளாகத் திரையிடுவோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சங்கத்திற்கு நல்ல வருமானமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் கலாகேந்திரா நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருந்தது.
    திரைப்படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா' கோவிந்தராஜன் என் நண்பர். எங்க ஊர்க்காரர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நான் சென்னை ஜி பி -வில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
 எதிர்நீச்சல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அதுஎதிர்நீச்சல் படத்தை ஒரு காட்சி டெல்லியில்  நாங்கள் திரையிட விரும்புகிறோம்  என்று தெரிவித்தேன்.   படத்தை கொடுத்து உதவ வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். அவரும் ஒப்புக் கொண்டார்..
எங்கள்  சொசைட்டி திரைப்படத்தை விளம்பரப்படுத்தி, டிக்கெட்டுகள் அச்சடித்து  மளமளவென்று விற்பனை செய்யத்  தொடங்கி விட்டது.
 “படத்தின் பிரின்ட்டை உங்களுக்குச் சேர்ப்பது என்னுடைய பொறுப்பு என்று கோவிந்தராஜன் சொல்லியிருந்தார். ஆகவே கவலையில்லாமல் இருந்தேன்.

ஆனால் ஒரு ஆசாமி ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர், அந்தப் படத்தின் டில்லி டிஸ்ட்ரிப்யூடர். தன் தொழிலில் மண்ணைப் போடுபவர்களைச் சும்மா விடக் கூடாது என்று தீர்மானித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் யார் யார் என்று கண்டுபிடித்து, வக்கீலை வைத்துஅவரது உரிமைகள் மீறப்படுவதாக கோர்ட்டில் மனு கொடுத்து, சம்மன் 'சர்வ்' செய்ய எற்பாடு செய்து விட்டார்.
சங்க நிர்வாகிகள் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். எப்படியாவது பணம்  செலவு செய்தாவது, சம்மனை இவர்களுக்குக் கொடுத்து விட்டால்அவர்களிடமிருந்து கணிமாகப் பணத்தை பார்க்கலாம் என்பது அவரது கணிப்பு.
இதன் காரணமாகஅவர்  கோர்ட் அமீனாவிற்கு காப்பி செலவு', டாக்ஸி வசதி எல்லாம் கொடுத்து சம்மனை சர்வ்' செய்து விட்டார்.
நல்ல காலம், சங்கத்தில் எனக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் இருக்கவே எனக்குச் சம்மன் வரவில்லை. (பொறுப்பில்லாத ஆசாமியாக இருப்பதிலும் நன்மை இருக்கிறதைக் கவனியுங்கள்!)
ஆனால் சம்மன் பெற்றவர்கள் யாவரும் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்குத் தைரியம் கொடுப்பதற்காக (?)  நானும் டில்லி கோர்ட்டுக்குச் சென்றேன்.
தலைநகரில் உள்ள கோர்ட்! உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சிதான் எற்பட்டது. ஒரு மேஜையில் நீதிபதி. சுற்றிலும் ஒரே சள சள கூட்டம். பீடிப் புகை, வாக்குவாதங்கள். அழுக்குச் சுவர்கள். தள்ளாடும் நாற்காலிகள். மேஜைகள். பெயிண்டையே பார்த்தறியாத கதவுகள். ஜன்னல்கள்!
எதிர்க் கட்சி வக்கீல் எதோ உருதுவில் ஜட்ஜ் (மாஜிஸ்டிரேட்டோ?) அவர்களிடம் சொன்னார். அவர் எங்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்எங்களில் ஒருவர், "யுவர் ஹானர்...'' என்று ஆரம்பித்து ஆங்கிலத்தில் பதில் சொன்னார். மாஜிஸ்டிரேட்டோ, "ஹான்ஜி, போலியே'' என்று இந்தியில் சொன்னார்
"என்னடா இது, ஆங்கிலத்தில் பேசினால் நம் கேஸ் தோற்றுப் போய் விடுமோ' என்ற அச்சத்தில் பட்லர் இந்தி(!)யில் சங்க காரியதரிசி பேச ஆரம்பித்தார். கேஸ் தோற்றுவிட்டால், போலீஸ் வண்டியில் ஏற்றி திஹார் ஜெயிலுக்குப் அழைத்துப் போய் விடுவார்கள் என்று அவரைக் கலாட்டா செய்து கொண்டிருந்தோம்.
விசாரணைத் துவங்கியது.
"உங்கள் சங்கத்தில் "எதிர் நீச்சல்' படமா போடப் போகிறீர்கள்''
"அப்படித்தான் உத்தேசம்.''
"படத்தின் பிரின்ட் உங்களிடம் இருக்கிறதா?''
"இல்லை.''
"பின் எப்படிப் படத்தைத் திரையிடப் போகிறீர்கள்?''
"தனது டிஸ்ட்ரிப்யூடர் மூலமாக பிரின்ட் தர எற்பாடு செய்வதாக புரொட்யூசர்   சொல்லியிருக்கிறார்.''
"டிஸ்ட்ரிப்யூடர் தராவிட்டால் என்ன செய்வீர்கள்?''
"நிகழ்ச்சியைக் கேன்சல் செய்து விடுவோம்.''
"அப்படியா? இதை ஒரு மனுவாக எழுதிக் கொடுங்கள்'' என்றார்.
எங்களில் ஒருவர் எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்துவிட்டு, மாஜிஸ்டிரேட், "கேஸ் டிஸ்மிஸ்ட்  without costs'' என்று சொல்லிவிட்டார்.
பாவம், டிஸ்ட்ரிப்யூட்டர்! எகப்பட்ட ''காப்பி(!) செலவு செய்து வழக்கைப் போட்டிருந்தார்.
கோர்ட்டுக்கு வெளியே வந்தோம்.
(இந்த  சமயத்தில் அந்தக் கோர்ட் அறையில் உள்ள கூட்டத்தில் இருந்த  ஒரு கில்லாடி, எங்கள் செயலரின் பார்க்கர் கோல்ட் பேனாவை பிக்பாக்கெட் அடித்து விட்டான்மாண்புமிகு மாஜிஸ்டிரேட் முன்னிலையில்! சட்டத்தின் சாட்சியாக பிக் பாக்கெட்! இது டில்லியில்தான் சாத்தியம்!)
தீர்ப்பைக் கேட்டு, டிஸ்ட்ரிப்யூட்டர் சுருதி இறங்கி, "ஸார்,  ‘எதிர் நீச்சல்பிரின்ட் கையில் இல்லை. பதிலுக்கு காவியத் தலைவி' தருகிறேன். ஆனால் இலவசமாக இல்லை'' என்றார்அதற்கு சம்மதித்து அந்தப் படத்தைப் போட்டோம். 
மறுவாரமே  ‘எதிர்நீச்சல்' படத்தை ஓசியில் பெற்றுத் திரையிட்டோம். நல்ல லாபம்!
அதன் பிறகு டிஸ்ட்ரிப்யூட்டர் நல்ல நண்பராகி விட்டார். அடிக்கடி படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்.
(அந்த காலத்தில் டில்லித் தமிழ்ச் சங்கத்தில் 35 mm படங்களைத் திரையிட புரொஜக்டரையே வாங்கி வைத்திருந்தார்கள் என்பது கொசுறு தகவல்.)

10 comments:

  1. தில்லி விஷயங்களே கலகலப்பானது தான். நன்றி ஜி.

    ReplyDelete
  2. ரொம்ப கலகலப்பான நிகழ்ச்சிதான். ஒரு நாள்கூட உள்ளே வைக்காமல், அதைப் பற்றி நீங்கள் எழுதமுடியாமல் செய்துவிட்டார்களே என்ற வருத்தம்தான்.

    அதுசரி... அப்போ நீங்கள்லாம் (அந்தக் காலகட்டத்தில்) ஹிந்தி விற்பன்னர்கள் இல்லையா?

    ReplyDelete
  3. செய்தித்தாள்களில் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என்று படிக்கும்போதுதான் பிரமிப்பு இருக்கும்போல. நேரில் பார்த்தால் அந்த மனோநிலை மாறிடுமோ?

    ReplyDelete
  4. ஓசியில் வாங்கி, டிக்கெட் விலை போட்டு நீங்க காசு பார்ப்பீங்களா? இது என்ன அநியாயமா இருக்கு? இதுக்கே ஒரு கேஸ் போட்டிருக்கலாமே.. ஹா ஹா

    ReplyDelete
  5. நல்ல அரிய தகவல்களைக் கொண்ட பதிவு. சும்மாவானும் திரைப்படங்களை வாங்கிக் காலைக்காட்சியாகத் தானே வெளியிடுகிறார்கள் என நினைத்ததற்கு நல்ல விளக்கம். எதிர்நீச்சல் படத்தை நானும் சென்னையில் மிட்லன்ட் தியேட்டரில் பார்த்தேன். ஒரு சில பாலசந்தர் படங்களை அங்கே பார்த்திருக்கிறேன். அப்போ சித்தப்பா வீட்டில் இருந்தேன். உங்கள் இந்தக் கட்டுரை அதை நினைவில் கொண்டு வந்தது.

    ReplyDelete
  6. இந்தப் பதிவை எப்படியோ கவனிக்காமல் விட்டிருக்கிறேன். எதிர்நீச்சல் படமெல்லாம் பாலசந்தரின் மத்தியதர வர்க்க மனித சுபாவங்கள் மாறாமல் இருந்தபோது எடுத்த படங்கள். அவர் பொருளாதார நிலை உயர உயர அவர் எடுக்கும் படங்களின் தரங்களும், கருத்தும் அதற்கேற்ப மாறி விட்டன என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  7. ரொம்ப நாளாகிவிட்டதே... புது இடுகை எதுவும் வரக் காணலையே... என்னாச்சு கடுகு சார்?

    ReplyDelete
  8. ரசித்து படித்தேன். நல்ல ஹாசியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!