சென்ற பதிவு 50 வருட
பழசு. இந்தப் பதிவு அவ்வளவு பழசு இல்லை. கிட்டத்தட்ட 40 வருட பழசுதான் என்று சொல்லலாம். இந்த ரீதியில் இன்னும்
ஐந்தாறு பதிவுக்கு பிறகு ஹைதர் காலத்திலிருந்து மோடி காலத்திற்கு நான் வந்து விடுவேன் என்று நீங்கள் நம்பலாம்;
நாற்பது வருஷங்களு க்கு முன்பு இதே ஆகஸ்ட் மாதம், 1980 ஆம் வருஷம், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் எஸ். வி.வி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு நகைச்சுவை இதழ் வெளியிடப் போவதாகவும், அதைத் தயாரித்துத் தரும்படியும் 'கல்கி’ ஆசிரியர் (டெல்லியில் இருந்த) என்னைக் கேட்டுக்கொண்டார். எத்தனை பெரிய கௌரவம்!.
நான் பலருக்குக் கடிதம் எழுதினேன். அவர்கள் அன்பு கூர்ந்து நகைச்சுவை கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் என்று எழுதி அனுப்பினார்கள். ஒரு நகைச்சுவை இதழைத் தயார் செய்தேன். வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட் 24,, 1980!
அந்த இதழ் தற்செயலாக
சென்ற வாரம் எனக்கு கிடைத்தது. இதழில் முக்கியமாக எழுதியவர்கள்:ரா.கி. ரங்கராஜன், எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன், இயக்குனர் ஸ்ரீதர், சாருகேசி, கோபுலு ஆகியவர்கள் கட்டுரைகளுடன், எஸ்.வி.வி. பற்றி அமரர் கல்கி எழுதிய கட்டுரையும், அத்துடன் எஸ். வி. வி. அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றது
அத்துடன் ஆர்ட் புக்வால்ட் கட்டுரை,. ரஷ்ய நகைச்சுவை கட்டுரையும் சேர்த்தேன்.
இத்தனை ஜாம்பவான்கள் கட்டுரைகளுக்கு நடுவே நம்முடைய கட்டுரை
வந்தால் பெருமையாக இருக்கும். அதே சமயம் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவு அதில் நகைச்சுவை
இருக்க வேண்டும் என்று நான் மிகவும் முயன்று “தேள் கண்டார் தேளே கண்டார்!” என்ற ’கமலா’ கதை ஒன்றை எழுதினேன் அத்துடன் கமல், கடுகு என்ற புனைப்பெயர்களில் இரண்டு கட்டுரைகளையும் எழுதினேன்.
அந்த இதழின் கடைசி பக்கம் ‘ஈவினிங் நேரத்திலே’ என்ற தலைப்பிலே ஒரு நகைச்சுவை கவிதையையும்.( எப்போதோ யாரோ எழுதியதை
நான் எழுதி வைத்திருந்தேன்.) போட்டேன். அந்த கவிதை ’மாலைப் பொழுதினிலே’ என்ற கவிதையை பல ஆங்கில வார்த்தைகளைப் போட்டு, அட்டகாசமாக எழுதி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அதை எழுதியவர் யார் என்று குறித்து வைத்துக் கொள்ளவில்லை.
இதெல்லாம் என்னுடைய ‘டாம் டாம்’.
அந்த நகைச்சுவை
இதழில் நான் எழுதிய ‘தேள் கண்டார், தேளே கண்டார்!’ என்ற கதையை இந்தப் பதிவில் போடுகிறேன்.
சுமார் 40 வருடங்கள் ஆகிவிட்டாலும் நகைச்சுவை பழசாகப் போகவில்லை. இன்றைக்கும் ரசிக்க முடிகிறது. இந்த கருத்தை சொன்னது, ஏதோ குப்பனோ சுப்பனோ அல்ல; இந்த கருத்து என்னுடையதுதான் என்பதைப் பணிவுடனும், சற்று பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்!.
சுமார் 40 வருடங்கள் ஆகிவிட்டாலும் நகைச்சுவை பழசாகப் போகவில்லை. இன்றைக்கும் ரசிக்க முடிகிறது. இந்த கருத்தை சொன்னது, ஏதோ குப்பனோ சுப்பனோ அல்ல; இந்த கருத்து என்னுடையதுதான் என்பதைப் பணிவுடனும், சற்று பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்!.
. இனி என் கதையைப் படியுங்கள்.
தேள் கண்டார்; தேளே கண்டார்!
உங்களுக்கெல்லாம் எப்படியோ
எனக்குத் தெரியாது. ஞாயிற்றுக்கிழமை வருகிறதென்றால் எனக்கு அலர்ஜி ஏற்படும்.
சஞ்சலம், பயம், வியாகூலம், கவலை, படபடப்பு, நடுக்கம் எல்லாம் ஏற்படும். ஏன் இப்படி என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு என் அருமை மனைவி கமலாவைத் தெரியாது
என்று அர்த்தம்.
ஞாயிற்றுக்கிழமை என்றால்
ஆபீஸ் லீவு. ஆனால் எனக்கு வீட்டில் வேலை! வாரத்தில் ஆறு நாட்களும் அவள்
திட்டமிட்டு வைப்பாள், ஞாயிற்றுக்கிழமையன்று
எனக்கு என்னென்ன வேலைகளைக் கொடுக்கலாம் என்று! அவள் திட்டப்படி செய்யாவிட்டால்
திட்ட ஆரம்பிப்பாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.
“மணி எட்டடிக்கப் போகிறது.
இன்னுமா தூக்கம்? வீட்டில் ஏகப்பட்ட வேலை கிடக்கிறது... காபி ரெடி...
எழுந்திருங்க... அடாடா... ஆபீஸில் என்னமோ அப்படி வெட்டி முறித்து விட்டது போல், ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்பதானாலும்
எழுந்திருக்கிறதில்லை. சேண்டலியர் கணக்கா வீட்டில் ஒட்டடை தொங்கறது. ஆறு மாசப்
பேப்பர் சேர்ந்து கிடக்கிறது. ரேஷன் வாங்கியாகலை. தோட்டம் சரியான குப்பைகளின்
கோட்டமாக இருக்கிறது...” என்று என் மனைவி
சலிப்பையும் நிஷ்டூரத்தையும் சம அளவில் கலந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இன்னும் தூங்கிக்
கொண்டிருந்தால் அவளுக்குக் கோபம் அதிகமாகி விடும் என்று எனக்குத் தெரியுமாதலால்
சட்டென்று எழுந்தேன்.
முகம் கழுவிக் கொண்டு, ஒரு
கையில் பேப்பரை எடுத்துக் கொண்டு காப்பி சாப்பிடச் சென்றேன்.
“இதோ பாருங்கோ... இன்னிக்கு
ஒரு நாள் மட்டும் மூன்று மணி நேரம் பேப்பர் படிக்காமல் இருங்கோ. ஒரு சாம்ராஜ்யமும்
மூழ்கிப் போய் விடாது! வீட்டில் ஏகப்பட்ட வேலை இருக்கு” என்று என் அருமை மனைவி சொன்னதும், என் மாமியார்
சமையல் அறைக் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அடியே கமலா, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இப்படி நீ பல்லவி பாடறதுதான் லாபம். எந்த வீட்டு
வேலையும் ஆகப் போறதில்லை. என்ன வயசானால் என்ன, கல்யாணமாகிக் குழந்தை குட்டி பெற்றால் என்ன, சில பேருக்குப் பரம்பரை குணம் மாறாதுடியம்மா” என்று ஓர் உலக மகா உண்மையை உதிர்த்தாள்.
இதைத் தொடர்ந்து, எங்கள் மூதாதையர் பலரது குணாதிசயங்களை அவள்
விவரிக்க ஆரம்பிப்பாள் என்று எனக்குத் தெரியும். ஆகவே பேப்பரை எடுத்துக் கொண்டு
வாசல் பக்கம் விரைந்தேன்.
சரியாக ஐந்து நிமிடம் கூட
ஆகியிருக்காது. என் மனைவி வாசலுக்கு வந்து, “அஸ்தமனமாகிற வரைக்கும் படிக்கிறதாக உத்தேசமா? நாலு மணி நேரமாகிறது பேப்பரை எடுத்து” என்றாள்.
ஏழிலிருந்து ஏழு ஐந்து
ஆவதற்குள் நாலு மணி நேரம் பிடிக்குமா என்று நான் கேட்கவில்லை. ஏன் என்று
கேட்கிறீர்களா? உங்களுக்கு என் மனைவி
கமலாவைத் தெரியாது. எனக்குத் தெரியும்!
“என்ன கமலா, என்னைத் துளைத்தெடுக்கிறாய்?” என்றேன்.
“முதலில் வீட்டை ஒட்டடை
அடியுங்கள். அப்புறம் நம் சமையலறைப் பரணைச் சுத்தம் பண்ணணும். நசுங்கிப் போன ஈயச்
செம்பு மேலே எங்கேயோ இருக்கிறது. அதைத் தேடி எடுத்தால், அம்மா
மெட்ராஸ் போகச்சே மாத்தி வாங்கிட்டு வருவாளாம்.”
"உன் அம்மா மெட்ராஸ்
போகிறதா? சரியான அசட்டு மாப்பிள்ளை நான் இருக்கிறபோது அவள்
ஏன் போகப் போகிறாள்? ஏழெட்டு வருஷமாகத் தான்
மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டுக் கொண்டு இருக்கிறாளே!” என்று சுடச் சுடச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.
காரணம்... சீச்சீ நீங்கள்
நினைப்பது இல்லை. அந்தச் சமயம் என் மைத்துனன் தொச்சுவின் மனைவி அங்கச்சி
வந்ததுதான். தொச்சுவோ, அவன் மனைவியோ என்
வீட்டுக்கு வரும்போது வெறுங்கையுடன் வர மாட்டார்கள். பையுடன் தான் வருவார்கள்.
அகப்பட்டதை வாங்கிக் கொண்டு போகப் பை இருந்தால்தானே சௌகரியம்!
“அக்கா” என்று என் மனைவியைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்
அங்கச்சி. காம்பவுண்டுக்குள் நுழைந்து கொண்டே (குரலா அது! “கீச்சு கீச்சென்று
ஆனைச் சாத்தம் கலந்து பேசின பேச்சரவம்...” எனும் ஆண்டாள் பாடலை நினைவு படுத்தும் குரல். இரட்டைக் கீச்சு!)
“வா, அங்கச்சி” என்று என் மனைவி வரவேற்க, ஹாலிலிருந்து என் மாமியார்
திலகம், “வாடியம்மா... வா... வா...” என்று "ஒளிபடைத்த கண்ணினாய் வா வா” என பாரதியார் பாடி வரவேற்றதை மிஞ்சும்படி சொன்னாள்.
“என்ன அங்கச்சி, இவ்வளவு காலையிலே?” என்று கமலா கேட்டாள். (நானாக இருந்தால், "என்ன சாமான் கடன் வாங்க வந்திருக்கிறாய்?' என்று கேட்டிருப்பேன்!)
தொச்சுவின் மனைவி மட்டும்
ராவணன் காலத்துக்கு முந்திப் பிறந்திருந்தால், அந்த இலங்கை வேந்தன் கடன் பட்டது போல் கலங்கி நின்றிருக்க மாட்டான். மிஸஸ்
தொச்சுவின் முன்னுதாரணம் அவனுக்குத் தைரியம் அளித்திருக்கும்!
“ஒண்ணுமில்லை அக்கா.
தேன்குழல் செய்யலாம்ன்னு... தேன்குழல் அச்சு வேண்டும்” என்றாள்.
“எங்கேயோ பரண் மேலே
வச்சிருக்கிறது. யார் ஏறி எடுக்கிறது? பரணை ஒழிக்கணும்னு நானும் கமலாவும் கரடியாக கத்திண்டிருக்கிறோம். யார்
காதிலேயும் விழவில்லையே!” என்று என் மாமியார்
சொன்னாள். என் மாமியார் மனத்துக்குள் நினைத்துக் கொள்வதே மூன்று வீட்டுக்குக்
கேட்கும். கரடியாகக் கத்தினால் ரஷ்யாவுக்கே கேட்கும். அவள் கத்தினாளாம்; யார் காதிலேயும் விழவில்லையாம்!
“பரண் மேலே தானே? ஏறி
எடுத்துக் கொடுக்கிறேன். ஏணி எடு கமலா” என்றேன்.
எவ்வளவு சீக்கிரம்
தொச்சுவின் மனைவியை அனுப்புகிறேனோ அவ்வளவு லாபம்.
“ஏணியும் கோணியும் எதுவும்
கிடையாது. வீட்டில் என்ன இருக்கிறது, இல்லை என்று தெரிந்தால்தானே! ஸ்டூல் போட்டு ஏறுங்கோ” என்றாள் என் மனைவி.
“என்ன அங்கச்சி! வந்து அரை
மணி நேரம் ஆச்சு. உங்க அக்காவோட பேச ஆரம்பிச்சுட்டால் அவ்வளவுதான்” என்று சொல்லிக் கொண்டே என் மைத்துனன் தொச்சு
அட்டகாசமாக வந்தான் அப்போது. பக்கத்துத் தெருவில் அவர்கள் வீடு இருந்தது.
“என்ன அத்திம்பேரே...
சண்டேயா? ஜாலியாக ஓய்வு எடுக்கிறீங்க. நம்மால் முடியுமா? வேளச்சேரியில் ஒரு பிளாட்டை ஒருத்தர் வாங்கறாராம்.
"தொச்சு, நீ வந்து செட்டில்
பண்ணு"ன்னு சொல்றார். போயாகணும். என்ன அக்கா... வீட்டு வாசலில் வாக்குவாதம்?” என்று கேட்டான்.
“இந்தாடா தொச்சு... ஒரு
சொட்டுக் காப்பி!” என்று அரை லிட்டர்
காப்பியைத் தொச்சுவிடம் கொண்டு வந்து என் மாமியார் கொடுத்தாள். புத்திர பாசம்
ஸ்வாமி, புத்திர
பாசம்!
“ஒண்ணுமில்லேடா தொச்சு.
தேன்குழல் அச்சு பரண் மேலே இருக்கிறது. எடுத்துத் தரச் சொன்னால் உங்க செல்ல அத்திம்பேர்
ஆயிரம் சிணுங்கல் பண்ணுகிறார்” என்றாள் கமலா.
“அவரை எதுக்குத் தொந்தரவு
பண்றே அக்கா... பாவம் தொப்பையைத் தூக்கிக் கொண்டு ஏற முடியாது! நான் ஏறி
எடுக்கிறேன்” என்றான்.
“பரணையில் ஊர்ப்பட்ட குப்பை
இருக்கு. சாமானெல்லாம் இறக்கி ஒழிச்சு வெக்கணும். உயிர் போயிடுமேடா” என்றாள் அக்காக்காரி!
தம்பியின் உயிர் போகும்
வேலை ஆனால் அது கணவனை ஒன்றும் செய்யாது!
“வா அக்கா உள்ளே. நான்
சுத்தம் பண்றேன் பரணை. அங்கச்சி நீ வீட்டுக்குப் போ. நான் தேன்குழல் அச்சு
எடுத்துக் கொண்டு வரென். அடியே அசமஞ்சம்! வீட்டில் எண்ணெய் ஒரு பொட்டுக் கூட
இல்லையே! எப்படிப் பண்ணப் போறே தேன்குழலும் தேனில்லாத குழலும்... ஒரு முன் யோசனை
மண்ணாங்கட்டியும் கிடையாது. சனியன்” என்று கத்த ஆரம்பித்தான் தொச்சு. அந்தக் கத்தலையும் மிஞ்சும்படி மிஸஸ் தொச்சு, சந்திரமதி
மாதிரி அழ ஆரம்பித்தாள்.
“ஏண்டா குழந்தையைக் கண்
கலங்க விடறே... ஒரு கரண்டி எண்ணெயை நம்மாத்திலேருந்து தான் எடுத்துண்டு போகட்டுமே” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் சொம்பு எண்ணெயைக்
கொடுத்தாள் என் மாமியார்.
"டமார்' என்று சமையலறையிலிருந்து ஓசை கேட்க ஓடிப் போய்ப்
பார்த்தேன். பரணில் ஜம்ப் பண்ணி ஏற தொச்சு முயன்ற போது,
சீலிங்கில் இருந்த ட்யூப் லைட்டில் அவன் தலை இடித்து டியூப் லைட் கீழே விழுந்து
ஆயிரம் சுக்கலாய்ப் போயிருந்தது. நாற்பது ரூபாய் டியூப் உடைந்ததைப் பற்றிச்
சற்றும் கவலைப்படாமல் என் மனைவியும் மாமியாரும், “தொச்சு! தலையிலே அடிபட்டுதாடா... பாத்து ஏறப்படாதா? கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்றனர். என் மாமியார், “அடியே கமலா, சட்டென்று நாலு ஸ்பூன் ஹார்லிக்ஸைப் போட்டுக்
கரைச்சு அவனுக்குக் கொடு” என்றாள்.
ஹார்லிக்ஸைக்
குடித்துவிட்டு மறுபடியும் முயற்சி பண்ணிப் பரணில் ஏறி விட்டான் தொச்சு , அவன்
அங்கிருந்து கொண்டு எல்லோரையும் அதிகாரம்
பண்ணும் குரலோசையிலிருந்து தெரிந்தது.
பாத்திரங்கள் கடபுடா என்று உருண்டன. ஏதோ ஒரு பாத்திரத்தை அவன் எடுக்க, அதன் கீழிருந்து ஒரு பல்லி ஓட, சடாரென்று அவன் பின்வாங்கித் துள்ளிக் குதிக்க, அங்கிருந்த பாத்திரங்கள் நிலை குலைந்து உருண்டு கீழே விழ, ஒரு உருளி என் மாமியாரின் சுண்டு விரலைப் பதம் பார்க்க, பதம் பாட ஆள் இல்லாவிட்டாலும் அவளே ’ஐயோ, அம்மா' என்று பாடிக் கொண்டே, பத்மா சுப்ரமணியத்துக்கே தெரியாத பலவித முத்திரைகளுடன் ’நாட்டியம்' ஆடினாள்.
“எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டு, கல்லுளிமங்கன் மாதிரி உட்கார்ந்து கொண்டு பேப்பரைப்
படிக்கிறதைப் பார்” என்று என்னை நிந்தித்தாள்
கமலா.
“அக்கா, இந்த ஜோடு தவலையைப் பிடி.”
“அதை ஏண்டா இறக்கறே?”
“இல்லை அக்கா... வீட்டில்
தண்ணீர் பிடிச்சு வைக்கப் பெரிய பாத்திரம் இல்லை. சும்மா தானே இங்கே கிடக்கிறது.
நான் எடுத்துண்டு போறேன்” என்றான்.
"கமலாவின் இரட்டை வடம்
செயின் கூட காத்ரெஜ் பீரோவில் சும்மாதான் இருக்கிறது. எடுத்துக் கொண்டு போயேன்' என்று இளக்காரமாகக் கேட்டேன், மனத்துக்குள்.
“அக்கா... செத்தேன், போச்சு. உயிர் போச்சு... தேள்... தேளு... தேள் கொட்டிடுத்து
அக்கா... ஐயோ, அம்மா” என்று கத்திக் கொண்டே வேகமாகப் பரணிலிருந்து இறங்க
முயன்ற தொச்சு, அங்கிருந்த பழைய அப்பளக்
குழவியின் மேல் காலை வைக்க, தொபாரென்று பரணிலிருந்து
கீழே விழுந்தான்.
அதைத் தொடர்ந்து, “ஐயோ உயிர் போச்சே... பிராணன் போகிறதே... காலைத் தூக்க
முடியலையே...” என்று அலறினான்!
“உங்களைத்தானே...
தொச்சுவுக்குத் தேள் கொட்டி விட்டது. போய் டாக்டரை டாக்சியில் அழைச்சுண்டு வாங்க” என்று என் மனைவி கத்த, “என்ன தொச்சு... தேள் கொட்டி விட்டதா? பாத்து எடுக்கப்படாதா பாத்திரங்களை... இரு இதோ போய்
டாக்டரை அழைத்துக் கொண்டு வரேன்” என்று சொல்லி ஒரே ஓட்டமாக
வீட்டை விட்டுப் புறப்பட்டேன். கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் செல்லும் வரை
தொச்சுவின் ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது!
**
** ** **
**
பரணிலிருந்து விழுந்ததால்
தொச்சுவுக்குக் கால் முறிவு ஏற்பட்டது. தேள் கடியுடன் இதுவும் சேர்ந்தது.
டாக்ஸியில் அழைத்துக் கொண்டு போய், பிளாஸ்டர் கட்டுப் போட்டுக் கொண்டு
வீட்டுக்கு - என் வீட்டுக்குத்தான் - அழைத்து வந்தோம். “மூன்று வாரம் ஆகும் கட்டுப்
பிரிக்க. அதுவரை நம் வீட்டிலேயே இரேண்டா, தொச்சு” என்று என் மாமியார் பரிவுடன் கூறி விட்டாள்.
அடுத்த மூன்று வாரமும், கொசுறுக்கு மேலும் சில நாட்களும் தொச்சுவும் அவனது ’பகு' குடும்பமும் என் வீட்டிலேயே மகத்தான பிக்னிக்கை
நடத்தின.
தொச்சுவின் மனைவிக்குப் பல
வருஷ மசக்கை ஆசைகள் தீர்ந்தன. தேன்குழல், ரவை லட்டு, பால் பாயசம், சர்க்கரைப் போளி, கோதுமை அல்வா, நெய் தோசை என்று சக்கையாக
அவளும் மற்றவர்களும் சாப்பிட்டார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு சுற்றுப் பருக்க, என் பர்ஸ் நாலு சுற்று இளைத்து விட்டது!
என் மனைவியும் மாமியாரும் அவர்களை வாராது வந்த மாமணி போல் எண்ணி அவர்களுக்கு
உபசாரம் செய்தார்கள். நானும் ஒப்புக்கு, “தொச்சு, உடம்பைப் பார்த்துக்கோ” என்பேன்.
ஒரு நாள் தொச்சு, “அத்திம்பேரே! என் கால் எல்லாம் சரியாப் போயிடும்.
கவலைப்படாதீங்க. கட்டுப் பிரிச்சதும் முதல் காரியமாகப் பரணை ஒழிச்சுச் சுத்தம்
பண்ணிடறேன்” என்றான்.
மறுபடியும் தொச்சு பரண்
மேலே ஏறப் போகிறானா? எனக்குத் தலையைச்
சுற்றியது.
Hilarious!
ReplyDeleteஹாஹா..... கலக்கல் நகைச்சுவை. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteசரி, தொச்சு என்ற வேதாளம் பரண் மேல் மீண்டும் ஏறியதா இல்லையா என்று எப்போது தெரிந்து கொள்வது?
ReplyDeleteதொச்சு is back!!
ReplyDeleteஹாஹாஹா,இதை ஏற்கெனவே படித்த நினைவு இருக்கு. 80களில் கல்கி, விகடன், குமுதம் எல்லாமும் வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் படிக்கிறாப்போல் எந்த வாராந்தரிகளும் இல்லை. அருமையான கதை! தொச்சுவையும், அங்கச்சியையும், மறக்க முடியுமா? மீண்டும் தொடர்ந்து இப்படியான "தொச்சு" "கமலா" சம்பந்தப்பட்ட கதைகளைக் கொடுங்கள்.
ReplyDeleteஎப்போ படித்தாலும் ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. படங்கள் கதைக்கு அதிகப்படியான உயிர் கொடுத்திருக்கின்றன.
ReplyDeleteமதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்துப் படித்தேன்.
காரணம் - இந்த இதழ்கள் வந்த போது இவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் கதையுடன் இந்த ஓவியங்கள் ஒரு போனஸ்.
அந்த கால கட்ட ஓவியர்கள் எல்லோரும் நினைவுக்கு வருகிறார்கள்.
ஜெயராஜ், மாருதி, ராமு இப்படி ஆல்ரவுண்டர்களுடன் - விகடனில் மாயா, கல்கியில் கல்பனா மற்றும் வினு, குமுதத்தில் வர்ணம், இப்படி எக்ஸ்க்ளூசிவ் ஆக அந்த அந்த பத்திரிக்கையின் ஆஸ்தான ஓவியர்கள் அல்லவா இவர்கள்.
மேலே உள்ள ஓவியங்களில் அட்டைப்பட ஓவியம் - அனு,
இரண்டாவது - கோபுலு
மூன்றாவது(சிவனும் வினாயகரும்)- செல்லம்
தேள் கண்டார் கதை ஓவியங்கள் - நடனம்
சரிதானா
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணியம்.
அன்புடையீர்,
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி.
’தேள் கண்டார்’ கதைக்குப் படம் போட்டவர்: உமாபதி. மற்றதெல்லாம் சரி.
-கடுகு
Thank you for yourGreatidea.
ReplyDeleteமிக்க நன்றி- கடுகு
ReplyDelete