February 11, 2019

பறக்கும் தட்டு


ஒவ்வொரு கால-கட்டத்திலும் ஏதாவது ஒரு  புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்டாக்கும் புரளி சில வருஷங்களுக்கு முன்பு பரவியது.  ஆனால் கிளப்பப்பட்டது  மட்டும்தான் மிச்சம். இந்த உலகத்திற்கு எதுவும் நேரவில்லை. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு  சிறிய  நல்ல பலன் கிட்டியது என்று சொல்லலாம். மகா பெரியவா சொன்னதன் பேரில், எட்டு கிரகங்களால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க தனியாகவோ சேர்ந்ததோ கோளறு பதிகம்
பஜனை பலர் செய்தார்கள். அதனால் தமிழ் மொழியின் அழகை ரசிக்க முடிந்தது; பாடல்களை தெரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடிந்தது. எட்டு கிரகங்கள் சேர்ந்து தமிழுக்கு செய்த சேவை என்று இதைக் கருதலாம்.

 இந்த காலகட்டத்தில் மற்றொரு ஆதாரம் இல்லாத செய்தி பல நாடுகளில் பரவியது. அது பறக்கும் தட்டு. அயல் கிரகங்களிலிருந்து, அந்த ‘பயங்கர’ கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் (Unidentified Flying Object)  வந்து இறங்க போகிறார்கள் என்று யாரோ திரித்துவிட்டார்கள்.  கூகுள் இல்லாத காலத்தில் கூட மிக வேகமாக  உலகெங்கும் பரவி விட்டது.

 இந்த ஊரில் பறக்கும் தட்டு வந்தது;  அந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது,  என்று பல கற்பனை மன்னர்கள் வதந்திகளைப் பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த பறக்கும் தட்டு சரடு அவ்வப்போது அடங்கிப்போகும் அவ்வப்போது வெளியே வரும்.

பறக்கும் தட்டு
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இரவு 8.15 மணியிலிருந்து 9 மணி வரை, அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில்  மாரிஸ் டவுன் என்ற ஊரில் - கிட்டத்தட்ட நம் மயிலாப்பூர் மாதிரியான ஊர் - ஓரிரவு பறக்கும் தட்டைப் பலர் பார்த்தனர். அந்தத் தட்டில் பெரிதாகத் தீவட்டி ஏதோ எரிந்து கொண்டிருந்தது. தாழ்வான உயரத்தில் அது பறந்து போவதைப் பார்த்து பயந்து, பலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உட்பட பலர் பார்த்தார்கள். எல்லோருக்கும் இனம் தெரியாத ஒரு பயமும், கிலியும் ஏற்பட்டது. தீயைக் கக்கிக் கொண்டு தட்டு பறந்தது.  சிறிது நேரத்திற்கு பிறகு அது எங்கேயோ போய் மாயமாகி விட்டது.


 தீவட்டி வெளிச்சத்தில்   பறக்கும்  தட்டு, பறந்து செல்வதை ஊரே பார்த்தது. அதன்பிறகு ஜனவரி 26, 29, பிப்ரவரி 7ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் அதே ஊரில் அது பறந்தது. அது பறக்கும் தட்டு என்பதில் யாருக்கும் சந்தேகமே ஏற்படவில்லை.   விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படப் போகிறது என்று விமான நிலையத்தினர் பயந்தனர்.  ராடார் மூலமாக அந்த தட்டு பறந்து செல்வதைக் கண்காணிக்கவும் முடியவில்லை.

பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தட்டு வரவில்லை என்றாலும் அது வந்தால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சமும் பீதியும் பற்றிக் கொண்டது.

உண்மையோ பொய்யோ பரபரப்பான தகவல்களைப் பரப்புவதே பலருக்கு ஒரு உற்சாகமான வேலை.  இந்த மாதிரி,  மந்திரத்தில் மாங்காய் விழும் என்பது போன்ற சம்பவங்களின் தோலை உரித்துக் காட்டும் பத்திரிகையான ’இ-ஸ்கெப்டிக்’  (e-skeptic) - பத்திரிகையில்  ஏப்ரல் ஒன்றாம் தேதி -   கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, -   “பறக்கும் தட்டு தில்லுமுல்லு எப்படி செய்தோம்” என்ற தலைப்பில்  ரூஸோ மற்றும் ரூடி என்ற இருவர்  அதில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.

பெரிய பலூனில் “ ஹீலியம்” என்ற வாயுவை நிரப்பி, அதில் திகு திகு என்று ஜுவாலை விட்டு எரியும் தீவட்டிகளைக் கட்டிப் பறக்கவிட்டதாக எழுதியதுடன், தாங்கள் பலூனைப் பறக்க விட்ட போது எடுக்கப்பட்ட விடியோவும் உள்ளதாக தெரிவித்தனர். (இது வெளிநாட்டினரின் சதி என்று போலீஸ்  (பொய்யாக) கேஸ் போட்டு தொல்லைப் படுத்துவார்கள் என்பதற்காக,  அவர்கள் முன் ஜாக்கிரதையாக எல்லாவற்றையும் விடியோ எடுத்து வைத்திருந்தார்களாம்.)

ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் எல்லாவற்றையும் வைத்து ஜோடித்ததை   விளக்கினார்கள். பலூனை பறக்க விட்டுவிட்டு, காட்டிலிருந்து அவர்கள் வெளியே வந்து விட்டார்கள் அப்போது ஜம்மென்று தட்டு பறப்பதைப் பார்த்தார்கள்.  அந்த பலூனில் அடைக்கப்பட்ட தீவட்டி சுமார் 15 நிமிஷம் எரியும்படியாக அமைத்திருந்தார்கள். எல்லாம் வெற்றிகரமாக நடந்ததைப்  பார்த்து   சந்தோஷப்பட்டார்கள்.

இப்படி பீதியை கிளப்பியதற்காகஇவர்கள் மேல் வழக்கு தொடர்ந்து 250 டாலர் அபராதமும், 50 மணி நேரம் சமூக சேவை செய்யவேண்டும் என்ற தண்டனையையும்  கோர்ட் அளித்தது

அதன் பிறகு, ஜூலை மாதம் பதினெட்டாம் தேதி நியூயார்க் நகரத்தில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதில் இவர்கள் இருவரும் பேசினார்கள். எல்லாவற்றையும் விவரமாகக் கூறினார்கள்.  விடியோவையும் காட்டினார்கள்.

 ”பறக்கும் தட்டு பற்றிய ஆராய்ச்சியாளர்கள் நாங்கள்” என்று மார்தட்டிக் கொள்பவர்களை மட்டம் தட்டவே இந்த ஏமாற்று வேலையைத் திட்டமிட்டு செய்ததாக ஒப்புக் கொண்டார்கள்.

இந்த கில்லாடிகள் தாங்கள் செய்த தில்லுமுல்லு வேலையை ஒப்புக் கொள்வதற்கு முன்பு, பல நிபுணர்கள் (!) பலவித விளக்கங்களையும், இல்லாத பொல்லாத கற்பனைச் சம்பவங்களையும் அவிழ்த்துவிட்டார்கள்: வெளிநாட்டினர் ரகசிய கண்காணிப்பு அமைப்பு என்றும், தட்டு  வட்டமாக இருந்தது, ஆங்கில எழுத்து ’எல்’ மாதிரி இருந்தது, ராணுவ ஹெலிகாப்டர்தான் என்றும் பல ரீல்கள்!

சமீப ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய, மிகவும் வித்தியாசமான  தில்லுமுல்லு என்ற‘பெருமை’யை  இந்த ’பறக்கும் தட்டு’ பெற்றுவிட்டது!

8 comments:

  1. விமான நிலையத்தினை பயந்தனர்.
    மணி நேரம் சமூக செய்யவேண்டும் என்ற தண்டனையையும் கோர்ட் அளித்தது//

    சுவையான செய்திக்குறிப்பு. சுட்டி இருக்கும் வாக்கியங்களில் வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன. அதைச் சரி செய்யவும்.

    ReplyDelete
  2. பறக்கும் தட்டு என்பது மனைவியைக் கோப்ப்படுத்துபவர்கள், ரொம்பவும் இரிடேட் செய்பவர்கள், அவர்கள் வீட்டில் பார்த்திருக்கலாம். மற்றபடி பறக்கம் தட்டுகள் இருக்கா என்ன?

    ReplyDelete
  3. நல்ல தில்லுமுல்லுதான். இது மற்றவர்களின் நம்பிக்கையைக் குலைப்பது, பயமுறுத்துவது அல்லவா?

    ReplyDelete
  4. ஸ்வாரஸ்யம்.... எப்படி எல்லாம் செய்தி பரவுகிறது....

    ReplyDelete
  5. "பறக்கும் தட்டு" - தலைப்பை பார்த்தவுடன் இது கமலா மற்றும் தொச்சு சம்மந்தப்பட்ட குடும்ப கதை என நினைத்தேன். சற்று ஏமாற்றம் தான்.

    ReplyDelete
  6. இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். அவர் சொன்னது: உங்களுக்கு இடுக்கண் வருங்கால் நகுக என்பது. அனால் எனக்கு இடுக்கண் வருங்கால் நகுவதற்கு நீங்கள் ஆவலாக இருப்பதுபோல் தோன்றுகிறது.:) விரைவில் உங்கள் ஆசையைத் தீர்த்து வைக்கப் பார்க்கிறேன் - கட்கு

    ReplyDelete
    Replies
    1. ஆம், தாங்கள் மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள். பிறர் படும் துன்பத்தை பார்த்தால் நமது துன்பம் பறந்து போய்விடும் அதனால் தான் இந்த ஆசை.

      Delete
  7. ஆம், தாங்கள் மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள். பிறர் படும் துன்பத்தை பார்த்தால் நமது துன்பம் பறந்து போய்விடும் அதனால் தான் இந்த ஆசை.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!