January 18, 2019

லால்பகதூர் சாஸ்திரி


 நேருவிற்கு பிறகு யார் என்ற பெரிய கேள்வி அறுபதுகளில் எழுந்தது.   'AFTER NEHRU, WHO? 'என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கூட வெளியாயிற்று.
நேரு 1964-ம் ஆண்டு  காலமானதும், எந்தவித குழப்பமும் இல்லாமல் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். எளிமையே உருவானவர்.



அவரை எப்படியாவது சந்தித்து, ஒரு சின்னக் கட்டுரையாவது எழுத வேண்டும் என்று என் மனம் துடித்தது.  டெல்லி போய் இரண்டு வருடங்களே ஆகி இருந்ததால், அவரை சந்திக்க அனுமதி வாங்குவது எப்படி என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

அவரைப் பற்றியச் செய்திகளை எல்லாம் விழுந்து விழுந்து படித்தேன். அப்போது எனக்கு ஒரு சின்னத் தகவல் கிடைத்தது. சாஸ்திரியின் மூத்த மகன்  ஹரி கிருஷ்ணா டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரம் தயக்கத்திற்கு பிறகு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு. அந்தக் கம்பெனி டெலிபோன் எண்ணைக் கண்டுபிடித்து, அவருக்குப் போன் செய்தேன்.  அவரிடம் என்னைப் பற்றியும், குமுதம் பத்திரிகையைப் பற்றியும் கூறிவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கோரிக்கையைச் சொன்னேன்.

பேட்டி எல்லாம் ஏற்பாடு செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் புதன்கிழமை காலைஎட்டு  மணிக்கு வாருங்கள். பொது மக்களை சந்திக்கும் நேரம் அது. அப்போது சந்திக்கலாம். முடிந்தால் அவருடன் பேச ஏற்பாடு செய்கிறேன்” என்றார்
புதன்கிழமை காலை  பிரதமரின் ஜன்பத் பங்களாவிற்குச் சென்று, வாசலில் இருந்த பாதுகாவலரிடம், ஹரிகிருஷ்ணா பெயரைச் சொன்னேன். உள்ளே செல்ல அனுமதித்தார்.
  புல்  தரையில்   பலர் நின்று கொண்டிருந்தார்கள். சில நேரம் கழித்து  ஹரி கிருஷ்ணா வந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பாபா இப்போது வருவார். சந்தர்ப்பம் கிடைத்தால் ஏதாவது கேள்விகள் கேளுங்கள்.  உங்களுக்கு வீட்டை எல்லாம் நான் காட்டுகிறேன். கொஞ்ச நேரம் காத்திருங்கள். ஒன்பதரை வாக்கில் கூட்டம் குறைந்து விடும். ஆபீஸ் நேரம் என்பதால் பலர் போய்விடுவார்கள்” என்றார்.

சாஸ்திரி பொதுமக்களைச் சந்திக்க வந்தார். கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. நான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.   ஹரி கிருஷ்ணா அவரிடம் என்னைச் சுட்டிக் காட்டினார். நமஸ்தே போட்டேன். நான் படமெடுத்ததை அவர் பார்த்தார்.

யாரோ வந்து ஏதோ சொல்ல, அவர் வீட்டிற்குள் போய்விட்டார்.
ஹரிகிருஷ்ணா என்னிடம் வந்து  “வீட்டைப் பார்க்க வாருங்கள்” என்றார். அவருடன் போனேன். பிரதம மந்திரியின்  அலுவலக அறையைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த அறையில் பிரதமர் யாரோ ஒருவருடன் டெலிபோனில் பேசிக் கொண்டிருந்ததால், பெட்ரூமுக்கு போகலாம் என்றார் ஹரி கிருஷ்ணா.

அப்படியே அவைபின் போன எனக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு பெட்டி, ஒன்று, இரண்டு தலையணைகள்!  அவ்வளவுதான். எளிமை என்றால் இதுதான் எளிமை.

டில்லியில் கயிற்றுக் கட்டடில்கள் மூங்கிலால் செய்யப் பட்டிருக்கும்;  கற்றாழை நாரால் பின்னப்பட்டிருக்கும். கட்டிலில் உட்கார்ந்தால் அது வளைந்து  கிட்டத்தட்ட தூளி மாதிரி ஆகிவிடும். கனமான மூங்கில்களால் செய்யப்பட்ட கட்டில், நெருக்கமான கயிறுகளால் பின்னப்பட்டு இருக்கும்; அது விலை சற்று அதிகம்.

இந்தியாவின் பிரதமர்  வீட்டுக் கட்டில், என் வீட்டுக் கட்டில் மாதிரிதான் இருந்தது.  படுக்கை அறையில் அலங்காரமோ, மேஜை விளக்கோ தரைவிரிப்பு, ஜன்னல் திரைகளோ எதுவும் இல்லை.  பிரதமராக ஆவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ, அதையே தான் தொடர்ந்திருக்கிறார்.

ஹரி கிருஷ்ணவிற்கு நன்றி சொல்லி விட்டு, மன நறைவோடு நான் நேரே ஆபீசுக்குச் சென்று விட்டேன்.
மொத்தத்தில், சாஸ்திரி எளிமையின் சின்னம். படோடோபம் எதுவும் இல்லாதவர். எளிதில் அப்படிப்பட்ட மனிதர்கள் தோன்றுவதில்லை. தோன்றினாலும் இந்த மாதிரி ஒரு உயர்ந்த பதவிகளை அடைவதில்லை.

பின் குறிப்பு:
      “என்னடா காலை ஏழு மணிக்கு போன  ஆசாமி இன்னும் வரவில்லையே!” என்று என் மனைவி கமலாவிற்குக் கவலை ஏற்பட்டது. அந்த கால கட்டத்தில் நாங்கள் ஒரு எம்.பி.யின் வீட்டில் இருந்ததால், டெலிபோன் வசதி இருந்தது. போனை எடுத்து பிரதமரின் வீட்டுக்குப் போன் செய்து விட்டாள். போனில் விசாரித்தாள். அங்கு யாருக்கும் என்னைப் பற்றி தெரிந்திருக்க வில்லை.
      கடைசியில்  ஹரி கிருஷணாவுடன்  தொடர்பு கொண்டாள். ஹரி கிருஷ்ணா “ஆமாம்… அவர் வந்திருந்தார். இப்போதுதான் கிளம்பிப் போனார்” என்று சொன்னார். அதன் பிறகுதான்  என் மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டது!

(ஓவியம்: ஸ்ரீகாந்த்)  

7 comments:

  1. இப்படி ஒரு நிகழ்வு பற்றிக் குமுதத்தில் நீங்க எழுதினதா நினைவில் இல்லை. ஆனாலும் சாஸ்திரி எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பது குறித்துப் பலர் எழுதிப் படித்திருக்கிறேன். அருமையான மனிதர். அவர் மட்டும் தொடர்ந்திருந்தால்!!!!!!!!!!!! என்ன செய்வது? இந்தியா கொடுத்து வைக்கலை.

    ReplyDelete
  2. படாடோபம் இல்லாத சாஸ்திரி, எங்கோ குக் கிராமத்தில் பிறந்து அகில இந்திய காங்கிரசுக்குத் தலைவரான காமராசர் போன்றவர்கள் நூறாண்டிற்கு ஒரு முறை இந்திய தேசம் வெளிப்படுத்தும் ஆன்மாக்களோ?

    உங்கள் அனுபவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அப்துல்கலாம் போன்றவர்களையும் நினைவில் வரச் செய்தது.

    இவர்கள் எல்லோரும் ஸ்திதப்ப்ரஞ்ஞன் என்று சொல்லத் தகுந்தவர்களோ?

    ReplyDelete
  3. Very nice. Now we do not have such leaders.

    Ranga

    ReplyDelete
  4. Dear Mr Ranga, Please do nat make comments anonymously. They will automatically go to TRASH. Long back I had made an announcement to this effcet effect in my blog. Thanks for your comment.- Kadugu

    ReplyDelete
  5. சாஸ்திரிதானே, தன் மனைவியால் தன் சம்பளத்தில் கொஞ்சம் ரூபாய் சேர்க்கமுடிகிறது என்று கண்டுபிடித்து, தன்னுடைய சம்பளத்தை காங்கிரஸ் கட்சி குறைக்கவேண்டும் என்று சொன்னவர்?

    ReplyDelete
  6. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு, சம்பளம் பற்றி அவர் சொன்னது ஞாபகம் இல்லை. வலையில் தேடிப் பார்க்கிறேன். -கடுகு.

    ReplyDelete
  7. Arumaiyana Pathivu NAndri.

    https://www.tamilinfotek.com/

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!