December 30, 2018

அதிசயம்; ஆனால் உண்மை! முற்பிறப்பை அறிந்த ஒரு சிறுமி!

"சைகாலஜிஸ்ட்' என்று இங்கிலாந்திலிருந்து வரும் பத்திரிகையில் 1965-வாக்கில் ஒரு சுவையான கட்டுரை வெளியாகி இருந்தது. முற்பிறப்பை உணர்ந்த ஒரு சிறுமி, சில வருஷங்களுக்கு முன் டில்லியில் இருந்தாள் என்றும், அவள் முழுக்க முழுக்க முற்பிறப்பை அறிந்தவள் என்பதைப் பல சோதனைகள் மூலம் பிரமுகர்கள் குழு கண்டறிந்தது என்றும் விவரமாக எழுதி இருந்தார்கள்.

      கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பு, அதாவது 1935 சமயம்,  ஏழெட்டு வயதுச் சிறுமியாக இருந்த போது அந்தப் பெண் (சாந்தி தேவி) இப்படி முற்பிறப்பு விவரங்களைக் கூறி, டில்லியையே அதிசயிக்க வைத்தார் என்றும் எழுதியிருந்தது.

சாந்திதேவியை எப்படியாவது கண்டுபிடித்துப் பேட்டி காண வேண்டுமென்று நினைத்தேன். கட்டுரை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன் - சைகாலஜிஸ்ட் பத்திரிகை மூலமாக. அவரிடமிருந்து பதில் வரவில்லை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் ஒருவர் புதுவை ஆசிரமத்தில் இருக்கிறார் என்று இருந்தது. அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் “டில்லியில் உள்ள  ஒரு அட்வகேட்டைக் கேட்டால் தெரியும்” என்று பதில் எழுதினார்.  அட்வகேட்டின் பெயர் குப்தா என்றும் குறிப்பிட்டிருந்தார். 

 குப்தாவைக் கண்டுபிடிப்பது எப்படி? டில்லி டெலிபோன் டைரக்டரியில் ஆறேழு பக்கங்கள் குப்தாக்கள் தான்!

சுமார் இரண்டு மாதம் அலைந்து திரிந்து அவரைக் கண்டு பிடித்தேன். அவர் சீனியர் அட்வகேட்.  தாரியாகஞ்ச் பகுதியில் சற்று பிரபலமானவர். அவரைச் சந்தித்தேன். சாந்தி தேவி பற்றிய எல்லா விவரங்களையும் அவர் என்னிடம் சொன்னார். 

   அந்தப் பெண் குழந்தை, ஒரு நாள் திடீரென்று தான் இன்னாருடைய மனைவி என்றும், தான் இந்த வயதில் ஒரு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டதாகவும் சொன்னாள்.. அதுமட்டுமல்ல, தான் இறப்பதற்கு முன்பு இருந்வீட்டின்அடையாளமும் தனக்குத் தெரியும் என்று சொன்னாள். இந்த விஷயம் மெதுவாகப் பலருக்குப் பரவிவிட்டது. குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்தார்கள் ஆனால் மற்றபடி அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.

December 20, 2018

நீரின் மேல் நடக்கலாம்

நீரின் மேல் நடக்கலாம்.
     ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது, பெட்டிக்குள் போட்டு பூட்டப்பட்டவர் இரண்டே நிமிடத்தில் வெளியே வந்து விடுவது போன்றவை சாமர்த்தியமான வித்தைகள். பார்த்து ரசித்து விட்டுப் போகிறோம்.
இந்தப் பதிவில் பிரம்மாண்டமான ஏமாற்று வேலை செய்த ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன்.

 அறுபதுகளில் நான் டெல்லியில் இருந்தபோது ஒருநாள் ஸ்டேட்ஸ்மேன் தினசரியில் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு யோகியின் பேட்டி அது. ஒல்லியான உடலமைப்பு, மீசை, காற்றில் லேசாகப் பறக்கும் வெள்ளை நிற தாடியுடன் இருந்தார். சற்று வயது முதிர்ந்தவர். அவர். யோகங்களைப் பற்றி ஏதேதோ கூறியிருந்தார். அத்துடன் தன்னால் நெருப்பின் மீது நடக்க முடியும் என்று சொல்லிவிட்டு, "என்னால் நீரில் மேலும் நடக்க முடியும்” என்று சொல்லியிருந்தார். (அது மட்டுமல்ல ஒரு மண் குழியில் 72 மணி நேரம் புதைந்து இருந்துவிட்டு, மூன்று நாள் கழித்து ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே தன்னால் வர முடியும்; எல்லாம் யோக வல்லமை என்றும் சொன்னார் என்று நினைவு.)

அவர் டெல்லியில் எங்கே இருக்கிறார் என்பதை ஸ்டேட்மென் தினசரியில் இருந்த  நிருபர் என் நண்பர் மூலமாக தெரிந்துகொண்டு, அந்த யோகியை சந்திக்கச் சென்றேன்  அவர் பேட்டியைக் குமுதத்தில் எழுதினேன்
சில நாள் கழித்து,  ஜன்பத் ஓட்டலின் தோட்டப்பகுதியில், தீயில் நடந்து   காட்டப் போவதாகச் சொல்லி, எனக்கு அழைப்பிதழ் ஒன்றையும் கொடுத்தார்.  நம் ஊரில் தீமிதி பார்த்து இருந்ததால், அவர் செய்யப் போவது பெரிய சாதனையாக எனக்கு தெரியவில்லை.

December 08, 2018

துணுக்கு சுனாமி!


சாரணர் இயக்கம்
 சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’  ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் Baden Powell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும் பிரபலமானது அது Be Prepared’. இதைப்பற்றி பேடன் பவல் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். "சாரணர்களின் கொள்கையை என்னுடைய பெயரின்  முதல் எழுத்துகளை வைத்து உருவாக்கினேன்" என்று 1908-ல் அவர் எழுதிய SCOUTING FOR BOYS என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்

 இரண்டு பேரும் பட்டினி
 நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு உணவு விடுதியின் பெயர்: EAT HERE. உணவு விடுதியின் பெயரை பெரிய போர்டில் எழுதிவிட்டு, அதன் கீழே அவர்கள் எழுதி இருப்பது இதுதான்: “இல்லையென்றால் நாம் இருவரும்  பட்டினிதான்!”

 ஒப்புதல் வாக்குமூலம்
அமெரிக்க வெளி உறவு அமைச்சராக 1972-74’ம்ஆண்டுகளில் இருந்தவர் ஹென்றி கிஸ்ஸிஞ்ஜர்.  அவர் மிகவும் திறமைசாலியாக இருந்தால்   வெகுவிரைவில் பிரபலமானவராக ஆகிவிட்டார்.
அவர் எழுதிய சுயசரித்திர புத்தகத்தின் தலைப்பு: YEARS OF UPHEAVAL. அதன் முன்னுரையில் அவர் எழுதியுள்ள ஒரு வரி கவனத்திற்கு உரியது: “ இந்தப் புத்தகத்தில் என்னைப் பற்றி ஒளிவு மறைவு எதுவும் இல்லாமல், எதையும் மறைக்காமல் எழுதியுள்ளேன். நான் செய்த முதல் தவறை 850’ம் பக்கத்தில் எழுதி 
இருக்கிறேன்.”
 இந்த புத்தகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன், அவர் என்ன தப்பு செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க!

 சாய்ஸில் விடலாமா?
இங்கிலாந்தின் பிரபல  தத்துவ ஞானியாக விளங்கியவர்   பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ( BERTRAND RUSSELL). 1950ம் வருஷம் நோபல் பரிசு பெற்றவர். 
அவர் சொன்ன ஒரு குறும்பு வாசகம்:  “பத்துக் கட்டளைகளை பரீட்சை கேள்வித்தாள் மாதிரி கருத வேண்டும். பத்தில் ஏதாவது ஆறு கட்டளைகளை முயற்சி செய்தால் போதும்.”
  பரீட்சையில் சாய்ஸில் விடுவது போலவா, ரஸ்ஸல் அவர்களே?

December 04, 2018

அன்புடையீர்!


அன்புடையீர்!
 வணக்கம். 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 5-ஆம் தேதி ’கடுகு தாளிப்பு’ என்ற பெயரில் என் வலைப்பூவை தொடங்கினேன். தொடர்ந்து எத்தனை பதிவுகள் போட முடியும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அல்லது கவலைப்படாமல் துவக்கி விட்டேன். 

    அமரர் கல்கியின் நினைவு தினத்தில் துவக்கிய நான், அவரது ஆசியையும் வழிகாட்டுதலையும் நம்பிதான் ஆரம்பித்தேன். அவர் என் ஊனிலும் ,உயிரிலும் கலந்து, பதிவுகள் எழுத எனக்கு அளித்த ஊக்கத்தினால், கிட்டத்தட்ட 700 பதிவுகளை எழுதி உள்ளேன். அவர் கொடுத்த ஊக்கத்திற்குச் சற்றும் குறையாத அளவு ஊக்கத்தை நீங்கள்  தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மைல்கல்லை நான் தொடுவதற்குத் தோள் கொடுத்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளவே இந்த குறிப்பை எழுதி உள்ளேன். 
உங்களில் பலர் பின்னூட்டத்தில் தெரிவித்து வரும் பாராட்டுகள் மட்டும் அன்றி,   தனிப்பட்ட முறை யிலும்   எனக்கு ஈ-மெயிலில் பலர் எழுதி வரும் பாராட்டுகளும், எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி, கிரியா ஊக்கியாக விளங்கி வருகின்றன.  (இந்தக் கடிதங்களைப் பதிவில் போட என் மனம் ஒப்பவில்லை.)
 இதை எல்லாம்  என்னுடைய  சாதனையாகக் கூறிவிட்டு, வணக்கம் போட்டுவிடலாமா என்று மனதில் சில சமயம் தோன்றுவது உண்டு. அந்த சமயங்களில் எல்லாம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு "தம்பி! நீ எழுது" என்று பணித்த குரல், மீண்டும் சன்னமாக என் காதுகளில் கேட்கும். அந்த குரலுக்கு வந்தனை கூறி, மனதில் இருத்தி, வாயுற வாழ்த்தி, வணங்குகிறேன்; பதிவுகளைத் தொடர்கிறேன்!

- பணிவுடன் 
கடுகு
-----------------------------------------------------------------------------

\*** அடுத்த பதிவை இரண்டு மூன்று  நாளில் போடுகிறேன்.