October 09, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2

 ஒரு வாரம்  கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா, அந்த பூச்சி மருந்து புட்டிகளின் லேபில்களில் பூச்சிகளின் படத்தை மூன்று வர்ணங்களில்  மாதிரி இருந்தன) “ரவிவர்மா” தீட்டிய படங்கள் பொட்டலங்கள்  இருந்தன.  
படமங்கள் மட்டும் பெரிதாக இருந்திருந்தால், எனக்கு செலவு நூறு, இருநூறு  ஆகி இருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? கமலா அந்த பூச்சி படங்களையும் ஃபிரேம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருப்பாள். பிழைத்தேன்.
     பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்த போதும், கஜலஷ்மி பதக்க செயினை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்த போதும், ‘மாட்டல்’ என்ற நகை திடீர் ஃபாஷனாக வந்த போது, என் அக்காவிற்கு வாங்கிக் கொடுக்காமல், கமலாவிற்கு வாங்கிக் கொடுத்த போதும் வராத, சந்தோஷம்,  ஏதோ கலியாண சீர் வந்தது போல் மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்து!
      பெட்டியில் ஒரு நோட்டீஸ் இருந்தது. அதுவும் மூன்று கலரில் அச்சடித்து இருந்ததா என்று கேட்காதீர்கள்:.அது அந்த விதைக் கம்பெனியை    அவமானப்படுத்துகிற மாதிரியான கேள்வி. 

அந்த நோட்டீஸில் “அன்புடையீர், உங்கள் கிச்சன் கார்டன் ஆர்வத்தை நாங்கள் பாராட்டும் வகையில் நான்கு ‘பண்டில்’ வைக்கோலை எங்கள் அன்பளிப்பாகத் தருகிறோம். விதைக்கும் போது, வைக்கோல் தேவைப்படும். (பயிர் வளர்ப்புக் குறிப்பைப் பார்க்கவும்.) வைக்கோல் சுலமாகக் கிடைப்பதில்லை. உங்களுக்கு வைக்கோல் ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதற்காக நாங்களே சப்ளை செய்கிறோம். பணம் ஏதும் தர வேண்டாம். நீங்கள் எங்கள் பண்ணைக்கு வந்து வைக்கோல் பண்டில்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதைப் பார்சலில் அனுப்பினால் வைக்கோலின் விலையை விட பார்சல் கட்டணம் அதிகமாகிவிடும்” என்று எழுதியிருந்தார்கள்.
       உடனே கமலா, “ஒரு நிமிஷம் இருங்கோ. இதோ புடவையை மாத்திக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே பெட்ரூமிற்குள் போனாள்.
     என்ன கமலா! புடவையை எதுக்கு மாத்திக்கப் போறே?” என்று கேட்டேன்.
     அந்த நோட்டீஸை எடுத்து, எழுத்துக் கூட்டிப் படியுங்கோ. அப்பவாவது உங்க மர மண்டையில் ஏதாவது உறைக்கிறதா என்று பார்க்கலாம்.  'பண்ணைக்கு வந்தால் வைக்கோல் பண்டில் இலவசமாகத் தருகிறோம்’ என்று அதில் போட்டிருக்கா இல்லையா?... இன்னிக்கே போய் எடுத்துண்டு வந்துடலாம், நம்ப காரில்” என்றாள்.
     “கமலா.. அது நோட்டீஸ் தானே.. ஏதோ கோர்ட் சம்மன் மாதிரி நினைச்சுண்டு, காலில் வெந்நீர் கொட்டிண்ட மாதிரி பதைபதைச்சுண்டு அவசரப்படறயே...  ஸ்டாக் தீர்ந்துடுச்சு என்று சொல்லிவிடுவார்களா என்ன?” என்று கேட்டேன்.
     இதற்கு கமலாவின்  ‘நியுட்டன் விதி’ ரியாக்‌ஷன் பற்றியும் அவள் விட்ட ராம பாணங்களைப் பற்றிய விவரங்களும் இப்போது தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வைக்கோல் பண்டில் வாங்க, பண்ணைக்குப் போகக் கார் புறப்பட்டது. இரண்டு மணி கழிந்து நாலு பண்டில் வைக்கோலுடன் வீடு திரும்பினோம்.
     நாளைக்குக் காலையில் ‘கிச்சன்’ கார்டன்’ வேலையை ஆரம்பிச்சுடப் போறேன்” என்றாள்.
      “தப்பு, தப்பு,  ‘ஆரம்பிச்சுடப் போறோம்’ என்று சொல்லு” என்று சொன்னேன்.
       “என்ன, என்ன? என்ன சொன்னீங்க? ஆரம்பிச்சுடப் போறோம்னு என்றா சொன்னீங்க. நிஜம்மாவா? சுனாமிதான் வரப் போறது” என்றாள்.
          “சுனாமியும் வராது…பினாமியும் வராது. நம்ப தோட்டம் பாரேன், ஹார்ட்டி கல்சரல் கிளப் நடத்தும் தோட்டப் போட்டியில் நிச்சயம் பரிசு வாங்கும். பரிசு வாங்கறதுக்கு நீ போகிற போது ,என்ன கலர் பட்டுப் புடவை கட்டிக்கணும்னு இப்பவே பிடிச்சு யோசிக்க ஆரம்பி” என்றேன்.

     மறுநாள் முதல், தோட்ட வேலை ஜரூராக நடந்தது. பள்ளம் தோண்டுவதும், கொத்துவதும் என் வேலை. கிராமத்தில் இந்த வேலைகளைச் சிறு வயதில் செய்திருந்ததால், மளமளவென்று செய்தேன். கமலா அவ்வப்போது இங்கே கத்தரி செடி, இங்கே பச்சை மிளகாய், இங்கே தக்காளி என்று பிளான் போட்டாள்.

     ‘கிச்சன் கார்டன் - எளிய வழிமுறைகள்’ என்ற புத்தகத்தை பண்ணையில் பார்த்தோம். அதை 300 ரூபாய் கொடுத்து வாங்கினேன் என்று சொல்வதைவிட, அந்தப் புத்தகத்தை பண்ணைக்கார முதலாளி  எங்கள் தலையில் கட்டி விட்டார் என்று சொல்வதுதான் சரி!
     அந்தப் புத்தகத்தை கமலா விழுந்து விழுந்து படித்தாள். தான் படித்தது மட்டுமல்ல, என்னையும் படிக்கச் சொன்னாள்.
      “கமலா… இந்த புஸ்தகம் ரொம்ப ரொம்ப நன்னா விவரமாகப் புரியும்படி எழுதியிருக்கிறான். ஆனால் ஒன்று, என்னதான் நாம் புஸ்தகத்தில் இருக்கிறபடி பயிர் செய்தாலும், முளைச்சு செடியாக வளர்வது அந்த பண்ணைக்காரர் அனுப்பிய விதையின் கையில்தான் இருக்கிறது. அது நன்றாக செடியாக வளர்ந்து, பூ எடுத்து, தளதளவென்று காய்களை காய்க்கணும். விதையில் வீரியம் இருக்கணும்” என்றேன்.
      “ஒன்றும் கவலைப்படாதீங்க அந்த பண்ணயிலே இருக்கிற தோட்டத்தில் செடிகள், பீமசேனன் கணக்காக கொழுக்கு முழுக்குனு இருந்ததைப் பார்க்கலை? . தக்காளிச்காய் ஒண்ணொண்ணும் தேங்காய் அளவு இருந்து ….” என்றாள்.

      தோட்ட வேலை ஜரூராக நடந்தது. பாத்தி கட்டி, தண்ணீர்ப் பாய்ச்சி, உரத்தைப் போட்டு, விதையை அழகாக கோலம் போடுவது போல் விதைத்து, கண்ணும் கருத்துமாக தோட்டத்தைக் கவனித்து வந்தோம்.
      விதைகள் முளைவிட்டு தலையை வெளியே நீட்டியது. கமலாவிற்கு தலைகால் புரியவில்லை. அந்த தளிர் இலையைப் பாருங்க… என்ன சாஃப்ட்டா, என்ன பளபளப்பாக இருக்கு. அப்படியே அள்ளி முத்தமிடலாம் போல இல்லை”  என்று கேட்டாள், என் பதிலை எதிர் பார்க்காமல்.
       செடிகள் மளமளவென்று வளர்ந்தன.  ஒருநாள் காலை பேப்பரில் ஒரு செய்தி வந்திருந்தது.
      ஏதோ ஒரு தேசத்தில், ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு விவசாயி, தன் காய்கறி தோட்டத்தில் நாலைந்து ஒலிபெருக்கிகளை வைத்து, அந்த நாட்டு இசையை நாள்தோறும் டேப்ரிகார்டரில் போட்டாராம். அதற்குப் பிரமாதமான பலன் கிடைத்ததாம். ஆரஞ்சு பழம் அளவுசுண்டைக்காயும்  பப்பாளி  அளவு தக்காளியும், பூஷணிக்காய் அளவு இளநீரும் ஒரு சில நாட்களிலேயே வந்து விட்டதாம். இந்த செய்தி போதாது என்று வர்ணப் படங்களும் போட்டிருந்தார்கள்.
     “பாத்தீங்களா? நம்ப தோட்டத்திலும் இந்த மியூசிக்-மேஜிக் முறையை உபயோகித்துப் பார்க்கலாம்” என்றாள் கமலா.
      “எனக்கென்னவோ இதெல்லாம் யாரோ திரித்த கயிறு என்று தான் நினைக்கிறேன்” என்றேன், சுவாராசியமில்லாமல்.
      நான் சொன்னதைக் காதில் வாங்காமல், “இதோ பாருங்க… என்ன Coincidence!  இந்த விளம்பரத்தைப் பாருங்கள். மியுசிக் சிஸ்டம், ஒலிபெருக்கி, Boom box, காஸட்கள்- கர்னாடிக், பாப், ராக், இங்கிலீஷ், மெல்லிசை, சினிமா பாட்டுகள், பஜனைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், தெய்வீக ஸ்லோகங்கள், வீணை, வயலின், நாதஸ்வரம்….
     போதும் கமலா… உலகத்தில் இருக்கும் எல்லாவித இசைக் கருவிகளின் லிஸ்ட்டாக இருக்கும் போலிருக்கிறதே.. சரி.. மேலே என்ன போட்டிருக்கான், படி” என்றேன்.
       “சலுகை விலையில் பேக்கேஜ்-டீல்’ தரப்படும். முதல் 50 ஆர்டர் களுக்கு  50 சதவிகிதம் தள்ளுபடி…
         அடுத்து என்ன வரும் என்று எனக்குத் தெரியும். “கிளம்பு கமலா, போய்ப் பார்க்கலாம் கடையில். விலை மலிவாக இருந்தால் வாங்கிடலாம். நம்ப கிச்சன் கார்டனில் பாட்டு போடலாம். பலன் கிடைச்சால் சந்தோஷம்.  இல்லை என்றாலும் நஷ்டமில்லை. வீட்டில் மியூசிக் சிஸ்டம் இருந்தால், ஒரு தெய்வீக  அட்மாஸ்ஃபியர்” என்று சொன்னேன்.
      VINI, VIDI, VICI மாதிரி சொல்கிறேன். கடைக்குள் சென்றோம்; பார்த்தோம். வாங்கினோம். 50 பர்சன்ட் தள்ளுபடியில் கிடைத்தது. அதனால் கமலாவிற்கு 100 பர்சன்ட் மகிழ்ச்சி. நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிய கடைக்காரர் அதை எண்ணி கல்லா பெட்டியில் போட்டபோது  அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி கூட கமலாவின் மகிழ்ச்சிக்கு முன் ஒன்றுமே இல்லை! என் முகத்தைப் பற்றி தயவுசெய்து கேட்காதீர்கள். 100% மகிழ்ச்சி தள்ளுபடி!
       விதைகளின் வீரியத்தாலோ, கமலா உரத்தையும் தண்ணீரையும் வேளை தவறாமல் போட்டதாலோ என்னவோ (நல்ல காலம் வீட்டில் கிண்டி, பாலாடை இல்லை. இருந்தால் கிண்டி, பாலாடை மூலம் ‘செடிக் குழந்தைகளு’க்குத் தண்ணீர் புகட்டி இருப்பாள்..  தக்காளி, வெண்டை, குடமிளகாய், பீன்ஸ், புடலங்காய் கேரட், காலிஃப்ளவர், ஃப்ரஞ்ச் பீன்ஸ் என்று எல்லா செடிகளும் வளர ஆரம்பித்தன. உருளைக் கிழங்கு செடிகளும் தலையை நீட்டின.
      “பாருங்கோ… இங்கிலீஷ் காய்கறி செடிகளுக்கு, நம்ப மீரா பஜனும், கஜல்-கவ்வாலியும் சரிப்பட்டு வராது. இங்கிலீஷ் பாட்டு போடணும்… சிரிக்காதீங்க.. அதுங்க விதையாக இருந்த போது என்ன மாதிரி மியூசிக் கேட்டதுங்களோ, அதே இசை இருந்தால்தான் நன்றாக இருக்கும். முதலில் நாலைந்து இங்கிலீஷ் காஸட்டு வாங்கிண்டு வாங்கோ”   என்றாள். ‘சும்மா எக்ஸ்பிரிமெண்ட் பண்ணிப் பார்ப்போமே” என்றாள்.
      மியூஸிக் சிஸ்டம் வாங்கிய கடைக்குப் போய் வாங்கி வந்தேன். அடுத்த நாள் காலை ‘GOD SAVE THE KING’  பாடல் தோட்டத்தில் கேட்டது.
               ஆமாம் KING தான்; QUEEN  இல்லை. அதை வைத்துப் பார்த்தால், இந்தப் பாடல்கள் எல்லாம் போன நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது.
     எது எப்படியோ, அந்த பாட்டை எல்லாம் போட்டதில் ஒரு அபார பலன் கிடைத்தது. எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு எலி, ஒரு பெருச்சாளி, குருவி எதுவும் வரவில்லை. ஏன், எங்கள் தெருவிற்கே வரவில்லை.
      செடிகளில் காய்கறிகள் தளதள என்று வந்தன. தக்காளி, ரத்த சிவப்பாக பளபளப்பாக இருந்தது. “இந்த தக்காளியைப் பாருங்கள். அசல் ரத்தக் கலர். இதைச் சாப்பிட்டால், அவ்வளவும், Blood ஆக மாறிவிடும்…” என்றாள்.
     “கமலா… இந்த தக்காளியை விற்று ஏதாவது பணம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கவே வேண்டியதில்லை. நம் வீட்டிலேயே BLOOD BANK ஆரம்பித்துவிடலாம். ‘ஆர்கானிக் ரத்தம்’ என்று விளம்பரம் செய்யலாம்” என்றேன்.
      இதற்கு, நியூட்டனின் மூன்றாவது விதியை 1000 வாட்ஸ் பவருடன் கமலா  இயக்கியதை எல்லாம் விவரிக்கப் போவதில்லை.

             சொல்லக் கூடாது. எல்லா செடிகளிலும் காய், கறிகள் பூத்துக் குலுங்கின. கனம் தாங்காத காரணத்தாலோ அல்லது தங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் கமலாவின் மீது பக்தியாலோ அவை தலைவணங்கி நின்றன.
        தக்காளி இரண்டு வகை விதைகளாக போட்டிருந்தாள் கமலா. ஒரு வகை பெரிய சைஸ், மற்றது திராட்சை சைஸ். ருசியும் திராட்சைப் பழத்தைத் தூக்கி அடித்தது.
        “இந்தப் பழங்களைப் பறிப்பதுதான் பெரிய வேலை. இலைகளுக்குள் எங்கெங்கோ ஒளிந்துக் கொண்டிருக்கிற கொத்துக்களைக் கண்டுபிடித்து, பழுத்த பழங்களை மட்டும் பறிப்பது பெரிய வேலை. குனிந்து குனிந்து பார்க்கணும். இடுப்பு அம்பேல் தான்” என்றாள்.
     ‘கமலா! KAMALA! NO GAIN WITHOUT PAIN  என்பது உனக்குத் தெரியாதா? யாரையாவது பறிக்கச் சொல்லலாம்” என்றேன்.
      உடனே ஒரு அதிசயம் நடந்தது. வாசலில் காலிங்பெல். திறந்தால் பக்கத்து வீட்டுச் சிறுமி பிரியா.
      ’ ”வா..பிரியா.. என்ன வேணும்?” என்று கேட்டாள் கமலா.
       “ஒண்ணுமில்லை. Auntyஸ்கூல் வெகேஷன் விட்டிருக்காங்க… அம்மா சொன்னாள், “போய் பக்கத்து வீட்டு Aunty யின் கிச்சன் கார்டனில் வேலை செய். அவங்களுக்கு ஹெல்ப் பண்ண மாதிரியும் இருக்கும்; நீயும் கிச்சன் கார்டனைப் பற்றி பாடம் கத்துக்க முடியும்”  என்றாள். அதுதான் வந்தேன்” என்றாள்

        பிரியா படு சுட்டி. கிட்டத்தட்ட கேரட் நிறம்; தக்காளி பழம் மாதிரி கன்னம், திராட்சைப் பழம் மாதிரி கண்கள்.
         வாடா கண்ணா, நல்ல சமயத்தில் தான் வந்தே. நம்ப கார்டன்லே தக்காளி நிறைய பழுத்திருக்கு. ஒரு கூடை எடுத்துக்கோ. பழுத்த பழங்களைப் பார்த்துப் பறி. நான் வெண்டைக் காய்களைப் பறிக்கிறேன். தக்காளி பறிக்கறதுக்கு முன்னே உருளைக் கிழங்கை பூமியிலிருந்து எடுக்கணும். கொஞ்சம் கஷ்டமான வேலை… இது சாதாரண உருளைக் கிழங்கு இல்லை.  ஹிமாலயா மார்பிள் கிழங்கு. ‘பளிங்கு’ கலர்லே இருக்கும்” என்றாள்.
       பிரியா மிக உற்சாகத்தோடு வேலையில் இறங்கினாள். அவளிடம் ஒரு பிளாஸ்டிக் கூடையைக் கொடுத்து விட்டு, தானும் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த பிள்ளையார் படத்திற்கு முன் கைகூப்பிவிட்டுத் தோட்டத்திற்குக் கமலா சென்றாள்.
      ஒரு அரைமணி நேரம் கழித்து கமலாவும் சரி, பிரியாவும் சரி, தூக்க முடியாத அளவு கனமாக இருந்த கூடைகளுடன் வந்தார்கள். காய்கறிகள் கண்ணைப் பறித்தன.
      செலவழித்த பணத்திற்கு, ஒரு சின்ன டெம்போ பிடிக்காத அளவு காய்கறி மூட்டைகள் வாங்கி நிரப்பி இருக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, “அட்டகாசம் போ. உனக்கு culture-லேயும் தேர்ச்சி இருக்கு; Agriculture- லேயும்  தேர்ச்சி இருக்கு, கமலா” என்றேன். (கிச்சன் கார்டனுக்கு விதைக்கு ஆர்டர் கொடுத்த போதே, மிகவும் யோசித்து வைத்திருந்த பாராட்டுரை இது வெள்ளிப் பிளேட்டில் என்க்ரேவ்’ பண்ணி வைத்திருக்கலாமோ என்று இப்போது தோன்றியது!)
     “பிரியா …கண்ணா..ரொம்ப தாங்க்ஸ்…. உனக்கு எந்தெந்த காய்கறி வேண்டுமோ, அதை எடுத்துக்கோ” என்றாள்.
      “ஆன்டீ… இந்த உருளைக் கிழங்கைப் பாருங்கோ… எவ்வளவு பெரிசு.. எப்படி வெண்ணெய் உருட்டிக்கல் மாதிரி சூப்பராக இருக்கு. இது மட்டும் நான் எடுத்துக்கறேன். அப்புறமா அம்மா வருவா. தேவையானதை எடுத்துப்பா” என்று சொல்லிக் கொண்டே, ஒரு பெரிய உருளைக் கிழங்கு உருண்டையை எடுத்துக் கொண்டு ஓடினாள்.
     உடனே கமலா, ஏழு கடல், ஏழு மலை, ஏழு தேசம் தாண்டியிருந்த தன் அம்மாவிற்கு அர்ஜெண்ட் கால் போட்டு சந்தோஷச் செய்தியைச் சொன்னாள். சொன்னாள், சொல்லிக் கொண்டே இருந்தாள். எனக்கு எரிச்சல் ஏறிக் கொண்டே இருந்தது - டெலிபோன் பில் ஏறிக் கொண்டே போகிறதே என்ற காரணத்தினால்!
      கமலாவின் அம்மாவோ, “கமலா, உன் கைராசி யாருக்கும் வராது. நீ ‘ஒரு ‘மைடாஸ்’ . எதைத் தொட்டாலும் பொன்தான்…. ஒரு சமயம், பீச் மணலில்  நீ கையை விட்டு துழாவிக் கொண்டிருந்தாய்.. என்ன கையில் அகப்பட்டது தெரியுமா? ஒரு தங்க மோதிரம்!... அப்புறம்..
          இதென்னடா, இந்த டெலிபோன் ‘கால்’ அனுமார் வால் மாதிரி நீண்டுக் கொண்டே போகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டு காலிங்பெல் அடித்தது. திறந்தேன். பிரியா கையில் உருளைக்கிழங்குடன்!
         ஆன்டி.. ஆன்டி…” என்று இரண்டு தடவை சொல்லிவிட்டு, அழ ஆரம்பித்தாள். என்ன காரணம் என்று புரியவில்லை.
      கமலா அவளை அணைத்தபடியே ஏண்டா கண்ணா! ஏன் அழறே? அம்மா திட்டினாளா? தக்காளி, கேரட் எல்லாம் ஏன்  எடுத்துண்டு வரலைன்னு கோபமாகச் சொன்னாளா?” என்று பரிவுடன் கேட்டாள்.
      “இல்லை.. ஆன்டி… இல்லை. நீங்க எனக்குக் கொடுத்த உருளைக் கிழங்கு நிஜமான உருளைக் கிழங்கு இல்லை. அது பெரிய கூழாங்கல்லு. உருளைக் கிழங்கு மாதிரி மழமழன்னு உருண்டையா இருந்தது…  ’சரியான மக்குடி நீ. அதுதான் உனக்கு கூழாங்கல்லை கொடுத்த அனுப்பினாள்’ அப்படின்னு எங்கம்மா திட்டினாள்” என்றாள்.
      “கண்ணே. நீ கவலைப்படாதே. ‘அத்தனைத் தக்காளிப் பழம், வெண்டைக்காய், கத்தரிக்காய், குடமிளகாய் எல்லாம் நீ எடுத்துக் கொண்டு போ.. அந்தக் கல்லு, உருளைக் கிழங்கு மாதிரியே இருந்ததாலே, நீயும் ஏமாந்துட்டே, நானும் ஏமாந்துட்டேன்’ என்று சொல்லி, கூடை நிறைய காய்கறிகளைக் கொடுத்து அனுப்பினாள்.
       பிரியா, “ஆன்டி… ரொம்ப தாங்க்ஸ்’ என்று சொல்லியபடியே பி.டி. உஷாவாக மாறிப் பறந்து போனாள்.

        
அந்த சமயம் ஒரு டெலிபோன் வந்தது. விதை, உரம் எல்லாம் விற்ற கடைக்காரரிடமிருந்து. ஸ்பீக்கர் போனை எடுத்தேன். அவர் சொன்னார். “ஹலோ.. உங்களுக்கு ஒரு சந்தோஷ சமாசாரம்… முதலில் கங்கிராஜுலேஷன்ஸ்! ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னே, எங்கள் கஸ்டமர்களின் பெயர்களைக் குலுக்கிப் போட்டு எடுப்போம்.    நேற்று குலுக்கல் நடந்தது. அதில், மிஸஸ் கமலாவிற்கு முதல் பரிசு விழுந்திருக்கிறது….
”   என்றார்.
         “என்ன பிரைஸ்?” என்று கமலா கேட்டது, அவருக்கும் கேட்டிருக்க வேண்டும். உடனே அவர், “மேடம்…. பிரமாதமான பரிசு, ஒரு பசு மாடு… அது மட்டுமில்லை. மூணு மாச வைக்கோல், தவிடு, பிண்ணாக்கு எல்லாம் உட்பட!” என்றார்.
             பசுவா? கோமாதாவா? கோபால கிருஷ்ணனே நம் வீட்டிற்கு வந்த மாதிரி….
             எனக்கு கண்கள் இருண்டன.  நான் மயக்கமடைந்தேன்!
முற்றும்

11 comments:

  1. ஆகா! அடுத்துப் பசு வளர்ப்பா? ஜூப்பரு! அது சரி, காய்கள் எல்லாம் நிஜமான காய்கள் தானே! அவையும் கல்லு மாதிரி இருந்தாக்க! :)))))

    ReplyDelete
  2. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எல்லாம் ஏட்டுச் சுரக்காய்கள் தான்! (ஏட்டுச் சுரைக்காய் சரி, கான்ஸ்டபிள் சுரைக்காய் இருக்கிறதா என்று தெரியவில்லை!) -- கடுகு

    ReplyDelete
  3. //என்ன கலர் பட்டுப் புடவை கட்டிக்கணும்னு// - நீங்கள் பாவம் அப்பாவி.... 'கட்டிக்கணும்னு' என்று எழுதிட்டீங்க. கமலா மனசுல 'என்ன கலர் பட்டுப் புடவை வாங்கணும்னு' என்றுதானே கேட்டிருக்கும்....

    ReplyDelete
  4. பாகம் மூன்றை விரைவில் எதிர்பார்க்கிறேன். தொச்சு & கோ வரக்கூடாது என்பதற்காக, கமலா வெளிநாட்டில் இருப்பதாக எழுதிட்டீங்களா? காய்கறிகளைச் சாக்கிட்டு அவங்கள்லாம் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லாம இருந்தாங்களே..

    ReplyDelete
  5. நெ. த அவர்களுக்கு, பின்னூட்டத்திற்கு நன்றி.. கட்டுரையைப் பற்றி எழுதுங்கள்... குடும்பத்தில் பூசல் எற்படுவதற்கு பாதை போடாதீர்கள்!!!!:)-
    -கடுகு

    ReplyDelete
  6. நான்கூட விதைகள் முளைக்காமலோ காய்கறிகள் காய்க்காமலோ ஏமாறபோகிறீர்கள் என நினைத்தேன். நல்லவேளையாக தப்பித்தீர்கள் !!!

    ReplyDelete
  7. m மிக்க நான்றி. சில சமயம் வாசகர்கள் எதிர்பார்க்காத விதமாக கதையை எடுத்டுக் கொண்டுபோனாலும் அவர்களால் ரசிக்க முடடிகிறது - கடுகு

    ReplyDelete
  8. நாங்க (நான் ஐந்தாவது படிக்கும்போது) வீட்டில் ஒரு செடி வளத்தோம். அது பூ விட்ட உடனே வெண்டைக்காய் எப்போ வரும்னு ஆவலா பார்த்திருந்து, கடைசியில் அது வெண்டைக்காய் செடியே இல்லை என்பதை அறிந்தோம். இதற்கிடையில் நாங்க சகோதர்ர்களுக்குள்ளேயே அந்தச் செடி விஷயத்தில் சண்டை வந்து தொட்டியில் கொஞ்சம் உப்பை அள்ளிப்போட்டது தனிக் கதை.

    செடிகள் எதுவும் முளைக்காமலோ இல்லை நன்றாக வளர்ந்து காய் எதுவும் வந்திருக்காவிட்டாலும் கதை சுவாரசியம் குறைந்திருக்காது.

    ReplyDelete
  9. இளங்கோ அவர்களுக்கு,
    பராட்டுக்கு நன்றி. ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’!
    -கடுகு

    ReplyDelete
  10. https://www.ndtv.com/indians-abroad/kamala-harris-enters-us-presidential-race-1981082?type=news&id=1981082&category=indians-abroad

    கமலா மேடம் ப்ரெசிடெண்ட் ஆகப் போறாங்களாமே!! அப்போ தொச்சு சாருக்கு என்ன போஸ்டிங்?

    ReplyDelete
  11. அறிவிலி அவர்களுக்கு,
    அது வேற கமலா- இமிடேஷன் கமலா! மேடம் ப்ரெசிடெண்ட் ஆனால், தொச்சு DENT ஆவார்! - கடுகு.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!