நம்பியார் “அடுத்து ஒரு சின்ன விஷயம்.. உங்கள் வீட்டு பால்கனியில் துணியை உலரப் போடும்போது நீளமான துணியைப் போடாதீங்க..”
“என்ன அப்படி ஏதாவது வாஸ்து சாஸ்திரம் இருக்கிறதா?.. .புரியலையே…”
“ஒண்ணுமில்லை, சார். நீளமானத் துணியைப் போட்டால், அதன் நிழல் எங்கள் பால்கனியில் விழுகிறது. எங்கள் துணி உலராது… இதுக்கு முன்னே இருந்த முத்துராமனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட கைகலப்பே ஏற்படற மாதிரி ஆகிவிட்டது… ஆனால் அந்த ஆளு மகா மோசம்… வேண்டுமென்றே ஜமக்காளம்,, பெட்ஷீட் என்று, ஈரம் சொட்ட சொட்ட உலர்த்துவான்…. நான் என்ன லேசுப்பட்டவனா என்ன? அப்படியே இழுத்து, கீழே ஓடற சாக்கடையில் போட்டுவிடுவேன்… நான் நல்லவனுக்கு நல்லவன்
வில்லனுக்கு வில்லன்” என்றார்.
வில்லனுக்கு வில்லன்” என்றார்.
”நல்லவனாக இருக்கும்போது ‘நம்பியார்’ என்ற உங்கள் பெயரை ‘எம்ஜியார்’ என்று மாற்றிக் கொண்டு விடுவீர்களா?” என்று கேட்டு நானே ‘ஓ’ என்று சிரித்தேன்.
நம்பியார், ஒரு மில்லி செகண்ட் சிரித்துவிட்டு, “நம்ப மாட்டீர்கள்.. உங்கள் வீட்டின் முன்னாள் சொந்தக்காரரின் மைத்துனன் பெயர் ராமச்சந்திரன். சரியான உதவாக்கரை. தினமும் அவனோட சண்டைதான்; நான் வில்லனாக இருக்கலாம்; அவன் வில்லனுக்கு வில்லன்.… வர்றேன் சார்… ஸ்கூட்டரை இப்பவே எடுத்துடுங்கோ, என்று சொல்லிவிட்டுப் போனார்.
“என்ன தொச்சு…கேட்டியா, நம்பியார் சொன்னதை?” என்று லேசான கேலிக் குரலில் கேட்டேன்…
நான் எதற்கு ’ரூட்’ போடுகிறேன் என்று கமலா (கற்பூர நாயகி!) ஊகித்துக் கொண்டே, “ஏதாவது ஆரம்பிக்காதீங்க. வாய் செத்தவன், தொச்சு… நீங்க எவ்வளவு முட்டினாலும் சரி, தேள் மாதிரி கொட்டினாலும் சரி, அத்திம்பேர் என்று வந்து வேலை செய்வான்…..சரி.. சரி. போய் ஸ்கூட்டரை எடுத்து வெச்சுட்டு வாங்க”என்றாள்.
கீழே போனேன். வாட்ச்மேனைத் தேடினேன். காணவில்லை. அப்போது ஒரு வேலைக்காரி வாசலைப் பெருக்க வந்தாள்.
“ஏம்மா இங்கே ஸ்கூட்டரை நிறுத்தறதுக்கு இடம் எங்கே இருக்குன்னு தெரியுமா?
“இடம் இருந்தாதானே சொல்றதுக்கு. இங்கே நிறுத்தாதே, அங்கே நிறுத்தாதே என்று தெனமும் ஒரு சண்டை நடக்குது… புதுசா வந்திருக்கியா?.. இந்த ஏரியாவில் ஒரு அங்குல இடம் கூட இல்லை. எல்லாரும் ’பட்டா’ போட்டுக்கிட்டாங்க அவங்க ‘பட்டா’ போட்டுக்கிட்ட இடத்திலே செருப்பை விட்டாக்கூட ’பட்டா’ கத்தி எடுக்காத குறையாகச் சண்டைக்கு வந்துடுவாங்க… ஒண்ணு செய்யுங்க.. இப்படியே போய், காம்பவுண்ட் மூலையிலே நாலு குப்பைத் தொட்டி வெச்சிருக்கிற இடத்துல ஒரு பக்கமாக விட்டுடுங்க.. அங்கே யாரும் சொந்தம் கொண்டாட மாட்டாங்க.” என்றாள்.
“நல்லா இரும்மா” என்று சொல்லியபடியே, ஸ்கூட்டரை ஸ்டாண்டிலிருந்து எடுத்து தள்ளிக் கொண்டுப் போனேன். குப்பைத் தொட்டி இருந்த இடத்தைக் என் கண்ணால் கண்டுபிடிப்பதற்குள், என் மூக்கு கண்டுபிடித்துவிட்டது. கூவம் தான் அபார்ட்மெண்டிற்கு வந்துவிட்டதோ, என்று எண்ணும்படி தூக்கி அடித்தது துர்நாற்றம்.
மூச்சு அடக்கிக் கொண்டு, ஸ்கூட்டரை அந்த இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து, மூச்சு பிளஸ் பெருமூச்சு விட்டேன்.