March 08, 2017

வளர்ப்புக் குழந்தை

குழந்தைகளைத் தத்தெடுத்துத் கொள்வது சமீப வருடங்களில் அதிகரித்துவிட்டது. இது ஒரு நல்ல மாற்றம்தான். சுமார் 15 வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்தபோது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கோவாபரேடிவ் நர்சரி பள்ளியில் என் பேத்தியைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவை.
தாங்கள், பெற்றோர்களால் ஒதுக்கப்பட்டு வேறு ஒரு கணவன், மனைவியால் தத்து எடுக்கப்பட்டவர்கள் என்பதை                          அக்குழந்தைகள்   உணரும்போது  தாழ்வு மனப்பான்மையோ, அதிர்ச்சியோ வருத்தமோ ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது வளர்ப்புக் குழந்தைகள் எந்த விதத்திலும் மட்டமானவர்கள் அல்ல என்பதை பள்ளிக்கூடத்தில் பலவிதத்திலும் அறிவுறுத்தி வருவதைப் பார்த்தேன்.
            ஒருநாள் டீச்சர் குழந்தைகளிடம் “இன்றைக்கு நீங்கள் உங்கம்மாவைப் பற்றிச் சொல்லுங்கள். நன்றாகச் சொல்பவர்களுக்குப் பரிசு உண்டு” என்று சொன்னார்,
            சில குழந்தைகள் தாங்கள் தத்தெடுக்கப்பட்டதாகக் கம்பீரமாகக் கூறினாலும் ஒரு குழந்தை சொன்னதை மறக்க முடியாது. அவள் பெயர் லிடியா. அவள் கம்பீரமாக எழுந்து நின்று சொன்னாள்: “நான் ஒரு அனாதை விடுதியில் இருந்தேன். ஒரு நாள் எங்களைப் பார்க்க  சிலர் வந்தனர். என்னை ஒரு தம்பதி சுட்டிக்காட்டி “இவளை நாங்கள் தத்து எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றார்கள். ஏன் தெரியுமா? Because I was the best child!” (ஏனென்றால் எல்லாரையும்விடச் சிறந்த குழந்தையாக இருந்தேன்”) என்று சொல்லி மார்தட்டிக் கொண்டாள். இதைக் கேட்டு டீச்சரே உருகிப் போய்விட்டார்!
   *                         *
     டில்லியில் எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு குடும்பத்தினர், தங்கள் பெண்ணின் கல்யாண அழைப்பிதழைக் கொடுக்க ஒரு நாள் எங்கள் வீட்டிற்குத்  வந்தார்கள். அந்தப் பெண்ணும் வந்திருந்தாள். நல்ல சூட்டிகையான பெண். எப்படியோ பேச்சு குழந்தைகளை தத்தெடுப்பது பற்றிச் சென்றது.
            அப்போது அந்தப் பெண்ணின் அம்மா எங்களிடம் “உங்களுக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். தீபா எங்கள் வளர்ப்பு மகள்” என்றார்கள். 
      தீபாவிடம்  “நீ வளர்ப்பு மகளாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறாய்? முதன்முதலில் வளர்ப்பு மகள் என்று தெரிந்தபோது என்ன மாதிரி உணர்ந்தாய்?” என்று கேட்டேன்.
            “ஒன்றுமே இல்லை. எனக்கு அதிர்ச்சியோ வருத்தமோ துளிக்கூட இல்லை, காரணம் எனக்குக் கிடைத்திருப்பது BEST PARENTS IN THE WORLD” என்று சொல்லி, தன் அம்மாவை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டாள்.
   *                         *
            ஒரு நர்சரி பள்ளியில் குழந்தைகள், ஒரு பெண் கொண்டுவந்த குடும்பப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
            “ஆமாம்...உங்க அம்மாவின் தலைமுடியின் கலரும், உன் தலைமுடியின் கலரும் வித்தியாசமாக இருக்கிறதே” என்று அந்தப் பெண்ணைக் கேட்டாள் மற்றொரு குழந்தை.
            அந்தக் குழந்தை பதில் சொல்வதற்குள் மற்றொரு குழந்தை “தெரியாதா? அவள் வளர்ப்புப் பெண்” என்றாள். உடனே ஜோசலின் என்ற அந்தப் பெண் “தத்தெடுப்பது பற்றி எனக்கு நிறையத் தெரியும். ஏனென்றால் நானும் வளர்ப்புப் பெண்தான்.” என்றாள்.
            இன்னொரு சின்னக் குழந்தைக்கு இவர்கள் பேசுவது புரியவில்லை. அவள் கேட்டாள்: “ஆமாம்...வளர்ப்பு, வளர்ப்பு என்று சொல்லுகிறீர்களே அது என்ன என்று எனக்குப் புரியவில்லை”
            அதற்கு ஜோசலின் “நான் உனக்குச் சொல்கிறேன். வளர்ப்புக் குழந்தை என்பது அம்மாவின் இதயத்தில் வளர்வது... வயிற்றில் அல்ல.... அதுதான் வித்தியாசம்” என்றாள்.

(ஆதாரம்: The Best of Bits and Pieces (1994))

பிற்சேர்க்கை:
இந்த பதிவைப் போட்டபின் எனக்கு ஒரு தகவல் தெரிந்தது: ஆப்பிள் நிறுவனர்  STEVE JOBS ஒரு  வளர்ப்புக் குழந்தை என்பது.
அவர் ஒரு சமயம் சொன்னது:  Knowing I was  adopted may have made me feel more independent, but I never felt abandoned. I've always felt special. My parents made me feel special.- Steve Jobs

4 comments:

  1. ரொம்ப நாளைக்கு அப்புறம் நகைச்சுவை இல்லாத நெகிழ வைக்கும் இடுகை. எதிர்பார்க்காத டாபிக்.

    இந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். அந்த மனது பெரும்பாலானவர்களுக்கு வராது. 'தன் பெண்டு தன் பிள்ளை' என்றே மனம் இருக்கும்.

    "பள்ளிக்கூடத்தில் பலவிதத்திலும் அறிவுறுத்தி " - என்ன ஒரு நெறியை மேலை நாடுகள் கடைபிடிக்கின்றன. மனித உயிரை மதிப்பதில் அமெரிக்க, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலியா/நி.லாந்து நாடுகளுக்கு இணையாக வேறு தேசத்தைச் சொல்ல முடியவில்லை.


    "நான் ஒரு அனாதை விடுதியில் இருந்தேன். ஒரு நாள் எங்களைப் பார்க்க சிலர் வந்தனர்" - அவங்களுக்கு வந்தவங்க, நம்மைத் தத்து எடுத்துக்க மாட்டாங்களா என்று எத்தனை பேர் ஏங்குவார்கள்..

    இந்தியாவிலும் தத்து எடுத்துக்கொள்ளும் மனது வளர ஆரம்பித்திருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் அம்மாவின் இதயத்தில்தான் வளர்கின்றன. வயிற்றில் வளர்வது 10மாதங்கள் தானே.

    ReplyDelete
  2. உணர்ச்சி மிகுதியால் கண்களை குளமாக்கியது இந்தப் பதிவு.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. எங்கள் குடும்பத்திலேயே இப்படிக் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என் சித்தி பிள்ளை(தம்பி) ஒரு பையன் பிறந்ததும் இரண்டாவது பெற்றுக்கொள்ளாமல் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்கிறான். மனைவியும் சம்மதித்துத் தான். அருமையாக வளர்த்து வருகின்றனர்! அந்தக் குழந்தைக்குத் தான் வளர்ப்பு என்பது தெரியுமா, தெரியாதா என்றே நாங்கள் கேட்டுக் கொள்வதில்லை. இப்போது பனிரண்டு வயது ஆகிறது அந்தக் குழந்தைக்கு. ஆறு மாதக் குழந்தையாக இருக்கையில் தத்து எடுத்தார்கள்.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    தத்துக் குழந்தைகளின் மன உணர்வுகளின் வெளிப்பாடு அருமை.

    வித்தியாசமான சிறப்பான பதிவைத் தந்ததற்கு நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!