“கொஞ்சம் கையை உதறிப் பார். இங்க் இரண்டு மூன்று சொட்டு வந்து விழும். அதற்கப்புறம் எழுதும். நிப்பில் இங்க் உலர்ந்து போயிருக்கும்.” என்றாள் அம்மா.
உதறினேன். உதறினேன். கையில் வலி வந்ததே தவிர, பேனாவிலிருந்து இங்க் வரவில்லை. பார்த்துக் கொண்டிருந்த அம்மா, “முட்டாள்... பேனாவில் இங்க் தீர்ந்து போயிடுத்து...” என்றாள்.
“நூர் இங்க் போட்டுக் கொடுத்தார் அம்மா.”
“நூர் இங்க் போட்டுக் கொடுத்தார் அம்மா.”
“கொஞ்சம் எழுதறதுக்கு இரண்டு சொட்டு போட்டிருப்பான். வீட்டில் கட்டைப்பேனா இங்க் இருக்கிறது. அதைப் போட்டால் பேனா எழுதாது. போய் சின்ன புட்டி இங்க் வாங்கிக் கொண்டு வா” என்றாள் அம்மா,.
நூர் கடைக்கு ஓடினேன். அவர் ஒரு சின்ன புட்டி இங்க் கொடுத்ததுடன் இன்னொரு இங்க் வில்லையையும் கொடுத்தார்.
“ஐயய்யோ ... வில்லை வேண்டாம். அது வில்லை இல்லை ; அது தொல்லை. ” என்றேன்.
(அந்த வயதிலேயே வார்த்தைகளுடன் விளையாடும் திறமை வெளிப்பட்டது. விளையும் பயிர்! :)
(அந்த வயதிலேயே வார்த்தைகளுடன் விளையாடும் திறமை வெளிப்பட்டது. விளையும் பயிர்! :)
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா, பேனா கழுத்தைக் கழட்டி, கவனமாக குழந்தைக்குப் பாலாடையால் பால் புகட்டுவதுபோல் மையை நிரப்பி, லாகவமாகத் திருகி, லேசாக இரண்டு உதறு உதறி பேப்பரில் ஒரு கோடு போட்டாள்.
“அம்மா... அம்மா... இப்படிக் கொடு. நான் எழுதிப் பார்க்கிறேன்.” என்று பிடுங்கிக் கொண்டு எழுதினேன். அடாடா.... அப்படியே வழுக்கிக் கொண்டு போயிற்று.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்குப் பேனாவை வைத்துக் கொண்டு புறப்பட்டேன். பேனாவின் கிளிப்பை விட என் முகம் பளபளப்பாக மாறி இருந்தது. காரணம், பேனா தந்த மகிழ்ச்சி.