January 09, 2017

"நான் ரசித்த ஒரு வாசகம்" -- ஹிட்ச்காக்

A tale which holdeth children from play and old men from the chimney corner… . – Sir Philip Sidney.

சமீபத்தில் ஒரு வித்தியாசமான புள்ளிவிவரம் என் கவனத்திற்கு வந்தது. சற்று நம்ப முடியாததாக இருந்தது அது: ஒரு ஆண்டில் அமெரிக்க வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்திற்குச் சிகிச்சை பெற தூக்க மாத்திரை உட்கொள்ள டாக்டர்கள் எழுதிக்கொடுத்துள்ள மருந்து சீட்டுகளின் எண்ணிக்கை 40 கோடியாம். எந்த மருந்தைக் கொடுத்தார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மருந்தை விட சிறந்த வேறொரு விஷயத்தை மருந்து சீட்டாகக் கொடுக்க என்னிடம் ஒரு யோசனை உள்ளது.
            ஒரு திகில் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் குலுக்குங்கள். மனதில் மேலும் மேலும் குலுக்குங்கள்.
            துணிகரமான செயல்களைப் பற்றியும் பல மரணங்களைப் பற்றிய கதைகளையும் தெருப்பாடகர்கள் பாடிய அந்தக் காலத்திலிருந்து, திகிலும் மர்மமும் நிறைந்த கதைகள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டதுடன், அவர்கள் வாழ்வில் உள்ள பிரச்னைகளை சிறிது நேரமாவது மறக்கச்செய்து கட்டிப்போட்டன. ஒரு மணி நேரம் இப்படிக் கட்டுண்டவன், மர்மக்கதையின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வரும்போது புத்துணர்ச்சியுடன் நாளைய தினத்தை அணுகுகிறான். 
மர்மக்கதை உலகம் ஒரு கட்டுக்கதை உலகம்தான். விமர்சகர்கள் இதை பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும் வழி என்கிறார்கள். இது என்ன தீமையானதா? பலவித கேளிக்கைகள் உள்ளன – உங்களை உங்களிடமிருந்து வெளியே கொணர்ந்து நீங்கள் படிக்கும் கதை அல்லது பார்க்கும் திரைப்படம் காட்டும் கற்பனை உலகை உண்மை போல் சித்தரிக்கின்றன. படிக்கும்போது அல்லது படித்து முடித்தபின், குற்றவாளி பிடிபட்டதும், நீங்கள் உங்கள் உலகத்திற்கும் உங்கள் கவலைகளுக்கும் திரும்புகிறீர்கள். நீங்கள் மர்மக்கதை சுற்றுலா பயணத்திற்குப் பிறகு திரும்பும்போது உங்கள் மனதில் தெளிவும், உங்கள் உணர்வுகளில் அமைதியும், உங்கள் பிரச்னைகள் ஒன்றும் சமாளிக்க முடியாததல்ல என்ற தெம்பும் உண்டாகும்.
     பிரச்னைகள் உள்ள சிலருக்கு ஒரு மனோதத்துவ நிபுணரிடம் செல்வது அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்களை என்னுடைய மாயாஜாலக் கஷாயமே குணப்படுத்திவிடும்.
     ஒரு மர்மக்கதை அளிக்கும் தூய்மையான பொழுதுபோக்கை ரசிப்பது பற்றி உங்கள் மனதில் ஏதாவது குற்ற உணர்ச்சி இருந்தால் அதை நீக்கவே இந்த சிறிய உபதேச வரிகளை எழுதுகிறேன். இந்த மர்மக் கதைகள் தரும் ‘திக் திக்’ கணங்களையும் உற்சாகமூட்டும் தருணங்களையும் நீங்கள் ஹாயாக ரசிக்கலாம். மன அழுத்தம் போக இது ஒரு மருத்துவ யோசனை. இவை உங்கள் மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் தந்து, மகிழ்ச்சிகரமான மனிதனாக ஆக்கினால், இந்த மர்மக்கதை உலகில் நான் ஆற்றிய பணிகள் வீண் செயல் அல்ல என்று நான் உணர்வேன்.
பி.கு.  இக்கட்டுரை  பல வருடங்களுக்கு முன்பு  எழுதப்பட்டது.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!



1 comment:

  1. ஹிட்ச்காக் சொல்லியிருப்பது சரி மாதிரியும் தோணுது. இல்லாதமாதிரியும் தோணுது. என்னால் எந்த மர்மக் கதையையும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிக்கமுடிவதில்லை. முதல் அத்தியாயம் முடிந்தால் அல்லது சஸ்பென்ஸ் ஆரம்பமாயிட்டா கடைசி அத்யாயம் படிக்காமல் தொடரமாட்டேன். மர்மக் கதைக்கு அவர் சொன்னது சரியா இருக்கலாம்.. திகில் கதையைப் (பேய்க் கதைகள்) பார்ப்பதும் கஷ்டம்.. அப்புறம் படக்காட்சிகள் அவ்வப்போது மனதில் வந்து திகில் உணர்வை அனுபவிப்பதும் கஷ்டம்.

    உங்கள் இடுகையில் நிறைய புதிய செய்திகளைத் (முதன் முதலாகத் தெரிந்துகொள்பவை) தெரிந்துகொள்கிறேன். நன்றி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!