June 05, 2015

சர்மாஜி and the art of getting motor cycle driving Licence!

அந்த காலத்தில்- அதாவது, அறுபதுகளில் ஒரு ஸ்கூட்டர் வாங்குவது மிக கஷ்டமான காரியம். புக் பண்ணி விட்டு பல வருடங்கள் தவமிருக்க வேண்டும். அதன் பலனாக  ஸ்கூட்டர் வாங்கி விட்டால் அடுத்த பிரச்னை  டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது. ஆர்.டி. அலுவலகத்தில்சார், மணி என்ன?” என்று கேட்டால் கூட 'மணி’ கொடுத்தால் தான் பதில் கிடைக்கும்!
  போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தினால் ஒரு செகண்ட் ஹாண்ட் ஸ்கூட்டர்  கிடைத்தது. LEARNERS LICENCE -ம் ஒரு மணி கியூவில் நின்று வாங்கிவிட்டேன்.
 ஒரு மாதம் ஆன பிறகு, பக்கா டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது எப்படி என்று யோசித்துக் கொண்டு (அதாவது கவலைப் பட்டுக் கொண்டு) இருந்தேன்.
என் நண்பர் சர்மாஜியிடம் பேச்சுவாக்கில் என் பிரச்னையைச் சொன்னேன். ”மாமாஜி… எனக்கு ஹிந்தியும் தெரியாது.. லஞ்சம் கொடுக்கவும் தெரியாது” என்றேன்.
    ”அங்கிள்.. நோ..பிராப்ளம். இது பெரிய காரியமா?.. நான் குர்காவ் R T O ஆபீசில் வாங்கித் தருகிறேன். என் வீடு குர்காவில்தான் இருக்கிறது. பத்து நாளைக்கு முன்பு போயிருந்தேன். புதுசாக ஒரு ஆபீசர் – இளைஞர். ரொம்ப சூட்டிகையான ஆசாமி - இருக்கிறார்.. லஞ்சம் என்ற  பேச்சுக்கே இடமில்லை. நான் உங்களை அழைத்துப் போகிறேன்” என்றார்.  (குர்காவ் - டில்லி தூரம் கிட்டதட்ட 25 கிலோமீட்டர்.)
(சர்மா எல்லாருக்கும் மாமாஜி. அவருடைய கைங்கரியத்தால் எல்லாருக்கும் நான் ‘அங்கிள்” ஆன கதையை ஒரு பதிவாகப் பின்னால் போடுகிறேன்!)
“ சரி.. சர்மாஜி.. டில்லியில் இருப்பவருக்கு குர்காவில் இருக்கும் ஆபீசில் லைசென்ஸ் கொடுப்பார்களா?” என்று கேட்டேன்.
“என் வீட்டின் முதல் மாடியில் குடி இருக்கிறீர்கள் நீங்கள் என்பதை மறந்து விட்டீர்களா?” என்று கண்ணைச் சிமிட்டினார்! புரிந்து கொண்டேன்.
ஒரு நாள் லைசென்ஸ் விண்ணப்பப் படிவத்தை வாங்கி கொண்டு வந்தார். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொண்டு,.அவரும் நானும் குர்காவ் சென்றோம். நாங்கள் போய்ச் சேரும்போது மணி நாலரை ஆகிவிட்டது. லைசென்ஸ் ஆபீஸ் கிட்டத்தட்ட வெறிச்சோடி இருந்தது.  ஹெட்கிளார்க்கிடம் போய் காண்பித்தோம்.
“என்னது லைசென்ஸா? மூணு மணிக்கே கடை மூடியாயிற்றே? இனிமேல் நாளைக்குத்தான். காலையில் ஒன்பதரைக்கே வந்து வந்துடுங்க ஒன்பதரையிலிருந்து மூன்று.” என்றார், ஏதோ கலியாண முகூர்த்தம் மாதிரி.
”அங்கிள்.. போனவாரம் என் பிள்ளைக்கு லைசென்ஸ் வாங்க வந்திருந்தேன். இந்த டயமிற்குத்தான் வந்திருந்தேன்.. ஸாப்.. உடனே செய்து கொடுத்தார்.. ஸாப், எங்க கிராமத்தைச் சேர்ந்தவர்தான்” என்று பட படவென்று ஹரியானவியில் சொன்னார்.
“அப்படியானால் முதலில் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார்.
“சரி. அங்கிள்” என்று சொல்லிவிட்டு, ஆர்.டி.ஓ.-வின் ஆபீஸ் அறைக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார். அறைக் கதவு பாதி திறந்திருந்தது.  ஆர்.டி.ஓ தலையைக் குனிந்து கொண்டு மும்முரமாக ஒரு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த எனக்கு பயங்கர ஷாக். தொண்டுக் கிழமாக இருந்தார்.
நாளைக்கு ரிடையர் ஆகிறவர் போல் இருந்தார். ஆர்.டி.ஓ. ஒரு இளைஞர் என்று சர்மாஜி சொன்னது கப்ஸாவா? சர்மாஜியிடம் கண்ணால் கேட்டேன், அவர். “அந்த ஆபீசர் ட்ரான்ஸ்ஃபர் ஆகிவிட்டரோ என்னவோ!” என்று கையால் சொன்னார்!
ஆர்.டி.ஓ தலையைத் தூக்கி “யெஸ்” என்றார்.
“குட் ஈவினிங் சார்.. இவர் என் ஆபீஸர்.. டிரைவிங் லைசென்ஸ் வேண்டும்” என்று, பாலும் தெளிதேனும் பாகும் கலந்த குரலில் சர்மாஜி சொன்னார்.
 “மணி அஞ்சாகிறது… சரி. எங்கிருந்து வர்றீங்க?” என்று ஆர்.டி.ஓ கேட்டார்.
“ டில்லியிலிருந்து.. அதான் லேட்டாயிடுத்து.”
“ டில்லியில் ஆர்.டி.ஓ ஆபீஸ்  இருக்கிறதே! எதுக்கு இங்கே வந்தீங்க?”
“ இல்லை.. வீடு இங்கே இருக்கிறது.. இவர் என் வீட்டில் டெனன்ட். இவருக்கு ஹிந்தி அவ்வளவாகத் தெரியாது.” -சர்மாஜி ஹரியானவிக்கு மாறிவிட்டார்!  
“அங்கே டிரைவிங் லசென்ஸ் வாங்கறது கஷ்டம்; இங்கே சுலபம்னு வந்துட்டீங்களா?.. சரி .. எப்படி வந்தீங்க?” என்று லேசான புன்முறுவலுடன் கேட்டார்.
“ஸ்கூட்டரில். அதோ நிக்கறது எங்க ஸ்கூட்டர்… ஹெட்கிளார்க்கைப் பார்த்தேன்.. உங்களைப் பார்த்துவிட்டு வரச்சொன்னார்.”
“ஓ.. அப்படியா? அவர் அனுப்பினாரா?... உங்க அப்ளிகேஷன்லே முத்திரை போடாமல் அனுப்பி இருக்காரே. போய் முத்திரை போட்டு வாங்கிட்டு வாங்க” என்றார்.
“அச்சாஜி..” என்று  சொல்லியபடியே, பரபரவென்று ஹெட்கிளார்க் அறைக்கு என்னை இழுத்துக் கொண்டுப் போனார் சர்மாஜி. அவரிடம் “சார், ரப்பர் ஸ்டாம்ப் போட்டு வாங்கிக்கொண்டு சீக்கிரம் வரச் சொல்லி இருக்கிறார்” என்றார்.
ஆர்.டி.ஓ-விற்கு வேண்டியவர் சர்மாஜி என்று எண்ணியோ என்னவோ, ஹெட்கிளார்க் எழுந்து நின்று ஸ்டாம்ப் போட்டு, அதன் கீழே சின்னதாக தன் இனிஷியலையும் போட்டுக் கொடுத்தார். ”பஹுத் ஷுக்ரியா” என்று சொல்லிவிட்டு, அடுத்த செகண்ட் ஆர்.டி.ஓ-விடம் வந்து கொடுத்தோம்.
முத்திரைக்குக் கீழே இருந்த ஹெட்கிளார்க்கின் இனிஷியலைப் பார்த்த அவர், “APPROVED”  என்று எழுதிக் கையெழுத்திட்டார்.
மற்றொரு ”பஹுத் ஷுக்ரியா”வை சமர்ப்பித்துவிட்டு, ஹெட்கிளார்க்கிடம் வந்தோம். பேப்பரைக் கொடுத்தோம். “இரண்டு நாள் கழித்து வந்து லைசென்ஸை வாங்கிக் கொண்டு போங்க: என்றார்.
இரண்டு நாள் கழித்து சர்மாஜி அதை வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். 
“ சர்மாஜி, பஹுத் ஷுக்ரியாஜி.: என்று சொல்லிவிட்டு லைசென்சை வாங்கிக் கொண்டேன்.
பிறகு, “ஆமாம். சர்மாஜி உங்களுக்கு வீட்டு வாடகை எவ்வளவு கொடுக்கவேண்டும்” என்றேன்.
”நாலு மசால் தோசை!” என்றார் கூலாக! 
(பின் குறிப்பு: லைசென்ஸ் கட்டணத்தை எப்போது கொடுத்தார் என்று நினைவில்லை. ஆர் டீ ஓ ஆபீசில் வெற்று படிவத்தைக் கொடுக்கும்போது, லைசென்ஸ் கட்டணத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டார்களோ என்னவோ! சுமார் 50 வருஷத்திற்கு முன்பு நடந்த கதை. சில சில விஷயங்கள் மறந்து விட்டன.)

4 comments:

 1. ungalukku scooter otta theriyumaa? Never knew that.
  Meera kondu

  ReplyDelete
 2. ---
  ஆர்.டி.ஓஅலுவலகத்தில் “ சார், மணி என்ன?” என்று கேட்டால் கூட 'மணி’ கொடுத்தால் தான் பதில் கிடைக்கும்!
  ----
  விவிசி.
  நன்றி கடுகு அய்யா.

  ReplyDelete
 3. Nalla Sarmaji ovvoru pathipum arumai.Nagaichuvai unarvudan ningal solluvathu nandraga irukirathu.
  Anbudan
  Ragavan
  Bengaluru

  ReplyDelete
 4. சர்மாஜிகளைப் பார்த்த உங்களுக்கு நீரா ராடியாவெல்லாம் ஆச்சரியம் அளித்திருக்காது.

  இருந்தாலும் சர்மாஜிமாதிரி எமகாதகர்கள் இருந்தால்தான் நம்மால் கவர்ன்மென்ட் ஆபீசுகளில் காரியம் சாதிக்கமுடியும்.

  ரொம்ப இன்டரஸ்டிங்க்.

  மாதம் மும்மாரி பெய்யக்கூடாதா? மாதம் ஒருமுறை என்று ஆகிவிட்டதே.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!