August 27, 2014

நாலு விஷயம்...

கல்கி: அதிக விலை அரிசி 
கல்கி அவர்களின் பிறந்த தினம் 9 - 9- (18) 99. 

என்றும் என் நினைவில் உள்ள கல்கி  அவர்களைப் பற்றிய குட்டித்  துணுக்கு.
ஒரு சமயம் கல்கி அவர்களைச் சந்திக்க  அடையார் காந்திநகரில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்ற, செங்கற்பட்டு  சேவா சங்கத்தின் தலைவர்  திரு எம். ஈ. ரங்கசாமி அவர்கள் என்னையும் அவருடன் கூட வரச் சொன்னார். 

 நாங்கள் சென்ற சமயம் கல்கி அவர்கள் வெளியில் கிளம்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்தார். “என்னுடைய வயலைப் போய்ப் பார்த்துவிட்டு வரப் போகிறேன். நீங்களும் வாங்களேன்” என்றார். நாங்கள் ஒட்டிக் கொண்டோம்.
மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் அவருடைய வயல் இருந்தது. அங்கு போனோம். பசுமையான வயல். நெற்கதிர்கள் காற்றில் லேசாக ஆடிக் கொண்டிருந்தன. (62 வருடம் ஆகிவிட்டது. இருந்தும் அந்தக் காட்சி அப்படியே படம் பிடித்த மாதிரி நினைவுத்  திரையில் தெரிகிறது!)
முண்டாசு கட்டிய விவசாயியுடன் சாகுபடி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். (விவரங்கள் மறந்து விட்டன.) அப்போது கல்கி ஏதோ சொன்னார். உடனே அந்த குடியானவர்   சிரித்துக் கொண்டே, “ சும்மா சொல்லிடுவீங்க.. உங்களுக்கு இன்னா தெரியும்?’ என்று கேட்டார்.  கல்கியும் சிரித்துக் கொண்டே
 “ எனக்குத் தெரியாததாலதான் வயலை உன் கிட்டே கொடுத்து இருக்கிறேன்..  இந்தா பணம்” என்று சொல்லி 50 ரூபாயோ, 100 ரூபாயோ கொடுத்தார். பிறகு சென்னை திரும்பினோம்.

காரில் வரும்போது கல்கி சொன்னார்: “இந்த வயலில் அறுவடை ஆகி, அரிசி என் வீட்டிற்கு வந்தால், உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கிய அரிசியாக அது இருக்கும். .. ஆமாம், ஒவ்வொரு தடைவை இங்கு வரும்போதும் ஏதாவது சொல்லி பணம் வாங்கி விடுகிறான் இந்த ஆள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்!

வேட்டி கட்டிய தமிழன்
வேட்டி கட்டிய தமிழனில் ஆரம்பித்து ’வேஷ்டிக்குத் தடையா?’ என்ற கேள்வி வரை வந்து, தமிழக சட்டசபையில் சட்டமாக வந்து ஓய்ந்துள்ள நிலையில், 1962-ல் நடந்த விஷயம் என்பதால், பிரச்னை எதுவும் எழுப்பாத வேஷ்டிப் பதிவாக இது இருக்கும். 

டில்லிக்கு மாற்றலாகி நான் போனபோது, எனக்கு முதலில் தோன்றிய பிரச்னை: டில்லி அலுவலகத்தில் வேஷ்டி கட்டிக் கொண்டு போகமுடியுமா?’ என்பதுதான்.  காரணம், எனக்குப் பேன்ட் போட்டுப் பழக்கமில்லை. டில்லியிலிருந்த என் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன்.
 “ வேஷ்டிக்குத் தடையில்லை.  ஆனால் வேஷ்டி கட்டிக் கொண்டு  யாரும் ஆபீசுக்கு வருவதில்லை” என்று  தெரிவித்தார்கள்.  தடையில்லை என்பதால்  நாலைந்து ஃபின்லே வேஷ்டிகளை வாங்கிக் கொண்டேன்.

நான் டில்லி சென்றது டிசம்பர் மாதம். பயங்கர குளிர். இருந்தும்  வேஷ்டி கட்டிக் கொண்டுதான்  அலுவலகம் போனேன். ஒன்றிரண்டு பேர் என்னை உற்றுப் பார்த்தார்கள்.

 டில்லி அலுவலகத்திற்குள் ஃபோட்டோ பாஸ்  இல்லாமல் யாரும் போக முடியாது. தற்காலிக நுழைவுச் சீட்டு தந்தார்கள். முதல் ஒன்றிரண்டு நாள் அதைக் காட்டினேன்.அதன் பிறகு என் வேஷ்டியே அடையாளச் சீட்டு ஆகி விட்டது!  சுமார் 15 தினங்களுக்குப் பிறகு கரோல்பாக் சென்று  துணி வாங்கி பேண்ட தைத்துக் கொண்டேன்.
அதன் பிறகு பேண்ட் அணிந்து  அலுவலகம் போனபோது சில ஆஷா, உஷா, நீஷாக்கள்   புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார்கள். வேறு சிலர்  “மாறி விட்டீங்களா?” என்று கேட்கிற மாதிரி தலையை ஆட்டினார்கள்!

எனக்குப் பிறகு  எங்கள் அலுவலகத்திற்கு வந்த வேட்டி கட்டிய தமிழர்: திரு ரா.கி. ரங்கராஜன். (அவரை  நான் அழைத்து சென்றிருந்தேன்!)

சாவி:
சாவி அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்ட்7. அவர் நினைவாக ஒன்றிரண்டு குட்டித் தகவல்கள்.
ஒரு சமயம் சாவி அவர்களுக்கு ரஷ்ய கலாச்சாரத் துறை, ரஷ்யாவைச் சுற்றி பார்க்க அழைப்பு தந்தது. சென்னையிலிருந்து டில்லி வந்து,  மறு நாள் ரஷ்யா செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். டில்லியில் அவர் தங்க,  5-நட்சத்திர ஓட்டலில் அறை   ஏற்பாடு செய்திருந்தார்கள். டில்லி விமான நிலையத்தில் அவரை வரவேற்ற ரஷ்ய தூதரக அலுவலரிடம் “நான் மின்டோ ரோடில் என் நண்பரின் வீட்டில் தங்க விரும்புகிறேன். ஒட்டல் வேண்டாம்” என்று சொல்லி விட்டார்.
 எல்லாரும் என் வீட்டிற்கு வந்தோம். எங்களை விட்டு விட்டு போகும்போது, “சாயங்காலம்  இன்னார் வந்து பார்ப்பார்.” என்றார் அந்த அலுவலர்

 அன்று மாலை அந்த தூதரக உயர் அதிகாரி  ஒரு பிரம்மாண்டமான கப்பல் காரில் என் வீட்டிற்கு வந்தார். (அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்று என்னைப் பார்த்து அசந்து போனதை நான் இங்கு குறிப்பிடப் போவதில்லை.) சாவியிடம் பயண விவரங்களைக் கூறிவிட்டு, மறுநாள் காலை விமான நிலையம் அழைத்துப் போக ஒரு அலுவலர் வருவார் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அன்றிரவு சாவி, “ கமலா. ஒரு சின்ன ஹெல்ப். நாளைக்குக் காலையில், , மிளகாய்ப் பொடி போட்டு நாலு இட்லியை வாழை இலையில் வைத்துக் கட்டிக் கொடுத்து விடு. ஹோட்டல் மாஸ்கோவாவிற்குப்  போய் அந்த இட்லியைச் சாப்பிடணும்னு எனக்கு ஆசை” என்றார்.
 அப்படியே கமலா செய்து தந்தாள்.
 மாஸ்கோ போய் சேர்ந்ததும்  அவர் எழுதிய முதல் கடிதத்தின் முதல் தகவல் “கமலா தந்த இட்லியை ரசித்துச் சாப்பிட்டேன்” என்ற வரிதான்!

சாவியும் நவகாளி யாத்திரையும்
ஒவ்வொடு ஆண்டும் அப்புசாமி பதக்க விழாவில், சாவி குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன்  சாவி  நினைவு சொற்பொழிவும் இடம் பெறுவது உங்களுக்குத்  தெரிந்திருக்கும். அப்போது, சாவி எழுதிய புத்தகம் ஒன்று அனைவருக்கும் அன்பளிப்பாகத் தருகிறார்கள். 2012-ல் வாஷிங்டனில் திருமணம், 2013-ல் பழங்கணக்கு,  இந்த வருடம், ’நவகாளி யாத்திரை’ புத்தகம் தரப்பட்டது.
  ‘யாத்திரை’ புத்தகம் பற்றி ஒரு சுவையான துணுக்குத் தகவல்.
எழுபதுகளில்  ’மங்கள நூலகம்’ என்ற பதிப்பகம், பல புத்தகங்களைச் சிறப்பான முறையில் வெளியிட்டுக் கொண்டிருந்தது.
 அவர்கள் ஒரு சமயம் சாவியிடம் “உங்கள் ’நவகாளி யாத்திரை’ புத்தகத்தை வெளியிட விரும்புகிறோம்” என்று சொன்னார்கள்.
அவர்கள் கேட்டது ஒரு வெள்ளிக்கிழமை. அவர்களிடம் சாவி சொன்னார் “நீங்கள் போடுவதில் எனக்குச் சம்மதமே. ஆனால் ஒரு கண்டிஷன். இன்று வெள்ளிக்கிழமை. வருகிற திங்கட்கிழமை  காலைக்குள் புத்தகத்தை ரெடி பண்ணி வெளியிட்டு விடவேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் நான் அனுமதி கொடுக்கிறேன்” என்றார்.
“சார்.. இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு செய்கிறேன்” என்றார் பதிப்பக உரிமையாளர். 
அதன்படியே அட்டையை அச்சடித்து, அச்சு கோத்து, புரூஃப் பார்த்து, பாரம் அச்சடித்து, பைண்ட் செய்து, முதல் காபியை சாவியிடம் திங்கட்கிழமை கொண்டு வந்து கொடுத்தார். (அந்த சமயம் நான் சாவியுடன் இருந்தேன்!)
 “சபாஷ்” என்று பாராட்டினார் சாவி.
வித்தியாசமான ஆசைகளை உடையவர் சாவி!

 யோகா குரு B K S IYENGAR
 இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல யோகா குரு B K S IYENGAR சமீபத்தில் காலமானார்.

1965 ஆண்டு வாக்கில் புனே சென்ற போது, அவர் வீட்டிற்குச் சென்று அவரைப் பேட்டி கண்டேன். பேட்டிக் கட்டுரை “யோகம் இவர் உத்தியோகம்” என்ற தலைப்பில் குமுதத்தில் வெளியாயிற்று.

இவரை ப் பற்றி ஒரு குட்டித் தகவல், உலகப் புகழ் பெற்ற வயலின் கலைஞர்  YEHUDI MENUHIN,  இவரிடம் யோகா கற்று கொண்டிருக்கிறார்.
யோகா கலை பற்றி ஐயங்கார்  எழுதிய புத்தகத்தில், To my best violin teacher, BKS Iyengar என்று எழுதி கையெழுத்துப் போட்டிருக்கிறார். யோகா கற்றுக் கொண்ட பிறகுதான் தன்னுடைய திறமை அதிகரித்ததாக அவர் கூறி இருக்கிறார்,

புனே சென்ற போது,  மெனுஹின் எழுதியதைப் புத்தகத்தில் பார்த்ததாக நினைவு,சமீபத்தில் அவர் காலமான  செய்தியை வெளியிட்டுள்ள லண்டன் ’கார்டியன்’ பத்திரிகையில், ’ஒரு கைக்கடிகாரத்தில் இப்படிச்  பொறித்துக் கொடுத்தார்” என்று வந்திருக்கிறது. இரண்டும் சரியாக இருக்கலாம்!

’கார்டியன்’ பத்திரிகையில் வந்தது:Menuhin came to believe that practising yoga improved his playing, and in 1954 invited Iyengar to Switzerland. At the end of that visit, he presented his yoga teacher with a watch on the back of which was inscribed, "To my best violin teacher, BKS Iyengar"

அணுகுண்டு பற்றிய ஒரு தகவல் 

அணுகுண்டு பற்றி பதிவு போட்டிருந்தேன்.மேலும் சில விவரங்கள் இப்போதுதான் தெரிந்தது   அவற்றை இங்கு தருகிறேன்.

அமெரிக்காவில்  ALAMOGORDO என்ற நகர் அருகில் இருந்த பாலைவனப் பகுதியில் அணுகுண்டைச் சோதனை செய்து  பார்க்கத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்,   
 சோதனை மேற்பார்வை  OPPENHEIMER என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு அவர் வைத்த பெயர்:  TRINITY   (மும்மூர்த்தி!) OPPENHEIMER-க்கு பகவத் கீதையில் ஈடுபாடு உண்டாம்.

சோதனை, ஜூலை 16, 1945 அன்று நடந்தது.    
சுமார் 20 வருஷத்திற்குப் பிறகு   LANSING LAMONT  என்ற பத்திரிகையாளர்  சோதனையில் ஈடுபட்டப் பலரைப் பேட்டி கண்டு  DAY OF TRINITY  என்ற  புத்தகத்தை எழுதினார். 534 பக்க புத்தகம் அது.  அதில் அணுகுண்டு சோதனையை அவர் வர்ணித்து எழுதிய சில பாராக்களை இங்கு தருகிறேன்.
(சென்ற வருடம் செப்டம்பர் 3, அன்று LAMONT காலமானார்.)

ALAMOGORDO, ஜூலை 16, 1945 
A pinprick of a brilliant light punctured the darkness, spurted upward in a flaming jet, then spilled into a dazzling cloche of fire that bleached the desert to a ghastly white.  It was precisely 5:29:45 a.m.....

Across the test site everything suddenly became infinitely tiny.  Men burrowed into the sand like ants.  Oppenheimer in that blinding instant thought of fragments from the sacred Hindu epic, Bhagavad-Gita:

If the radiance of a thousand suns
Were to burst at once into the sky,
That would be like the splendo
of the Mighty One…
I am become Death,
The shatterer of worlds.

For a fraction of a second the light in that bell-shaped fire mass was greater than any ever produced before on earth.  Its intensity was such that it could have been seen from another planet.  The temperature at its center was four times that at the center of the sun and more than 10,000 times that at the sun’s surface.  The pressure, caving in the ground beneath, was over 100 billion atmospheres, the most ever to occur at the earth’s surface.  The radioactivity emitted was equal to one million times that of the world’s total radium supply.

No living thing touched by that raging furnace survived.  Within a millisecond the fireball had struck the ground, flattening out at its base and acquiring a skirt of molten black dust that boiled and billowed in all directions.  Within twenty-five milliseconds the fireball had expanded to a point where the Washington Monument would have been enveloped.  At eight tenths of a second the ball’s white-hot dome had topped the Empire State Building.  The shock wave caromed across the roiling desert.

Human response may have been the same as on that first dawn in the basement of time when Man discovered fire:  fright at first, giving way to impetuous curiosity, then an awed realization of the phenomenon and finally, primitive glee.

Men turned to look at the fireball, inflated now a half-mile wide, and wondered if it would ever stop growing.  In their excitement many threw off their dark glasses and instantly lost sight of what they had waited years to see.  At Base Camp there were silent handclasps and murmurs of amazement; at South-10,000, a squabble of excited voices that rose to a deafening din; and on Compania Hill, a piercing whoop followed by a mad jig that suggested to one observer the fire rites of prehistoric savages.          (Day of Trinity, Lansing Lamont, pp. 235-236)

6 comments:

 1. வணக்கம்
  தகவல் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அனைத்தும் சுவையாக இருந்தன!!!

  ReplyDelete
 3. இன்று வெள்ளிக்கிழமை. வருகிற திங்கட்கிழமை காலைக்குள் புத்தகத்தை ரெடி பண்ணி வெளியிட்டு விடவேண்டும். // ஹ்ம்ம்.. இப்படியெல்லாம் கூட பப்ளிஷர் இருந்திருக்காங்க !

  ReplyDelete
 4. பேண்ட் அணிந்து அலுவலகம் போனபோது சில ஆஷா, உஷா, நீஷாக்கள் புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார்கள். // பேஷா இருக்கு.. உங்க வார்த்தைப் பிரயோகம்

  ReplyDelete
 5. Beautiful titbits :)

  ReplyDelete
 6. அருமையான தகவல்கள் !!!

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!