July 24, 2014

தாத்தாவின் புகழ் பெற்ற சுருட்டு-ராஸ்டன்


அமெரிக்க எழுத்தாளர்  லியோ ராஸ்டன்  நகைச்சுவைப் பொன்மொழிகள், குட்டிக்கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர நிறைய கட்டுரைகளும்  ஹாலிவுட்டில் 5, 6 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ’புக்-சேலி’ல்  இவர் எழுதிய Passion and Prejudices என்ற புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு  கட்டுரையைத் தமிழில் தருகிறேன். அவர் கொடுத்திருந்த தலைப்பு: THE CIGAR: A FERVENT FOOTNOTE TO HISTORY
----------------------------------
கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்குமுன் ஒரு சுவையான துணுக்கு. இந்த புத்தகத்தை  நான் வாங்கிய விலை: 15 சென் ட்டுக்கும் குறைவு (ரூ.10). பிறகு ஒரு நாள், ராஸ்டனின் மற்ற புத்தகங்கள் ஏதாவது வாங்கலாமா என்று வலை வீசினேன்.  
1978–ல்  வெளியான  Passion and Prejudices புத்தகத்திற்கு  (புதுப் புத்தகம் -முதல் பதிப்பு)  ஒரு புக் ஸ்டோர் வைத்திருந்த  விலை:(படத்தைப் பார்க்கவும்!)  அதிர்ச்சி அடையாதீர்கள்: டாலர் 3272.97.  தபால் கட்டணம்  தனி!
-------------------------------------
இனி சுருட்டுக் கட்டுரைக்குப் போகலாம். சிகரெட் பிடிப்பவர்களின்  சிகரெட் மோகத்தை( அல்லது வெறியை)  புகை பிடிக்காதவர்களால் அறிந்து கொள்ள முடியாது. என் பதினாறாவது வயதிலிருந்து தினமும் ஒரு பாக்கெட் பிடித்து வந்தேன். இப்போது அந்த பழக்கத்தை உதறித் தள்ளி விட்டேன்.

  புகையிலையின்  மோகத்தை நான் நன்கு அறிவேன் அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு உள்ள அனுதாபம் ஆழமானது.
    இரண்டாம் உலகப் போரின் போது- அதாவது 40 களில்-  நடந்த சம்பவம் சிகரெட் வெறி தொடர்பானது.
    ராபின் என்பவர் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டில் உயர் அதிகாரி. (இது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பேரன், பேத்தி எவராவது இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் மனவருத்தம் அடைவார்கள் என்பதால் பெயரை மாற்றி உள்ளேன்.
    ராபின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறி ஸ்டேட்  டிபார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தான். சாதாரண எழுத்தர் வேலைதான். இருந்தாலும் அதில் அவன் தன் செயல் திறமையையும், மொழித் திறமையையும் காட்டி மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றான். 

அதிகாரிகள், அலுவலகக் கூட்டத்தில் பேசுவதற்கு அபாரமான உரைகளைத் தயாரித்துக் கொடுப்பான். படிப்படியாக பதவி உயர்வு பெற்றான். பிறகு  SECRETARY OF STATE-க்கு உரை எழுதிக் கொடுக்கும் பணிக்கு உயர்த்தப் பட்டான்(ர்).      ஒரு சமயம்,  SECRETARY OF STATE, ஒரு திங்கள்கிழமை மாலை  நடைபெறும்  கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டிருந்தார். சுமார் 800 முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் அது. உரை எழுதும் பணியை  ராபினிடம் SECRETARY OF STATE இரண்டு தினங்களுக்கு முன்பு  ஒப்படைத்தார் .     சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் உரைக்கு வேண்டிய தகவல்கள் உள்ள பல ஃபைல்களைத் ராபின் திரட்டினார். படிக்க வேண்டியவற்றை விரிவாகப் படித்துக் குறிப்புகளை  எடுத்துக் கொண்டார்.
     எல்லாவற்றையும் மேஜையில் பரப்பி வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை உரையை எழுத ஆரம்பித்தார். இரவு மணி பத்து ஆயிற்று. வேலை முடியவில்லை.எழுத வேண்டியது நிறைய பாக்கி இருந்தது. ஒரு சிகரெட் பிடிக்கலாம் என்று சிகரெட் பேக்கெட்டை எடுத்துத் திறந்தார். காலி!

மேஜை டிராயரைத் துழாவினார். படுக்கை அறையில்  தேடினார், ஆபீசுக்குப் போட்டுச் சென்ற கோட்டை உதறிப் பார்த்தார், எதிலும் இல்லை. மாலையிலிருந்து அவர் பிடித்துப்போட்ட சிகரெட் துண்டுகள்தான் மேஜையில் கிடந்தன. அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் புகைக்க ஆரம்பித்தார். கையையும், லேசாக மூக்கையும் சுட்டுக் கொண்டார்.பிட் சிகரெட்டுகளும் திறந்து விட்டன. ஆனால் அவருடைய வெறி அடங்கவில்லை. வேலை ஓடவில்லை. மாடி அறை. ஷெட்டில் இருந்த கார், பேஸ்மெண்ட், என்று ஒரு ரவுண்ட் தேடினார். பலனில்லை.

இந்த சமயத்தில்,  தூங்கிக் கொண்டிருந்த அவன் மனைவி எழுந்து வந்தாள். “என்ன தேடறீங்க? என்று கேட்டாள்.  சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து தேடினார்கள். ஒரு சிகரெட் கூட கிடைக்கவில்லை. மார்க்கெட்டிற்குப் போய் வாங்கி வரலாம் என்றால், கடைகள் எல்லாம் எப்போதோ மூடியிருக்கும்.

அப்போது அவர் கண்ணில் பட்டது, மாடத்தில் வைக்கப்பட்டிருந்த அழகான கண்ணாடிப் பேழை. அதில் ஒரு சின்ன பீடத்தில் ஒரு சுருட்டு வைக்கப்பட்டு  பேழையின் கண்ணாடி பீடத்துடன்  சீல் செய்யப்பட்டிருந்தது. அது  சாதாரண சுருட்டு அல்ல. அவருடைய தாத்தாவின் பொக்கிஷம் அது. அரிய   நினைவுப் பரிசு.  பீடத்தின் அடியில் இருந்த வெள்ளித் தகட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்:


இந்த சுருட்டு 83-வது தரைப்படையை சேர்ந்த
  சார்ஜன்ட் மார்ட்டின் வில்லோபிக்கு

நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூவில்
நடைபெற்ற அணிவகுப்பின்போது

லெப். ஜெனெரல் யுலிஸிஸ் கிரான்ட் அவர்களால்
1866-ம் ஆண்டு மே மாதம் அளிக்கப்பட்டது.

யுலிஸிஸ் கிரான்ட் , ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்தபோது  தளபதியாக இருந்தவர்.             
அந்தப் பேழையை ராபின் கையில் எடுத்ததும் அவருடைய மனைவி “என்ன.. என்ன…செய்யப்போகிறீர்கள்? இது தாத்தாவின் பொக்கிஷம். தன் உயிலில் கூட அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.கிரான்ட் தன் கையாலேயே நேரடியாகக் கொடுத்தது” என்றார். 

      “இருக்கலாம். இப்போது கிட்டதட்ட எமர்ஜென்ஸி. நாட்டிற்கு நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது. என் உரை மிகவும் முக்கியமானது.” என்றார் ராபின்.
    “ என் தாத்தா இந்த ராணுவப் பேரணியில் சென்று கொண்டிருந்தபோது,    பேரணியைப் பார்வையிட்டு கொண்டிருந்த தளபதியைப் பார்த்ததும், உணர்ச்சி மேலிட்டு அணிவகுப்பிலிருந்து வெளியே வந்து, கிரான்ட்டிடம் போய் “ யுத்ததின் போது  ----- என்ற இடத்தில் உங்களுக்குக் கீழே பணி புரிந்தேன்” என்று சொன்னார். கிரான்ட் என்ன செய்தார் தெரியுமா? 
 லேசாகக் குனிந்து, தன் கையை நீட்டி தாத்தாவிடம் கை குலுக்கியபடி, ”உங்களை அறிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தாருங்கள், என்னுடைய சிறிய அன்பளிப்பு”என்று சொல்லியபடியே, தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சுருட்டை எடுத்துக் கொடுத்தார். அதுதான் இந்த சுருட்டு, தெரியுமா?” என்றார் அவருடைய மனைவி.
    “ஆமாம்.. தாத்தா அதிர்ஷ்டசாலிதான்..:
     “ ராபின்.. என்ன செய்யப் போகிறாய்? எதற்கு ஷூவைக் கழட்டுகிறாய்? பேழையை உடைக்கப் போகிறாயா? கூடாது.. கூடவே கூடாது” என்று அவருடைய மனவி கத்தினார். 
“தாத்தா மட்டும் இப்போது இருந்தால், இந்த சுருட்டை நான் ஏன்  வெளியே எடுக்க விரும்புகிறேன் என்று தெரிந்ததும் அவரே பேழையை உடைத்து, எனக்குச் சுருட்டைக் கொடுத்திருப்பார்! இந்த நெருக்கடியான சமயத்தில் என் கடமையை ஆற்றுவதற்கு உதவி இருப்பார். .. என்ன சொல்கிறாய்?”
    “அதை உடைப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என்று சொல்லி, தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ராபின்,  தன் ஷூவால் கண்ணாடி மீது நாலு தட்டு தட்டினார். அது உடைந்தது.   வெகு நாட்களாக அடைபட்டுக் கிடந்ததால், கண்ணாடி உடைந்ததும் சுருட்டின் கம கம வாசனை அவரைக் கிறுகிறுக்கச் செய்தது.  ஜாக்கிரதையாக சுருட்டை வெளியே எடுத்தார்.வாயில் சுருட்டை வைத்துக் கொண்டார். தீக்குச்சியை எடுத்து மெதுவாக சுருட்டைப் பற்ற வைத்தார். இரண்டு தடவை புகையை இழுத்துவிட்டார். மூன்றாவது தடவை இழுத்தபோது----

“டமால்!”

 சுருட்டு அவர் முகத்தில் வெடித்தது. அதாவது 88 வருஷத்திற்கு முன்பு தாத்தாவின் முகத்தில் வெடித்திருக்க வேண்டியது!
      நல்லகாலம், அது நிஜ வெடியல்ல. அது ஒரு ‘ட்ரிக்’ சுருட்டு. சிறுவர்களின் விளயாட்டுப் பொருள். அந்த காலத்தில்  சாதாரண கடைகளில் இவை கிடைக்கும். இம் மாதிரி குறும்பு சுருட்டுகளைப் பார்ட்டிகளில் கொடுத்து தமாஷ் செய்வார்கள். தளபதி கிரான்ட் ஒரு குறும்புப் பிரியர். அதனால் அவர் எப்போதும்  இப்படி ஏதாவது குறும்புப் பொருளை தன்னிடம் வைத்திருப்பாராம்!
    கிட்டத் தட்ட 100 வருஷம் கழித்தாவது ராபினின் சிகரெட் வெறியால் பலனாக அந்த சுருட்டு, தன் குறும்பைச் செய்து ‘விமோசனம்’அடைய முடிந்தது!
   *                                         *
“ இது நூறு சத விகிதம் உண்மையான சம்பவம்” என்று எழுதி கட்டுரையை முடித்திருக்கிறர் ராஸ்டன்.

2 comments:

  1. கட்டுரை முடியவில்லையே! அப்புறம் சிகரெட் இல்லாமல் அவர் எப்படி உரையை எழுதி முடித்தார்!

    புத்தகத்தின் 'மதிப்பு' 10 செண்ட்டா, 3400 டாலரா!

    - ஜெ.

    ReplyDelete
  2. <<>>
    சிகரெட் வெறி ஒரு அரிய 100 வருஷ நினைவுப் பொருளை அழித்துவிட்டது என்பது MORAL OF THE STORY!
    பழைய புத்தகம் என்பதால் அந்த விலைக்குக் கிடைத்தது. புதிய புத்தகம் 3300 டாலர் விலைக்குப் போகும் என்பது புத்தகக் கடைக்காரரின் யூகம்.
    --கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!