May 28, 2014

தொச்சு போட்ட சோப் -கடுகு

வீட்டினுள் நுழைந்தபோதே சமையலறையிலிருந்து தொச்சுவின் குரல் கேட்டது. என் முகத்தில் விழிக்காதே என்று சில வாரங்களுக்கு முன்பு அவனைக் கோபித்து அனுப்பியிருந்தேன்.  அதனால்தானோ என்னவோ, நான் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் (அதாவது சமையலறைக்குள்) படை எடுத்திருக்கிறான். உள்ளே படையலும் நடந்து கொண்டிருக்கும்!

அருமை அம்மாவிற்கும் அக்காவிற்கும் சோப் போட்டு விட்டு. பையிலும்  (தொப்பையிலும்) நிரம்பிய பிறகு, கையிலும் வாங்கிக் கொண்டு போவான். ஆகவே என்ன சோப் போடுகின்றான் என்றுகேட்க, பூனை போல் வீட்டிற்குள் நுழைந்தேன்.

என் மாமியார், ஆமாண்டி, கமலா, உழைச்சாத்தான் லாபம், லாபம் மட்டுமில்லை, நமக்குக் கிடைக்கிற பொருளும் உசத்தியாக இருக்கும்.... அப்ப என்னடா சொல்றே...நம்ப வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றியா? என்று கேட்டாள்.

வீட்ல செய்யக் கூடியது என்பதால்தானே டிவியிலே சொன்னாங்க...அக்கா எல்லாத்தையும் குறிச்சுக் கொடுத்தாள். நானும் மார்க்கெட்டெல்லாம் அலைஞ்சு எல்லாச் சாமானும் எங்கெங்கே கிடைக்கறதுன்னு கண்டு பிடிச்சுட்டு வந்தேன். ஆட்டோவிற்கே நூறு ரூபாய்க்கு மேலே ஆயிடுத்தே?என்றான் தொச்சு.

“நூறு ரூபாய்தானேடா... நான் தறேன்...என்று கமலா சொன்னதும்...

“போதும் அக்கா...இதுக்கெல்லாம் போய் உன்கிட்ட பணம் வாங்கிப்பேனா?... போன வாரம் கூட பம்பாய்க்கு போன் பண்ணதுக்காக நூறு ரூபாய் கொடுத்தே...

தொச்சு சொல்வதைக் கேட்ட போது எனக்கு ஒரே எரிச்சல். அதே சமயம் குழப்பம். இவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள். என் அருமை சதி, பதிக்கு எதிராக என்ன சதி செய்கிறாள் என்று புரியவில்லை.

தொச்சு...இன்னும் ஒரே ஒரு தோசை போடறேண்டா...என்று மாமியார் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொன்னதும், சமையலறையில் நிசப்தம் நிலவியது. தொச்சுவின் வாய்க்கு வேறு வேலை கிடைத்து விட்டதே!

“என்ன கமலா...யாரு வந்திருக்கிறது, உன் தம்பிக்காரனா?என்று வார்த்தைகளைப் பாவக்காய் ஜூஸில் தோய்த்துக் கேட்டேன்.


கமலா கையில் காப்பியுடன் வந்தபடியே “ஆமாம்... தொச்சுதான். டீவியிலே மனைமாட்சி புரோகிராம் பற்றிச் சொன்னேனே நினைவு இருக்கா? மனைமாட்சி புரோகிராம்என்று கேட்டாள்.

“என்ன புரோ.. என்ன கிராம்? என்ன கிலோ...? யாருக்கு நினைவு இருக்கு. முன்னுரை, முகவுரை, அணிந்துரை என்று சொல்லாமல் விஷயத்துக்கு வா...என்றேன்.

“வீட்டிலேயே சோப் பவுடர் பண்றதைப் பத்தி டீவியிலே சொன்னாளே...

“ஆமாம், எல்லாம் வாங்கிப் பண்ணினால் ‘சீப்பாகத் தயார் பண்ணலாம். சுத்தமாகவும் இருக்கும்... அப்படி இப்படின்னு சொல்வாங்க. எந்த சாமான் என்ன விலை, எங்கே கிடைக்கும்னு சொல்ல மாட்டாங்க. டீ.வி. புரோகிராமைப் பார்த்து எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுட்டா, சோப் பவுடர் கம்பெனியெல்லாம் தலையிலே ஈரத்துணியைப் போட்டுக்க வேண்டியதுதான்... அதிருக்கட்டும்.. என்னமோ சொல்ல வந்தியே...?”

"தொச்சுகிட்ட சொன்னேன். அவன் செலவு, கஷ்டம்னு பார்க்காமல் மார்க்கெட்ல தேடி அலைஞ்சு எதெது எங்கெங்கே கிடைக்கும்னு விசாரிச்சுண்டு வந்திருக்கான்.”

“உன் தம்பிக்காரன் வந்தால் அதில் நஷ்டம் தவிர வேறு எதுவும் வராது. லாபம்னு சொல்லிண்டு ஆரம்பிச்சாலும், நிச்சயமா நஷ்டம்தான் வரும்.

“ஏன் அவனைக் கரிக்கிறீங்க? அவனால் ஆயிரம் லாபம் கெடைக்கிற போது மூச்சே விட மாட்டீங்களேஎன்று பாய்ந்தாள் கமலா.

“அடாடா... ஆயிரம் லாபம்... சொல்ல மாட்டே...

“ஏன், போன மாசம் பட்டுப் புடைவை வாங்கிக் கொடுத்தானே 75 பர்சண்ட் தள்ளுபடி விலையிலே. அப்ப என்னமாய் இளிச்சீங்க...!


சென்ற மாதம். ஒரு நாள் தொச்சு நாலைந்து பட்டுப் புடைவைகளுடன் வீட்டிற்கு வந்தான்.

அவன் மூட்டை கட்டிக் கொண்டு போயிருக்கிறானே தவிர மூட்டையுடன் வந்தான் என்ற வரலாறே கிடையாது.  ஆகவே நான் வியப்புடன், “என்னப்பா மூட்டை?என்று கேட்டேன்.

“அக்கா... அக்கா... என்ன கேட்டீங்க அத்திம்பேர்...? மூட்டைதானே? நமக்குத் தெரிஞ்ச ஒரு எக்ஸ்போர்ட்டர், கொஞ்சம் பட்டுப் புடவையைத் தள்ளுபடி விலையிலே தர்றேன்னு கொடுத்தார்...

“எக்ஸ்போர்ட்டர் கொடுத்தார். நீ ரயில்வே போர்ட்டர் மாதிரி தூக்கிண்டு வந்தியா?என்று சிரித்தபடியே கேட்டேன்.

உடனே கமலா, “நீங்கதான் பெரிய ரிப்போர்ட்டர் ஆச்சேன்னு கொண்டு வந்திருக்கான்என்று தானாக ஜோக் அடித்தாள். பட்டுப் புடவைகள் எதிரே இருந்தால் கமலாவைப் போல் கலகலப்பான பெண்மணியைப் பார்க்க முடியாது.

“தள்ளுபடி விலையோ தள்ளாதபடி விலையோ பட்டுப்புடவை வேண்டாம்பா. யார்கிட்ட ஆயிரம், இரண்டாயிரம் பணம் இருக்குது?என்றேன்.
“அத்திம்பேர், ஆயிரம் என்கிற பேச்செல்லாம் எதுக்கு? கொஞ்சம் மடிப்பிலே அழுக்காயிடுத்து. அதனால் கால் விலைக்குக் கொடுக்கிறான்... இது என்ன விலை இருக்கும் சொல்லுங்க?என்று வினாடி வினா மாதிரி கேள்வி ஒன்றைக் கேட்டான்.

நான் வேண்டுமென்றே விலையைக் குறைவாக மதிப்பிட்டு, “ஐந்நூறு ரூபாய் இருக்குமா?என்று கேட்டேன்.

தொச்சு ஒரு துள்ளு துள்ளினான். “அக்கா, நான் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... இதோ பார்... அத்திம்பேர் ஒரு ஜீனியஸ் என்பதை மறுபடியும் நிரூபிச்சு இருக்கார்... அத்திம்பேர் உங்க திறமைக்கும் கெட்டிக்காரத்தனத்துக்கும் இந்த தொச்சு தலை வணங்குகிறான்... எப்படி அத்திம்பேர் இவ்வளவு கரெக்டா விலையைச் சொன்னீங்க...? இரண்டாயிரம் ரூபாய் புடைவை... ஐந்நூறுக்குத் தர்றார்...என்றான்.

“என்ன கமலா...புடவை வேண்டுமா? என்று கேட்டேன்.

“நீங்க கேட்கிற விதத்தைப் பார்த்தாலே, வேண்டாம்னு பதில் சொல்லணும்னு நீங்க நெனைக்கிறீங்கன்னு...
“சீச்சீ... வேணுமின்னா வாங்கிக்க...

அந்தச் சமயம் என் அருமை மாமியார் திடீரென்று அங்கு பிரட்யட்சமாகி, “ “ஏண்டா தொச்சு. உன் பெண்டாட்டி அங்கச்சிக்கும்தான் ஒண்ணு வாங்கிக்கோயேன்என்றாள்.

“வாங்கிடுவேன் அம்மா. பிஸினஸ்லே பணத்தைப் போட்டிருக்கேன். புரட்ட முடியாதுஎன்றான் தொச்சு! இவன் பிஸினஸே பணத்தை ‘எடுப்பதுதான். போட்டானாம். புரட்ட முடியாதாம். சரியான புரட்டு!

 “அக்காவே இரண்டு வாங்கிக்கட்டும். இரண்டு வாங்கிண்டால்தான் இந்த விலை என்று சொன்னார் எக்ஸ்போர்ட்டர்.

“சரிதான். ஒண்ணு வாங்கறதுக்கே ஆயிரம் யோசனை... வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம்... ஒண்ணும் வேண்டாம்டா தொச்சு... இந்த பாம்பே ஸேல் போடறான் பாரு, கர்சீப் வாங்கினா புடைவை இலவசம்னு. அதிலே போய் ஒரு சுருணை வாங்கிக்கறேன்என்றாள்.

கமலா தனது வழக்கமான அஸ்திரங்களை எடுத்து விட்டாள்!

“சரி, கமலா... இரண்டு புடவைகளை எடுத்துக்க... ஒண்ணை அங்கச்சிகிட்ட கொடுத்துடு... பணம் நிதானமாகத் தரட்டும்...என்றேன்.

கமலா புன்னகை அரசியானாள். தொச்சு புன்னகை மன்னன் ஆனான். என் மாமியார் புன்னகை சர்வாதிகாரியானாள். நான் ஆயிரம் ரூபாய் இழந்த பரிதாப கேஸ் ஆனேன்.  நீலக் கலர் புடைவையைக் கமலா தனக்கு எடுத்துக் கொண்டாள். அங்கச்சிக்கு சிவப்புக் கலர் புடைவையைத் தேர்ந்தெடுத்தாள்.

உண்மையிலேயே பட்டுப் புடைவையை லாபகரமான விலையில் வாங்கியிருந்ததால், கமலா அதை சுட்டிக் காட்டியபோது, நான் ஒன்றும் பேசவில்லை.

“சோப் பவுடர் பண்றதிலே எனக்கு ஆட்சேபணை இல்லை...

“ஆட்சேபணை இல்லைதானே.. விடுங்கள். நீங்கள் பணம் கூடக் கொடுக்க வேண்டாம். தொச்சுவே எல்லா சாமானும் வாங்கிண்டு வர்றானாம்: என்றாள் கமலா,

*                  *             *
“அக்கா.. முதல்ல ஆசிட் ஸ்லர்ரியை அளந்து வெச்சுடு... அம்மா... இந்த எஸ்.டி.பி.பி.யை குழவியில் பொடி பண்ணிச் சலிச்சு வை....அப்புறம் இந்த டி.எஸ்.பி.யையும் கட்டியில்லாம பொடி பண்ணு...  என்று தொச்சு சொல்லிக் கொண்டிருந்தான்.  அவனைச் சுற்றி ஏகப்பட்ட பொட்டலங்கள். வாஷிங் சோடா, ப்ளீச்சிங் பவுடர், அல்ட்ராமரைன், டீ-பால் என்று பலப் பல.

அடுத்த இரண்டு மணி நேரம் என்வீட்டுக் கூடத்தை தொழிற்பேட்டை ஆக்கி, சோப் பவுடர் தயாரிப்பில் தொச்சு ஈடுபட்டிருந்தான். அவ்வப்போது என் மாமியார் ‘திக்காக காப்பி கொடுத்தாள். தொச்சுவுக்கு ‘திக்காப்பியுடன் ‘தின்னுவதற்கு முறுக்கு, தட்டை கொடுத்தாள். பெரிய ஃபாக்டரி மாதிரி (அவன் வாயிலும்) வேலை நடந்து கொண்டிருந்தது. கமலா அவன் சொன்ன பொருட்களை எல்லாம் எடை போட்டுக் கொடுத்தாள். ஒருவாறாக எல்லாவற்றையும் கலந்து நிழலில் உலர்த்தி அட்டகாசமான ஒரு பவுடரைத் தயார் பண்ணி விட்டார்கள்.

அப்போது ‘விசுக்கென்று காற்று வீச, பவுடர் வீடெல்லாம், கட்டில், மேஜைக்குக் கீழேயெல்லாம் ஓரளவு பறந்து. பரந்து சென்றது.

“என்ன வீடோ, என்ன காற்றோ.. பேய்க் காற்றுதான் எப்போதும்!என்று கமலா அலுத்துக் கொண்டாள். (முன் தினம்தான் “இது என்ன வீடு, கிடங்கு மாதிரி.. காற்று, வெளிச்சம் எதுவுமில்லைஎன்று முனகியிருக்கிறாள்!)

மூன்று பேரும் தவழ்ந்து போய் எல்லாவற்றையும் திரட்டினார்கள்.

*      *     *
“அத்திம்பேர்... சோப் பவுடர் ரெடி. முதல் முதல்ல உங்க கையால துவக்க விழா நடத்தணும்என்றான் தொச்சு.

“துவக்க விழா இல்லை. இது துவைக்கும் விழாஎன்றேன்.

பக்கெட்டில் இரண்டு ஸ்பூன் பவுடரைப் போட்டுக் குழாயைத் திறந்தேன். தண்ணீர் விழுந்த வேகத்தில் அபாரமாக நுரை உண்டாயிற்று.

“சரி... ஏதாவது துணியை நனைக்கலாம்.... கமலா... அழுக்குத் துணி கொண்டு வா...என்றேன்.

“முதல் முதல்லே அழுக்குத் துணியையாப் போடறது...? சரி... தொச்சு வாங்கிக் கொடுத்தானே அந்தப் பட்டுப் புடவை. மடிப்புல அழுக்கா இருந்தது. அதைப் போடலாம்என்றாள் கமலா.

“நானே சொல்லணும்னு நெனைச்சேன். நீ சொல்லிட்டே அக்காஎன்றான் தொச்சு.

கமலா பீரோவைத் திறந்து சிவப்புப் பட்டுப் புடைவையைக் கொண்டு வந்தாள்.

(இது அங்கச்சி புடைவையில்லையோ. இன்னும் அவள் எடுத்துக் கொண்டு போகவில்லையா?- சந்தேகத்தை சந்தேகமாகவே வைத்துகொண்டேன்!)

புடைவையைப் பிரித்துத் தண்ணீரில் அமுக்கினாள் கமலா.

“ஏண்டா தொச்சு... கையிலே லேசா எரிச்சலா இருக்கேஎன்றாள் கமலா.

“பவுடர் புதுசோன்னோ, அப்படித்தான் இருக்கும்...” என்றான்.

என்னவோ, சரசரன்னு நீர்க்குமிழி வருதேஎன்றேன்.

“அழுக்கை வெளியே எடுத்துடறதுன்னு நினைக்கிறேன். பத்து நிமிஷம் ஊறட்டும். அப்புறம் அலசித் தோய்ச்சிக்கலாம்என்றான் தொச்சு.

பத்து நிமிஷம் கழித்து (லைட்டாக ஒரு கப் ‘டீசாப்பிட்டுவிட்டு) தொச்சு பக்கெட்டில் கையை விட்டுப் பட்டுப் புடைவையை எடுத்  -------

கையோடு ஒரு கைக் குட்டை அளவு பட்டுப் புடைவை வந்தது. “என்னது இது... துண்டா வர்றது?என்று டீ.வி. நாடகங்களில் வருவது போல தனக்குத் தானே டயலாக் பேசிக் கொண்டே, திரும்பவும் கையைத் தண்ணீருக்குள் விட்டு எடுத்தான்.

இந்தத் தடவையும் துண்டாக வந்தது.

“என்னடா இது அநியாயம். பட்டுப் புடவை துண்டு துண்டா வர்றது? என்று கமலா கேட்டாள்.

இதில் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரிந்து விட்டது.  ஆகவே வாயைத் திறக்காமல் டீ.வி. நாடக நடிகர்கள் சிலரைப் போல் உணர்ச்சியேயில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கெட்டைக் கவிழுடா.... சோப் பவுடர்லே எதுவோ ஜாஸ்தியாயிட்டது. துணியை ஆஸிட் சாப்பிடற மாதிரி அரிச்சுடுத்தே... என்னடா இது போறாத காலம்என்று கமலா அங்கலாய்த்தாள்.

“தொச்சு நிறைய பச்சைத் தண்ணீரை விடு. சோப் பவுடரெல்லாம் கரைஞ்சு போயிடும்என்றேன். (அங்கச்சியின் புடைவைதான் இப்படிக் கெட்டுப் போயிற்று என்று எனக்குத் தெரியும் என்பதால், எனக்குள் இருந்த வில்லன் சிரித்தான்!)

புடவை பல டஜன் துண்டுகளாகப் போயிருந்தது. வழக்கமாக இந்த மாதிரி சமயங்களில் என் மேல் எரிந்து விழும் கமலா கூட அதிர்ச்சியால் வாயடைத்துப் போயிருந்தாள்!

“அத்திம்பேர்...நான்தான் சின்னத் தப்பு பண்ணிட்டேன். பவுடர் தயாரிப்பில் ப்ளீச்சிங் பவுடரின் அளவு தப்பாகப் போய் விட்டது. ஒரு கி. என்று போட்டிருந்ததை ஒரு கிலோ என்று எடுத்துக் கொண்டு விட்டேன். அது ஒரு கிராம்தான் என்றான் தொச்சு....

“அடாடா...என்றேன், சோகமான குரலில்.

“அதுவும் அக்கா ஆசைப்பட்டு வாங்கிண்ட புடைவை... இது அங்கச்சி முதலில் எடுத்துண்ட புடைவை... கலர் தனக்கு பிடிச்சிருக்குன்னு அக்கா புடைவையை மாத்திண்டா, அங்கச்சி கிட்டேயிருந்து...என்றான் தொச்சு.

அடப் பாவமே! அங்கச்சியிடம் கமலா புடைவையை மாற்றிக் கொண்டாளா? எனக்குத் தலை சுழன்றது!

17 comments:

 1. அருமையான நகைச்சுவை நடை...

  ReplyDelete
 2. ஒன்றுக்கு இரண்டாக செலவு! :)))

  அசத்தலான நகைச்சுவை.

  ReplyDelete
 3. சிரிப்பு மழை, இடி, மின்னல்!

  ReplyDelete
 4. உங்க காமெடி கலாட்டா வழக்கம் போல சூப்பர்...

  ReplyDelete
 5. எப்புடி சார் !!! தொச்சு விஷயம்னா மட்டும் சும்மா புகுந்து விளையாடுறிங்க...

  ReplyDelete
 6. அனைவருக்கும் நன்றி. பாராட்டுகளை ஊக்க மாத்திரைகளாகக் - தூக்க என்று படித்து விடாதீர்கள் - கருதி மேலும் சுறுசுறுப்புடன் செயல்படுகிறேன்.
  -கடுகு

  ReplyDelete
 7. தொச்சுவால் எத்தனை அவதி வந்தாலும் ஒவ்வொன்றும் எங்களுக்கு சிரிப்புத் திருவிழாவாகவல்லவா அமைந்து விடுகின்றன்...? சோப்பு புராணமும் பிரமாதம் போங்கோ....

  ReplyDelete
 8. Periya Factory madhiri (avan vayilum) Typical Kadugu Punch.

  ReplyDelete
 9. தொச்சுக்கு நீங்க கேரண்டி.. அவர் வந்தாலே நகைச்சுவை விருந்துதான் !

  ReplyDelete
 10. இப்பெல்லாம் தொச்சுவைப் பார்த்தால், உங்களை விட எனக்குத் தான் பயமாக இருக்கிறது!

  ReplyDelete
 11. சந்தர்ப்பங்கள் மாறினாலும் பாத்திரங்களின் குணாதிசயங்கள், வார்த்தைப் ப்ரயோகங்கள், உங்கள் நகைசுவை எல்லாம் அக்மார்க் கேரன்டி போல கொஞ்சமும் மாறுவதில்லை! அலுப்பதும் இல்லை என்பதுதான் முக்கியம். அபாரம். - ஜெ.

  ReplyDelete
 12. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  தொச்சு, அங்கச்சி எல்லாரையும் சந்திப்பது, நண்பர்களை சந்திப்பது போல ஒரு சந்தோஷம்!!

  இந்த மாதம் ‘தென்றல்’ பத்திரிக்கையில், தங்களைப் பற்றிய அருமையானதொரு எழுத்தோவியம் வெளியாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  தங்களின் இரசிகர்கள் படித்து மகிழ, லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன். http://www.tamilonline.com/thendral/article.aspx?
  aid=9355

  www.tamilonline.comல், இலவசமாகவே பதிவு செய்து கொண்டு, ‘தென்றல்’ பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்.

  ReplyDelete
 13. I did read the 'Thendral' link given by Mrs. Subramaniyam. It is an excellent article on Srimaan PSR. I feel honoured to be in touch with such a great personality through his blog site and he even acknowledges my comments some times! - R. J.

  ReplyDelete
 14. Thanks to Mrs Subramaniam for the info. And Mr R J for his encouraging comments. I ma not a great personality. I am only a GRATE personality!
  PSR

  ReplyDelete
 15. நல்ல வேளை தொச்சு குளியல் சோப் செய்யவில்லை.விளைவு விபரீதமாக இருந்திருக்கும்

  ReplyDelete
 16. Happy to read kadugu's hilarious skit. I miss him very much as he was my colleague at h t a, madras

  ReplyDelete
 17. <>
  Thanks for your comments. Let me have your email ID please.
  --Kadugu

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!