August 28, 2013

ஆ ,அமெரிக்கா: இரண்டு இலவசம்


ஆ, அமெரிக்கா:
 --இரண்டு இலவசம்

அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநிலத்தில் சேப்பல்ஹில் என்ற  நகரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அந்த மாநிலத்தில்தான் கிட்டிஹாக் என்ற புகழ் பெற்ற இடம்  இருக்கிறது. கிட்டிஹாக்கின் புகழிற்கு என்ன காரணம்? அங்குதான் ஆர்வில்-வில்பர் ரைட் சகோதரர்கள் கணக்கில்லாத முயற்சிகளுக்குப் பிறகு முதல் முதல் விமானத்தைப் பறக்க விட்டார்கள்.

ஒரு சமயம் கிட்டி ஹாக்கிற்குப் போனேன். அங்குள்ள ஒரு சிறிய குன்றிலிருந்துதான் அவர்கள் பறந்தார்கள். அவர்கள் சாதனை புரிந்த  அந்த குன்றில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருக்கிறது.

குன்றை ஒட்டிய மைதானத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் தரையில் மைல் கல் மாதிரி ஒரு கல்லை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். முதன் முதலில் அவர்கள் பறந்த விமானம், அந்த தூரம்தான் பறந்து வந்து, விழுந்து நொறுங்கியது! ஆண்டு  1903!

ஆனால் அதுவே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அதனால் விமானம் நொறுங்கியதை எண்ணி அவர்கள் மனம் தளரவில்லை. மேலும் ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தந்தையார் ஒரு பிஷப், அவர் ஒரு புத்தகப்பிரியர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார்.   விமான ஆராய்ச்சி செய்த பலர் எழுதிய புத்தகங்களை சகோதரர்கள் முனைந்து படித்தார்கள்.

ரைட் சகோதரர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.1905’ல் முதன் முதலாக அவர்களுடைய விமானம் அரை மணி நேரம் பறந்தது

கிட்டிஹாக்கில் அந்த புகழ் பெற்ற குன்றுக்கு அருகில் ரைட் சகோதரகள் விமானப் பொருட்காட்சி உள்ளது.

ஐந்தாறு அறைகளில் படங்களும் மாடல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல. முதன் முதல் பறந்த விமானத்தை அச்சு அசலாக மாடல் செய்து வைத்திருக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் 10 டாலர் என்று நினைவு. டிக்கட் வாங்கப் போனோம். டிக்கட் கவுண்டரில் ”இன்று இலவசம். யார் வேணுமானாலும் போகலாம்” என்றார்கள். ஏன் என்று கேட்கவில்லை. இலவசம் என்றால் பரவசம்தானே? பொருட்காட்சியைப் பார்த்து விட்டு  வந்தோம். வெளியே வரும்போது ஒரு பணியாளரிடம். “ஆமாம்.. இன்றைக்கு என்ன விசேஷம்? ஏன் இன்று இலவசம்?” என்று கேட்டேன்.
“ஒன்றுமில்லை… இன்றைக்கு இந்த பொருட்காட்சில் ஒரு அறையில் ரிப்பேர் வேலை நடக்கிறது. ஆகவே அதை மூடி வைத்திருக்கிறோம். பார்வையாளர்கள் அங்கு போக முடியாது. முழுதாகப் பொருட்காட்சியைப் பார்க்க அனுமதிக்காதபோது கட்டணம் வாங்குவது சரியாக இருக்காது என்று இலவசமாக்கி விட்டார்கள்!” என்றார்.

அட என்று வியந்தேன்!

டேவிஸ் - பெர்கின்ஸ் புத்தகசாலைகள் ஷட்டில் பஸ்

சேப்பல்ஹில் என்ற  நகரில்   UNIVERSITY OF NORTH CAROLNIA  இருக்கிறது. நான் சர்வகலாசாலை வளாகத்தில் மாணவர் குடியிருப்பில் தங்கி இருந்தேன். மிகப் பெரிய வளாகம். பல கல்லூரிகள். ஹாஸ்டல்கள். ஸ்டேடியம்கள், புத்தகசாலைகள் என்று நிறைய இருந்தன. அதனால் அங்கு  இலவச பஸ் சர்வீஸ் இருந்தது. பத்து பதினைந்து நிமிஷங்களுக்கு ஒரு ரவுண்ட் ட்ரிப் பஸ் வரும்.  மிகப்பெரிய புத்தகசாலையான டேவிஸ் புத்தகசாலைக்குப். போய் வர பஸ்ஸும் ஓசி: படிக்கப் புத்தகங்களும் ஓசி.  அதனால் கிட்டத்தட்ட அங்கேயே வாசம் பண்ணினேன். ( இத்தனைக்கும் 50 புத்தகங்கள் வீட்டிற்கு எடுத்து வரலாம்.)

 இந்த சமயம் ஒரு நாள் புத்தகசாலையை விட்டு வெளியே வரும்போது, ஒரு பஸ் ’ஷட்டில் சர்வீஸ்” என்ற போர்ட் போட்டுப்  போய்க் கொண்டிருந்தது. பக்கவாட்டில் ஏதோ ஒரு டிரஸ்டின் பெயர் (The Robertson Scholars Leadership Program) எழுதப்பட்டிருந்தது. கண்ணாடியில் ”டேவிஸ்-டியூக் புத்தகசாலைகள் ஷட்டில்” என்று எழுதி இருந்தது, ( ட்யூக் என்பது சுமார் அரை மணி பயண தூரத்தில் இருக்கும் ஒரு சர்வகலாசாலை.) அந்த டிரஸ்டின் பெயரைக் குறித்து கொண்டேன். வீட்டிற்குப் போய் என் பெண்ணிடம் சொன்னேன்.
“நான் மாணவனும் இல்லை; ஸ்காலரும் இல்லை. இருந்தாலும் அந்த பஸ்ஸில் போக அனுமதித்தால், அந்த லைப்ரிகளுக்கும் போய்ப் படித்து விட்டு வருவேனே!” என்றேன். 
“அந்த டிரஸ்டிற்கு எழுதினால் போச்சு” என்றாள். என் வேண்டுகோளை எழுதினாள். உடனே பதில் வந்தது.” உங்கள் அப்பா தாராளமாகப் போகலாம். பஸ் டிரைவர் ஏதாவது கேட்டால் இந்த கடிதத்தைக்  காட்டச் சொல்லுங்கள்” என்று எழுதி இருந்தார் டிரஸ்ட் அதிகாரி. அவ்வளவு தான்! வாரத்திற்கு  மூன்று நாள் டியூக்கின் பெர்கின்ஸ் புத்தகசாலையைப் படையெடுத்தேன், அதன் அருகில் இருந்த லில்லி புத்தகசாலைக்கும் போய் வந்தேன். எல்லாம் பிரம்மாண்டமான புத்தசாலைகள்! (அது கொஞ்சம் பணக்கார சர்வகலாசாலை என்று சொன்னார்கள்.)
சில நாட்கள் கழித்து  அந்த டிரஸ்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. “அடுத்த மாதத்திலிருந்து பஸ்ஸில் போக பாஸ் இருக்க வேண்டும். உங்கள் அப்பாவிற்குப் பாஸ் அனுப்பி வைக்கிறோம்” என்று எழுதி இருந்தார்கள்.
ஆனால் எந்த பஸ் டிரைவரும் ஒரு நாள் கூட என்னை எதுவும் கேட்கவில்லை! சில நாட்களில் பஸ்ஸில் நான் ஒருவன் மட்டுமே போயிருக்கிறேன்!
பெருமையாக என் மனைவியிடம்  “என் முகம்  நோபல் பரிசு பெற்ற பெரிய புரொபசர் மாதிரி இருப்பதால் ட்ரைவர் கேட்கவில்லை” என்றேன். “அதுவும் சரிதான். வாயில் பல் இல்லாததாலும் உங்கள் தலையின் பளபளப்பு அதிகமாக  இருப்பதாலும்  ‘நோ’பல் பேராசிரியராக அவர் கருதி இருப்பார். எது எப்படியோ உங்களிடம் வசமாய் மாட்டிக் கொண்டது இலவசம்” என்றாள்!

6 comments:

 1. Kalyani KrishnamurthyAugust 30, 2013 at 1:05 AM

  Very happy to see you write about my University (Duke) and its surroundings... While Duke and UNC collaborate well academically, they are arch rivals in basket ball.... Both of these universities have blue as their theme color and the shades are different for both. If you happen to see during the basket ball season, you will see different shades of blue fighting with one another...

  ReplyDelete
 2. Great to read this article.

  ReplyDelete
 3. வியக்கவைக்கும் அனுபவங்கள்..!

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு சார்... தொடருங்கள்...

  ReplyDelete
 5. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  அருமையான பகிர்வு. நன்றி.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 6. இது போன்று கூட நடக்குமா? ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!