ஆ, அமெரிக்கா:
--இரண்டு இலவசம்
அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநிலத்தில் சேப்பல்ஹில் என்ற நகரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அந்த மாநிலத்தில்தான் கிட்டிஹாக் என்ற புகழ் பெற்ற இடம் இருக்கிறது. கிட்டிஹாக்கின் புகழிற்கு என்ன காரணம்? அங்குதான் ஆர்வில்-வில்பர் ரைட் சகோதரர்கள் கணக்கில்லாத முயற்சிகளுக்குப் பிறகு முதல் முதல் விமானத்தைப் பறக்க விட்டார்கள்.
ஒரு சமயம் கிட்டி ஹாக்கிற்குப் போனேன். அங்குள்ள ஒரு சிறிய குன்றிலிருந்துதான் அவர்கள் பறந்தார்கள். அவர்கள் சாதனை புரிந்த அந்த குன்றில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருக்கிறது.
குன்றை ஒட்டிய மைதானத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் தரையில் மைல் கல் மாதிரி ஒரு கல்லை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். முதன் முதலில் அவர்கள் பறந்த விமானம், அந்த தூரம்தான் பறந்து வந்து, விழுந்து நொறுங்கியது! ஆண்டு 1903!
ஆனால் அதுவே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அதனால் விமானம் நொறுங்கியதை எண்ணி அவர்கள் மனம் தளரவில்லை. மேலும் ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தந்தையார் ஒரு பிஷப், அவர் ஒரு புத்தகப்பிரியர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார். விமான ஆராய்ச்சி செய்த பலர் எழுதிய புத்தகங்களை சகோதரர்கள் முனைந்து படித்தார்கள்.
ரைட் சகோதரர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.1905’ல் முதன் முதலாக அவர்களுடைய விமானம் அரை மணி நேரம் பறந்தது
கிட்டிஹாக்கில் அந்த புகழ் பெற்ற குன்றுக்கு அருகில் ரைட் சகோதரகள் விமானப் பொருட்காட்சி உள்ளது.
ஐந்தாறு அறைகளில் படங்களும் மாடல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல. முதன் முதல் பறந்த விமானத்தை அச்சு அசலாக மாடல் செய்து வைத்திருக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் 10 டாலர் என்று நினைவு. டிக்கட் வாங்கப் போனோம். டிக்கட் கவுண்டரில் ”இன்று இலவசம். யார் வேணுமானாலும் போகலாம்” என்றார்கள். ஏன் என்று கேட்கவில்லை. இலவசம் என்றால் பரவசம்தானே? பொருட்காட்சியைப் பார்த்து விட்டு வந்தோம். வெளியே வரும்போது ஒரு பணியாளரிடம். “ஆமாம்.. இன்றைக்கு என்ன விசேஷம்? ஏன் இன்று இலவசம்?” என்று கேட்டேன்.