July 25, 2013

எழுத்தாளர் லக்ஷ்மி

பல வருஷங்களுக்கு முன்பு பிரபல எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களை சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த சமயம் பேட்டி கண்டேன். அந்த பேட்டிக் கட்டுரையை இங்கு தருகிறேன்.

“சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு என்னைப் பாராட்டியதற்கு நன்றி.   என்னைப் பொருத்த வரைக்கும் இந்த பாராட்டு என் பெரிய பாட்டிக்குத்தான் சேர வேண்டும் என்பேன்.
விவரமாகச் சொன்னால்தான் புரியும்.. என் பெரிய பாட்டி லக்ஷ்மி, ஒன்பது வயதில் கல்யாணம்ஆகி, ஆறு மாதத்திலேயே கைம்பெண் ஆனவள். அவளுக்கு விதவைக் கோலம் போட்டு, வீட்டின் பின் கட்டில் போட்டு விட்டார்கள். அழகு  என்றால் அத்தனை அழகு, அவளுக்கு இப்படி ஒரு அநீதி இழைக்கபட்டதே என்று எனக்கு ஏகப்பட்ட வருத்தம், கோபம். அவளுக்கு என்னால் ஆனதைச் செய்யவேண்டும் என்று ஒரு துடிப்பு ஏற்பட்டது. நான் சிறுமி. என்ன செய்ய முடியும்? முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தபோது அவள் பெயரைப் புனைபெயராக வைத்துக் கொண்டேன். துரதிர்ஷ்டக்காரி, அமங்கலி என்றேல்லாம் முத்திரைக் குத்தப்பட்ட அவள் பெயர் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு அறிமுகமான பெயர் என்பது மட்டுமல்ல, இன்று தேசிய அளவில் பரிசு பெற்ற பெயராகவும் அமைந்து விட்டது. என் பெரிய பாட்டியின் பெயரை வைத்துக் கொண்டதால்தான் இத்தனை பெரிய அங்கீகாரம் எனக்குக் கிட்டியது என்று நம்புகிறேன். அது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பரிசுப் பணம் பத்தாயிரம் கிடப்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான் என்கிறீர்கல். ஆம். ஆனால்.பிரமாதமான மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. முதன்முதலில் கதை எழுதி, ஏழு ரூபாய் சன்மானம் பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு எதுவுமே இல்லை!

ஏற்காத கதைக்குப் பணம்.
ஒரு வேடிக்கைத் தெரியுமா? என் முதல் கதையைப் படிக்காமலேயே,  பிரசுரத்திற்கு ஏற்றுகொள்ளாமலேயே எஸ்.எஸ்.வாசன் சன்மானம் தந்திருக்கிறார்.
நான் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்த போது ஒருகதையை எழுதிக் கொண்டு பிராட்வேயில் இருந்த விகடன் அலுவலகத்திற்குச் சென்று  எஸ்.எஸ். வாசனைப் பார்த்தேன்.
“ நீ ஸ்டூடண்ட்.. என்ன கதை எழுதி இருக்கப்போகிறாய்?  எழுதினால் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தினால் எழுதி இருக்கிறாய். இந்தா ஐம்பது ரூபாய். உன் கதையை நீ எடுத்துக் கொண்டு போ.. ஒழுங்காய் பாடம் படி.” என்று கூறி அனுப்பி விட்டார்!
கதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது என்றா கேட்கிறீர்கள்? நான் நிறையப் படிப்பேன். அந்த காலத்தில் வந்த பத்திரிகைகளில் சுதேசமித்திரன் பிரபலமானது. அதில் கும்பகோணம் குப்புசாமியின் கதைகள் வெளியாயின. குப்புசாமி ஒரு தெனாலிராமன் மாதிரி. சுமார் 40 கதைகள் வந்து முடிந்து விட்டது.. “குப்புசாமியை பற்றி இன்னும் இரண்டு கதைகள் இருக்கிறதே!” என்று என் அப்பா சொன்னார். அந்த கதைகளை விவரமாக் என்னிடம் சொன்னார். எழுதக் கதை கிடைத்தது! இரண்டு கதைகளையும் எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பிவிட்டேன். உடனே திரும்பி விட்டது. நான் அதற்குப் பிறகு பல கதைகள் எழுதினேன். எல்லாம் வாபஸ்!

முதல் நாவல்
 முதல் நாவல்தானே? சொல்லுகிறேன். விகடன் உதவி ஆசிரியர் சசி ஒரு சமயம், “ தொடர்கதை எழுதினால் வாராவாரம் பெயர் பேப்பரில் வரும். அதனால் உங்கள் பெயர் பிரபலம் ஆகமுடியும்” என்றார். மிகவும் சிரமப்பட்டு, இருபது அத்தியாயங்களில் ‘பவானி’ என்ற நாவலை எழுதினேன். வாசன் அவர்களை அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். வாசன் வருவதற்குள் திருமதி பட்டம்மாள் வாசனை கொஞ்சம் நைஸ் பண்ணி வைத்தேன்.
“கதையெல்லாம் படிக்க எனக்கு டயம் இல்லை. தேவனிடம் கொடு” என்றார்.
பிறகு என்ன தோன்றியதோ, “சரி.. நாங்கள் இப்போது பெங்களூருக்குப் போகிறோம். பட்டம்மாளைப் படிக்கச் சொல்லி கேட்கிறேன்” என்றார்
நம்புங்கள். பெங்களூரிலிருந்து திரும்பியதும் “பவானி” ஏற்கப்பட்டு விட்டதாகத் தகவல் அனுப்பினார்! மகிழ்ச்சியினால் நான் விண்ணைத் தொட்டு விட்டேன்!
இன்னும் எத்தனை வருஷங்கள் எழுத முடியும் என்று கேட்கிறீர்கள்” நான் ஒரு டாக்டர், ஒரு எழுத்தாளர். இரண்டு தொழிலுக்கும், முடிவோ  ஓய்வோ கிடையாது. என் கடைசி மூச்சு உள்ளவரை எழுதுவேன். எழுத முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது வரை சின்னதும் பெரியதுமாக நூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். இன்று பத்திரிகைகள் பெருகி விட்டன. அவைகளுக்குத் தீனி போட எங்களை ஆசிரியர்கள் நெருக்குகிறார்கள். அதன் காரணமாக நிறைய நாவல் எழுதுகிறேன்.
சிறுகதைகளைப் பற்றிக் கேட்காதீர்கள். சிறுகதை எழுதுவது மிகவும் கஷ்டமான வேலை..  யாராவது சிறுகதை கேட்டால் ரொம்ப அவஸ்தைதான்.

.செக்ஸ் எழுத பயமா?
இன்றைய நாவல்களில் பாலுணர்வு சற்று அதிகம் இருப்பதைப் பற்றி என் கருத்தா?  ஆமாம், ஓரளவு அதிகரித்துதான் உள்ளது. பெண்களை இப்படிக் கேவலப்படுத்துவதைக் கண்டு எனக்கு மகா கோபம் வருகிறது. வாழ்க்கையில் செக்ஸ் ஒரு சிறிய பாகம்தான். அதை இவ்வளவு விரிவாக எழுத வேண்டுமா? “அவன்சாப்பாடு  சாப்பிட்டான்” என்று எழுதுவதை, இலை போட்டது முதல், சாதம் போட்டு நெய் ஊற்றி,குழம்பை அதில் சேர்த்துக் கலப்பதையும், கறியை எடுத்து கொள்வதையும் விவரித்தால் எவ்வளவு போரடிக்கும்” அதுமாதிரி செக்ஸ் விவரங்களையும் பக்கம் பக்கமாக எழுதினால் போர் அடிக்கும்;அடிக்கிறது.
செக்ஸ் எழுத பயமா என்றுதானே கேட்கிறீர்கள்? நான் ஏன் பயப்படவேண்டும்? நான் டாக்டர். எனக்கு செக்ஸ் பற்றி நிறைய தெரியும். ஆனால் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. மாறாக எழுதக்கூடாது என்றுதான் தோன்றுகிறது.ஆகவே குடும்பப்பாணி நாவல்களை தொடர்ந்து எழுதுவேன். உலகமும் மக்களும் பிரச்னைகளும் உள்ளவரை என் கதைகளுக்கான ஐடியாக்களுக்குப் பஞ்சமே இல்லை! ஆகவே இன்னும் பல ஆண்டுகள் எழுதிக் கொண்டேதான் இருப்பேன் -- வாசகர்களின் வரவேற்பு இருக்கும்வரை!
வணக்கம்.

4 comments:

 1. காத்திருத்தலுக்கு பலன் அமோகம் தான்! லக்ஷ்மி அவர்களின் குடும்ப நாவல்கள் அன்று மிகவும் பிரபலம். நான் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.

  சாகித்ய அகாடமி பரிசு குறிப்பிட்ட நாவலுக்கா, அல்லது பொதுவாக சிறந்த எழுத்தாளர் என்பதற்கா?

  எனக்கு ‘கும்பகோணம் குப்புசாமி’யைத் தெரியாது, குரும்பூர் குப்புசாமியைத்தான் தெரியும் (தினத்தந்தி!)! - ஜெ.

  -ஜெ.

  ReplyDelete
 2. "ஒரு காவிரியைப் போல" என்ற நாவலுக்குக் கிடைத்தது என்று நினைக்கிறேன்.
  பொதுவாக சிறந்த எழுத்தாளர் என்பதற்காகக் கொடுக்கப்படும் விருதாகத்தான் கருத வேண்டும்.?

  ReplyDelete
 3. மேலே உள்ள கார்ட்டூன் - இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்டது மெட்ரிக் முறைதான் என்று நினைக்கிறேன்! அமெரிக்காதான் இன்னும் 'pound ' ஐக் கட்டிக்கொண்டு படுத்துகிறது! - ஜெ.

  ReplyDelete
 4. படிக்க ஆரம்பித்த நாட்களில் லஷ்மி கதைகளில் ரொம்ப ஈடுபாடு.. இப்போது எழுதுகிற - பெண் கதாபாத்திரங்களை - மையமாய் வைத்து எழுதுகிற பல எழுத்தாளர்களுக்கு அவர்தான் முன்னோடி..

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!