அமெரிக்காவிற்கு நாலைந்து தடவைக்கு மேல் போய் வந்திருக்கிறேன். அங்கு பல புதிய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. மனித நேய அனுபவங்களையும், நாம் பார்த்துக் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் பார்த்து வியந்திருக்கிறேன். அமெரிக்காவில் பல கசப்பான விஷயங்களைச் செய்தி தாள்கள் மூலமும் டி.வி.மூலமும் அறிந்திருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும் அமெரிக்க அனுபவங்களை ஒன்றிரண்டு தடவை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன். அதன் பிறகு யாரிடமும் விரிவாகச் சொல்வதை நிறுத்திக்கொண்டேன்.. காரணம் அவற்றைக் கேட்கும் ஆர்வம் பலரிடம் இருப்பதில்லை. “ பெரிசா அமெரிக்கா போய்வந்துட்டாராம். வாய் ஓயாமல் துதி பாடறார்” என்று (பொறாமை கலந்த) ரகசியப் பின்னூட்டம் போடுவார்கள்! “அமெரிக்கா போய் வர்றவங்களுக்கு நம்ம ஊரைப் பற்றி மட்டமாகப் பேசறது ஒரு ஃபாஷன்:” என்ற கருத்துக் குத்துகளும் வரும். யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். வேறு சிலர் வேறு மாதிரி மூக்கில் குத்துவார்கள். நம்மைப் பேச விடாமல், “அதெல்லாம் இருக்கட்டும்..,நீ நயாகரா பார்த்துவிட்டு வந்தாயா?” என்று கேட்பார்கள். “ பார்க்கவில்லைஎன்று நீங்கள் சொன்னால், “ போ.. என்ன அமெரிக்கா போய்விட்டு வந்தாயோ, நயாகரா பார்க்காமல்!” என்று அலுத்துக் கொள்வார்கள். “ஆர்லேண்டோ போய் டிஸ்னி லாண்ட் பார்த்து விட்டு வந்தேன்” என்று சொன்னால், “ அப்படியே பக்கத்தில்(?) இருக்கிற ஹாலிவுட்டைப் போய் பார்த்திருக்கலாமே. (அமெரிக்கா தேச வரைபடத்தில் ஆர்லேண்டோவிலிருந்து மூன்று அங்குலம் தள்ளி ஹாலிவுட் இருப்பதால், பக்கத்தில் இருப்பதாக அவர் ஐடியா! உண்மையில் 2500 மைல் தூரம்!)