நான் டில்லியில் இருந்த போது வாரத்திற்கு மூன்று நாட்களாவது, என் அலுவலகத்திற்கு வெகுஅருகில் இருந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்குப் போவேன். அங்கு வரும் PUNCH, TIME and TIDE, Listener, Private Eye போன்ற பத்திரிகைகள், தினசரிகள் எல்லாவற்றையும் படிப்பேன். பல பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் ரசிகன் ஆனேன். அவர்களில் ஒருவர் ஜான் க்ளீஸ் (JOHN CLEESE) என்னும் காமெடி எழுத்தாளர்,
ஜான் க்ளீஸ் எழுதிய பி.பி.சி காமெடி ஷோ MONTY PYHTHON'S FLYING CIRCUS மிகவும் பிரபலம். பின்னால் அது டி வி டியாகவும் வெளியாயிற்று. விற்பனை சுமார்தான். காரணம், ஏராளமான பேர் அந்த ஷோவின் பல பகுதிகளை யூ-ட்யூபில் வெளியிட்டு விட்டார்கள்.
இதற்கு என்ன வழி செய்வது என்று ஜான் க்ளீஸும் மற்றவர்களும் மண்டையை உடைத்துக் கொண்டார்கள். கடைசியில் ஒரு குயுக்தியான ஐடியா செய்தார்கள். YOU TUBE தளத்தில் MONTY PYTHON CHANNEL என்ற பெயரில் புதிய ஒளிபரப்புச் சேனல் துவங்கப்போவதாக -ரீல்தான்!- ஒரு அறிவிப்பு விடியோவைச் சேர்த்தார்கள். அதில் “எங்கள் MONTY PYTHON-ன் பல பகுதிகளைப் பலர் தாங்களாக ரிகார்ட் செய்து யூ-டியூபில் போட்டு வருகிறர்கள். அவற்றில் பல தெளிவான தரத்தில் இல்லை. இனி கவலை வேண்டாம். துல்லியமான தரத்துடன் இந்த சேனலில் தொடர்ந்து இலவசமாக ஒளிபரப்பப் போகிறோம்.
பதிலுக்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் அபத்தமான, போரடிக்கும் கருத்துகளைக் கேட்கவில்லை. இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஏற்பட்ட வலிக்கும் மன உளைச்சலுக்கும் இதம் அளிக்க, இங்குள்ள சுட்டியில் கிளிக் செய்து டிவிடியை வாங்குங்கள்.