பிப்ரவரி மாதம் வந்தாலே ஆசிரியர் சாவியின் நினைவு கூடுதலாகவே வந்து மனதில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். அவரது 85 வது பிறந்த தின பாராட்டு விழாவில் மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே இறைவன் திருவடி அடைந்தார்.
நம்ப மாட்டீர்கள், பிறந்த தின விழா அழைப்பிதழை டில்லியில் இருந்த எனக்கு
அவர் கைப்பட முகவரி எழுதி எனக்கு அனுப்பி இருந்தார்! குறைந்தது 500-600 அழைப்பிதழ்களாவது அனுப்பபட்டிருக்கும். அதில் என் அழைப்பிதழில் அவரே எழுதியதை எண்ணி நான் ஜம்பம் அடித்துக் கொள்ள இதைக்குறிப்பிட வில்லை. நட்பைப் போற்றும் அவரது பண்பை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
விழா நடந்த அன்று நான் அமெரிக்காவிற்குப் புறப்பட்டேன். அருமை நண்பர் ராணி மைந்தன், தான் எழுதிய “ சாவி 85” புத்தகத்தை ( விழாவில் வெளியிடுவதற்கு முன்பே!) எனக்கு அனுப்பியிருந்தார். நான் புறப்படும் தினம் புத்தகம் எனக்கு வந்தது. விமானத்தில் படிக்க எடுத்துக் கொண்டேன். அப்படியே படித்துக் கொண்டு போனேன். ” எத்தனை பெரிய எழுத்தாளர் சாவி. அவருடைய தொடர்பும் பாசமும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்ததை எண்ணி, கண்களில் நீர் மல்க மெய்மறந்தேன். அமெரிக்காவில் இறங்கியதும் அவர் மயங்கி விழுந்த தகவல் வந்தது. அப்போது கண்ணீர் விட்டு அழுதேன்.
சாவியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம், அவ்வப்போது எழுதினால் தான் எனக்கு மன நிம்மதி ஏற்படும்,
= =
ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்: “ சார்..உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல வேறு அனுபவங்களை என்னிடம் பல சமயம் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சுய சரித்திரத்தை நீங்கள் எழுதுங்களேன்”
அதற்கு அவர், “நான் என்ன சாதனை செய்திருக்கிறேன், சுய சரித்திரம் எழுதுவதற்கு?” என்று கேட்டார்.
”இல்லை செய்துதான் இருக்கிறீர்கள். சில சம்பவங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. சில, எங்கள் போன்றவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடியவை. தோல்விகளைக் கண்டு துவளாது, அவற்றிலிருந்து மீண்டு கம்பீரமாக நீங்கள் எழுந்து வந்திருப்பது பலருக்கு நம்பிக்கையைத் தரும்” என்றெல்லாம் சொன்னேன்.
”உங்கள் ஆசை எனக்குத் தெரிகிறது. சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் பிரமாதமாக எதையும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை” என்றார். அத்துடன் நான் நிறுத்திக்கொண்டேன்.
அவர் சொன்ன ஒரு குடும்ப நிகழ்ச்சியை அவர் எழுதுவது மாதிரி ஒரு கட்டுரையை சில நாட்கள் கழித்து எழுதினேன். அதில் என் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை. தபாலில் அவருக்கு அனுப்பினேன்.