December 02, 2012

ஜி.பி.ஓ வாழ்க்கை-6

ஜி.பி.ஓ வாழ்க்கை-6
( முதல் 5 பதிவுகளைத் தேடிப் பிடித்து படியுங்கள்.)

ஜி.பி.ஓ  ரிக்ரியேஷன் கிளப் உறுப்பினராகச் சேருவதற்கு ஒரு விண்ணப்பப் படிவத்தைத் தந்தார்கள்.வழக்கமான கேள்விகளுடன் கடைசியில் ஒருபாரா அளவுக்கு இடம் விட்டு,  அதில்: உங்களுக்குத் தெரிந்த கலை, விளயாட்டு, நாடக ஆர்வம்,  இசைக் கருவிகளில் தேர்ச்சி போன்ற விவரங்களை எழுதவும்: என்று போடப்பட்டு  இருந்தது.


மோனோ ஆக்டிங், நாடகம் எழுதுவது, நடிப்பது, நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவது என்று பாதி உண்மையாகவும் பாதி ரீலாகவும் என்னைப்பற்றி  அளந்து விட்டேன்.\விரைவில் கிளப் தேர்தல் நடந்தது. அதற்கு முன்பு  ஜெனரல் பாடி மீட்டிங் நடந்தது. ( பொதுக்குழு கூட்டம் என்று தூய தமிழில் எழுதினால் அதில் அரசியல் வாடை வரும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டேன்!)
யார் யாரோ போட்டி இட்டார்கள். கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் நடந்தன. ‘இதை எப்படி செலவு செய்தீர்கள்:  பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செய்யப்பட்டு இருக்கிறதா?  MANDATE  இருக்கிறதா? EX-POST FACTO சாங்கஷன் கொடுத்தீர்களா, ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு 15 நாள் நோட்டிஸ் கொடுத்திருக்கவேண்டுமே, 13 நாள் தானே கொடுத்திருக்கிறீர்கள்?  என்பது போன்ற கேள்விகள். ( அன்று வீட்டுக்குப் போனதும் அகராதியை எடுத்து, பல ஆங்கில  வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்!)  ஒரு விஷயம்: ஊழல் என்ற வார்த்தை  வரவில்லை அதிருப்தியை தெரிவித்தார்களே  தவிர  ’கசப்பு  அர்ச்சனை’ எதுவுமில்லை.  எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் ’அரசியல்    வைரஸ்’ அவ்வளவாக பரவாத காலகட்டம் அது! மீட்டிங்கில் யார் உரக்கப் பேசினார்களோ அவர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றி  பெற்றார்கள். ( அடுத்த  ஜெனரல் பாடி மீட்டிங்கில் அவர்களை நாம் காய்ச்சலாம் என்ற ஆர்வத்தால்  பலர் ஓட்டு போட்டிருப்பார்களோ என்னவோ!)

கிளப்பின் புதிய நிர்வாகிகள்  எல்லாரும் இளைஞர்கள். நுழைவுதேர்வு மூலம்  வேலைக்குத் தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கிட்டதட்ட எல்லாருமே பட்டப் படிப்பு படித்தவர்கள்.சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தார்கள். உறுப்பினர்கள் பலருக்கு வெவ்வேறு இசைக்கருவியை வாசிக்கும் திறமை இருப்பதைப் பார்த்து  ஜி,பி.ஓ ஆர்கெஸ்டிராவை உருவாக்கிவிட்டார்கள்.
அது மட்டுமல்ல; ஒரு நாடகக் குழுவையும் அமைத்து விட்டார்கள்.

முதலில் ஒருகலை விழா நடத்த திட்டமிட்டார்கள். ஜி.பி. ஓ சதுக்கத்தில்  கலை நிகழ்ச்சிகள்,  நாடகங்கள் நடந்தன.   அதற்குப் பிறகு வருஷா வருஷம் நடந்தன. பலவற்றில் நான் முனைப்புடன்  ஈடுபட்டு பங்கெடுத்துக் கொண்டேன். அந்த காலத்தில் பயங்கர பாப்புலராக இருந்த  GUP AND GAS  என்னும் நகைச்சுவை நாடகத்தைப் போட்டு கலக்கி விட்டோம். அதன் பிறகு சோவின்  QUO VADIS  நாடகம், பாலசந்தரின் ‘புஷ்ப லதா’ நாடகம், நான் எழுதிய  ‘அந்த நாள்’ ‘ எல்லாம் உனக்காக’ நாடகங்கள்,கதம்ப நிகழ்ச்சி, மோனோ ஆக்டிங்க் அன்று நடத்தினோம். ( நடத்தினேன் என்று சொன்னாலும் தவறில்லை.) இந்த சம்யம் எனக்குப் பல விதத்தில் உதவியவர் ”’கலா கேந்த்ரா’ கோவிந்தராஜன். அவர் செங்கற்பட்டுக்காரர்.  தபால் இலாகா ஊழியரும் கூட.  DEAD LETTER  OFFICE-ல் அப்போது   பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சோ  நாடகத்தைப் போட்ட போது அவருடன்  அவரது குழு நடிகர்கள் பலரும் வந்திருந்தார்கள்.
பாலசந்தரின் ‘புஷ்பலதா’ நாடக ஸ்க்ரிப்டை சுமார் 20 வருஷங்களுக்குப் பிறகு .டில்லியில் சந்தித்த சமயம்  அவரிடம் திருப்பிக் கொடுத்த போது அவர் பெற்ற  அபார  மகிழ்ச்சியை விவரிக்க முடியாது!

அந்த சமயம் பிரிசிடென்சி போஸ்ட்மாஸ்டராக இருந்தவர் ஒரு அற்புதமான மனிதர். அவரை  பற்றி ஒரு குட்டி புத்தகமே எழுதலாம். அவர் கொடுத்த ஆதரவு, ஒத்துழைப்பு, சலுகைகள் ஆகியவைகளை இங்கு விவரிக்கப் போவதில்லை. ஜி.பி. ஓ சதுக்கத்தில் மூன்று நாள் விழாவிற்கு  FOREIGN PARCEL DEPARTMENT'-லிருந்து ஆறு பிரம்மாண்டமான மேஜைகளை எடுத்துக் கொண்டோம். ( அந்த  செக் ஷனில் இருந்த சில முணு முணு பேர்வழிகள்  “என்னப்பா  இப்படி மேஜையை எடுத்துகிட்டு போய்ட்டா பார்சலை, எங்கே வைக்கிறதாம்?  நாங்க வேலை செய்யணுமா, வேணாமா?” என்று மூக்கால் அழுவார்கள்.

 ஜி பி ஓ-வே ஒரு குடும்பம் மாதிரி இருந்த கால கட்டம் அது.  “ சார். எங்க ‘பீட்’ல் இருக்கிற கம்பெனிகாரங்களை கேட்டு சாவனீர் விளம்பரம் வாங்கித் தருகிறேன்” என்று பல தபால்காரர்கள் தாங்களாகவே முன் வந்தார்கள். (விளம்பரக் கட்டணம், முழு  பக்கத்திற்கு ரூ.100! (ப்பூ!)

 நாடகங்களுக்குத் தேவையான டிர்ஸ்களை என் நண்பர் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதருடைய அலுவலகத்திற்குச் சென்று எடுத்து வருவேன்.  ஜுலியஸ் சீசர்  மோனோ ஆக்டிங், கட்டபொம்மன், ‘வானம் பொழியுது’ வசன காட்சி ஆகியவற்றிற்குத் தேவையான  டிரஸ்களை எடுத்து வந்தேன். ஒரு சமயம், உத்தம புத்திரன் படத்திற்குத் தைத்த   வெல்வட்  டிர்ஸ்கள், கிரீடம் எல்லாம் எடுத்து வந்தேன். கட்டபொம்மனாக  நடித்தவருக்கு ஒரே பெருமை. ’உன்னாலேதான்பா சிவாஜி டிரஸ்ஸை போட்டுக்கிற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது” என்று அவர்  பல தடவை சொல்லி இருக்கிறார்.  என் மீது அவருக்கு ராஜ விசுவாசமே வந்து விட்டது என்பேன்!      .

ஒரு சமயம் ஏ.எம். ராஜா -ஜிக்கி மெல்லிசை நிகழ்ச்சியை ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட தினம் ராஜாவிற்கு மிக முக்கியமான வேலை வந்து விட்டது. அதுவும் ஸ்ரீதரின் படத்திற்கு அவசரம் அவசரமாக பின்னணி இசை ரிகார்ட் பண்ண வேண்டி வந்து விட்டது. யார் யாருக்கோ ஸ்ரீதர் போன்   பண்ணி மாற்று ஏற்பாடு பண்ணப் பார்த்தார்.  எதுவும் அமையவில்லை. அப்போது உச்சத்திலிருந்த தேவிகாவை தான்னுடன் அழைத்து வருவதாகச் சொன்னார். ”ராஜா வர முடியாததற்கு விளக்கமும் மேடையில் சொல்கிறேன்” என்றார்.

அதன்படியே வந்தார்..  தேவிகாவை பார்த்ததுமே ராஜாவை பற்றி கிட்டத்தட்ட  எல்லாரும் மறந்து விட்டார்கள். தேவிகா, ஸ்ரீதர் பேசினார்கள். அதுவே சுவையான நிகழ்ச்சியாக அமைந்து விட்டது!  தேவிகாவைப் பார்க்க பீச் ரோடு. செகண்ட்  லைன் பீச்,  அங்கப்ப நாயக்கன் தெரு, தம்பு செட்டித் தெரு, மண்ணடி என்று பல  இடங்களிலிருந்து சினிமா ரசிகர்கள்  ஜி.பி. ஓ சதுக்கத்தில் குவிந்து விட்டார்கள்.
இப்படி கலை விழா நடத்தித் தூள் கிளப்பி விட்டதாலும் , நாடகம்  எழுதி நடித்ததாலும் ஜி.பி. ஓ.-வில் எனக்கு ஓரளவு பிராபல்யம் கிடைத்தது.  அதன் காரணமாக போஸ்டல் யூனியனில் என்னை நுழையச் சொன்னார்கள் சில நண்பர்கள். நான் தயங்கினேன்.
விதி வலிது. யூனியனில் சேர்ந்து, மேடைகளில்  பேசி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கார்ட்டூன்கள் போட்டு, கைதாகி...

அவை அடுத்த பதிவில்

6 comments:

 1. தேவிகாவை பார்த்ததுமே ராஜாவை பற்றி கிட்டத்தட்ட எல்லாரும் மறந்து விட்டார்கள்.

  :) அதுதான் ஸ்ரீதரோட ஐடியாவா இருக்குமோ.!

  ReplyDelete
 2. Seems you had an enjoyable career! Now, we are enjoying your experiences!- R. J.

  ReplyDelete
 3. ரிக்ரியேஷன் கிளப்பில் இத்தனை அனுபவங்கள் இருக்கும்போது...யூனியனில்...????? அடுத்த பதிவு சீக்கிரமே போடுவீர்களா?

  ReplyDelete
 4. மீட்டிங்கில் யார் உரக்கப் பேசினார்களோ அவர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். !!!????

  ReplyDelete
 5. எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு....

  சீக்கிரம் அடுத்த பகுதியையும் போடுங்க....

  ReplyDelete
 6. யூனியன் பக்கம் போயிடாதீங்க !

  ஆனியனை உரிக்கறாப்பல

  உரிச்சுடப் போறாங்க அப்பூ
  http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/12/blog-post_5.html

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!