November 27, 2012

நான் பாக்யராஜ் அல்ல!

உலகிலேயே எனக்குப் பிடிக்காத விஷயம் இரண்டு, முதலாவது: பூகோள பாடம். (காரணம், கடந்த 25 வருஷங்களாக அந்த பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதால்.) இரண்டாவது: பள்ளிக்கூடத்தில் இரண்டாவது பீரியட். (காரணம், அந்த பீரியட்டில் எனக்கு எந்த கிளாஸும் கிடையாது. ஆகவே லேசாகத் தூக்கம் வரும். அந்த தூக்கத்தை அனுபவிக்க விடாமல் டீச்சர் ரூமுக்கு அடுத்த அறையில் உள்ள மியூசிக் கிளாஸிலிருந்து பலவித சங்கீதக் கதறல் வரும். அதுவும் அந்த மியூசிக் டீச்சர் கோகிலா இருக்கிறாளே... ஹூம்... அவங்க பேர் கோகிலாங்கறதுக்குப் பதிலா காக்கா என்று இருக்க வேண்டும்!)

அப்படித்தான் அன்று பூமத்திய ரேகையைப் பற்றியும் வடகிழக்குப் பருவமழையைப் பற்றியும் போதித்துவிட்டு, டீச்சர் ரூமிற்கு வந்து மூட்டைப்பூச்சிகளின் சாம்ராஜ்யமான ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு மினி கொட்டாவி விட்டேன். கோகிலாவின் பாட்டு கிளாஸ் (அதாவது கூப்பாட்டு கிளாஸ்) துவங்குமுன் ஒரு கோழித் தூக்கம் போடலாம் என்று.
லேசாகக் கண் அயர்ந்தேன். "சார்... சாமுவேல் சார்... சார்...'' என்று யாரோ தீந்தமிழில் குரல் கொடுத்தார்கள். (உண்மையைச் சொல்லப்போனால் தீய்ந்த தமிழ்க்குரல் அது! அவ்வளவு கர்ண கடூரம்!) கண்ணை விழித்தேன். எதிரே, மியூசிக் டீச்சர் கோகிலா ஆசீர்வாதம்.

"என்னம்மா...'' என்றேன், மனதிற்குள் சபித்துக்கொண்டே.
"ஸ்கூல் ஆன்யூவல் வருதே. அதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தப் போறோம். கமிட்டியில் நாம் இரண்டு பேரும் இருக்கிறோம்.''
"யார் இப்படி கமிட்டி போட்டது? இப்பதான் போன மாசம் ஸ்போர்ட்ஸ் கமிட்டியிலே, அதுக்கு முன்னே பிக்னிக் கமிட்டியிலே, சோஷல் சர்வீஸ் கமிட்டி, தேரடி கமிட்டி, தெருப்புழுதி கமிட்டி எல்லாத்துக்கும் இந்த சாமுவேல்தான் அகப்பட்டான்! ஹெட்மாஸ்டரை நானே போய் கேட்கறேன்.''
"எங்கேயும் போகவேண்டாம். நானே வந்துட்டேன். என்ன சாமுவேல், ரொம்ப கோபமாக இருக்கீங்க...'' - ஹெட்மாஸ்டர்தான்!

 "கோபமும் இல்லை, பாபமும் இல்லை சார்... அடுத்த மாசம் இன்ஸ்பெக் ஷன் வருது.  சிலபஸ் கம்ப்ளீட் பண்ணணும்.'' அசடு வழிந்தேன்.
"சாமுவேல், உங்கள் பூகோள பாடத்தைப் பற்றி எந்த இன்ஸ்பெக்டரும் கவலைப்பட மாட்டார்... பூகோளப் பாடம் ஒண்ணுதான் ரொம்ப வருஷமாக மாறாமல் இருக்கு, நம்ப கோகிலாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க. நீங்க ஒரு காரியத்தில் இறங்கினால் பிரமாதமாக நடத்திப்புடுவீங்க...''

ஹெட்மாஸ்டர் எபனேசர் காரியவாதி. அதனால்தான் எனக்கு ஐஸ் வைத்தார்.
"ஆமாம் ஸார்! நம்ம சாமுவேல் ஸார்தான் பசங்களை நல்லா கவனிச்சு சொல்லிக் கொடுப்பார்'' என்றாள் கோகிலா.

அந்த சமயத்தில் தமிழாசிரியர் பாண்டியன் உள்ளே வந்தார். "வேலும் மயிலும் துணைன்னு சொன்னவங்க எந்த வேலைச் சொன்னாங்க தெரியுமா, நம்ப சாமுவேலைத்தான்'' என்று சொல்லி கடகடவென்று சிரித்தார். ஜோக் அடித்தால் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார்!
"ஏன்யா, வேலு.. கலை நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது ஐடியா வெச்சிருக்கீரா...? "திருவள்ளுவர் - ஔவையார் உரையாடல்னு ஒரு அரைமணி நேர நாடகம் எழுதியிருக்கிறேன். தள்ளிவிடுகிறீரா?''

"தள்ளிவிட வேண்டியதுதான்... ஐயா... ஒரு தாடி ஆசாமியும் கிழவியும் ஸ்டேஜிலே அரை மணி நேரம் இருந்தாங்கன்னா, பசங்க விஸில் அடிச்சே குளோஸ் பண்ணிடுவாங்க. பாண்டியன், தொல்காப்பியம் சொல்லிக் கொடுங்க. ஆனால் தொல்காப்பிய காலத்திலேயே இருந்துக்கிட்டு இருக்காதீங்க!'' என்றேன் சற்றே சூடாக.

"அடே, நீங்க ஒண்ணு சாமுவேல் சார்... சும்மா தமாஷுக்குச் சொன்னார் பாண்டியன்'' என்று கோகிலா சொல்ல...
"தமாஷும் இல்லை, ஒண்ணும் இல்லை. நீங்க கலை நிகழ்ச்சியாவது நடத்துங்க, கொலை நிகழ்ச்சியாவது நடத்துங்க'' என்று கோபமாகச் சொல்லிக்கொண்டே பாண்டியன் வெளியே போய்விட்டார்.
"சார்... அவர் போவட்டும்... உட்காருங்க... என்னென்ன ஐட்டம் போடலாம்'? என்று ஆரம்பித்த கோகிலா, என்னை சிறிதும் பேச விடாமல் அடுத்த அரைமணி நேரம் அவளே பேசினாள்.

"சாமுவேல்... ஒரு புது ஐட்டம்... இது வரை யாரும் ’ட்ரை' பண்ணாத புரோகிராம், அது இது'' என்று சொன்னாள். கடந்த 20 வருடங்களாக இன்ஸ்பெக் ஷன் டே, சுதந்திரதினம், ஆன்யுவல் டே என்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நடத்திக்கொண்டு வரும் அதே நிகழ்ச்சிகளை "புது ஐடியாதான்' என்று சொன்னேன். இல்லாவிட்டால், என்னைத்தானே ஐடியா கேட்பாள்!

ஹெட்மாஸ்டர் அறையில் நுழைந்தபோது அவர் சூடாக இருப்பதை உணர முடிந்தது. கிளார்க் ஜோசப் மிகவும் மும்முரமாக வேலையில் இருந்தான் அல்லது வேலையில் இருப்பது போல இருந்தான்!

என்னைப் பார்த்ததும் ""வாய்யா சாமுவேல், என்னய்யா நீயும் அந்த கோகிலமும் நெனைச்சுகிட்டு இருக்கீங்க... ரோமியோ ஜூலியட் நாடகமா போடறீங்க... ஏற்கெனவே பசங்க சினிமா பாத்து கெட்டுப் போறாங்க. நிகழ்ச்சிக்குத் தலைமை யர் தெரியுமா? குறள் பித்தன் குமரேசன் எம்.பி.! ஏன்யா, ஸ்கூலை நாம நடத்தணுமா, இல்லை இழுத்து மூடணுமா? திருக்குறள் சம்பந்தமாக பேச்சுப் போட்டி, கருத்தரங்கம் என்று கலை நிகழ்ச்சி நடத்துவாங்களா...''
"அது கலை நிகழ்ச்சியாகாது சார். இலக்கிய நிகழ்ச்சி''
"சாமுவேல்... கலையையும் இலக்கியத்தையும் சேர்க்க முடியும்... நம்ப பாண்டியன் அபாரமான ஐடியா வெச்சிருக்கார். "வள்ளுவரும் ஔவையாரும்'னு...''
ஓஹோ! பாண்டியன் வேலையா!
”அப்போ... புதுசா ரிகர்சல் ஆரம்பிக்கணும்... பாண்டியனைப் போய்ப் பார்த்து ஸ்கிரிப்டைக் கேட்கறேன்.''
*                       *                    *
"பத்திரம் சார் - பாத்து ஏறுங்க...'' கீழே இருந்து கோகிலா குரல் கொடுக்க ஏணி மேல் ஏறிக் கொண்டிருந்தேன். மறுநாள் கலை நிகழ்ச்சிகள், டிராமாவிற்கு வேண்டிய டிரஸ், சீன், பெட்டிகளை பரணிலிருந்து எடுக்க வேண்டிய வேலையும் என் தலையில் விழுந்தது.  பூமாலை, போட்டோகிராபர் இவைகளுக்கு ஆர்டர் கொடுக்க ஹெட்மாஸ்டர் போயிருந்தார். கூடவே பியூனையும் அழைத்துப் போயிருந்தார்.

"சாமுவேல் சார்... பியூனை எதிர்பார்த்தா காரியம் ஆவுமா...? பரண் மேல நாம்பதான் ஏறணும்'' என்று கோகிலா சொன்னாள். ’நாம்ப' என்பதற்குப் பொருள் ’நீ' என்று அவள் அகராதியில் அர்த்தம்!
ஏதாவது ஒரு மாணவனை ஏறச் சொல்லி இருப்பேன். ஆனால் எங்கள் ஸ்கூலில் மாணவர்கள்தான் வி.ஐ.பி.கள். எல்லாரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்!

பரணில் தூசி அதிகமா, இருட்டு அதிகமா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். பள்ளிக்கூடம் கட்டியபோது வாங்கிய சாமான்களில் மீந்துபோனவைகளுக்கு நடுவே பல பெட்டிகள், சீன் துணிகள், டிரஸ் பெட்டிகள் எல்லாம் இருந்தன. முதலில் டிரஸ் பெட்டியை இறக்கலாமென்று லேசாக அதை இழுத்தேன்.

’இழுத்தது கண்டனர்; கீழே விழுந்தது கண்டனர்' என்று கம்பன் பாணியில் விவரிக்கலாம், அடுத்த செகண்டு நடந்த சம்பவத்தை! பெட்டிக்குப் பின்னால் ஒரு எலிகள் காலனி இருக்கும் என்று நினைத்தேனா? அல்லது எலிகள் ஏழெட்டு கூட்டணி அமைத்து என் மேல் பாயும் என்று நினைத்தேனா? ஒரே ழகரத்திலேயே கூக்குரலிட்டபடியே கீழே விழுந்தபோது, அங்கு இருந்த கோகிலாவின் மேல் நான் விழ, அதே சமயம் ஏணியும் சரிந்து என் மேல் விழ, அதன் கனம் தாங்காமல் கோகிலாவின் மீது சாய்ந்து ஆலிங்கனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது!

இந்தக் குழப்பத்திலும், முடிவில் ஏற்பட்ட கட்டிப்பிடித்தலின்போதும் கோகிலா, தன் கோகிலமற்ற குரலில் கிரீச்சிட, ரிகர்சல் அறையிலிருந்த வள்ளுவரும், ஔவையாரும், பாரி, குமணன் போன்ற கதாபாத்திரங்களும் அங்கே வந்து கிடைத்தற்கரிய காட்சியைக் கண்டனர்! "ஏதோ பார்த்தோம், விடுவோம்' என்று இருந்துவிடுவார்கள் என்று நான் நினைத்து ரிகர்சலை ஆரம்பிக்கச் சொன்னேன்..

"வாங்கப்பா... ரிகர்சலை நடத்தலாம். டிரஸ்ஸை நாளைக்கு எடுத்துக்கலாம்... ஆரம்பிப்பா... திருவள்ளுவன்'' என்று பரபரப்புடன்  சொன்னேன்.
ரிகர்சல் அரை மணி நடந்திருக்கும்.. அப்போது ஹெட்மாஸ்டர் வந்தார். அவர் முகம் கடுகடுவென்று இருந்தது (அதாவது வழக்கமாக இருப்பதை விட அதிக கடுகடு!)
"என்னய்யா சாமுவேல், கோகிலா! ரோமியோ - ஜூலியட் நாடகம் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனால் நீங்க அதைத்தான் ரிகர்சல் பண்ணிகிட்டு இருக்கிறாப்போல இருக்கே. என்னய்யா இதெல்லாம் அக்ரமம். நான் ஒருத்தன் இருக்கிறேன் என்பதை மறந்துட்டீங்களா'' என்றார்.
அதாவது, அக்ரமம் பண்ண ஹெட்மாஸ்டர் இருக்கும்போது வேறு யாரும் பண்ணக்கூடாது என்ற அர்த்தத்தில் சொல்கிறாரா என்று கேட்டிருப்பேன். ஆனால் அப்போது கேட்கவில்லை. காரணம், அவர் தொடர்ந்து, "பண்ண அசிங்கம் போறாதுன்னு, அதற்கு விளம்பரம் வேறேயா... எவன்யா எழுதினது?''  என்று இரைந்தார்.

எனக்கு (அதாவது எங்களுக்கு) ஒன்றும் புரியவில்லை. "இன்னா ஸôர்...'' என்று கோகிலா மெல்ல கேட்க, "வாங்க... இப்படி வெளியே வந்து பாருங்க'' என்று எங்களை அழைத்துப் போனார். ஸ்கூல் நோட்டீஸ் போர்டில் (சுவரில் பதிக்கப்பட்ட கரும்பலகை) அதில் எழுதியிருந்தது. "சாமுவேல் --கோகிலா காதல்!- - கட்டிப்பிடித்து புரண்டது, பார்க்க வேண்டிய காட்சி!'' என்று யாரோ அவசர அவசரமாக எழுதியிருந்தார்கள். அடப்பாவி! பசங்களில் யாரோ ஒருவன் செய்த வேலை. பாலுவாகத்தான் இருக்கும்!

"என்னய்யா'' என்று பார்வையாலேயே ஹெட்மாஸ்டர் கேட்க, நடந்த விஷயங்களை விவரமாகச் சொல்ல வேண்டியிருந்தது. கிளைமாக்ஸ் சீனை விவரித்தபோது கோகிலாவின் முகத்தில் படர்ந்த செம்மையையும் நாணத்தையும் கிளுகிளுப்பையும் விவரிக்க இப்போது சமயமில்லை.

"போறும் உங்க கதையெல்லாம்.  இதை அழிச்சுத் தொலையுங்க... பரண் மேலே ஏறினாராம்... என்னவோ ஆச்சாம்'' என்று மெதுவாக "இடி விழும்' குரலில் சொன்னார் எபனேசர். (எமனேசர் என்று சொன்னாலும் சரிதான்!)
*                        *                         *
மாணவர்கள் சளபுளவென்று கத்திக் கொண்டிருக்க, ஸ்டேஜில் திரைக்குப் பின்னால் கலைநிகழ்ச்சி ’பாத்திரங்கள்' டடங், மடங்கென்று சப்தித்துக் கொண்டிருக்க, மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
பாண்டியனும் அந்த எம்.பி.யும் எப்போதோ இரண்டாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்களாம். எம்.பி பாஸாகவில்லை. அதனால் அரசியலுக்கு அனுப்பிவிட்டார் அவருடைய அப்பா! ஆகவே பாண்டியன்தான் எல்லா நிகழச்சிகளையும் கன்ட்ரோல் பண்ணினார்.

வெகு நாட்களாக அவர் எழுதி வைத்திருந்த கவிதையை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். மேடையில் ஹெட்மாஸ்டர் தனது மாப்பிள்ளை அழைப்பு ஸூட்டுடன் (ஆயிரம் கசங்கல்கள்!) உட்கார்ந்து இருந்தார். குறள்பித்தன் தலையில் தொப்பியுடன் கையில் தடியுடன் உட்கார்ந்திருந்தார். சிறிது வயதான ஆசாமி... நான் உற்சாகமாக, பாண்டியன் எழுதிய "கை" என்னும் தெள்ளு தமிழ் (!) கவிதையைப் படித்தேன்.

"கையெல்லாம் கை அல்ல; நம்பிக்கையே நம் கை. யானைக்குத் தும்பிக்கை... கிழவர்களுக்கு வழுக்கை...''

மாணவர்கள் உற்சாகமாகக் கைதட்டினார்கள். நானும் உற்சாகமாகப் படித்தேன்: "கால் நொண்டலாம்; கை இருந்தால் போதும், எட்டு திக்கை வென்றிடலாம்...''
விசில் கூரையைப் பிளந்தது. கவியரங்க பாணியில், பின்னால் போய் படிக்க ஆரம்பித்தேன்... "யானைக்குத் தும்பிக்கை. கிழவர்களுக்கு வழுக்கை...''
மாணவர்கள் பெஞ்சின் மேல் ஏறி கைகொட்டி விசில் அடித்தார்கள்.

"போறும்யா உன் கவிதையும்  கத்திரிக்காயும்! நிறுத்தும்... அடுத்த நிகழ்ச்சிக்கு போங்க'' என்று ஹெட்மாஸ்டர் கோபமாகக் கத்தி, என் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போனார்.

அப்போதுதான் புரிந்தது மாணவர்களின் விசிலின் காரணம். விழாத் தலைவர் குல்லாவை எடுத்து மேஜை மேல் வைத்திருந்தார். அவரது தலை, வழுக்கைத் திலகம் என்று பட்டம் கொடுக்கக் கூடிய அளவு இருந்தது! (இதற்காக மட்டுமே மாணவர்கள் விஸில் அடிக்கவில்லை என்பது பின்னால் தெரிந்தது. தலைவர் கொஞ்சம் நொண்டி நொண்டி நடப்பவர். "கால் நொண்டலாம்...' என்று கவிதை எழுதிய பாண்டியனை நோகாமல் ஹெட்மாஸ்டர் என்னை நொந்தது ஏன்?)

விழாத்தலைவர் குறளின் பெருமையைப் பற்றி விரிவாகப் பேசினார். மாணவர்களும் விழாவிற்கு வந்த பெற்றோர்களும் தங்களுக்குள் ஊர் விஷயம் முழுதும் பேசித் தீர்த்தார்கள். தலைவர் உரை முடிந்ததும், கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

விளக்குகள் அணைக்கப்பட, இங்குமங்கும் கோகிலாவும் நானும் ஓடி ஏற்பாடுகளைக் கவனித்தோம்.
*                       *
"படுதாவை விடுடா, கோபாலா'' என்று கத்தினேன். அந்த கோபாலன் எந்த கோபியரைத் தேடிக்கொண்டு போனானோ தெரியவில்லை. படுதா இறங்கவில்லை. நானே போய் முடிச்சை அவிழ்த்து படுதாவை இறக்கினேன். அந்த சமயத்தில் ஒரு பிளிறல் கம் அலறல். படுதாக்கட்டை யார் தலையையோ (வழுக்கைத் தலையா?) பதம் பார்த்திருந்தது.  நல்ல காலம், அது தலைவர் தலை அல்ல; ஆனால் கெட்ட காலம், அது ஹெட்மாஸ்டரின் தலை!

விழாத்தலைவரின் முன்னால் யார் மீதும் எரிந்து விழ முடியாது போகவே ஹெட்மாஸ்டர்,  மனதிற்குள் கறுவிக்கொண்டு போனது பல கிலோ மீட்டருக்கு எதிரொலித்தது!

மேடையில் ஒரே இருட்டு . மாணவ - மாணவிகளை பொஸிஷனில் நிற்கவைத்து விட்டு ஒரு ஓரமாக வந்து நின்றாள் கோகிலா. படுதாவை நானே இழுத்து கயிற்றை முடிந்து விட்டேன். கோகிலா சைகை செய்ததும் விளக்குகள் உயிர் பெற்றன.  சுருதி சேராமல் சில டீச்சர்கள் பாட, தாளம் சேராமல் குழந்தைகள் கும்மி அடிக்க, இடை இடையே மைக் கிரீச்சிட நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. பாட்டு முடிவில் கோகிலா கையில் பூவுடன் நடு ஸ்டேஜிற்குப் போக அவளைச் சுற்றி மாணவிகள் கும்மி அடிக்க வேண்டும். அதன்படியே பாடலில் குறிப்பிட்ட வரியின்போது கோகிலா "விர்'ரென்று உள்ளே நுழைய...

அய்யோ! அய்யய்யோ! எப்படி விவரிப்பேன் அந்த சில நிமிஷங்கள் நடந்த அல்லோல கல்லோலத்தை!  இதைவிட அதிகமாக ஊளையிட முடியாது என்ற அளவிற்கு ஆடியன்ஸ் கத்தினார்கள். "விளக்கை அணைய்யா" என்று கத்தல். "கர்ட்டனை விடு, சீக்கிரம்' என்று கூக்குரல். இதில் கோகிலாவின் குரலும் உண்டு. "புடவை', "புடவை' என்று கதறல். என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?
மேடையில் கோகிலா டீச்சர் வஸ்திராபஹரணம் செய்யப்பட்ட திரௌபதி மாதிரி காட்சி அளித்தார்.  புடவை எங்கே?

கர்ட்டனை இழுத்து முடி போடும்போது  இருட்டில் கவனிக்காமல், கயிற்றோடு கோகிலாவின் முந்தானையையும் சேர்த்து முடிச்சுப்போட்டு இருக்கிறேன். கோகிலா உள்ளே போன வேகத்தில் புடவை அவிழ்ந்துவிட்டது, சுத்தமாக!

மறக்கமுடியாத கலை நிகழ்ச்சியை நான் தயாரித்து அளித்ததாகப் பாராட்டாமல் என்னையும் கோகிலாவையும் ஹெட்மாஸ்டர் ’காய்ச்சி'யது’ ஒருபுறம் இருக்க, கோகிலாவும் என்னைத் துவைத்துப் பிழிந்து காயப்போட்டு விட்டாள்.
         *                            *                              *                                       
ஹூம்... தெரியாமல்  முந்தானையை முடிச்சு போட்டதற்கு இவ்வளவு ஏச்சும் பேச்சுமா? அதுவே பாக்கியராஜ் முந்தானை முடிச்சுப் போட்டால் பாராட்டு!... எனக்கு? திட்டு!

ஆமாம்,  நான் தான்  பாக்கியராஜ் இல்லையே!

9 comments:

 1. நல்ல நகைச்சுவை தான் போங்க...

  ReplyDelete
 2. நல்லதொரு நகைச்சுவை. ரொட்டி ஒலியில் படித்து ரசித்திருக்கிறேன் சார். இம்முறையும் திகட்டாமல்..

  ReplyDelete
 3. I thought it is a repeat post by oversight! Thanks to the comment above, I had read it in 'Metti Oli'! - R. J.

  ReplyDelete
 4. ஹ்..ஹ்..ஹஹ்ஹஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா.....

  சிரிச்சு ....சிரிச்சு ....பல் செட் கழண்டு விழ

  அப்போது தானா எதிர்த்த வீட்டு ப்ளஸ் டூ

  பைங்கிளி CHEMISTRY ல் என்னிடம் சந்தேகம்

  கேட்டு வர வேண்டும்?

  அவசர அவசரமாய் விழுந்த பல்செட்டை,

  எடுக்க நான் குனிய, தலையில் இருந்த விக்

  திடீரென கீழே விழுந்து தொலைக்க, அந்த

  குழந்தை திக்ப்ரமையுடன் என்னைப் பார்த்து

  லுக் விட

  விக்...திக்...லுக்...மிக்ஸ் ஆகி, சட்டென்று

  அது சிரித்து வேறு தொலைக்க ...

  பெண்களுக்கு சேலை போன அவமானத்தை

  விட ஆண்களுக்கு விக்கும், பல்செட்டும்

  பறி போனால் எவ்வளவு அவமானம் ?

  விளைவு?

  இது நாள் வரை அந்த ப்ளஸ் டூ விடம் நான்

  பில்டப் பண்ணி வைத்திருந்த CHEMISTRY

  மேலே போன படுதாவைப் போல்

  போனது போனது தான் !!

  போங்க சார் ....இனிமேல் சாப்பாட்டுக்குக்

  கூட கடுகு சேர்த்துக்க மாட்டேன் நான் !!!


  ReplyDelete
 5. ஹியரிங் எய்ட் விழுந்ததை சொல்ல மறந்துட்டிங்களே! -கடுகு

  ReplyDelete
 6. நான் எதையும் அவ்வளவா காது கொடுத்து கேட்க மாட்டேன் என்கிற விஷயம் எங்க ரெண்டு பேருக்கும்

  நல்லாவே தெரியும் ...அதனால் தான் நான் கேக்காமலேயே, எனக்கு கேக்காதுன்னு தெரிஞ்சு, எனக்கு கேட்கறா மாதிரியே அந்த அந்த ப்ளஸ் டூ பைங்கிளி பேசறதினால, அந்த ஹியரிங்

  எய்ட் சமாச்சாரம் கீழே விழுந்தது ஒண்ணும அவ்வளவு பெரிசா

  தோணாததினால, அதைப் பற்றி அவ்வளவா எழுதலை !

  ReplyDelete
 7. அபாரம், அட்டகாசம். உங்களை இவ்வளவு நட்களாக தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேனே....

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!