October 28, 2012

வயது ஏற ஏற....

வயது ஏற ஏற,  முட்டி வலி, பிளட் பிஷர்,  கொலஸ்டிரால் , சாளேசுவரம்,காது மந்தம், ஞாபக மறதி என்பது போன்ற பல தொல்லைகள் வருகின்றன. 

அத்துடன் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பது,முணுமுணுப்பது, ‘அந்த காலத்திலே’ என்று ஆரம்பிப்பது, அரை மணி நேரம் டாக்டரிடம் போய் வந்ததை ஆறு மணி நேரம் விவரிப்பது போனற பல நச்சு பண்ணும் பழக்கமும் வந்து விடுகிறது! இது வெகு நாட்களாக பரவியுள்ள நோய்.

இதோ ஒரு பாடல் 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாம்.(சந்தேகமாகத்தான் இருக்கிறது!)

( இந்த பிளாக்   By the young, for the young - என்றாலும், வயதானவர்களுக்கும் சில பதிவுகளை அவ்வப்போது  போடவேண்டும் என்ற காரணத்தால்  இதைப் பிரசுரிக்கிறேன்!)

 17th Century Nun's Prayer

Lord, thou knowest better than I know myself
that I am growing older and will someday be old.

Keep me from the fatal habit of thinking
I must say something on every subject and on every occasion.

Release me from the craving to straighten out everybody's affairs.

Make me thoughtful, but not moody: helpful, but not bossy.

With my vast store of wisdom, it seems a pity not to use it all,
but thou knowest, Lord, that I want a few friends at the end.

Keep my mind free from the endless recital of details;
give me wings to get to the point.

Seal my lips on my aches and pains. They are increasing,  and love of rehearsing them is becoming sweeter as the years go by.

I dare not ask for grace enough to enjoy the tales of other’s pains,
But help me to endure them with patience.

I dare not ask for improved memory,
but for a growing humility and a lessening cocksureness
when my memory seems to clash with the memories of others.
Teach me the glorious lesson that occasionally, I may be mistaken.

Keep me reasonably sweet; I do not want to be a saint -
some of them are so hard to live with –
but a sour old person is one of the crowning works of the devil.

Give me the ability to see good things in unexpected places,
and talents in unexpected people.

And, give me, oh Lord, the grace to tell them so.

Amen. 

October 23, 2012

ஒன் லைனர்கள்- கடுகு

 ( உன் லைனர் என்பதைத் தப்பாக அடித்துவிட்டதாகக் கருத வேண்டாம்!)
ஆங்கிலத்தில் நகைச்சுவை வகைகளில் ஒன் லைனர்  (ONE-LINER) ஜோக்குகள் ஒரு முக்கிய வகை. பல வருஷங்களாக இவைகளைப் படித்துத் திரட்டி வருகிறேன்

தி கிங்க் ஆஃப் ஒன் லைனர்ஸ் (KING OF ONE-LINERS)) என்ற பட்டப் பெயரைப் பெற்ற காமெடியன் ஹென்னி யங்மென் (HENNY YOUNGMAN)  எழுதிய "10,000 ஒன்-லைனர்கள்" என்ற புத்தகத்தை சமீபத்தில் வாங்கினேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ( பின்னால் ஒரு பதிவில் அவரது  ஒன் லைனர்கள் 10, 20-ஐ எடுத்துப் போடுகிறேன்.) இந்த மாதிரி நாமும் சில ஒன்-லைனர்களைத்  தமிழில் போடலாம் என்று தோன்றியது.

 நான் ஒரு  நகைச்சுவையாளன் (நிஜமாகவா?) என்பதால் மட்டுமல்ல, நானும் ஒரு யங்க் மேன்  (அட, அப்படியா!) என்பதாலும்!

++          ++            + +        
-- அவனுக்கு ரெட்டை நாக்கு. அவன் பேசினால் ஸ்டீரியோவாக வார்த்தைகள் கேட்கும்!

--காம்பவுண்ட் சுவர் இல்லாவிட்டால்   பல திருமதிகளால்  வீண் அரட்டை அடிக்க முடியாது.

-- எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்காத விஷயம் தலைப்பு: என் கதைகளின் தலைப்பு அவளுக்கும், அவள் புடவையின் தலைப்பு எனக்கும்!

-- இந்த காலத்துக் குழந்தைகள் அம்மாவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டே இருப்பதில்லை; காரணம் அம்மாதான் சல்வார்- கமீசுக்கு மாறி விட்டாளே!

- காலில் கொதிக்கிற  வெந்நீரைக் கொட்டிக்கொண்டு ஓடினால் அதுதான் பாலே’ நடனம்.

-- ஹஸ்பண்ட் என்ற ஆங்கில வார்த்தையை    HUS-BEND என்று எழுதலாம் - வளைந்து கொடுக்கும் கணவன்மார்களைக் குறிப்பிட!

- ஹஸ்பண்ட் என்ற ஆங்கில வார்த்தையை   ஹஷ்- பந்த் ( HUSH-BANDH) என்று எழுதலாம் - வாயைத் திறக்கப் பயப்படும்  கணவன்மார்களைக் குறிப்பிட.

-- கட்டடக் கலைப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை -மனக்கோட்டை கட்டுவதற்கு .

-- எந்த நோய்க்கும் மருந்து சொல்வேன், நோயாளி பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தால் !

--துவரம் பருப்பு விலை கிலோ  100  ஆகும்போது, அதைத் துயரம் பருப்பு என்று சொல்வது தான் சரி!

 --சில அலுவகங்களில் உங்கள் வேலை ஆவதற்கு  WAIT  பண்ண வேண்டும் அல்லது  WEIGHT  வைக்கவேண்டும்.

-- சிலர் எத்தனை வயாதானாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் -- ஜொள்ளு விடுவதில்.

-- ”என் மூளை கெட்டு போச்சு” என்று  சொல்பவர்களிடம் ஒரு கேள்வி: இதை தெரிவித்தது உங்கள் மூளைதானே?

-- சில திரைப்படங்களில் கதை இருக்கும்: சிலவற்றில் கதை விட்டிருப்பார்கள்.

-- பணம் செலவில்லாமல் வாங்கக்கூடியது: காற்று, கடன், உதை!

-- வீட்டுக்கு வீடு மாதக் கடைசி தேதி வித்தியாசமாக இருக்கும்.

-- இருமல் வருபவர்கள் மருத்துவசாலைக்குப் போவார்கள் அல்லது இசைக் கச்சேரிக்குப் போவார்கள்!

-- பீட்ஸா ஆர்டர் பண்ணிவிட்டு பலர் பிரார்த்தனை செய்வார்கள் - பீட்ஸா வருவதற்கு அரைமணி மேல்  தாமதம் ஆக வேண்டும் என்று!

-- பிள்ளையார் கோவிலில் சிலர் குண்டு கொழுக்கட்டை வைத்து வணங்குவார்கள்: வேறு சிலர் குண்டு கொழுக்கட்டையாகவே வணங்குவார்கள்!

October 19, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-5

  கவர்களைப் பிரிக்க அழகான தந்தப்பட்டையை ஹாங்காங் கடைத்தெருவில் வாங்கினேன் முதல் கவரைப் பிரித்தபோதே அது உடைந்து விட்டது! வாங்கும்போது அதன் நடுவே கோடு மாதிரி ஒரு ரேகை ஓடுவதைப் பார்த்தேன். அது ஒரு அழகுக்காகச் செதுக்கியது என்று நினைத்துக்கொண்டேன்! ஆனால்  அது விரிசல்!
ஒரு டெய்லர் கடை பக்கமும் போகக்கூடாது என்று நினைத்த நான் ஏன் ஹோ-சாங் கடைக்கும் மட்டும் போக விரும்பினேன் என்று தெரியவில்லை.காரணம் தெரியாத சக்தி ஒன்று என்னை அங்கே இழுத்துச் சென்றது.
பழைய முகவரியில் கடை இல்லை. அந்தக் கடை நடக்கிறதா என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஹென்றி-லும் (மானேஜர் என்று சொல்லிக் கொண்ட) அவனேதான் ஹோ சாங்-காக இருக்கும் என்று எனக்கு சந்தேகம்.
அவன்  என் செக்கை மாற்றிக் கொண்டு ஓய்வு பெற்று விட்டானோ அல்லது லி-மியுடன் கை கோத்துக் கொண்டு எங்கேயாவது உல்லாசபுரிக்குச் சென்று விட்டானோ என்று நினைத்தேன்.



அந்த டெய்லரிங் கடை அங்கு இல்லாது போனதும் என் அதிர்ஷ்டம்தான். அது மட்டும் இருந்திருந்தால், என் விசிட்டிங்  கார்டை ஒரு பெரிய பாறாங்கல்லுடன் கட்டி, அந்தக் கடையின் கண்ணாடி  ஜன்னல் மீது பயங்கரமாக வீசிவிட்டு வந்திருப்பேன். அப்படி செய்திருந்தால் இப்போது சிறை டயரி எழுதி கொண்டிருப்பேன்.

அளவு எடுத்து சூட் தைத்துக் கொள்வதை நான் எப்போதோ விட்டு விட்டேன். அதே சமயம் ரெடிமேட் சூட் வாங்கினாலும் எனக்குப் பிரச்னை இருந்தது. பிரமாதமாகத் தைத்த சூட்கள்கூட என்னுடைய ஏறுமாறான தோள்களில்  சரியாக உட்காருவதில்லை. சரியான அசமந்த ஆசாமியாக அதில் காட்சி அளிப்பது போல் இருக்கும். சாதாரணமாக இரண்டு ‘பேட்’கள் வைத்த கோட்டை போட்டுக் கொள்ளும்போது  நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்டவனாகக் காட்சி அளிப்பேன்.

October 15, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி--4

”யார் பண்ண தப்பு என்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. இரண்டு தோள் பட்டைகளூம் சரியாக இருக்க வேண்டும். நான் திருவிழா கோமாளி மாதிரி இருக்கப் போவதில்லை. இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் நான் விமான நிலையம் போகப் போகிறேன்.” என்றேன்.

“சார், இது பெரிய பிரச்னையே இல்லை. இடது தோளில் வைத்திருக்கும் பட்டையை எடுத்து வலது தோளில்  தைத்தால்  சரியாகிவிடும்.. உங்க  மத்த டிரஸ்ஸெல்லாம எடுத்துக் கொண்டு ஒட்டலுக்குப் போங்க..’ சூட்’ சரி பண்ணி பையன் கிட்ட கொடுத்து அனுப்பறேன்”என்றான். .
அவனை  நம்பினேன். வேறு என்ன செய்வது.  ஓட்டலுக்கு வந்து காத்திருந்தேன். பன்னிரண்டு மணிக்கு ஐந்து நிமிஷம் இருக்கும்போது விமா நிலையம்போக டாக்ஸியில் என் பெட்டிகளை ஏற்றினேன். ஹென்றியின் பையன் இன்னும் வரவில்லை.
”இன்னும் இரண்டு நிமிஷம் வெய்ட் பண்ணுங்கள்” என்று டாக்ஸி டிரைவரிடம் கெஞ்சினேன். ஐந்து நிமிஷம் பொறுத்து விட்டு டாக்ஸி டிரைவர் ,” இனிமேல் வெயிட் பண்ண முடியாது” என்று சொல்லியபடி காரின் கதவை மூடினார். அந்த சமயம்  ஒரு பையன் வேகம் வேகமாக ஓடி வருவதைப் பார்த்தேன். அவன் கையில் கோட்டுகள் ஒரு மூட்டையாக இருந்தது. மடித்துப் பேக் செய்ய டயம்  இருந்திருக்காது என்று நினைத்தேன்.
’அப்பாடா, கோட்டுகள் வந்தனவே’ என்று சந்தோஷப்பட்டேன். பையனிடமிருந்து கோட்டுகளை வாங்கி மடியில் வைத்துக் கொண்டேன். டாக்ஸி புறப்பட்டது.

October 10, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-3

சூட் அளவுகள் சரியாக இருக்கின்றனவா என்று செக் பண்ணப் போட்டுப் பார்த்தேன். என்னுடைய  நான்கு சூட்கள், இரண்டு ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டுகள். மூன்று ஜோடி ஸ்லாக்குகள் எல்லாவற்றையும் மறு நாள் காலை வந்து வாங்கிகொள்ளச் சொன்னார்கள். ( அதற்கு அடுத்த  நாள் நான் ஹாங்காங்கை விட்டுக் கிளம்பவேண்டும்.)

மறு நாள் காலை குறித்த நேரத்திற்கு நான் ஹோ சாங் கடைக்குப் போனேன்.
” உங்கள் கோட், சூட் எல்லம் ரெட”: என்றான் ஹென்றி. ( ‘சார்’ என்பதைச் சொல்லவில்லை. எப்போது செக் கொடுத்தேனோ அப்போதே “சார்’ போய்விட்டது!)
“ஒரு சூட்டை போட்டுப் பார்த்து விடுகிறேன்... எல்லாம் சரியாக இருக்கும். இருந்தாலும் நிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.” என்றேன்.
“ அதெல்லாம் தேவையே இல்லை”
“ ஹென்றியின் குரலில் குழைவு இல்லை. லேசான கண்டிப்பு இருந்தது!
“தேவை  இல்லை என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் தொந்தரவு படுத்துவதற்கு வருத்தம். ”அமெரிக்கா போனபிறகு ஏதாவது சரியாக இல்லாமல் இருந்தால்  என்ற கவலையுடன் நான் போகக்கூடாது” என்று சமாதான குரலில் சொன்னேன்.

 “ கட்டாயம்  போட்டு பார்க்க வேண்டும் என்றால்  செய்யுங்கள். ஒரு சூட்டைப் போட்டுப் பாருங்கள்” - கடிகாரத்தைப் பார்த்தபடி பேசினான்.  ஹென்றிக்கு வேறு ஒருவருடன் - செயின்ட் லூயிஸ் பணக்காரன்?-  அப்பாயிண்ட்மென்ட் இருக்கிறதோ என்னவோ?
 பழைய கோட்டைக் கழட்டி என் புது கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன். உள் பக்க பக்கெட்டில் : ஹோ சாங் டெய்லரிங் கம்பெனி’ என்றும், அதன் கீழ் என் பெயரும் சரிகை நூலில் பளபளப்பாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது!  இந்த சூட்களைத் தைக்க நான் எதிர்பார்த்ததை விட அதிக செலவாகி இருந்தது. ஆனால் பிரமாதமாகத் தைத்திருந்தார்கள்.
 ‘சூட்எப்படி இருக்கிறது?’ என்று பார்க்க, மூன்று பக்கம் கண்ணாடி பொருத்தப்பட்ட அறைக்குள் போனேன். அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தேன்.
ஷாக் அடித்தது! “அச்சச்சோ” என்று லேசாக அலறினேன்!

October 05, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-2

"சார், உங்கள் கோட்டை அவள் எடுக்கட்டும்   ஹென்றி என் தயக்கத்தைப் பார்த்து, நட்பாகச் சொன்னான்.  “உங்கள் அளவுகளை எடுக்கப் போகிறேன். உங்களுக்குத் துணி எதாவது பிடித்திருந்தால் அளவு தேவைப்படுமே.”

  அந்த சைனீஸ் பெண் என்னை கிறு கிறுக்கச் செய்து விட்டாள்.

  ”சார், லி- மே யிடம் உங்களுக்கு என்ன மாதிரி டிரிங்க் வேண்டும் என்று சொல்லுங்கள்.? - ஹென்றி சொன்னான். ”அவள் டிரிங்க் கொண்டு வருவாள். அது வரை சூட் துணிகளை நாம் பார்க்கலாம்”.  என்றான்.

  ++                         
லி-மே என் ஒயின் டிரிங்கில் ஏதோ தப்பு சமாசாரத்தைப் போட்டாள் என்று சொல்லமாட்டேன். ஒயின் என்பதே தப்பு சமாசாரம் என்பது வேறு விஷயம். அந்த கவுன்டருக்கு அருகில் உட்கார்ந்து என்னை அறியாமல் தூங்கிக் கொண்டே வெவ்வேறு துணிரகங்களைப் பார்த்தேனா, அல்லது உண்மையிலேயே அவைகளை நனவில் பார்த்தேனா என்பது நிச்சயமாக எனக்குத் தெரியாது.