May 14, 2012

கல்யாணப் பரிசு

 
ஏர் கண்டிஷன் அறையில் பரந்த மேஜைக்கு முன் உட்கார்ந்திருந்த மிஸ்டர் பஞ்சு, மேலே அண்ணாந்து பார்த்தார். மின்சார விசிறி ஐயோ பாவம் என்று தூங்கிக் கொண்டிருந்தது. அது சுற்றவில்லை. ஆனால் பஞ்சுவின் தலை சுற்றியது.
எதிரே மேஜையின் மீதிருந்த லெட்ஜரில் கண்களை ஓட விட்டார். சாரை சாரையாக கட்டெறும்புகள் ஊர்வது போல் எண்கள் லெட்ஜரின் பக்கங்களில் பளிச்சிட்டன.
சிவப்புப் பென்சிலால் சில எண்களின் கீழே கோடு போட்டார். கூட்டிப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கினார்.
பிரயோசனமில்லை. மாத முடிவிற்குள் இன்னும் பத்து லட்சம் ரூபாய் வேண்டும்! ரூபாய் அல்ல; அவ்வளவு மதிப்பிற்கு இன்ஷுரன்ஸ் பாலிசி பிடித்தாக வேண்டும். பத்து லட்ச ரூபாய் பிடித்தாக வேண்டும்! பெல்லைத் தட்டினார். பல்லைக் காட்டிக் கொண்டு பியூன் கோதண்டம் வந்தான்.
கோதண்டம், கோ அண்ட் கால் சாரங்கன்!
தானத்தில் சிறந்தது நிதானம்என்ற கொள்கை உடையவர் போல ஆடி அசைந்து வந்த சாரங்கன், “சார், கூப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.
என்னய்யா... நம்ப கோட்டாவை கம்ப்ளீட் பண்ணியாகலை. கொஞ்சங்கூட கவலையில்லாமல் இருக்கீங்க!
நானும் பத்து நாளாக சீஃப் ஏஜண்ட் ஜாவாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சினிமா ஆக்ட்ரஸ் யாரோ அப்பளம் பாக்டரி ஆரம்பிக்கப் போறாங்க. ஐம்பது லட்சம் ரூபாய் செலவிலே...
கேழ்வரகிலே நெய் வடிகிறது என்று சொன்னானாம். நடக்கிற கதையாகச் சொல்லட்டுமய்யா! ஏதோ ஒரு குட்டி நடிகை பின்னால் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக் கொண்டு இருக்கிறான். அதற்குச் சாக்குப் போக்கு காட்டுகிறானா?”
ஸ்பிரிங் கதவைத் தள்ளிக் கொண்டு பந்து போல் குதித்து உள்ளே வந்தார் சீஃப் ஏஜண்ட் ஜாவா.
ஜாவா, ஐ ஆம் சாரி. பத்து லட்சம் மேக்-அப் செய்தாகணும்.

ஆமாம் சார்! மேக்-அப் செய்யணும் என்றுதான் மேக்-அப் அறை வரைக்கும் போய் கேட்டுக்கிட்டு இருக்கிறேன். அப்பளம் பாக்டரியைப் பற்றி ஒன்றும் அழுத்தமாகச் சொல்ல மாட்டேன் என்கிறது சினிமா ஸ்டார் அபயம்!” -மேளகர்த்தா ராகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ராகத்தில் இழுத்து இழுத்துப் பேசினார் ஜாவா. மூன்று தலைமுறையாக மதராசில் வாழும் பார்சிக்காரர் அவர்.
எப்படி ஐயா அழுத்திச் சொல்லுவாள்? அப்பளம் விஷயமாயிற்றே, அழுத்தினால் துண்டாயிடாதா? போகட்டும்... மைகா மைன் ரெட்டியைக் கண்டுபிடித்தீரா? பெரிய புள்ளியாயிற்றே...
அவரைப் பார்க்கத்தான் தலைகீழாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆள் லேசில் அகப்படறதில்லை. மூணு நாள் டயம் கொடுங்க. எந்த வளையில் இருந்தாலும் கண்டுபிடித்து ’மைக்கா மைன்இன்ஷுயூரன்ஸ் வாங்கி விடுகிறேன்.
வளையில் அகப்பட அவர் எலி இல்லை; புலி! பெரிய பிசினஸ் புலி! என்ன செய்வீரோ, ஏது செய்வீரோ... இந்த மாதம் நாம் இன்னும் பத்து லட்சம் பிசினஸ் பிடித்தாக வேண்டும்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது என் பொறுப்பு!
உங்கள் பொறுப்பை முடியவில்லை என்றால் நான் நெருப்பு. உம்மேல் எனக்கு வரும் வெறுப்பு. நமக்குத் தேவை சுறுசுறுப்பு.
ரெட்டியைப் பிடித்து புட்டியில் போட்டுக் கொண்டு வருகிறேன்.என்றார் ஜாவா.

ஜாவா சொன்ன பேச்சைக் காப்பாற்றினார். ரெட்டியைப் புட்டியில் போட முடியவில்லை; ஆகவே புட்டியை (சீமைச் சரக்கு) ரெட்டியின் உள்ளே போட்டு ஒரு நாள் பஞ்சுவின் அறைக்குள் அழைத்துக் கொண்டு வந்தார்.
வாங்கோ ரெட்டி காரு! ஏமண்டி, சவுக்கியமா? ஏய் பையா! காபி கொண்டு வா...
சார், நமக்கு காபபி ஒரிஜினல் ஏமும் வேண்டாம். ஒரு முக்கியமான ÔபனிÕ உந்தி. உங்கோ தயவு காவலா!என்றார் அவர்.
ஜாவா, “மானேஜர் சார்! நம்ம ரெட்டிகாருவுக்கு ஒரு ஹெல்ப் தேவையாம்...என்றார்.
ஆபீஸ் பையன் காபி கொண்டு வந்து கொடுத்தான். காபிக் கப்பை எடுத்த ரெட்டிகாரு, “நமக்குச் சர்க்கரை வேண்டுமேஎன்றார்.
டேய் பையா, இரண்டு ஸ்பூன் சர்க்கரை கொண்டு வா!என்றார் பஞ்சு.
இரண்டு ஸ்பூன் ’காதண்டி’. இரண்டு மூட்டை காவலா...
பஞ்சு தன் டிரேட்மார்க் அசடு வழியச் சிரித்தார்.
சும்மா சிரிச்சுப்புட்டால் சாலது. நம்ம பொண்ணு கலியாணம் நீங்க செய்யணும்...
என்னடா இது வம்பாகப் போயிற்றே!என்று குழம்பினார்.
உங்கள் பெண்ணுக்கு பெண்ட்லியா?”
ஜாவா சொன்னார்: ஆமாம் சார். கலியாணம்தான். தேனாம்பேட்டை சாமியர் மண்டபத்தில் வைக்க நினைத்தார் ரெட்டிகாரு. யாரோ முன்னயே இடத்தை புக்செய்துட்டாங்க. அதனாலே கோவிந்தப்ப நாயக்கன் தெரு ராமானுஜ கூடத்தில் செய்யறார்.
ரெட்டிகாரு, ஜமாய்த்து விடலாம். ராமாநுஜ கூடம் ஆகிவந்த இடம்!
ஆமாங்கோ சார். ஆனால் இப்போ நமக்குச் சர்க்கரை வேண்டும். ரெண்டு மூட்டை. ரேஷன் வந்ததில் பேஜாராப் பூடுச்சு நமக்கு.
மானேஜர் சார், உங்கள் உறவுக்காரர் ரேஷன் ஆபீசிலே இன்ஸ்பெக்டராக இருக்கிறதாக முன்னே சொன்னீங்கோ- இல்லை? ...ரெட்டிகாரு, நீங்க சர்க்கரை விஷயம் கவலைப்படாதீங்க. ஆனால் இப்போ எங்கள் மானேஜர் பெரிய கவலையில இருக்கிறார்.
ஆமாம் ரெட்டிகாரு. நம்ம மைன்இன்ஷுரன்ஸ் விஷயமா...
அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது. நான் ஜாவாவுக்குப் பிராமிஸ் செய்து விட்டேனே, பத்து லட்சம் ரூபாய் பாலிசி எடுக்க ஒப்புக்கிட்டேன்.
ஜாவா கண்களைச் சிமிட்டினார். ரெட்டியாரது மயக்க நிலையைத் தெரிந்து கொண்டார் பஞ்சு. சரி, இனி பிசினஸ் நமக்குத்தான் வரப் போகிறதுஎன்று குதூகலப்பட்டார் மனதுக்குள்.
சர்க்கரை விஷயமா நான் ஏற்பாடு செய்கிறேன்என்று உறுதியும் அளித்தார்.

வெள்ளித் தகடென மினுமினுக்கும் திருமண அழைப்பிதழைப் பார்த்துப் பூரித்துப் போனார் பஞ்சு. ரெட்டிகாரு அனுப்பியிருந்தார். இவரும் சர்க்கரைக்கு ஏற்பாடு செய்து இரண்டு மூட்டை அனுப்பி விட்டார்.
கலியாணப் பரிசுஏதாவது பிரமாதமாகக் கொடுத்து ரெட்டிகாருவின் நன்மதிப்பைப் பெற எண்ணினார். என்ன கொடுக்கலாம் என்றே அவருக்குப் புரியவில்லை.
அப்போது அறைக்குள் நுழைந்தார் ஜாவா.
என்ன ஜாவா? ரெட்டிகாரு பெண்ணுக்கு நாம் பிரசென்ட் செய்ய வேண்டாமா?”
நீங்க பிரசென்ட் செய்யுங்க. நான் ஆப்சென்ட் செய்யறேன்.
என்ன விஷயம்?”
நான் அர்ஜன்டாக ஒரு வாரம் மைசூர் போக வேண்டி வந்திருக்கிறது. பசுவப்பா மாடப்பா என்ற பெரிய எக்ஸிபிஷன் கான்டிராக்டரைப் பார்த்தால் நமக்கு பிசினஸ் கிடைக்கும். அதனால் ரெட்டிகாரு பெண் கல்யாணத்திற்கு நமக்கு ஆப்சன்ட் போட்டு விடுங்கோ.
நீ வராவிட்டால் என்னய்யா? நானே பிரசென்ட் கொடுக்கிறேன். என்ன கொடுக்கலாம்?”
பெரிய பார்ட்டி அவர். அதனால் கல்யாணப் பரிசும் பெரிதாக இருக்க வேண்டும். இருநூறு, முந்நூறு போட்டு வெள்ளிக் குடம் கொடுக்கலாம்.
ஓ.கே.என்றார் பஞ்சு.

நான் சொல்றேனே. நீங்கள் ஆயிரம் பேசலாம். ஆயிரம் ஜம்பம் அடித்துக் கொள்ளலாம். பொறுப்பாக, சுயமாக உங்களாலே ஒரு காரியமும் செய்ய முடியாது.
ஏன் சுப்ரபாதம் ஆரம்பிச்சுட்டே?”
பின்னே கலியாணத்திற்குப் போக வேண்டும் என்று தெரியுமே, இன்விடேஷனை ஞாபகமாகக் கையோடு வைத்திருக்க வேண்டாமோ? அட்ரஸ் தெரியலைன்னு கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட மூஞ்சூறு மாதிரி கத்தி என்ன லாபம்?”
இல்லை இல்லை. பத்திரமாக ப்ரீஃப் கேஸிலே வைத்திருந்தேன். இப்போ பார்த்தால் அதைக் காணவில்லை.
கோவிந்தப்ப நாயக்கர் தெருவில்தான் கலியாணம். ரெட்டிகாரு, ராமானுஜகூடம்- இவ்வளவு தெரியுமோ இல்லையோ? விசாரித்துக் கொண்டு போய் வாங்களேன்...
இந்தச் சமயத்திலே ஜாவாவும், மைசூர் போய் விட்டான் மகாராஜா மாதிரி. கோதண்டம் என்னடா என்றால் தைரியமாகச் சொல்கிறான். லீவு நாட்களில் ரேஷன் கியூவிலே இடம் பிடித்துக் கொடுக்கிற பார்ட்-டைம் வேலை செய்கிறானாம்!
கேட்டை, மூட்டை, செவ்வாய் எல்லாம் ஒண்ணாத்தான் வரும் உங்களுக்கு. சரி, சரி, நாழியாறது. கிளம்புங்க!

நாயனக்காரர் எத்தனை தடவை கேட்டும் காபி வராததால் அந்தக் கோபத்தை தோடியிடம் காண்பித்துக் கொண்டிருந்தார்.
பளபளக்கும் குடத்துடன் ராமானுஜ கூடத்தின் வாசலில் பஞ்சு இறங்கினார், டாக்சியிலிருந்து. வாசலில் இருந்தவர்களை ஒரு மாதிரி நோட்டம் பார்த்தார். ரெட்டிகாரு கலியாணம் தானே?” என்று வாழை மரம் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவரைக் கேட்டார். அவனண்டி. லோப்ல ரண்டிஎன்று சொல்லிக் கொண்டே வேறு ஒருவர் பஞ்சுவைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனார். அந்த வரவேற்பு, தன் கையில் இருக்கும் குடத்திற்குத் தான் என்பது பஞ்சுவுக்குத் தெரியும்!
வங்கி, நத்து, புல்லாக்கு, ஒரு ரூபாய் அகலக் குங்குமப் பொட்டு, கொளகொளவென்று சப்திக்கும் பட்டுப் புடவை, இடுப்பில் சொருகுப் பை -இது பெண்கள் பகுதி.
முரட்டுக் கதர், காவியிலும் வெள்ளையிலும் வழித்தால் கறுப்பு திரண்டு வருவது போன்ற மேனி. இடை இடையே சில சிவந்த தோல் மனிதர்கள். புகையிலையை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் -இது ஆண்கள் பகுதி.
இரண்டிற்கும் பொதுவானது: சளசள சப்தம். அதுவும் தெலுங்கு ’சளசள’.
பாராசூட்டில் இறங்குபவர் போல்- கூட்டத்தில் ஓர் இடத்தில் தள்ளப்பட்டார் பஞ்சு!
தெரிந்த முகம் யாருமே இல்லை. ரெட்டிகாருதான் தெரிந்த ஆசாமி. அவர் கண்ணில் படவே இல்லை. ரெட்டிகாரு எங்கே?” என்று பக்கத்திலிருந்தவரைக் கேட்டார்.
அவர் ஏதோ பதில் சொன்னார். பொருள் தெரியவில்லை. Ôரெட்டிகாரு எங்கேயோ வேலையாக இருக்கிறார்Õ என்று அவர் சொன்னதாக பஞ்சு நினைத்துக் கொண்டார்.
புரோகிதர் ஏதோ சொன்னார். உடனே பலர் அன்பளிப்புக் கொடுக்க ஆரம்பித்தனர். பஞ்சுவும் எழுந்து குடத்தைக் கொடுத்தார். தன் பெயரையும் சொன்னார்.
“....கம்பெனி மானேஜர் மிஸ்டர் பஞ்சா மிருகம் பிரசண்ட்!பஞ்சு ஒரு கணம் மிருகமாகத்தான் ஆனார். பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். கூட்டத்தில் தமிழ் தெரிந்தவர்கள் மிகக் குறைவு என்று தானே கருதிக் கொண்டு!
யாரோ வெற்றிலை பாக்குக் கொடுத்தார்கள். ரெட்டிகாருவைப் பார்க்க முடியவில்லை. யாரையோ இங்கிலீஷில் கேட்டார். கலியாண அலைச்சல் காரணமாக ரெட்டிகாருவுக்கு மயக்கம் மாதிரி இருக்கிறதாகவும், ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் சமாசாரம் தெரிய வந்தது.
நான் வந்ததாகச் சொல்லுங்கள். நிதானமாக அடுத்த வாரம் அவரைப் பார்க்கிறேன். நான் வரேன்.

என்னங்க ரெட்டிகாரு? கலியாணம் தான் தடபுடலாக நடத்திட்டீங்க. இனிமேல் நம்ப பிசினஸ் விஷயமாகப் பார்க்கலாமா? ஜாவா மைசூர் போனவர் இன்னும் திரும்பவில்லை!என்றார் பஞ்சு.
மிஸ்டர் பஞ்சு! உங்கள் மேல் எனக்குக் கோபம். எத்தனை கவர்னர் வந்தால் என்ன? எத்தனை மினிஸ்டர் வந்தால் என்ன? நம் ஃபிரண்ட்ஸ் வரவில்லை என்றால் நமக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டம். கடைசியில் நீங்கள் ஏமாத்திப்புட்டீங்களே!
நான் ஏமாற்றி விட்டேனா? நோ, நோ! நான் கல்யாணத்திற்கு வந்தேன். என்ன கூட்டம்! என்ன கூட்டம்! ரெட்டிகாரு, கலியாணப் பெண்ணுக்குக் கூட ஒரு வெள்ளிக் குடம் பிரசண்ட் செய்தேனே!
என்ன சார், தமாஷ் பேச்சு பேசறீங்க?”
அடுத்த சில நிமிஷங்களில் பஞ்சுவுக்குப் பல விஷயங்கள் புரிந்தன.
கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் இரண்டு ராமானுஜ கூடங்கள் இருக்கின்றன.
ஜாவா என்ற பெயரில் மற்றொரு இன்ஷுரன்ஸ் ஏஜண்ட்டும் இருக்கிறார். அவர் ரெட்டிகாரு பிஸினஸைக் கொத்திக் கொண்டு போய் விட்டார்.
பஞ்சுவுக்குப் புரியாத விஷயம் ஒன்று இருந்தது: குடம் வாங்கிய செலவை எந்தக் கணக்கில் எழுதுவது?\

பின் குறிப்பு:  1.இந்த  இலக்கியச் சிறுகதை சுமார் 40 வ்ருஷத்திற்கு முன்பு எழுதியது
பின் குறிப்பு:  2. என் திருமணம் இந்த மண்டபத்தில் தான் நடந்தது.,   கைவண்டிகள். கோணி மூட்டைகள், ரிக்‌ஷாக்கள், பெருச்சாளிகள் நிறைந்த அந்த தெருவில் இருந்த  இந்தத் திருமண மண்டபம் அந்த காலத்தில் நமபர் ஒன் மண்டபங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது..  என் திருமணத்திற்கு ஒரு மிக முக்கியமான பிரமுகர்  இந்த தெருவில் வந்து, தவறாக அந்த இரண்டாவது ராமனுஜ  கூடத்திற்குப்  போய், அங்கு அழகான மாப்பிள்ளை இருந்ததைப் பார்த்து ‘ ’அடாடா, தப்பாக வந்து விட்டோம்’: என்று உணர்ந்து, திரும்பப் போய் விட்டார்..   நடந்ததைப் பின்னால்  எனக்குக் கடிதம் எழுதித் தெரிவித்தார்.அந்தக் கடிதம் என்னிடம் இப்பவும் இருக்கிறது!

9 comments:

  1. சிறு வயதில் தினமணி கதிரில் படித்துச் சிரித்த பஞ்சு இப்போதும் சிரிக்க வைக்கத் தவறவில்லை. That is KADUGU. கல்யாண மண்டபத்துக்கு மாறிப் போகும் விஷயம் அருமையான காமெடி!

    ReplyDelete
  2. சுந்தரி செலவில் ‘பற்று’ வைக்க வேண்டியது தானே.(இதையே ஆங்கிலத்தில் DEBIT SUNDRY EXPENSES என்று அக்கவுண்ட்ஸ் படித்தவர்கள் அழகாய் கூறுவார்கள்!)

    ReplyDelete
  3. 2 மூட்டை சர்க்கரையும் போச்சா! - ஜெ.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ரொம்ப நாளைக்கப்புறம் மிஸ்டர் பஞ்சுவை சந்தித்ததும், குதூகலமாக இருக்கு.

    மயக்கம் வர வைத்த ஒரு விஷயம் - வெள்ளிக் குடம் - 200 ரூபாய்!!

    பொன்னாள் அது போலே, வருமா இனி மேலே!

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
    Replies
    1. Panju Sir bought the veLLikkudam (Rs.200/-) as gift on behalf of the company - not in his personal capacity.

      Even today, Agents pay a big gift for getting a Big Policy.

      Delete
  5. I attended my friend's marriage before 20 years in Chennai (I think the street name is also somewhat like Govindappa Naickar street) and we spent more than one hour just to locate the kalyana mandapam because there are so many mandapams with similar names in one street. In one mandapam, upanayanam was going on, in another seemanthan was going on, in another one Ayusha Homam was going on and in another one Sashti Aaptha Poorthi was going on and at last when we asked in which mandapam the marriage function was going on, someone guided to us and the said mandapam was in the fag end of the street.

    ReplyDelete
  6. சார்,

    இப்பவும் (இப்பவும் -ன்றதை bold type ல போட்டுக்கங்க) ரசித்துப் படிக்க முடிகிறதென்றால் அது உங்கள் நகைச்சுவையின், சிறுகதையின் இடைவெளிகளில் பொங்கி வழியும் வார்த்தை விளையாட்டின் பலம் என்று தோன்றுகிறது. ஆன்லைனில் பணம் செலுத்தும் இன்றைய தலைமுறைக்கு சர்க்கரைக்கு ரேஷன் என்பதெல்லாம் புரியாமலிருக்கலாம்.

    ReplyDelete
  7. Today (Monday,25th) started well. Of all the mails in the "Inbox" we first read our daughter's mail forwarding this story written 40 years back.
    Sirithu sirithu vayiru punnagivittathu.Ungal sevai thodaruttum.
    SAROJA SAMPATH&SAMPATH

    ReplyDelete
  8. SAROJA SAMPATH&SAMPATH அவர்களுக்கு,
    நன்றி.
    பாராட்டுகள், உங்கள் பெண்ணிற்கு! இப்படித்தான் பெற்றோருக்குச் சேவை செய்யவேண்டும் -- குழலில் பிழிந்து அல்ல!!!:)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!