January 25, 2012

நான் ஒரு புண்ணாக்கு மன்னன்


சுகமாகக் கண்ணயர்ந்து கொண்டிருந்தேன். டீச்சர்ஸ் ரூமில் அந்த பிரம்பு ஈஸிசேரில் உள்ள மூட்டைப் பூச்சிகளுக்கு என்னுடைய " பி-பாஸிடிவ் ரத்தத்தைத் தானம் செய்தபடியே, தம்பூர் சுருதி மாதிரி லேசாகக் குறட்டை விட்டபடியே பாதி விழிப்பும் பாதி தூக்கமுமாக இருந்து கொண்டிருந்த சமயம்.

"சாரே... சாமுவேல் சார்... தூங்கறாப்பல இருக்குது... லீஷர் பீரியட் என்றால் எப்படித்தான் ஸ்விட்ச் போட்டாப்ல தூக்கம் வந்துடுமோ... சார்... சார்... '' என்று குரல் கேட்டு விழித்தேன். ஸ்கூல் பியூன் பீட்டர்.
"ஏம்பா... பீட்டர் இப்படி கத்தறே.?.. என்ன விஷயம்... ஓசிப் பொடி வேணும்னா, தூங்கற மனுஷனை எழுப்பணுமா?'' என்று சுள்ளென்று அவன் மேல் எரிந்து விழுந்தேன்.
"ஓசிப் பொடியும் வேண்டாம், ஓமப்பொடியும் வேண்டாம்... எச்.எம். கூப்பிடுது.''
"சரியான எச்.எம்... சொச்சம்... ஹூம்... அரை செகண்ட் நிம்மதியா இருக்க விடமாட்டாரே இந்த ஹெட்மாஸ்டர்... என்னப்பா பீட்டர். என்ன சமாசாரம்? ஸ்கூல் கடிகாரம் கெட்டுப் போய்டுத்தா? அதை ரிப்பேர் பண்ணிகிட்டு வரணுமா?... இல்லை, ஹெட்மாஸ்டர் வூட்டு நாய் ரோஸிக்கு வவுத்து வலியா? மருந்து வாங்கிகிட்டு வரணுமா? எல்லாத்துக்கும் இந்த சாமுவேல்தான் அகப்படுவான்... ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி இல்லைப்பா... இந்த ஜியாகரிபி டீச்சர்தான்'' என்று அலுத்துக்கொண்டுவிட்டு ஹெட்மாஸ்டர் அறைக்குச் சென்றேன்.

"என்னப்பா சாமுவேல் என்ன சமாசாரம்?'' என்று கேட்டார் ஹெட்மாஸ்டர் எபனேசர்.
" -------------------..............  "
"என்னப்பா... கேட்கிறேன்... யோசிச்சுகிட்டு இருக்கியே!''
"ஆமாம் சார்... யோசிச்சுதானே பதில் சொல்லணும்... கஷ்டமான கேள்வி கேட்டிருக்கீங்களே? என்னைக் கூப்பிட்டனுப்பினது நீங்க. உங்களிடம் நான்தான் "என்ன விஷயம்'னு கேக்கணும்...''
"இன்ஸ்பெக் ஷன் வருது... தெரியுமில்லை... பசங்களை இந்த வருஷம் ஓரு பிக்னிக்குக்கூட அழைச்சுகிட்டுப்போவலை, தெரியுமில்லை?''
"அப்படியா சார்?''
"என்னய்யா, பதிலுக்குக் கேள்வி கேட்டுப்புடறீர்? இன்ஸ்பெக் ஷனுக்கு வரப்போறது யாரு தெரியுமில்லே. ராமதாஸ்! தெரியுமில்லை... ரிகார்டை கொதறிப்புடுவாரு, தெரியுமில்லை?''
நான் என்ன பதில் சொல்வேன், இந்தக் கேள்விகளுக்கு? ஆகவே சும்மா இருந்தேன். ஹெட்மாஸ்டர் சட்டென்று அறையின் மூலையில் உட்கார்ந்து டைப் பண்ணிக் கொண்டிருந்த ஸ்கூல் கிளார்க் ஜோசப்பின் பக்கம் திரும்பி, "ஜோசப்பு, பார்த்தீங்களா நம்ப சாமுவேல் ஸாரை! கதை கேக்கற மாதிரி கேட்டுக்கிட்டே இருக்காரு'' என்றார்.
"சிறுகதை  இல்லைங்க... தொடர்கதைன்னு சொல்லுங்க'' என்று சொன்னார் ஜோசப். (பிறக்கும்போது சிலர் வெள்ளி ஸ்பூனுடன் பிறப்பார்களாம். குமாஸ்தா ஜோசப் அசல் வெண்கல ஜால்ராவுடன் பிறந்திருக்க வேண்டும்!)
"யோவ்... ஜோசப்பு... நீ ஏன்யா வர்றே நடுவுலே...?'' என்று அவர் மேல் பாய்ந்தேன்.
"பின்ன என்ன சாமுவேல், பிக்னிக் போவலை அப்படின்னு நான் சொன்னாக்க, உடனே நீங்க இன்னா சொல்லணும். "போய்ட்டா போறது, நான் ஏற்பாடு செய்றேன்'னு சொல்லணும்... தெரியுமில்லை...''
"சரி சார்... எங்கே போவலாம்?''
"எங்கேயாவது போய்ட்டு வாங்க... நமக்கு ஓரு ரிப்போர்ட் வேணும். அவ்ளோதான்...'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோது மியூசிக் டீச்சர் கோகிலா அங்கு வந்தாள்.
"எச். எம் சார்... இந்த ஆர்மோனியத்துக்கு ரீட் சரி பண்ணணும்னு..." என்று ஆரம்பித்தாள்.
"அம்மா... கோகிலா... ஆர்மோனியம், அருவாமணை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்லே ஒரு பிக்னிக்குக்கு ஏற்பாடு பண்ணணும்... இல்லாவிட்டால் இன்ஸ்பெக்டர் படுபாவி குறுக்கே புடிச்சு எழுதிப்புடுவான்'' என்றார் எபனேசர்.
"ஆமாம்... சார். மூணாம் வருஷம் வெள்ளை அடிக்கலைன்னு எழுதப்போய் இன்னா ஆச்சு, தெரியுமில்லை'' என்றார் கிளார்க் ஜோசப்.
"ஜோசப்பு, கொஞ்சம் சும்மா இரு... இத பாரு, கோகிலா, ஆசீர்வாதம்... நீங்க இரண்டு பேரும் பிக்னிக் இன்சார்ஜ்...'' என்றார்.
அடப்பாவமே, இந்த கோகிலா டீச்சருடன் போகவேண்டுமா என்று (மனதிற்குள்ளே) தலையில் அடித்துக் கொண்டேன்.
— — —
எனக்கு ஒரே எரிச்சல். பஸ்ஸில் விடாமல் கர்ண கடூரமாகப் பாடிக் கொண்டு வந்த கோகிலா ஆசீர்வாதத்தின்மேல். போதாதற்கு தமிழாசிரியர் பாண்டியன் அவ்வப்போது என்னிடம், "அதென்னவோ சாமுவேல் சாரும், கோகிலாவும் இல்லாமல் நம்ப பள்ளிக்கூடத்தில் எதுவும் நடக்காது. பருவங்களைப் பற்றி வேற சாமுவேல் அத்தாரிட்டி'' என்று கூறிக்கொண்டிருந்தார். பருவம்' என்னும்போது குறும்பாக கண்சிமிட்டி, லேசாக விலாவில் குத்தினார். என்னையும் கோகிலாவையும் இணைத்துப் பேசி கலாட்டா செய்வது, எங்கள் பள்ளி டீச்சர்ஸ் ரூமில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி.
"சார்... பஸ்ஸை நிறுத்தங்க... அவசரம்'' என்று கத்தினான் ஒரு பையன்.
"அதெல்லாம் நிறுத்த முடியாது. கால்மணிக்கு ஒருதரம் நிறுத்தினால் மகாபலிபுரம் போய்ச் சேரமுடியாது'' என்றேன் கண்டிப்பாக.
"என்னய்யா சாமுவேல்... உன் அதிகாரம் தூள் பறக்குது... பையன் அர்ஜன்ட் என்று சொல்றான்... டிரைவர், பஸ்ஸை நிறுத்துப்பா'' என்று கத்தினார் மேத்ஸ்' மேத்யூஸ்.
பிக்னிக் என்றால் காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டு போகவேண்டும் என்று எந்த அரசியல் சட்டத்திலும் எழுதப்படவில்லை. இருந்தாலும் பஸ்ஸில் இருந்த கூட்டம் என்னைத் தூங்கவிடாமல் கத்திக்கொண்டே வந்தது.
என் முப்பது வருஷ சர்வீஸில் நாற்பதாவது தடவையாக மகாபலிபுரம் சென்றேன். அதே ஊர். அதே சிலைகள். அதே காலரா கபேயின் அதே விளக்கெண்ணெய் காபி. அதே வியாபாரிகள், கடைகள். அதே இளநீர் விற்கும் பெண்மணியைப் பாவாடையிலிருந்து பார்த்து வருகிறேன். இப்போது +2' வாகி விட்டாள். அதாவது இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டாள்!
"டேய் பசங்களா, லைனாகப் போங்க... சாமுவேல் சார் பசங்களுக்கு எல்லாத்தையும் காட்டி விளக்கிடுங்க'' என்றார் பாண்டியன். இப்படி வேலைகளை மற்றவர் பேரில் தள்ளிவிடுவதில் பாண்டியன் சரியான மன்னன்!
ஒருமாதிரி சுற்றிக் காண்பித்து விட்டு வந்தேன்.
"பசங்களா... மணலில் விளையாடுங்க... அஞ்சு மணி வரை விளையாடுங்க... சமுத்திரத்திற்குப் போவக்கூடாது... பாண்டியன் சார்... பசங்க மேல் ஓரு கண் இருக்கட்டும்'' என்றேன்.
"அது சர்ர்ரீ... நீஙக யார் மேல் ஓரு கண் வைக்கறதாக உத்தேசம்'' என்று குறும்பாகக் கேட்டு ஓரக்கண்ணால் கோகிலாவைச் சுட்டிக்காட்டினார்!
கோகிலா அதைப்பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்!
"சாமுவேல் சார்... சும்மா இப்படி கடைங்களைப் பார்த்துவிட்டு வரலாம் வாங்க...'' என்றாள். அவளுடன் நான் சென்றேன்.
கடைத்தெருவிற்கு வந்தபோது, அங்கு பெரிய பேனர் கண்ணில்பட்டது. மகாபலிபுரம் டூரிங் டாக்கீசில் பகல் காட்சி புன்னகை மன்னன் திரைப்பட பேனர்.
அதைப் பார்த்ததும் கோகிலா, "இந்தப் படத்திலேதானே கமலஹாசன் என்னவோ செஞ்சுட்டார்னு பத்திரிகையிலே போட்டிருந்தாங்க" என்று கேட்டாள்.
"ஆமாம்... ஆமாம்...'' என்று போலியான வெறுப்புடன் சொன்னேன்.
"சாமுவேல் சார்... இப்போ மணி 2 ஆவுது... மாட்னிக்குப் போவோமா? எப்படியும் 5 மணி வரை பொழுது போவணுமே'' என்றாள் கோகிலா.
பிக்னிக் மூடில் இருந்த நானும் லேசாகக் கிளுகிளுப்படைந்து, "உங்களுக்காக வர்றேன் கோகிலம். எனக்கு, சினிமா, கினிமா எதுவும் பிடிக்காது...'' என்றேன்.
அடுத்த ஐந்தாவது நிமிஷம் டூரிங் டாக்கீசில் நாங்கள் இருந்தோம்!
கோகிலாவின் குரல், கூக்குரல்தான். முகம் பிக்காஸோ ஓவியம்தான், உடலமைப்பு கார்ட்டூனிஸ்ட் படம் போல்தான். இருந்தாலும் அவளுடன் உட்கார்ந்து அந்த "இச்'சினைப் பார்த்தபோது எனக்கே என்னமோ செய்தது!
கோகிலா போட்டுக் கொண்டிருந்த மட்டரகமான "சென்ட்' கூட ரேவ்லான் சென்ட் மாதிரி இருந்தது எனக்கு!
படம் சுவாரசியமான கட்டத்தில் இருந்தபோது-...
"டமால்'
கொட்டகைக்குள் ஏதோ (குண்டு?) வெடிக்க ஒரே அல்லோலகல்லோலம். ஜனங்கள் திமுதிமுவென்று ஓடத் துவங்கினார்கள். ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக் கொண்டு போனார்கள். கோகிலா நடுங்கியபடி என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு, "சாமுவேல் சார்... எனக்குப் பயமாயிருக்குது'' என்றாள் பாதி அழுகையுடன்.
"கோகிலா... இருங்க... பயப்படாதீங்க... முதல்லே குழந்தைங்க, லேடீஸ் எல்லாம் போகட்டும்... யாருப்பா... பசங்களை மிதிக்காதீங்கப்பா... கேட்டை திறக்கச் சொல்லு. திரைகளை விலக்கு...'' என்று தர்மக் கூச்சல் போட்டேன்.
இதற்குள் வெளியே போலீஸ் வந்துவிட்டது. வெளியே போனவர்கள் எல்லாரையும் பக்கத்தில் உள்ள மைதானத்திற்குப் போகச் சொன்னார்கள். சோதனை செய்ய வேண்டுமாம். யாரோ குண்டு வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகமாம்.
மகாபலிபுரத்தில் ஏதோ ஒரு குட்டி தேசத்தின் குட்டித்தலைவர் அந்த சமயத்தில் வந்திருந்ததனால் ஊரில் இருந்த சிலைகளை விட போலீஸ் தலைகள் அதிகமாக இருந்தன. ஆகவே எல்லா போலீஸும் இங்கு வந்து எல்லாரையும் ஆடு மாடுகளைத் துரத்திப் பவுண்டில் அடைப்பது போல் மைதானத்திற்குள் அனுப்பியது.
சோதனையடா சாமி! ஆமாம், உண்மையிலேயே சோதனைகள் நடந்தன. ஒவ்வொருத்தரையும் பற்றி விசாரித்தார்கள். கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டார்கள்.
"'இன்னா சாரே... ஸ்கோல் டீச்சருன்னு சொல்றே... பிக்னிக்குக்கு பசங்களை அளைச்சுகிட்டு வந்தா, சினிமா கொட்டாயிலே தனியா உனக்கு இன்னா வேலை...'' ஸ்காட்லாண்ட் யார்ட் ஆசாமி என்று தன்னைப்பற்றி அந்த போலீஸ்காரருக்கு நினைப்பு.
"தனியாக வரலைப்பா... இவங்க மியூசிக் டீச்சர் கோகிலா. இவங்களோடதான் வந்தேன்'' என்றேன்.
"அடி சக்கைன்னானாம்... பெரியவங்களே இப்படி செஞ்சா, விடலைப்பசங்க ஏன் பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு சினிமா, டிராமாவுக்கு போவமாட்டாங்க?''
"யோவ்... போலீஸ், அனாவசியமா பேசாதே... எங்க பெரியப்பாரு ஐ.ஜி. ஆபீஸ்லே இருக்காரு'' என்று சீறினாள் கோகிலா.
"இருக்கட்டுமே... இப்படி மாட்னி ஷோ பாக்கவா உங்களை மகாபலிபுரம் அனுப்பினாங்க,. பசங்களோட? நீங்க எந்த அரசியல் கட்சி?''
"எந்த அரசியல் கட்சியும் இல்லைப்பா... வெடிச்சது குண்டா, பட்டாசா?''
"அதெல்லாம் சொல்றதுக்கில்லை... நீங்க வந்த பஸ் எங்கே நிக்குது? உங்க பேர் இன்னா? போய் விசாரிச்சுட்டு வந்துதான் உங்களை ரிலீஸ் பண்ணுவோம்'' என்று சொல்லிவிட்டு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டே போனார் போலீஸ்காரர்.
"கோகிலா... அந்த ஆளு எப்போ போய் எப்போ வர்றது... மணி ஆவுது... பஸ் ஊருக்குக் கிளம்பணும்... நம்மைத் தேடுவாங்களே.''
"எல்லாம் உங்களால வந்த வம்பு! நான் சினிமா போவலாமின்னு சொன்னா, நீங்களும் சரின்னு சொல்லிடறதா?... கர்த்தர்தான் காப்பாத்தணும்'' என்றாள் கோகிலா.
"நமக்குள்ளே சண்டை போட்டுகிட்டிருந்தா லாபம் இல்லை... போன போலீஸ்காரர் வர்றாரான்னு பாருங்க. அதுவரைக்கும் மூக்கை சிந்தாம இருங்க'' என்றேன் எரிச்சலுடன்.
பஸ்ஸைத் தேடிச் சென்ற போலீஸ்காரர் வந்தார்.
"என்ன சார்... பிக்னிக், பஸ் அது இதுன்னு சொன்னீங்க ஒண்ணையும் காணோமே... போலீஸ்காரன்கிட்டே பொய் சொல்லி தப்பிக்க முடியாது... ஏம்பா, நைன்டி த்ரீ இவங்களை போலீஸ் கேம்புக்கு அழைச்சிகிட்டு போ... சரியா விசாரிக்கணும்...'' என்றார். இதைக் கேட்டதும் எனக்கு வெலவெத்தது. கோகிலா சடாரென்று அழ ஆரம்பித்தாள்.
அந்த சமயம் ஓரு ஜீப்பில் யாரோ அதிகாரி வந்தார். "எல்லாரும் போவட்டும்பா... பட்டாஸ்தான் வெடிச்சிருக்கு... குண்டு இல்லைன்னு தெரிஞ்சிடுத்து...'' என்று சொல்லி வயிற்றில் தண்ணீர் கலக்காத பாலை ஏற்றினார்.
— — —
"ஏம்பா, உமக்கு,   "பொறுப்பு வேண்டாம்... உங்களை நம்பி பசங்களை அனுப்பினால் இப்படியா செய்றது?.. நல்ல காலம் பாண்டியன் இருந்தாரோ, பசங்க பத்திரமா வந்தாங்களோ... ஏன்யா, இந்த வயசிலே சினிமாவா கேட்குது?''
ஹெட்மாஸ்டர் இரைந்தார். அறைக்கு வெளியே ஆயிரம் காதுகள் அவர் என்னைக் கிழித்துப் போடும்' சப்தத்தைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தன.
இன்னும் அரை மணியில் ஊர் பூராவும் சொல்லி விடுவார்கள்.
"...அட போனீங்களே, கூட லேடி டீச்சரையும் அழைச்சிகிட்டுப் போகணுமா? அவங்க வரலைன்னு சொன்னாங்களாம். நீங்கதான் பரவாயில்லைன்னு சொல்லி வலுக்கட்டாயமா இழுத்துப் போனீங்களாமே...''
"இல்லை சார்...''
"இல்லைதான். நீங்க ஓரு சின்ன வேலைக்கும் லாயக்கில்லை... ஆமாம் என்ன சினிமா அது?''
"புன்னகை மன்னன் சார். வந்து...'
"புன்னகை மன்னன்... ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணி வைக்கறேன். தினமும் மூணு ஷோ போய்ப் பாருங்க... போய்யா...  போ ....சும்மா நின்னுகிட்டு...''
கோகிலாவின் பேச்சைக் கேட்டு புன்னகை மன்னன் சினிமாவுக்குப் போனேனே, நான் ஒரு புண்ணாக்கு மன்னன்!

4 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    தினமும் வருகிறோம், படிக்கிறோம், மகிழ்கிறோம், ஆனால் வருகைப் பதிவு செய்வதில்லை, அதை நாசுக்காக, நகைச்சுவையாக, சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

    நீங்கள் (வலிக்காமல்) குட்டினாலும், சந்தோஷமாகவே இருக்கு. ஏனெனில், இந்த முன்னூட்டத்தை(முகப்பை) படித்ததும், நாங்களும் புன்னகை மன்னர்கள் ஆகி விட்டோமே.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. //என் முப்பது வருஷ சர்வீஸில் நாற்பதாவது தடவையாக மகாபலிபுரம் சென்றேன். அதே ஊர். அதே சிலைகள். அதே காலரா கபேயின் அதே விளக்கெண்ணெய் காபி. அதே வியாபாரிகள், கடைகள். அதே இளநீர் விற்கும் பெண்மணியைப் பாவாடையிலிருந்து பார்த்து வருகிறேன். இப்போது ’+2' வாகி விட்டாள். அதாவது இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டாள்!//

    SUPERRRRRRRRRRRRR.

    ReplyDelete
  3. நன்றி. ஏதாவது புனைபெயரிலாவது எழுதுங்கள். Anonymous என்ற பெயரில் பலர் எழுதுகிறார்கள்!!!:) - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!