January 13, 2012

சாவிக்கு ஒரு புகழ் மாலை - ரவிபிரகாஷ்


கடுகு குறிப்பு:
சாவி அவர்களைப் பற்றி ஒரு புததகமே எழுதலாம். ராணிமைந்தன். புஷ்பா தங்கதுரை, கோபுலு,ரவி பிரகாஷ், நான் ஆகியவர்களிடம் அத்தனை தகவல்கள் உள்ளன.
அவரது  எழுத்துத்திறமையை விட்டுத் தள்ளுங்கள். மனிதநேய சம்பவங்கள் ஏரராளமாக உள்ளன.
தன்குறைகளை தயங்காமல் எடுத்துச் சொல்வார்.
மாபெரும் ரசிகர். அவரால் செதுக்கப்பட்டவர் என்றும் சோடை போனதில்லை. ரவியின் கட்டுரையில் கடைசியில் காத்திருக்கிறது ஒரு முத்தாய்ப்பு..
ரவியின் ” உங்கள் ரசிகன்” வலைப்பூவில் வந்த பதிவை இங்கு தருகிறேன்.
நன்றி :ரவிபிரகாஷ்.உங்கள் ரசிகன்:
=============================================
 சாவி சாரின் அபூர்வ படம். தன் மகன்கள் பாச்சா (எ) பாலசந்திரன், மணி மற்றும் மகள்கள் ஜெயந்தி, உமா, ஜெயஸ்ரீ மற்றும் மாலதியுடன் சாவி சார். கடைக்குட்டிப் பெண்தான் மாலதி.
-                 -                      -


‘சாவி’ என்று அந்த மாமனிதரின் பெயரை தட்டச்சு செய்யும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது. அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியது நான் செய்த பாக்கியம். ஆனால், அவரிடம் பணியாற்றிய காலத்தில் அதை நான் பூரணமாக உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்.

அவர் என்னிடம் உரிமையோடு கோபித்துக்கொண்டபோதெல்லாம் அது என் நன்மைக்காகவே என்பது புரியாமல், மோதிரக் கையால் பெறப்படும் குட்டுக்கள் அவை என்பதை உணராமல், பதிலுக்கு பதில் நானும் அவரிடம் முறைத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பு கூசுகிறது. என்னை நானே எதாலாவது அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

சாவி பத்திரிகையை முழுக்க முழுக்க என்னை நம்பி விட்டிருந்தார் சாவி. அவர் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே கவனிப்பார். மற்ற விஷயங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், வடிவமைப்புகளை எல்லாம் என் விருப்பத்துக்கேற்பத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். ஒரு முறை, சிறுகதை ஒன்றின் படத்தை சாவி பத்திரிகை அட்டையில் வெளியிட்டு, அதன் கீழேயே கதையின் ஆரம்பச் சில வரிகளைப் பெரிய எழுத்தில் பிரசுரித்து, தொடர்ச்சி உள்ளே எனக் குறிப்பிட்டேன். அவ்வளவு ஏன்... இம்ப்ரிண்ட் என்று சொல்லப்படும் ஆசிரியர் குழுப் பட்டியலை சாவி பத்திரிகை அட்டையிலேயே ஒருமுறை வெளியிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்குமே மாற்றுக் கருத்து சொன்னதில்லை அவர். ‘இம்ப்ரிண்ட்டை அட்டையில் வெளியிடணும்கிற விசித்திரமான யோசனை யாருக்குமே தோணாது, ரவி!’ என்று புன்னகைத்துப் பாராட்டத்தான் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் என் மீது அக்கறை கொண்டு உரிமையோடு கோபித்துக் கொண்டபோது அதை ஆசீர்வாதமாக ஏற்காமல், பதிலுக்கு நானும் முறுக்குக் காட்டியதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

ஒருமுறை, எஸ்.சங்கரநாராயணன் என்கிற எழுத்தாளர் ‘அன்றிரவு’ என்று ஒரு சிறுகதையை என்னிடம் பரிசீலனைக்கு நேரில் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அண்ணா நகரில், சாவி இல்லம் - கம் - அலுவலகத்துக்கு அருகில் இருந்த போஸ்ட் அண்ட் டெலகிராஃப் ஆபீஸில் அப்போது பணியாற்றிக்கொண்டு இருந்தார். எனவே, தனது படைப்புகளைப் பொடி நடையாக நேரிலேயே வந்து கொடுப்பது அவர் வழக்கம். அவர் தந்த ‘அன்றிரவு’ கதையை அன்றிரவே படித்து, அந்த வார சாவி இதழிலேயே பிரசுரித்துவிட்டேன்.

சாவி இதழுக்கு பரிசீலனைக்கு வரும் சிறுகதைகள் மொத்தத்தையும் என் ஒருவனால் படிக்க முடியாது என்பதால், அவற்றை சாவி சாரின் கடைசி மகள் மாலதிக்கு அனுப்பி வைப்பேன். அவர் படித்துத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சிறுகதைகளையும் வெளியிடுவேன். ஆனால், அப்படி அனுப்புவதற்கு முன்பு, உடனடி தேவைக்காக, நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை நானே பரிசீலிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

‘அன்றிரவு’ சிறுகதை ‘சாவி’யில் வெளியாகி, இரண்டு நாட்கள் கழித்து, சாவி சார் என்னை அழைத்தார். “இந்த வார இஷ்யூவுல வந்திருக்கிற ‘அன்றிரவு’ கதையை யார் படிச்சு செலக்ட் செஞ்சது?” என்று கேட்டார். “நான்தான் சார்” என்றேன். “கதை அப்படி ஒண்ணும் நல்லா இல்லையாமே? எப்படி இதை செலக்ட் பண்ணினே?” என்றார். “இல்ல சார், நல்ல கதைதான்...” என்றேன். “ம்ஹூம்! கதை ரொம்ப சுமாரா இருக்குப்பான்னு மாலதிதான் போன் பண்ணிச் சொன்னா!” என்றார் சாவி. “இல்ல சார், அந்தக் கதை அப்படி ஒண்ணும் மோசமான கதை இல்லே!” என்றேன். “மோசமான கதை இல்லேங்கறியே தவிர, நல்ல கதைன்னு சொல்ல மாட்டேங்கிறே பார்த்தியா?” என்று என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்கியவர், “கதை செலக்ட் பண்றதுல நீ இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும் ரவி! சுமார் ரகக் கதைகளை எல்லாம் யோசிக்காம தள்ளிடு. நல்ல கதைகள் மட்டும்தான் சாவியில் வெளியாகணும். பக்கத்துல இருக்கிறவங்க நேர்ல கொண்டு வந்து கொடுத்தாங்கன்னு முக தாட்சண்யத்துக்காக எல்லாம் சிறுகதைகளைப் பிரசுரிச்சோம்னா பத்திரிகை பேர் கெட்டுடும்” என்றார் சாவி.

அவர் பேசப் பேச, எனக்குள் சுறுசுறுவென்று கோபம் ஏறிக்கொண்டு இருந்தது.

அடுத்து அவர் சொன்னதுதான், கட்டுப்பாட்டை மீறி என்னை வெகுண்டு எழச் செய்துவிட்டது.

“ரவி, இனிமே எல்லாக் கதைகளையும் மாலதிக்கு அனுப்பிச்சுடு! அவ படிச்சு செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதை மட்டும் போடு, போதும்!” என்றார்.

அடுத்த விநாடி, அவர் அடுத்து என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கவனிக்காமல், விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். மாடியில் சாவி சார் வீடு; கீழே அலுவலகம்.

விறுவிறுவென்று கீழே இறங்கி வந்தேன். ஐம்பது ஐம்பது கதைகளாகக் கட்டி வைத்திருந்த இரண்டு மூன்று கட்டுகளை சுமக்க முடியாமல் மாடிக்குத் தூக்கிச் சென்றேன். சற்றும் இங்கிதமோ, மரியாதையோ இல்லாமல், சாவி சார் முன்பு தொப்பென்று சத்தம் வரும்படி தரையில் போட்டேன். “சார், இதுல 150 கதைகள் இருக்கு. ஏற்கெனவே உங்க பொண்ணு கிட்டே 300 கதைகள் வரை இருக்கு. எல்லாத்தையும் படிச்சு செலக்ட் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அடுத்த இஷ்யூவுக்குக் கையில ஒரு கதை கூட இல்லை” என்றவன், “இனிமே நானாக ஒரு கதை கூட செலக்ட் பண்ணிப் போட மாட்டேன். ஆனா, இஷ்யூவுக்குக் கதைகள் இல்லேன்னா என்ன பண்ணலாம்னு நீங்கதான் சொல்லணும்” என்று வீராப்பாகச் சொல்லிவிட்டு, அவர் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மீண்டும் தடதடவென்று கீழே இறங்கி வந்து என் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, படபடப்பு அடங்காமல் சக தோழர்களிடம் புலம்பித் தீர்த்தேன்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்திருக்கும். சாவி சார் மெதுவாக நடந்து வந்து, என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “ரவி! எனக்கு உன் கோபம் புரியுது. நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்துக்கிட்டிருப்பேன். என் கோபம் அப்படியே உன் கிட்டே இருக்கு” என்றவர், சற்று இடைவெளி விட்டு, “இனிமே கதைகளை நீயே படிச்சுத் தேர்ந்தெடு. நான் எதுவும் கேட்க மாட்டேன். உன் சுதந்திரத்துல நான் குறுக்கிட மாட்டேன். உன் மேல எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கு. என்னவோ, அவள் சொன்னாளேன்னு அவசரப்பட்டுக் கேட்டுட்டேன். அதை ஒண்ணும் நீ மனசுல வெச்சுக்காதே! உனக்கு உதவியா இருக்கும்னா, கதைகளை மாலதிக்கு அனுப்பு. அவ செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதையும் அப்படியே போடணும்னு அவசியம் இல்லே. உனக்குத் திருப்தியா இருந்தா போடு! இதை ஏதோ உன் மனச்சாந்திக்கு சொல்றதா நினைக்காதே! மனப்பூர்வமா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

சர்வாங்கமும் கூனிக் குறுக அமைதியாக உட்கார்ந்திருந்தேன். வேறு என்ன எதிர்வினையாற்றுவது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அன்றைக்கு ராத்திரி முழுக்க, நடந்த சம்பவத்தை நினைத்து நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தேன். பெருந்தகையாளர் சாவி அவர்களின் முன்னால் நான் வெறும் தூசு. தூசினும் தூசு. அப்படிப்பட்டவர் அன்று என்னிடம் நடந்து கொண்ட விதம், அவரை ஒரு மகானாகவே எனக்குக் காட்டியது.

இந்த நிகழ்வு ஒரு சாம்பிள்தான்! இன்னும் இருக்கிறது. இதெல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்துத்தான், சாவி சார் இறந்த அன்றைக்கு அவர் உடம்பின் அருகில் அமர்ந்து அடக்கமாட்டாமல் கதறித் தீர்த்தேன். அன்றைக்கு நான் விட்ட ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இதே போன்று நடந்த ஒவ்வொரு சம்பவத்தை முன்னிட்டும் அது நாள் வரை நான் அடக்கி வைத்திருந்த கண்ணீர்தான்!

பின்குறிப்பு: அந்த ஆண்டு ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பால் சிறந்த சிறுகதை எனத் தேர்வு செய்யப்பட்டது ‘அன்றிரவு’.

5 comments:

 1. பத்திரிகையுலகின் ஜாம்பவான் சாவி அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் தெரிந்து கொண்டேதான் இருக்கிறேன். தலைசிறந்த ஒரு பத்திரிகையாசிரியரின் முத்திரைப் படைப்புகளை எல்லாம் நானும் படித்திருக்கிறேன்; வாசகனாக இருந்திருக்கிறேன் என்பதில் மிகப் பெருமை எனக்கு! கடுகு ஸாருக்கும், கமலா அம்மாவுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. சாவி அவர்கள் ஒரு ரிமார்கபிள் ஜர்ணலிஸ்ட் தான். ரவி ப்ரகாஷ் செய்தது சரியான ரீயேக்‌ஷன் தான் என்பது என் கருத்து. சாவியே அதை உணர்ந்து வருத்தம் தெரிவித்ததுதான் சான்று. இங்கு சாவி உயர்ந்துவிட்டார். ரவி அப்போது ஒன்றும் சொல்லாமல் இருந்திருந்தால் மனதில் புழுங்கி சாவியைவிட்டு வெளியே வந்திருப்பார். என்னதான் பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களும் சில சமயம், ஏன், பல சமயங்களில் தன் பவரை காண்பிப்பதற்கும், மற்றவர்களை ஒரு படி கீழேயே வைத்திருப்பதற்கும் இந்த மாதிரி நடந்துகொள்வது வழக்கம். தன் நம்பிக்கை/ தைரியம் இல்லாதவர்கள் புழுங்கி, தலையை கவிழ்த்துக் கொண்டு போவார்கள். நானும் இந்த சிசுவேஷன்களைக் கடந்தவன் தான். ஒன்றே ஒன்று, நம் வயசும் மற்ற கமிட்மென்ட்ஸும் ஒத்துழைக்கவேண்டும் - வேலையை விட்டு வருவதற்கு தயாராவதற்கு!

  இதற்கு முன்னாலும் ஒரு கதை போட்டிக்கு சாவி, சுஜாதாவையும் ஒரு ஜட்ஜாகப் போட்டிருந்தாராம், ஆனால் எல்லா கதையையும் அவர் படிக்க நேரம் தராமல் முடிவை அறிவிக்கச் சொல்லி சாவி பிடிவாதம் பிடித்தாராம். எவ்வளவோ சொல்லியும் சாவி கேட்காததால், சுஜாதா வெறு வழியில்லாமல் அவரை பகைத்துக் கொள்ல வேண்டாம் என்று கையெழுத்துப் போட்டாராம். (சுஜாதாவை வளர்த்ததிலும் சாவியின் பங்கு அதிகம்!) - ஜெ.

  ReplyDelete
 3. Wish you and all members of your family a very Happy 2012 which shall usher in only good things in life and good health!

  I don't know what to say / talk with you when we come across! There is a possibility I will see you in a function next week. (I also have difficulty in conversing in a crowd due to hearing impairment.)

  -R. J.

  ReplyDelete
 4. சாவி அவர்கள் பற்றி நான் எழுதியவை (எதிர்மறையாக இருப்பதற்கு மன்னிக்கவும்):

  பல மாத நாவல்கள் வெளி வருகின்றன.அவற்றில் கணிசமானவை ஏற்கனவே பத்திரிகைகளில் தொடர்க் கதையாக வெளி வந்தவையே. ஆனால் சம்பந்தப்பட்ட மாத நாவலில் அதை பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். தலைப்பை வேறு மாற்றி விடுவார்கள்.

  இந்தப் பழக்கத்துக்கு ஒரு மோசமான உதாரணம் திரு. சாவி அவர்கள். அவருடைய தொடர் கதை "ஓ" மாத நாவலாக உருவான போது "அன்னியனுடன் ஒரு நாள்" என்றப் பெயரில் வந்தது. நல்ல வேளையாக நான் அதை வாங்கி ஏமாறவில்லை. ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் கதை தொண்ணூறுகளில் வேறு பெயரில் வந்தது. இந்த முறை ஏமாந்தேன். ஆனால் முதல் பாரா படிக்கும் போதே ஏற்கனவே படித்த கதை என்றுத் தெரிந்துப் போயிற்று. சாவியின் இம்முயற்சிகள் எல்லாம் அவருடைய சொந்தமான மோனா பப்ளிகேஷனில் வெளியாயின. ஆகவே அவர் பொறுப்பு இதில் இரட்டிப்பு ஆகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2004/11/blog-post_13.html

  தமிழ் பத்திரிகை உலகுக்கு சாவி அவர்களது பெயர் மிக்க பரிச்சயம். விகடன் ஆசிரியர் குழுவில் ரொம்பக் காலம் இருந்தார். ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் அவரும் மணியனும் விகடனில் தீவிரமாகச் செயல்பட்டனர். அக்காலக் கட்டத்தில் அவர் எழுதிய தொடர்கதைகள் மிகப் பிரசித்தம், உதாரணங்கள்: வழிப்போக்கன், வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை முதலியன.

  எழுபதுகளின் துவக்கத்தில் தினமணி கதிரின் ஆசிரியராக இருந்தார். மனிதர் ரொம்ப உணர்ச்சி வசப்படுபவர். கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பர், ஆகவே எம்.ஜி.ஆருடன் தனிப்பட்ட விரோதம் பாராட்டினார்.

  சாவியிடம் உள்ள குறை இதுதான். நட்பில் தீவிரமாக இருப்பார், விரோதத்திலோ அதை விட. எம்.ஜி.ஆரை அவர் இவ்வாறெல்லாம் வர்ணித்திருக்கிறார். "கிழட்டு நடிகர்", "அட்டைக் கத்தி வீரர்". கேள்வி பதில்களில் எம்.ஜி.ஆர். அவர்களை மட்டம் தட்டும் வாய்ப்பை விட்டதே இல்லை. உதாரணத்துக்கு:

  கேள்வி: எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?
  பதில்: அட்டை கத்தியை கையில் எடுத்துக் கொள்வேன்

  கேள்வி: எம்.ஜி.ஆர். ஏன் தொப்பி போடுகிறார்?
  பதில்: அவருக்கு தலை வழுக்கை, அதை மறைக்கத்தான்

  கேள்வி: எம்.ஜி.ஆரிடம் ஒரு நல்ல விஷயமும் இல்லையா?
  பதில்: நானும் முயன்று பார்த்தேன், ஒன்றும் தேறவில்லை

  கேள்வி: எம்ஜிஆர் பொய் சொல்வாரா?
  பதில்: அவர் குண்டடிபட்டு மருத்துவ மனையில் இருந்தபோது நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவரை சந்தித்தப் போது தான் ஆஸ்பத்திரி வரைக்கும் வந்ததாகவும் ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறியதால் அவரைப் பார்க்க முடியவில்லை என ஒரு டூப் விட்டேன். ஆனால் எம்ஜிஆரோ, நான் வந்தது பற்றி அவரது உதவியாளர் அவர் தூங்கி எழுந்த பிறகு கூறியதாகச் சொன்னார். இப்போது நீங்களே கூறுங்கள். யார் சொன்னது பெரிய பொய்?

  1971-ல் வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்துக்கு 1974-ல் சுப்புடு அவர்களை விட்டு ஒரு விமரிசனத்தை தான் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் பத்திரிகையில் எழுதச் செய்தார். அதில் சுப்புடு அவர்கள் எம்.ஜி.ஆரை கிழி கிழி எனக் கிழித்திருந்தார். "ஊரார்" என்னும் தொடர்கதையில் "கிழட்டு நடிகன் போஸ்டர்களில் சிரித்துக் கொண்டிருந்தான்" (நினைவிலிருந்து கூறுகிறேன்) என்று எழுதியிருந்தார்.

  ஏன் இந்த மாதிரி நடந்து கொண்டிருந்தார்? இதையெல்லாம் பற்றி அவர் சமீபத்தில் 1980 ஜனவரியில் சாவியில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு: "எனக்கும் எம்.ஜி.ஆரு.க்கும் இடையில் என்ன பிரச்சினை?" பார்க்க: http://dondu.blogspot.com/2006/06/blog-post_25.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 5. அந்த அன்றிரவு - கதையின் ஆசிரியன் நாந்தான். எஸ்., ஷங்கரநாராயணன்
  storysankar@gmail.com
  91 97899 87842

  ஒரு நண்பர் இந்தப் பகுதியை என் பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கதை இலக்கியச் சந்தினையின் ஆண்டுப் பரிசு அல்ல - மாதப் பரிசு பெற்றது, என அறியத் தருவேன்.

  அந்த சமயத்தில் நான் சாவியிலும் தாய் வார இதழிலும் ஒருவாரம் இங்கே அடுத்த வாரம் அங்கே என எழுதி வந்தேன். ஒரு மாத அளவிலேயே அது ஏனோ நின்று போனது. காரணம் சாவி என இப்போது நான் நினைப்பது சரியாக இருக்கலாம்...

  மாதாந்திர கமிட்மென்ட் மனதில் இருந்தால் எழுத்தில் கவனம் அதிகரிக்கும் எனக்கு, என நினைத்தேன்... தினமணி கதிரில் ஆறு வாரங்கள் தொடர்ந்து எழுதியபோது, ஒவ்வொரு வாரமும் முன் தொடாத இடங்களில் சிறகடித்துப் பறக்க முடிந்தது. ஞாநி தந்த வாய்ப்பு அது.

  பத்தோடு பதினொன்றான எழுத்தாளன் அல்ல நான். என் கதைகள் பல இந்தி ஆங்
  கிலம் குஜராத்தி மலையாள மொழிகளில் பெயர்ப்பு கண்டுள்ளன. சாகித்ய அகாதெமிக்காக முல்க் ராஜ் ஆன்கத்தின் •விடியல் முகம்• நாவல் என் மொழிபெயர்ப்பு. உலகச் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக கனவுச் சந்தை - வேற்றூர் வானம் என தந்தேன். தற்போது நோபல் பரிசு பெற்ற நாவல் BLINDNESS ஜோஸ் சரமாகோ எழுதியது - தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

  இதுவரை எனது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் பல்வெறு பல்கலைக் கழகங்களில் தன்னாட்சிக் கல்லூரிகளில் இளங்கலை நவீன இலக்கிய அறிமுக நூல்கள் என பாடமாக்கப் பட்டுள்ளன

  சொல்ல வந்த விஷயம் விட்டுவிட்டது. வாரம் ஒரு கதை சாவியில் என எழுதிய இரு கதைகளில் ஒன்று அன்றிரவு - இலக்கியச் சி ந்தனை பரிசு பெற்றது. அடுத்த வாரம் தாய் இதழில் நான் எழுதிய வம்சம் - அதுவும் அடுத்த மாச இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.

  அடுத்தடுத்து இப்படி இலக்கியச் சிந்தனை பரிசுகள் பெற்றவர் இருவரே. ஒருவனை அறிவீர்கள். அடுத்தவர் அசோகமித்திரன்.

  சாவிக்கும் ரவி பிரகாஷுக்குமான தனிப்பட்ட கருத்து பேதங்களை யெல்லாம் அரங்கேற்ற வேண்டுமா என்று தோன்றியது... இந்த வம்புகள் பிடிக்காமலேயே நான் பிளாக் என எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :