January 06, 2012

சொர்க்கத்திலிருந்து வந்த ஏழு

சமீபத்தில் ஒருநாள் பத்திரிகையில் வந்த செய்தி: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ஒரு பெண்மணி ஈன்றெடுத்தாள். இந்த மாதிரி செய்தியை ஆபீசிலும், பஸ்ஸிலும், வம்பு மடங்களிலும் சிறிது நேரம் பேசிவிட்டு சினிமா, கிரிக்கெட், அரசியல் என்று வேறு விஷயங்களுக்குப் போய் விடுவோம்.

நாலு குழந்தைகளைப் பெற்ற பெண்மணி வசதியானவளா, நாலு குழந்தைகளை எப்படி வளர்ப்பாள், எப்படி பராமரிப்பாள், 24 மணி நேரமும் உழைக்க வேண்டுமே, உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? முக்கியமாக நாலு குழந்தைகளை வளர்ப்பதற்கு நிதி வசதி இருக்குமா, அவளும் அவள் கணவனும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பார்கள் என்றெல்லாம் நாம் பொதுவாக யோசித்துப் பார்ப்பதில்லை.

ஒரு சமயம் அமெரிக்கா சென்றபோது பழைய புத்தகக் கடையில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு : Seven from Heaven.The Miracle of the McCaughey Septuplets. சொர்க்கத்திலிருந்து வந்த ஏழு! ஏழு என்ன?
ஏழு
குழந்தைகள், ஒரே பிரசவத்தில்..! அந்த ஏழு குழந்தைகளின் பெற்றோர் தங்கள் அனுபவத்தைப் புத்தகமாக எழுதி இருக்கிறார்கள்.
.
‘‘மேடம்... உங்கள் கர்ப்பத்தில் ஏழு குழந்தைகள் உருவாகியுள்ளன’’ என்று மகப்பேறு டாக்டர் சொன்ன தருணத்திலிருந்து குழந்தைகளைப் பெற்று, மருத்துவமனையிலிருந்து ஏழு குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்த விவரங்களையும், குழந்தைகளை வளர்த்த அனுபவங்களையும், சந்தி்த்த பிரச்னைகளையும், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விவரித்ததையும் படித்து நெகிழ்ந்தேன்; மகிழ்ந்தேன்; வியந்தேன்; சிலிர்த்தேன். பல நிகழ்ச்சிகளில் உலகில் மனிதாபிமானமும், நெஞ்சில் ஈரமும், கருணையும் வாடிப் போகாமல் துளிர் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

சாதாரணப் பணியில் இருக்கும் நபர் எப்படி ஏழு குழந்தைகளை வளர்ப்பார். அங்குள்ள சட்டப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி அறை இருக்க வேண்டும் அதாவது அவர்களுடைய வீட்டில் (7+1) எட்டு படுக்கை அறைகள் இருக்க வேண்டும். அவர்கள் இருந்தது அயவோ மாநிலத்தில் கார்லைல் என்னும் சிறிய ஊர் இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி உள்ளூர் தேவாலயம் முன்நின்று செயல்பட்டது. ஏழு குழந்தைகள் என்பது உலக ரிகார்டாம்! இந்தக் குடும்பத்தினருக்கு உதவ முன்வருபவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டது. நிதி வசூல் செய்தார்கள். குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு ஏழு படுக்கை அறைகள் கொண்ட ஒரு புது வீட்டைக் கட்டி முடிக்க ஊரே திரண்டு உதவி செய்தது.
உள்ளூர் மருத்துவமனை அந்தப் பெண்மணியின் உடல்நலத்தை அக்கறையுடன் கண்காணித்து வந்ததுடன் தேவையான போஷாக்கு உணவு மருந்துகளைத் தந்தது. ஒரு மருத்துவக் குழுவையே அமைத்து அவரை இரவு பகலாகக் கவனித்து வந்தனர். கடைசி சில வாரங்கள் அவளை மருத்துவமனையில் தங்க வைத்துக் கொண்டது. அப்பெண்மணியைச் சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை. முக்கியமாக மீடியாக்காரர்களுக்கு.

குழந்தைகள் பிறந்ததும் தலைமை மருத்துவரே மீடியாக்காரர்களை அழைத்துத் தகவல் சொன்னார். ‘‘சுகப்பிரசவங்கள. தாயும் சேய்களும் நலம்.’’ என்றும் அறிவித்தார். சில நிமிடங்களில் செய்தி பரவியது.. தலைமை மருத்துவருக்கு ஒரு வி.வி..பி.யிடமிருந்து போன். அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன்! அந்தப் பெண்மணியிடம் பேச விரும்பினார். அவளுக்குத் தன் வாழ்த்துக்களையும், பிரசவங்கள் நல்லபடியாக நடந்தது பற்றிய தன் மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தினார்.

குழந்தைகள் பிறந்து விட்டன. வளர்ப்பது எப்படி? தேவாலயமே ஒரு ஏற்பாடு செய்தது. தொண்டர்களுக்கு டியூட்டி அட்டவணை போட்டது. ஒவ்வொரு குழந்தையையும் ஒரு நாள் யார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணி அட்டவணை போட்டது. அதன்படியே குழந்தைகள் கண்ணும் கருத்துமாக ஊர் மக்களால் வளர்க்கப்பட்டன. இப்போது குழந்தைகளுக்கு 14 வயது ஆகியிருக்கும்.
இந்தப் புத்தகத்தை நான் படித்து முடித்திருப்பேன். மற்றொரு செய்தி நியுஜெர்சி தினசரியில் முதல் பக்கத்தில வந்தது. நியுஜெர்சியில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்ததாக வந்த தகவலுடன் ஒரு துணைத் தகவலையும் போட்டிருந்தார்கள். இந்த பிரசவத்தின் காரணமாக அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகிவிட்டது என்று!

என்னது... பன்னிரண்டு குழந்தைகளா என்று ஆர்வத்துடன் படித்தபோது வியப்பூட்டும் விவரங்கள் தெரியவந்தன.

அவருக்கு முதலில் இரட்டைக் குழந்தைகள், பிறகு ஒரு குழந்தை, பிறகு மறுபடியும் ஒரு குழந்தை, பிறகு ஒரு பெண், பிறகு ஒரு பெண் -ஆக ஆறு குழந்தைகள். சமீபத்திய ஆறு குழந்தைகள் பிரசவத்துடன் மொத்தம் 12 குழந்தைகள் ஆகிவிட்டன. அவருக்கும் பல சேவை நிறுவனங்கள் உதவிக் கரங்களை நீட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2 comments:

  1. என்னது... பன்னிரண்டு குழந்தைகளா? அமெரிக்காவுல கு.க. திட்டம்லாம் எதுவும் இல்லையா? ஆனா குழந்தைகளுக்கு தனி அறை கொடுத்துடணும்னு அவங்க போடற சட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு. குழந்தைங்க மேல எவ்வளவு அக்கறை!

    ReplyDelete
  2. இதுகு.க. திட்டம்இல்லை<>இது கு.கா. திட்டம் ---குழந்தைகள்காப்பக திட்டம்!!!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!