December 20, 2011

சுவைகளில் நான் நகைச்சுவை -புதிய கீதை - பாகம்1

முன்னுரை
உலகில் உள்ள 732 கோடியே 76 லட்சத்து 13 ஆயிரத்து 768 ஜீவராசிகளில் -இந்தக் கணக்குத் தவறு என்று சொல்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். வேண்டுமானால் நீங்களே எண்ணிப் பாருங்கள்! - இத்தனை ஜீவராசிகளில் சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் ஒருத்தன்தான். (யாரது அங்கே... ஆரம்பிச்சுட்டாரய்யா... ஆரம்பிச்சுட்டாரய்யா... என்று சொல்வது? அவரைக் கழுவிலே ஏற்றுங்கள்.)
நகைச்சுவை உணர்வைப் பற்றி பல மேதைகள் நிறைய கூறி இருக்கிறார்கள்.
மகாத்மா காந்தியின் பொன்மொழி மிகவும் பிரபலமானது. அது இங்கு தனியாகக் கொட்டை எழுத்தில் தரப்பட்டுள்ளது.
(எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்ச்சி இல்லாதிருந்தால் எப்போதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.
-மகாத்மா காந்தி.)
நகைச்சுவை என்னும் வலை உள்ள இடத்தில் கவலையெனும் கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது.

*உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்த டானிக் நகைச்சுவை. மனச் சோர்வையும், மாற்ற வல்லது. வியாபாரிகளுக்கு அது மூலதனம். மக்களின் வாழ்க்கைச் சுமைகளை லேசாக ஆக்கக் கூடியது. மன அமைதிக்கும் நிறைவுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் விரைவுப் பாதை.  .-கிரின்பில் க்ளெய்ஸர்.

*பகுத்தறிவும் நகைச்சுவை உணர்வும் வேறுபட்டவை அல்ல. அவைகள் செல்லும் வேகம்தான் வேறு வேறு. குதித்துத் 
துள்ளியாடும் பகுத்தறிவு தான் நகைச்சுவை. -வில்லியம் ஜேம்ஸ்.
*நகைச்சுவை மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் உரம்! -மார்க் ட்வெய்ன்.
*வாழ்க்கை என்றும் கம்பி மீது தடுமாறாமல் நடந்து செல்வதற்கு உதவுவது நகைச்சுவை என்னும் கம்புதான். -வில்லியம் ஆர்தர் மார்ட்.

நகைச்சுவையில் எத்தனையோ வகைகள் உண்டு. அச்சில் வரும் நகைச்சுவையை பேச்சில் கூறுவது எளிதல்ல. அதுவும் படங்களுடன் வரும் நகைச்சுவையை படத்தைப் பார்த்தபடியே படித்தால்தான் அவை சிரிப்பு உண்டாக்கும். (ஆனால் பல பத்திரிகைகளில் படங்களுடன் வரும் ஜோக்குகளில் படம் ஒன்றும், ஜோக்குகளுக்கு உதவுவதில்லை. ஜோக்கில் வரும் வசனங்களில் படங்கள்தான் நகைச்சுவையை மிளிரச் செய்ய வேண்டும்.)
பேசும் போது கூறும் நகைச்சுவையில் பஞ்ச் லைன்தான் முக்கியம். ஜோக்ஸை விட ஜோக்கைச் சொல்வதில்தான் இருக்கிறது சூட்சுமம். பேசும்போது சரளமாகச் சொல்வதற்குப் பயிற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ அப்போது தான் தோன்றிய ஜோக் மாதிரி சொன்னால் சிறப்பு அதிகம்.
ஜோக்கில் எல்லாம் புதிய ஜோக்தான்.  .
 
2009 ஆண்டில் உலகின் மிகச் சிறந்த (!)  10 ஜோக்குகளை  ரீடர்ஸ் டைஜஸ்ட் (அமெரிக்கப் பதிப்பில்) மே 2009 இதழில் போட்டிருந்தார்கள். எல்லாமே பழைய ஜோக்குகளாகத்தான் எனக்கு  இருந்தன. காரணம் நான் ஆயிரக்கணக்கான ஜோக்குகளைப் படித்திருப்பதுடன் பலவற்றை நினைவிலும் வைத்திருக்கிறேன். அந்த ஜோக்கைப் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்து போயிருப்பவர்களுக்கும் அது புதிய ஜோக்காகத்தன் இருக்கும். 

ஆகவே, எல்லாரும் தாங்கள் படித்த ஜோக்குகளை மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு, உற்சாகமாகச் சொல்ல வேண்டியது அவசியம். அது மட்டுமல்ல, சொல்லும் போது நீங்களே ரசித்துக் கொண்டு சொல்ல வேண்டும். முதன்முதலாகச் சொல்வது போல் ரசனையுடன் சொல்வது அவசியம். ஐயோ, இந்த ஜோக்கை இதற்கு முன் பலர் படித்திருப்பார்கள் அல்லது கேட்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் ஜோக் சரளமாக சொல்ல வராது. ஜோக்கை விட இந்த நினைவுதான் உங்கள் மனதில் இருக்கும்.
*************
இப்போது சில புதிய ஜோக்குகள்!
*************
*வாக்கிங் போய்க் கொண்டிருந்த ஒருவர், ஒரு வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பைப் பார்த்தார். பேசும் நாய் விற்பனைக்குஎன்று எழுதி இருந்தது.
வியப்பு தாளவில்லை. உள்ளே போய் விசாரித்தார். நாயைக் கொண்டு வந்தார் அதன் சொந்தக்காரர்.
ஜிம்மி... உன்னைப் பற்றி இவருக்குச் சொல்”  என்றார்.
 ”அது பெரிய கதை. நான் இராக் யுத்தத்தின் போது இரண்டு வருஷம் உளவாளியாக இருந்தேன். பிறகு ஆல்ப்ஸ் மலையில் கேன்டீன் நடத்தினேன். இப்போது வயதாகி விட்டதால் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு பத்திரிகைகளைப் படிக்கிறேன்.”
அப்படியா... கிரேட்! ஆமாம் சார். இவ்வளவு திறமை உள்ள நாயை ஏன் விற்கிறீர்கள்?” என்று கேட்டார்.
திறமையா? மண்ணாங்கட்டி! சரியான சோற்றுத் தடியன். வாயைத் திறந்தால் பொய்தான். அவன் சொன்ன மாதிரி எதையும் செய்யவில்லை என்றார்.
* * *

பார்க்கில் இரண்டு நாய்கள் பேசிக் கொண்டிருந்தன. ஒரு நாய் மற்றொரு நாயிடம் கூறியது. ”என்னவோ போ... வாழ்க்கையே பிடிக்கலை. என் சொந்தக்காரன் ரொம்ப கஞ்சப் பேர்வழி. நான் பக்கத்து வீட்டு பாமரேனியனைக் காதலிச்சேன். அவள் வந்து ஏதோ அல்சேஷனோட ஓடிப் போய் விட்டாள். எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு...”
"பைத்தியம்... உனக்கு ஒண்ணுமில்லை. மென்டல் டிப்ரஷன்தான் ஒரு மனோதத்துவ நிபுணரைப் பாரேன்..."
"பாக்கலாம்னுதான் போனேன். எல்லா டாக்டர் கிளினிக்கிலும் Ôநாய், பூனைகளுக்கு அனுமதி இல்லைÕன்னு போர்டு போட்டிருக்கிறார்களே!"
* * *
பம்பாய்க்குப் போய் வந்த பெரியவர், பீச்சில் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"போப்பா... காலம் கெட்டுப் போச்சு. டி.வி. மோகம் ரொம்ப ஜாஸ்தியாயிட்டுது. பம்பாயில் அங்க ஒரு கோவிலுக்கு சித்தி விநாயகர் கோவில்ன்னு பெயராம். சித்தி சீரியல் ரசிகர்கள் கட்டின் கோவிலாக் இருக்கும். இதை அடுத்து, கோலங்கள் விநாயகர் கோவில், மெட்டி ஒலி பிள்ளையார் கோவில் கஸ்தூரி கண்பதி கோவில் என்றெல்லாம் வந்து விடும்... இந்த பைத்தியக்காரத்தனத்தை யார் கிட்டே போய் சொல்லிக்கிறது?”!"
* * *
"என் பையன் டி.வி. ஷோவில பங்கெடுத்துக் கொண்டான். பத்து வயசு கூட ஆகலை. முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்து விட்டான்..."
"அப்படியா? வெரிகுட்... என்ன முதல் பரிசு?"
"அந்தமானுக்கு ஒரு வாரம் ஹனிமூன் உல்லாசப் பயணம்..."
"உல்லாசப் பயணமா?
ஹனிமூனா அப்புறம்..?"
"ஆமாம். அதனால் பையனுக்குக் கல்யாணம் பண்ணிட்டோம்.
பரிசு வீணாகப் போயிடுமே... !"
* * *
கதாகாலட்சேபத்தின் போது எங்கள் அருகில் உட்கார்ந்திருந்த பெண்மணி, தன் கணவனிடம், "இத பாருங்க... உங்களைத்தான். உங்க ஃப்ரெண்ட் குப்புசாமி மூணாவது வரிசையில் உட்கார்ந்திருக்கார். நன்னா தூங்கி வழியறார். ஹும் என்ன ஜென்மமோ?" என்றார்.
"தூங்கட்டுமே... இது மகா முக்கியமான விஷயம்..இதைச் சொல்றதுக்கா என்னை எழுப்பினாய்?" என்றார் கணவர்!
* * *
  (அவ்வப்போது மற்ற பாகங்கள் வரும்!


7 comments:

  1. சுவைகளில் சிறந்த சுவை அழகுடன் மிளிர்ந்தது. ‘சித்தி விநாயகர் என்று இருக்கிறாரே... சித்தப்பா விநாயகர் எங்கே?’ என்று சின்ன வயதில் நான் கிண்டலடித்ததுண்டு. ‘சித்தி’ விநாயகர் ஜோக் அதை நினைவூட்டியது. நகைச்சுவை பற்றிய பொன்மொழிகளின் தொகுப்பும் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இந்த நகைச்சுவை மழையின் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. Nice Jokes Mr.Hadugu. By the by you forget to celebrate the 2nd Birthday of your blog.
    Belated wishes.

    Regards
    Arun

    ReplyDelete
  3. இது பழைய பதிவு இல்லை என்பது தெரிகிறது - 2009-ஆம் ஆண்டின் ஜோக்குகளைப் பற்றி எழுதியிருப்பதால். ஆனால் உலகின் ஜீவராசிகளின் எண்ணிக்கை நிச்சயம் தவறு. நான் ‘எண்ணிப்’ பார்த்துத் தான் சொல்லுகிறேன்! சமீபத்தில் தான் உலகின் 700 கோடியாவது ப்ரஜை பலப் பல நாடுகளில் பிறந்தது என்று படித்தோமே! (இப்போது இன்னும் சில கோடிகள் ஏறியிருக்கும்!) இந்த மனிதப் பிறவிகளோடு மற்ற உயிரினஙளயும் சேர்த்தால் ஜீவராசிகளின் எண்ணிக்கை 32 சொச்சம் கோடியைவிட அதிகம் தானே! -ஜெ.

    ReplyDelete
  4. திருத்திவிட்டீர்கள், நன்றி! ஒருவேளை முந்தைய பதிப்பு டைப்பிங்கில் வந்த பிழையோ? நேற்று இந்த பதிவு இல்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்! - ஜெ.

    ReplyDelete
  5. சார் நமஸ்காரம்,
    பழசு தான் சொல்லும்விதம் புதுசு, ஆ... ஒரு ஜோக்கே ஜோக்குகளை பிரசுரித்திருக்கிறதே ஆ !(ஆச்சரியக்குறி).
    நன்றி வணக்கம்,

    ReplyDelete
  6. இந்த பதிவைப் போய்ப் பாருங்களேன். உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். http://www.sridharblogs.com/2014/03/blog-post_14.html

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!