January 20, 2020

கைதியின் கடைசிக் கடிதம்

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.


 

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.

என் அன்புள்ள.....‘என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளைஅப்படியே இக்கடிதத்தில் எழுதுகிறேன். என் கைகளில் விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் என் கையில் இல்லாமல் என் எண்ணங்களுக்கு போடப்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
எங்களைப் போன்றவர்களுக்கு உலகில் இரண்டே இரண்டு `சாய்ஸ்'தான் உள்ளன. மேலும் மேலும் மேன்மை பெறுவது; அல்லது பின்தங்கிப் போவது. இதற்கு இடைப்பட்ட நிலை கிடையாது. கடவுளை நெருங்குவதற்காக கடினமான பணிகளைச் செய்தவர்களுக்கும் இதுதான் நிலைமை. இடையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி ஒரு ராணுவம் வெற்றிப் பாதையில் செல்லும் போது பல தோல்விகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறதோ அது போல்தான்! ஆகவே நம்பிக்கை இழந்து விட்டு, எடுத்த பணியை கைவிடக் கூடாது. மாறாக மேலும் நெஞ்சுரத்துடன் செயல்பட்டு நம் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நீ கடவுளை நேசி. உன் அண்டையில் உள்ளவர்களை நேசி. இந்த இரண்டு விதிகளில் எல்லாமே அடங்கியுள்ளன.
 நாட்டில் அநீதி தலை விரித்து ஆடினால்    நாமும்  அப்படியே அநீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாகி விடும். ஆகவேதான் நான் உண்மையை அப்படியே கூற வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். இதன் விளைவாக என் உயிரையே இழக்க வேண்டியிருந்தாலும் கவலையில்லை. ஆட்சியாளர்கள், நிர்ப்பந்தப்படுத்தும் சத்தியப் பிரமாணத்தை நான் எடுத்துக் கொண்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க என்னால் இயலாது.
அன்புள்ள மனைவியே, உன் துயரத்திற்கும் எரிச்சலுக்கும் காரணமான காரியங்களை நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னிக்கவும். நம் ஊரில் உள்ள எவரையாவது புண்படுத்தியிருந்தாலோ எரிச்சலடையச் செய்திருந்தாலோ என்னை மன்னிக்கும்படி அவர்களிடம் சொல்லவும். என்னைப் பொறுத்த வரை நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்...''
*                          *                                *
இதுசிறையிலிருந்து , உயர்ந்த  கொள்கை பிடிப்புள்ள கைதி தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம். .

1943’ம் ஆண்டு பெர்லின் சிறையிலிருந்து ஆஸ்திரியாவைச் சேர்ந்த சிறிய விவசாயி. ப்ரான்ஸ் ஜகர்ஸ்டேட்டர் தன் மனைவிக்கு, தான் இறப்பதற்கு சில மணி நேரம் இருந்த போது எழுதியது.  ஆம், அடுத்த சில மணியில் அவரது தலை துண்டிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஜகர்ஸ்டேட்டர் அதிகம் படிக்காத எளிய மனிதன். மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். கிராமத்து மாதாகோவிலின் கேர்-டேக்கர். இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம், ஹிட்லரின் ராணுவத்திற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். இவரையும் ராணுவத்தில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது.  பலர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லைஹிட்லரின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார். ”இந்தப் போர் நியாயமற்றது; கொடூரமானது” என்று உறுதியாக நம்பினார். `ராணுவ உத்தரவுகளை கீழ்ப்படிவேன்' என்ற சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள அவரது மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே `ராணுவத்தில் சேர முடியாது' என்பதை, விளைவுகளுக்கு அஞ்சாமல் அவர் நெஞ்சுரத்துடன் கூறிவிட்டார்.
இப்படி அவர் மறுத்ததற்கு மரண தண்டனைதான் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும்.  எதிபார்த்தபடி அவர் சிறைப்படுத்தப் பட்டார். பல மாதம் சிறையில் இருந்தார். 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி அவர் பெர்லின் சிறையின் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இந்தக் கடிதம் 8-ம் தேதி இரவு அவர் எழுதியது,
     இரண்டாவது உலகப் போரில் அழிந்து போனவைகளுக்கு கணக்கே இல்லை.   இருந்தும் வியப்புக்குரிய விஷயம் ஜகர்ஸ்டேட்டரின் கடைசிக் கடிதம் இவைகளில் எதிலும் சிக்காமல் பத்திரமாக அவருடைய மனைவியை அடைந்ததுதான்.
     உயிரைத் திரணமாக மதித்து, தான் நம்பியதை உறுதியாகக் கடைப்பிடித்து, நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன் ராணுவ அதிகாரிகளிடம், ``முடியாது!'' என்று கூறிய அவர் ஒரு அசாதாரண மனிதர்.

செயின்ட் ரீடிட்கண்ட் என்ற சிறிய கிராமத்தின் சர்ச்சின் இடுகாட்டில் அவரது சமாதி உள்ளது.

போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில், போரில் இறந்தவர்களின் பெயருடன் ஜகர்ஸ்டேட்டரின் பெயரையும், மாதாகோவிலின் பாதிரியார் அதில் சேர்த்துப் பொறிக்கச் செய்தார்.


       அன்றாடம் நம் வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத பல `சத்தியப் பிரமாணங்கள்' எடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலாவது நாம் ஜகர்ஸ்டேட்டராக துணிவுடன் இருப்போமே!
(Franz Jägerstätter பற்றிய விவரங்கள் விக்கி பீடியாவில் வந்துள்ளது.)

இது ஒரு மீள் பதிவு. புதிதாக வந்திருக்கும் நேயர்களுக்காக!  

December 21, 2019

மெய் சிலிர்த்திடும் என்பது மெய்!

இந்த பதிவிற்கு இரண்டு முன்னோட்டங்கள் தேவைப்படுகின்ன.
பதிவில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். முதலில் இரண்டு பேரை பற்றி சுருக்கமான குறிப்பைத் தருகிறேன்


1. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் (1878-1969) [ HARRY EMERSON FOSDICK ] என்ற
பாதிரியார். இவர் சாதாரண பாதிரியார் அல்ல; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேவாலயத்தை நிறுவியவர். சுமார் 50 புத்தகங்களை எழுதியவர்.
இவரது தந்தை, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான ராக்பெல்லர் நிறுனத்தில் பணியாற்றியவர்- அதுவும் நன்கொடை அளிக்கும் இலாகாவில்!
ஃபாஸ்டிக் எழுதியுள்ளஎழுதியுள்ள புத்தகங்களில் ஒன்று: ON BEING FIT TO LIVE WITH. அதில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்கச் செய்தது. அந்தத் தகவலைப் பதிவாக அளிக்கிறேன்.

2. நியூட்டன் பேக்கர் (1871-1937) [NEWTON BAKER] : இவர் ஒரு பிரபல வழக்கறிஞர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த வுட்ரோ வில்சன் [Woodrow Wilson] இவரை தனது யுத்த இலாகா செயலராக (1916 -1921) நியமித்திருந்தார். மேலும், இவர் பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறங்காவலாரகவும் இருந்தார். இவர் பின்னால் அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் நின்றவர்.

( இவர்களின் படங்களை மேலே MAST HEAD-ல் பாருங்கள். இருவரும்
TIME பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற பிரமுகர்கள்.)

நியூட்டன் பேகர், தன்னிடம் கூறிய ஒரு தகவலைப் பாதிரியார் ஃபாஸ்டி க் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தத் தகவலைப் பார்க்கலாம்
* *
யுத்த இலாகா செயலர் என்ற முறையில், நியூட்டன் பேகர் பல ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது மற்றும் ஆறுதல் கூறுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு ராணுவ வீரரைப் பார்த்த போது, அவருடைய ரத்தமே உறைந்து போய்விட்டது! (மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.)
அந்த ராணுவ வீரர் ஒரு இளைஞன். அந்த வீரனை மருத்துவமனையை ஒட்டி இருந்த புல்தரைக்கு சக்கர நாற்காலியில் ரு நர்ஸ் கொண்டு வருவதைப் பார்த்தார்; அப்படியே இரத்தம் உறைந்தது போல் உணர்ந்தார். காரணம் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களும் இல்லை; ஒரு கையையும் இழந்திருந்தான்; இரண்டு கண்களும் பறி போயிருந்தன. போதாக்குறைக்கு போரில் ஏற்பட்ட காயங்களால் அவன் முகம் கன்னாபின்னாவென்று குரூரமாகக் காட்சியளித்தது.
அந்த ராணுவ வீரன் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். வாழ்க்கையே அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் இப்படி ஒரு ஆள் இருக்கமுடியுமா என்று வியந்தார்.
அந்த மருத்துவமனையைச் சுற்றிவிட்டுத் திரும்பி விட்டார்.

December 05, 2019

பத்து ஆண்டு நிறைவு


கடுகு தாளிப்புவிற்கு   பத்து  ஆண்டு நிறைந்துள்ளது.

 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத்  துவக்கினேன்.
   தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து, பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை.  காரணம், “தம்பி, நீ எழுது என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு   சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்!  ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லைஅவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால்  எனக்குப் பெருமை ஏற்படலாம்.  ஆனால்அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை. 

 கிட்டத்தட்ட
 
630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு  ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும்  நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும்,  பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ  என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
     இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும்  ‘சபாஷ்களும்  வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறதுவார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
 அனைவருக்கும் நன்றி. முக்கியமாய்  எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு  ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
       அனைவருக்கும் வணக்கம்.      -- கடுகு 

November 30, 2019

புள்ளிகள்:துணுக்குகள்!

30 செகண்ட் ட்யூன், சம்பாதித்தது....அம்மாடி!
JEOPARDY,அமெரிக்காவின் மிகப் பிரபலமான வினாடி வினா நிகழ்ச்சி . இதில் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் டாலர்கள் என்று பரிசாக அளிக்கப்படுகிறது,  இந்த அரைமணி நேர நிகழ்ச்சியில் ஒரு லட்சம் டாலர்களை  வென்றவர்கள் பலர் உண்டு. 
    இந்த நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன்   30 வினாடி ட்யூன் ஒன்று போடப்படுகிறது .1964’ல்   இருந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அந்த டியூன் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. இந்த ட்யூனைப் போட்ட கிரிஃப்ஃபின் எனும் இசை அமைப்பாளருக்கு   ராயல்டியாக  70 லட்சம் டாலர் கிடைத்ததாக சில வருஷங்களுக்கு முன்பு அவரே சொல்லி இருக்கிறர். இன்றும் அந்த நிகழ்ச்சியில் இந்த  ட்யூனுக்கக  ராயல்டி தொகை அவருடைய பேரனுக்கு(?) போகக்கூடும்! 
ரூஸ்வெல்ட்டிற்கு ஓட்டு போடாததன் காரணம்!
அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் 'டெமாக்ரடிக்' கட்சியை சேர்ந்தவர் முதல் முதலாக   1933’ல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து 1937’ல் இரண்டாவது தடவையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941’ம் வருஷம் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்ட அவர், தனது நெருங்கிய நண்பரான தனது பேட்டைவாசி முதியவரைச் சந்தித்து, தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டார்.
அவரிடம்  “அதிபர் தேர்தல் வருகிறது. நீங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்” என்று கேட்டார் ரூஸ்வெல்ட். அந்த முதியவர்  “வழக்கம்போல் நான் ’ரிபப்ளிகன்’   கட்சிக்குத் தான் போட்டு போட போகிறேன்” என்றார். ரூஸ்வெல்ட்டிற்குக் கொஞ்சம் ஷாக். அவரிடம்  “சரி,  மூன்றாவது தடவை நான் நிற்பதால் நீங்கள் அப்படி தீர்மானித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

November 12, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3

ஷார்ட்டியின் மனமாற்றம்


  அடுத்த மூன்று மாதத்தை எப்படி,எங்கு கழிப்பது என்பதை மேலெழுந்த வாரியாகத் திட்டமிட்டு விட்டு, தன் நண்பரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஷார்ட்டிக்கு டாக்டர்  லூமிஸ் போன் செய்தார்; தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரும் வந்தார்.
    அவரிடம் லூமிஸ் “வீட்டிற்குப் போய், துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வா. நாம் தென் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணமாகப் போகப் போகிறோம்” என்றார்.

    இதைக் கேட்ட ஷார்ட்டி சற்று தயங்கியபடி சொன்னார் “சுற்றுப்பயணம் வர எனக்கு ஆசைதான். ஆனால் ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஒரு வாரம் கூட நான் இங்கு இல்லாமல் இருக்க முடியாது” என்றார்
  அவரிடம் டாக்டர் லூமிஸ் தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காண்பித்தா.ர் அதை பொறுமையாகக் கேட்ட ஷார்ட்டி “என்னால் உங்களுடன் வருவதற்கு இயலாது. கடந்த சில வாரங்களாக ஒரு முக்கிய வியாபார ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். வெண்ணை திரண்டு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊரை விட்டு போக முடியாது. நான் இங்கு இருந்தாக வேண்டும். வேறு சமயம். நாம் இரண்டு பேரும் சுற்றுப்பயணம் போனால் போகிறது” என்றார். அதே மூச்சில், “ஆமாம், அந்த பெண்மணி என்ன எழுதினார்? திரும்பப் படியுங்கள்” என்றார். “மழ்ச்சியை அனுபவியுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்துவிட்டது.. அப்படியா?” என்று கேட்டார்.
   சில கணங்கள் அவர் அமைதியாக இருந்தார். டாக்டர் லூமிஸும் எதுவும் பேசவில்லை. ஷார்ட்டி அந்தப் பொன்மொழியை மனதில் அலசிக் கொண்டிருந்தார்.
    அவருக்கு ஏதோ ஒரு விழிப்பை அந்தப் பொன்மொழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு ஷார்ட்டி சொன்னார்: “இவர்கள் முடிவு எடுப்பதற்காக நான் மூன்று மாதங்கள் காத்து இருந்தேன்; அவர்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை. இனிமேலும் காத்திருப்பதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனக்காக அவர்கள் காத்திருக்கட்டும். சரி, டாக்டர் எப்போது போகலாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்!.
                                *                                 *                             *
உருகிப்போன  ஸ்டீல்!
      லூமிஸும் ஷார்ட்டியும் உல்லாசக் கப்பலில் தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்  ஒவ்வொரு நாளும் அவர்கள் மனதில் இருந்த பல பிரச்சினைகளின் கனமும், அழுத்தமும் கடல் பயணத்தில் மெல்ல மெல்ல ஆவியாகிப் போனதாக இருவரும் உணர்ந்தார்கள்.